அரசபயங்கரவாதத்தை எரிக்கும் பெருந் “தீ”!

/files/detail1.png

அரசபயங்கரவாதத்தை எரிக்கும் பெருந் “தீ”!

  • 0
  • 0

-லெட்சுமி நாராயணன் பி

(தோழர் திவ்யபாரதியின் “ஒருத்தரும் வரலே” ஆவணப்படத்தை முன்வைத்து)

“ஒரு பொறியாளனை நீங்கள் எளிதில் உருவாக்கி விடலாம்; ஒரு மருத்துவரையோ, ஏன் ஒரு விஞ்ஞானியை கூட உருவாக்கி விடலாம். ஆனால் ஒரு மீனவனை, ஒரு கடலாடியை உங்களால் ஒரு போதும் உருவாக்கிவிட முடியாது” என்கிற தோழர், ஆய்வாளர் ‘ஜோன்ஸ்’ ன் குரல் என் காதில் கேட்டுக்கொண்டே இருக்கிறது. ‘மீனவன் ராணுவத்திற்கு நிகராவன், இராணுவத்தினர் எவ்வாறு எல்லையில் எதிரிகள் புகாமல் காக்கின்றனரோ, கடலில் அதுபோல எந்தவித எதிர்பார்ப்புமின்றி இந்திய நாடு என்ற உணர்ச்சியில் சத்தமின்றி கடலை பாதுகாப்பவன் தான் மீனவன்!’ என்கிற குரல் அவனின் தேசப்பற்றை பறைசாற்றுகிறது.

alt text

“ஒரு மீனவன் ஐந்து நாட்கள் உணவில்லாமல், நீரில்லாமல் கடலில் நீந்தியே கரையை சேர்வான். உங்கள் கடற்படை வீரனால் அது முடியுமா? மீனவனுக்கு இருக்கும் அசாத்தியமான மனதைரியம் அவனிடம் இருக்குமா?  ஒரு திறமையான படித்த மீனவனுக்கு ஏன் உங்களால் கடற்படையிலோ, கப்பலிலோ வேலை தர இயலவில்லை. எது உங்களை தடுக்கிறது? எங்கள் மீனவனுக்கு திறமையில்லையா? சியாச்சின் பனிச்சருக்கில் ஊடுறுவும் பாகிஸ்தானிய தீவிரவாதிகளை ஒழிக்க உங்களிடம் சர்ஜிக்கல் ஸ்டிரைக் இருக்கிறதே, உள் நாட்டில் உழைக்கும் மக்களை, மீனவனை, மீனவ மக்களை காப்பாற்ற என்ன விதமான ஸ்டிரைக் உங்களிடம் இருக்கிறது? எங்கள் மீனவ மக்களை காப்பாற்றாமல், இறந்து போன மீனவர் உடலைக் கூட எடுக்க திராணியற்ற இந்திய கடற்படைக்கு இது பெருத்த அவமானம்” என்று கேட்கும் தோழர் ‘ஆல்பிரெட் சேவியரின்’ குரல் தொடர்ந்து கோபமாய் எனக்கு கேட்கிறது. ‘மோடியின் அரசாங்கம் என்ன? இந்திய அரசாங்கமா? அது அம்பானியின், அதானியின் அரசாங்கம்! கார்ப்பரேட்டின் அரசாங்கம்!’ என்ற குரல் சத்தமாய் அங்கு கேட்கிறது. ‘இனியொரு முறை மீனவனாய் பிறந்துவிடக்கூடாது. கடலில் மிதந்து வரும் அழுகிய தந்தையின் உடலை என் குழந்தைகளுக்கு காட்டிவிடக்கூடாது’ என்று உடைந்து அழும்  மீனவப் பெண்மணியின் குரல் மனதை அறுக்கிறது.

alt text

‘கடலில் மூன்று இரவு, நான்கு பகல் என நீந்தியே கரைசேர்ந்த மீனவர், என் சட்டையை பிடித்துக்கொண்டு, என் காலை பிடித்துக்கொண்டு நீரில் முழ்கி இறந்துபோன சக மீனவனை பார்த்தபிறகு இன்று நான் உயிர் வாழ்ந்தாலும் பிணம் தான். வெறும் காற்று உள்ளே போய் வந்து கொண்டிருக்கிறது’ என்று சொல்லும் மீனவருக்கு நம்மிடம் என்ன பதில் இருக்கிறது? ஒரு ஆண் கூட இல்லாமல் புயலில் பறிகொடுத்துவிட்ட குடும்பங்கள், பத்து குடும்பங்கள் ஒன்று சேர்ந்து லட்சக்கணக்கில் வாங்கிய படகுகளை கடலில் கண்முன்னே முழுக விட்டுவிட்டு நான்கு நாட்கள் கடலில் நம்மை காப்பாற்ற நம் படைவீரர்கள் வந்துவிட மாட்டார்களா? என பார்த்து பார்த்து நீந்தி கரைசேர்ந்த கையறு நிலையில் இருக்கும் மீனவனுக்கு என்ன பதில் அரசாங்கத்தில் இருக்கிறது?  உயிரிழந்த மீனவனுக்கு இருபது லட்சம் ரூபாய் கொடுத்து விட்டால் போதுமா? இதற்கெல்லாம் இந்த அரசாங்கம் பதில் சொல்ல முடியுமா? 

alt text

தோழர்களே, ஒரு நாட்டின் வளங்களிலே மிக முக்கியமான வளம் மனித வளம். அதுவும் உழைக்கும் மக்களின் பெரும் பலமே ஒரு நாட்டின் வீரியமான வளம். ஆனால் நம் நாட்டை மத்தியிலும், மாநிலத்திலும் ஆளும் அதிகார வர்க்கத்திற்கு, கார்ப்பரேட் கூட்டத்தின் அடிமைகளுக்கு இந்த மக்களின் ஓட்டு வேண்டும்; உழைப்பு வேண்டும், அந்த மக்களின் உழைப்பில் வரும் பணம் வேண்டும்; வரியும் வேண்டும்; அதன் மூலமாக நாட்டின் பொருளாதாரம் உயர வேண்டும். ஆனால் அவர்களைப் பற்றியோ, அவர்களின் உயிர் பற்றியோ எந்தவித அக்கறையும் துளியும் கூட இல்லாத பாசிச, ஏதேச்சதிகார ஆட்சியாளர்கள் இவர்கள். கடந்த ஆண்டு நவம்பர் 29 மற்றும் 30 ஆம் தேதிகளில் தமிழகம் மற்றும் கேரளாவில் அரபிக்கடலில் உருவான “ஒக்கி புயலின்’ கோர தாண்டவத்தால் கிட்டத்தட்ட 600க்கும் மேற்பட்ட மீனவர்கள் இறந்து போயினர். இதில் தமிழகத்தை சேர்ந்த மீனவர்கள் 400 பேர்; கேரளத்தை சேர்ந்தோர் 200க்கும் மேற்பட்டோர். இதில் பெருமளவில் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோர் கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள், கன்னியாகுமரி மிகப்பெரிய சேதத்தை, பேரிடரை கண்டது, விவசாய நிலங்கள், ரப்பர் தோட்டங்கள், ஆயிரக்கணக்கான வீடுகள் என அனைத்தும் தரைமட்டமானது. மிக முக்கியமாக ‘தூத்தூர், நீரோடி, வள்ளவிளை, சின்னத்துறை, பூந்துறை’ போன்ற கடலோர கிராமங்களில் இருக்கும் ஆழ்கடலில் சென்று மீன்பிடிக்கும் திறமையான மீனவர்களின் மரணம் மிகவும் துயரமானது. மற்ற மாவட்டத்தை சேர்ந்த சுமார் 50 பேர் மொத்தமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டுமே 250 மீனவர்கள் இறந்துபோயினர்.

alt text

இதனை குறித்தும், இதன் பின்னால் இருக்கும் ஆழமான அரசியல் குறித்தும், தொடர்ந்து அலைக்கழிக்கப்படும் மீனவர்களின் வாழ்வியல் குறித்தும் ‘தோழர் திவ்யபாரதி’ இயக்கியிருக்கும் ஆவணப்படமான ‘ஒருத்தரும் வரலே’ தீர்க்கமாய் பேசியிருக்கிறது. ஆம் மீனவனின் மீளமுடியாத கண்ணீரையும், அந்தக் கண்ணீருக்கு காரணமான சொந்த மக்களையே காக்க முடியாமல், இல்லை காப்பாற்ற தேவையில்லை என்று முடிவுகட்டி கடலிலே கொன்று புதைத்துவிட்ட அரசபயங்கரவாதத்தை, திட்டமிட்ட இனப்படுகொலையை தீவிர விசாரணை செய்கிறது இப்படம். இந்திய கடற்படை, விமானப்படை, இராணுவம், ஆளும் அரசாங்கம் என அனைத்தும் இருந்தும் சரியான நேரத்தில் முன்கூட்டியே புயல் குறித்த தகவல் தெரிந்தும் மெத்தனமாய் மீனவ மக்களின் உயிரை கிள்ளுக்கீரையாய் நினைத்து உடனே அறிவிக்காமல் மீனவனின் கழுத்தில் ஈரத்துண்டை போட்டு அறுத்த இவர்களின் முகமூடி அரசியலை கிழித்தெறிகிறது. தூத்துக்குடியில் ‘ஸ்டெர்லைட் ஆலைக்கு’ எதிரான நடந்த போராட்டத்தில் அப்பாவி பொதுமக்கள் 13 பேரை ஈவு இரக்கமின்றி எதிரியை போன்று சுட்டுக் கொன்ற அரசு தானே இது! எதிராக முழக்கமிட்டார் என்பதற்காக திட்டமிட்டு சகோதரி ‘ஸ்நோலினை’ வாயிலே சுட்டுக்கொன்ற அரக்கர்கள் தானே இவர்கள்! தில்லியிலே நம்மாநில விவசாயிகள் அரை நிர்வாணமாக போராடிய போது கொஞ்சம் கூட ஈவு இரக்கமின்றி கடந்து சென்ற மோடியின் அரசாங்கம் தானே!

alt text

கடற்கரையெல்லாம் அணுஉலைகள், தொழிற்சாலைகள், அனல்மின் நிலையங்கள், துறைமுகங்கள், சாகர்மாலா திட்டம், சுற்றுலா சொகுசு விடுதிகள், பசுமைவழிச்சாலை என விவசாய நிலங்களை அழித்து சாலை அமைப்பது என மக்களுக்கு எதிரான, ஆபத்தான விஷயங்களை ஆதரித்து கார்ப்பரேட் கூட்டத்தினை உள்ளே நிரந்தரமாக தங்க வைக்கும் வேலையை செய்வது தான் இவர்களின் பிரதான வேலை. மீனவர்கள் கடலுக்கு சென்ற பிறகு புயல் கொடூரமாய் தாக்கிய பிறகு புயல் குறித்த அறிவிப்பை டிவிட்டரில் தந்தது; கிட்டத்தட்ட 120 கிலோமீட்டர் வேகத்தில் வீசும் காற்று, ஆபத்தான புயல் என்று தெரிந்தும் இவ்வளவு தாமதமாக தகவல் தெரிவித்தது ஏன்? புயலின் தாக்குதல் முடிந்த உடனே கடலில் சிக்கிக் கொண்ட மீனவர்களை தேடுவதற்கான முயற்சியை உடனே எடுக்காமல் காலம் தாழ்த்தியது, கூடங்குளம் அணுஉலை போராட்டத்தை அடக்குவதற்காக தரையில் ராணுவம், கடற்படை, விமானப்படை என அனைத்தையும் கொண்டு வந்து ஒடுக்கிய அரசாங்கம் கடலில் சிக்கிக்கொண்டு உயிருக்கு போராடிய மீனவர்களை ஏன் காப்பாற்ற வரவில்லை? ஒருநாள் இரண்டு நாள் இல்லை பத்து நாட்களுக்கு மேலாக மீனவர்கள் கடலில் நீந்தியும், உயிரை கையில் பிடித்துக்கொண்டு போராடிய போது இந்த கடற்படையும், விமானப்படையும் எங்கே போனது? ஏன் வரவில்லை? அவர்களை தேட வைப்பதற்கு கூட போராட வேண்டியிருந்த அவலநிலை, ஒரே குடும்பத்தில் இருந்த அத்தனை ஆண்களும் இறந்துபோய்விட்ட துயரம், இளைஞர்கள், புதிதாய் திருமணமானவர் என இறந்து போன நிலை; இறந்து போன உடல்களை கூட மீட்டு தராத அவலம், கடலில் போர் பயிற்சி செய்யவும், அந்நிய கப்பலை கண்காணிக்க பலமைல் தூரம் போகும் இந்திய கடற்படை, பலவிதமான ஆயுதங்களுடனும், தொழில்நுட்ப கருவிகளுடன் கடலில் கரையில் இருக்கும் கடற்படை கப்பல்கள் ஏன் தன் சொந்த நாட்டின் மீனவனை காப்பாற்ற வரவில்லை? உயிருக்கு போராடும் மீனவனை காப்பாற்ற அவர்கள் மீன் பிடிக்க சென்ற தூரத்திற்கு செல்ல தங்களுக்கு அனுமதியில்லை என மறுத்தது ஏன்? ஆனால் தேடுகிறோம் என்று மத்திய அரசாங்கமும், மாநில அரசாங்கமும் பொய் சொன்னது ஏன்? உங்களது உதவி தேவையில்லை நாங்களே எங்கள் மீனவ மக்களை காப்பாற்றிக் கொள்கிறோம் என மீனவர்களே அவர்களை காப்பாற்ற, இறந்துபோன உடல்களை மீட்க சென்றது, மீட்டு வந்தது என தோழர் திவ்யபாரதியின் ‘ஒருத்தரும் வரலே’ ஆவணப்படம் பல கேள்விகளையும் அதற்கான நிஜங்களையும் போட்டு உடைக்கிறது. 

alt text

அதுமட்டுமின்றி இதன்பின்னே இருக்கும் மீனவர்களின் வாழ்க்கைப்பாடுகளையும், அவர்களுக்கு எதிராக செயல்படும் அரசியலின் முகத்தை காட்டும் தெளிவான குரலாகவும் ஒலிக்கிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் ‘இணயம் துறைமுகம்’ அமைய அந்த மக்களிடம் எழுந்த எதிர்ப்பு, மோடியின் கடற்கரையெங்கும்  துறைமுகங்களை அமைத்து அதை நகருடன் இணைத்து அதானிக்கு பணம் கொழிக்கச் செய்யும் கார்ப்பரேட் ஆதரவான சாகர்மாலா திட்டம், மீனவனை அவனின் சுயதொழிலில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றி கார்ப்பரேட்காரர்களுக்கு கூலி வேலைக்கு அவர்களை அனுப்பிவைக்க முயலும் திட்டம் தான் அது. ஏற்கனவே இந்திய மீனவனின் உரிமையான கட்சத்தீவு பகுதியை இலங்கைக்கு தாரை வார்த்தது, தமிழக கடல்களில் மீன்வளம் குறையத் தொடங்கியதால் மீன்பிடிக்க நெடுந்தூரம் மீனவர்கள் பயணிக்க வேண்டிய நிலை, எல்லை தாண்டி சென்று இலங்கை கடற்படையினரிடம் சிக்கி உயிரை விடும் நிலை, இதே தூத்தூர் பகுதியில் கடலில் இருக்கும் ‘வெட்ஜ் பேன்க்’ என்ற வளமான மீன்பிடி பகுதியில் நரசிம்மராவ் ஆட்சிக்காலத்திலேயே சுமார் 2000 அந்நியநாட்டு கப்பல்களை அங்கு மீன்பிடிக்க அனுமதித்தது, அந்தக் கப்பல்களுக்கு மானிய விலையில் எரிபொருள் தருவது, மீனவர்களுக்கு வெளியே விற்கும் அதிக விலையிலே எரிபொருள் தருவது, சுனாமி பேரிடர் கட்டமைப்புகள் என்கிற பெயரில் கடலை விட்டு மீனவனை அவனது நிலத்தை சட்டத்தின் பெயரால் தந்திரமாய் பிடுங்கிக் கொண்டு வெளியேற்றும் நிலை, மீனவர் பகுதியில் எந்தவித அடிப்படை கட்டமைப்பும் இல்லாத நிலை, படகுகள் வாங்கவோ, அவர்களின் தொழிற்முயற்சிகளுக்கோ எந்தவித முதலீட்டு உதவியும் செய்யாத போக்கு, மேலும் மீனவர் சமவெளியை எப்போதும் சார்ந்திருக்க வேண்டிய நிலை, சமவெளியில் மீனவமக்கள் மீது படிய வைக்கப்பட்டிருக்கும் தவறான பார்வை, அதை செய்த இன்றும் செய்து வரும் நம் திரைப்படங்களின் இழிநிலை, சமவெளிக்கு ஒரு பிரச்சினை, போராட்டம் என்ற போது மீனவர்கள் தீரமாய் உடன்நின்று உதவியது, (சென்னை பெருவெள்ளம், ஜல்லிக்கட்டு, அன்மையில் கேரள பெருவெள்ளத்தின் போது மீனவர்களின் அளப்பரிய உதவி, அம்மாநில முதல்வரே ‘எங்கள் நாட்டின் உண்மையான ராணுவ வீரர்கள் எங்கள் மீனவர்களே’ என்று சொன்னார்) ஆனால் அதே மீனவர்களுக்கு ஒரு பிரச்சினை என்ற போது சமவெளி மனிதர்கள் பேசாமல் ஊமையானது ஏன்? நன்கு படித்து, கடல்சார்ந்த, கப்பல்சார்ந்த, கடற்படை சார்ந்த கல்வியை பெற்றிருந்தாலும் அவர்களுக்கு வேலை வாய்ப்பில் எந்தவித சலுகையும் இல்லாமல் ஏமாற்றி மீனவனுக்கு ஏதுமில்லை என சொல்லி அவனது வாழ்வாதாரத்தை அழித்துவரும் நிலை, கேரளாவில் இறந்த மீனவர்களின் உடலையாவது மீட்டனர், தமிழகத்தில் அதுவும் இல்லை இங்கு மீனவர் கடலில் உயிருக்கு போராடிக் கொண்டிருக்க ஆளும் அரசாங்கம் ஆர். கே. நகரில் தேர்தல் வேலையில் மும்முரமாக இருந்தது. பிரதமர் மோடி பாதிக்கப்பட்ட மக்களை நேரில் பார்க்காமல் டிஜிட்டல் புகைப்படத்தில் பார்த்துவிட்டு சென்றது, அதுவும் கிட்டத்தட்ட இருபது நாட்கள் கழித்து வந்தது, மத்திய அமைச்சர் பொன்னாரும், எச். ராஜாவும் நீதிவேண்டி அமைதியான முறையில் போராடிய மீனவ மக்களின் போராட்டத்தை இந்துத்துவா பார்வை கொண்டு கொச்சைப் படுத்திய இழிநிலை பேச்சு, தொடர்ந்து சிறுபான்மை இன மக்கள் மீதான வெறுப்பை விதைக்கும் அரசின் தவறான பாசிச மனநிலை, சாதீய மோதல்களை அவிழ்த்துவிட முனைந்தது, அதற்கு எங்களிடம் சாதி, மத வேறுபாடு இல்லை, அதை வைத்து எங்களை பிரித்தாள நினைத்தால் விளைவு உங்களுக்கு தான் என்கிற அந்த துயர நிலையிலும் மீனவ மக்களின் ஒற்றுமையான குரல் என அந்தந்த மனிதர்களின் வாக்குமூலமாகவே பதிவு செய்திருக்கிறார் தோழர் திவ்யபாரதி. மிகுந்த மனதைரியத்துடனும், கோபத்துடனும், பெரும் சிரமங்களுக்கு இடையே தான் தோழர் திவ்யா இதனை பதிவு செய்திருக்கிறார். இறுதியில் வரும் பாடல் நெஞ்சை கனமாக்குகிறது. அதிகாரவர்க்கத்தை, அரசபயங்கரவாதத்தை எரிக்கும் பெருந்தீ தான் ‘தோழர் திவ்ய பாரதியின்’ “ஒருத்தரும் வரலே”.

தீ எரிக! தீ எரிக!
 

Leave Comments

Comments (0)