ஆசிய போட்டியில் பதக்கம் பெற்ற மறுநாள் தெருவில் டீ விற்று கொண்டிருக்கும் வீரர்

/files/detail1.png

ஆசிய போட்டியில் பதக்கம் பெற்ற மறுநாள் தெருவில் டீ விற்று கொண்டிருக்கும் வீரர்

  • 0
  • 0

V. கோபி 

சமீபத்தில் நிறைவு பெற்ற ஆசிய விளையாட்டு போட்டியில் 69 பதக்கங்களை பெற்று கடந்த கால சாதனைகளை முறியடித்து, பதக்கப் பட்டியலில் 8-வது இடத்தை இந்தியா பிடித்தது. பல வீர்ர்கள் தங்கள் அயராத முயற்சியால் பெருமைக்குரிய பதக்கங்களை பெற்றிருந்தாலும், தங்கள் தினசரி வாழ்க்கையில் கஷ்டங்களையே சந்தித்து வருகிறார்கள். குறிப்பாக, 12 பேர் கொண்ட இந்திய செபாக் டக்ரோ அணியில் டெல்லியைச் சேர்ந்த ஹரிஷ் குமாரும் ஒருவர். இப்போட்டியில் தற்போதுதான் முதன்முறையாக இந்தியா பதக்கம் (வெண்கலம்) பெற்றுள்ளது.

ஆசிய விளையாட்டு போட்டிகள் முடிந்து தாயகம் திரும்பிய 23 வயது ஹரிஷ் குமாரை வரவேற்க யாரும் இல்லை. எளிமையான குடும்பத்தைச் சேர்ந்த ஹரிஷ், தனது குடும்பத்தின் கஷ்டத்தை போக்க தேனீர் கடையில் வேலை பார்த்து வருகிறார். பதக்கம் வாங்கிய கையோடு டெல்லியிலுள்ள கடையில் வழக்கம்போல் தேனீர் விற்க தொடங்கிவிட்டார்.

“எங்களுக்கு சொந்தமாக சிறிய தேனீர் கடை உள்ளது. அதில் எங்களுக்கு உதவியாக ஹரிஷும் வேலை செய்து வருகிறான். அவனது அப்பா ஆட்டோ ஓட்டுனராக உள்ளார். எங்கள் குடும்பம் வறுமையில் இருந்தாலும் ஹரிஷின் ஆசையை நாங்கள் நிராகரிகவில்லை. அவனுக்கு உறுதுணையாக இருந்த அரசாங்கத்திற்கும் பயிற்சியாளர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்” என ஹரிஷின் தாயார் இந்திரா தேவி கூறுகிறார்.

2011-ம் ஆண்டு முதல் செபாக் டாக்ரா போட்டியை விளையாடத் தொடங்கிய ஹரிஷ், ஆரம்பத்தில் ரப்பர் டயர்களை வெட்டி அதை பந்து போல் செய்தே விளையாடியுள்ளார். அதன்பிறகே ஹரிஷின் திறமையை கண்ட பயிற்சியாளர் ஹேம்ராஜ், அவரை இந்திய விளையாட்டு ஆணையத்திற்கு அறிமுகப்படுத்தியுள்ளார்.
ஹரிஷ் குமார் கூறுகையில், “எங்கள் வீட்டில் அதிகமான நபர்கள் இருந்தாலும் சிலரே வருமானம் ஈட்டுகின்றனர். அதனால் தான் நான் தேனீர் விற்று கொண்டிருக்கிறேன். எனக்கு ஒரு நிரந்தரமான பணி கிடைத்தால் எஎங்கள் குடும்பத்திற்கு ஆதரவாக இருக்கும்” என்கிறார்.

செபாக் டாக்ரா என்றால் என்ன?

செபாக் டாக்ரா என்பது கைப்பந்தையும் கால்பந்தையும் இணைத்து விளையாடும் போட்டி. இது தெற்காசியாவில் மிகவும் பிரபலமான விளையாட்டாகும். ஆட்ட விதிமுறைகள் மிகவும் எளிதானது. பிரம்புகளால் ஆன பந்தை எதிரணிக்குள் அடிக்க வேண்டும். ஆனால் கையை தவிர உடலின் எந்த பாகத்தையும் பயன்படுத்தி கொள்ளலாம். இந்த விளையாட்டு ஆசிய போட்டியில் 1990-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. அன்றிலிருந்து தாய்லாந்து இப்போட்டியில் 22 தங்கப்பதக்கங்களை வென்றுள்ளது.

மாநில அரசும் மத்திய அரசும் பதக்கம் பெற்ற வீர்ர்களை கௌரவித்தும், பரிசுகளை அளித்தும், அரசாங்க பணி வழங்குவதாக வாக்குறுதியும் அளிக்கின்றன. ஆனால் இவையாவும் வெறும் வாக்குறுதியோடு நின்றுவிடுகிறது. இதனால் நிலையான வேலை இல்லாத காரணத்தினால், வீரர்களால் எதிர்காலத்தில் ஜொலிக்க முடியவில்லை. விளையாட்டு சாதனையை பெருமிதமாக கருதும் நாம், தேவையான நேரத்தில் வீரர்களுக்கு உறுதுணையாகவும் ஆதரவாகவும் இருக்க வேண்டியது நமது கடமையாகும்.

நன்றி: https://thelogicalindian.com/news/harish-kumar-asian-games/

Leave Comments

Comments (0)