எந்த ஒரு பெரும் பொருளாதார அறிஞரும் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை நல்ல யோசனை என்று கூறமாட்டார்கள் – கீதா கோபிநாத்

/files/detail1.png

எந்த ஒரு பெரும் பொருளாதார அறிஞரும் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை நல்ல யோசனை என்று கூறமாட்டார்கள் – கீதா கோபிநாத்

  • 0
  • 0

- V.கோபி 

பணமதிப்பிழப்பு நடவடிக்கை சிறந்த யோசனை அல்ல என்றும் அதற்கு பதிலாக அந்த நேரத்தை சரக்கு மற்றும் சேவை வரியை சீராக செயல்படுத்துவதற்காக உபயோகப்படுத்தியிருக்க வேண்டும் என சர்வதேச நிதியத்தின் புதிய தலைமை பொருளாதார ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ள கீதா கோபிநாத் கூறியுள்ளார். அவரது பேட்டியின் சுருக்கப்பட்ட வடிவம்…

பணமதிப்பிழப்பு நடவடிக்கை நல்ல முடிவா?

இல்லவே இல்லை. எனக்கு தெரிந்து எந்த ஒரு பெரும் பொருளாதார அறிஞரும் இதை ஒரு நல்ல யோசனை என்று கூறமாட்டார்கள். இந்தியா போன்ற நாட்டில் அதுவும் வளர்ச்சியின் நிலை மோசமாக இருக்கும்போது இதை செய்திருக்கவே கூடாது. இந்தியாவை விட ஜப்பானில் தனிநபர்களின் ரொக்க பரிமாற்றம் அதிகமானது. இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10 சதவிகிதம் ரொக்கப் பணமாக கையாளப்படுகிறது. ஆனால் ஜப்பானிலோ இது 60 சதவிகிதமாக உள்ளது. ஆகவே இது கருப்பு பணம் அல்ல; இது ஊழல் இல்லை.

பணமதிப்பிழப்பு மற்றும் சரக்கு மற்றும் சேவை வரி (GST) ஆகியவற்றின் தாக்கம் குறுகிய கால அளவில் எந்தளவிற்கு இருக்கும்? நீண்டகால அளவில் இந்த நடவடிக்கைகள் நன்மை தரக்கூடியதா?

என்னைப் பொருத்தவரை சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு உண்மையான சீர்திருத்த நடவடிக்கை. இது பொருளாதாரத்தை முறைப்படுத்தும். இதனால் கருப்பு பணம் சம்பாதிப்பது கடினமாவதோடு வரி விதிமுறைகளை உறுதிப்படுத்த சிறந்த முறையாகவும் இருக்கும். இந்த நிலை சீராக சில காலம் ஆகும்; ஏனென்றால் செயல்படுத்திய முறை சிக்கலை ஏற்படுத்திவிட்டது. என்னைக் கேட்டால், இவர்கள் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பதில் கொஞ்ச காலம் பொறுமையாக இருந்து சீரான ஜிஎஸ்டி வரியை கொண்டு வந்திருக்க வேண்டும். 

இந்தியாவின் கொள்கை திட்ட தயாரிப்பில் இன்னும் அதிகமான வெளிப்படத்தன்மை வேண்டும் என நினைக்கிறீர்களா?

இந்தியாவின் கொள்கை திட்டங்களுக்கு சிறந்த தரவுகளே பொதுவான தேவையாக உள்ளது. எங்கும், யாவரும் ஜிடிபி எண்கள் குறித்து சந்தேகப்படுவது நல்லதற்கல்ல. உதாரணமாக, பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் பொருளாதாரத்தில் ஏற்பட்ட தாக்கம் என்ன என்பது குறித்து நான் ஆய்வு செய்தால், இதற்காக எந்த தரவுகளை கணக்கிட வேண்டும் என்பது போன்ற பல தடங்கல்கள் உள்ளன. பணப் பற்றாக்குறை காரணமாக இந்தியாவின் பல்வேறு பகுதிகள் பலவிதங்களில் பாதிக்கப்பட்டுள்ளன. உதாரணத்திற்கு நம்மிடமுள்ள மாநில ஜிடிபி-யின் காலாண்டு எண்ணிக்கையை அளக்க விரும்பினால், அது பற்றிய எந்த தரவுகளும் இல்லை. 

நாட்டின் வனிகம் டாலரை சார்ந்து இருப்பது குறித்த உங்களது ஆய்வு பற்றி கொஞ்சம் விரிவாக கூறுங்கள்?

கொள்கை வகுப்பாளர்கள் இதை உணராமல் இருப்பதாகவே நான் நினைக்கிறேன். ஆனால் மறைமுகமாக, இவர்கள் மனம் முழுதும் டாலரை நோக்கியே உள்ளது. பெரும்பாலான வளரும் நாடுகளின் மத்திய வங்கிகள் இதை கவனிக்க வேண்டும். வழக்கமாக வர்த்தக நிலைபாட்டிலான நாணய மாற்று விகிதத்திற்கே கொள்கை வகுப்பாளர்கள் முக்கியத்துவம் கொடுப்பார்கள். நீங்கள் யாரிடம் வர்த்தகம் செய்கிறீர்கள் அல்லது எப்படி அங்கும் இங்கும் நாணய பரிமாற்ற விகிதம் மாறுகிறது என்பது குறித்து கவலைப்படாமல், டாலர் தொடர்பான நாணய மாற்று விகிதத்தின் மீது மட்டும் கவனம் செலுத்துங்கள் என்பதையே எனது ஆய்வு கவனப்படுத்துகிறது. 

கச்சா எண்ணெயின் விலை 63 டாலருக்கு உயர்ந்துள்ள நிலையில், 2018-ல் பொருட்களின் விலை போக்குகள் எப்படியிருக்கும்?  

இது இந்தியாவிற்கு முக்கியமான ஆபத்து காரணியாக இருக்கும் என்று தோன்றுகிறது. ஏனென்றால் இது நிதி மற்றும் கடன் கொள்கையில் மிகப்பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். பேரலுக்கு 100 டாலர் வரை செல்லும் என கூறுவதையெல்லாம் நான் நம்புவதில்லை. 60 முதல் 70 டாலர் வரையே விலை இருக்கும் என்பது என் கணிப்பு. பொருட்களின் விலை குறைவாக இருந்த அற்புதமான கடந்த காலங்கள் எல்லாம் சென்றுவிட்டன. நிறைய ஏமாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கிறேன். ஆகவே இது அரசும் ரிசர்வ் வங்கியும் கவனமாக கையாள வேண்டியது. உணவுக்காக அதிக விலை கொடுக்கிறோம் என மக்களுக்கு தெரிய வரும்போது, இது பணவீக்க எதிர்பார்ப்பு எண்ணிக்கையிலும் காண்பிக்கும்.

நன்றி: business-standard.com

Leave Comments

Comments (0)