கொழுப்பெனும் நண்பன் - 18

/files/detail1.png

கொழுப்பெனும் நண்பன் - 18

  • 5
  • 0

-அ.ப.ஃபரூக் அப்துல்லா

இப்போது அதிகமான மக்களுக்கு வரும் நோயாக "கீழ் வாதம்" எனும் GOUT இருக்கிறது. இந்த கீழ் வாதம் வந்தவர்களுக்கு காலின் பெருவிரலில்  கடுமையான வலி வரும். ரத்தத்தில் யூரிக் அமிலம் எனும் பொருள் அதிகமாவதால் வருவதே கீழ்வாதம் எனும் கவ்ட். உடல் பருமன் உள்ள மக்களுக்கு இந்த கீழ்வாதம் வரும் வாய்ப்பு அதிகமாக இருப்பதால் முன்னெப்போதும் இல்லாத அளவு அதிகமான இளைஞர்கள் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

யூரிக் அமிலம் என்றால் என்ன?

நமது உடலில் இருக்கும் புரதமானது தினமும் வளர்சிதை மாற்றம் அடைந்து அமினோ அமிலங்களாக உடைக்கப்பட்டு அதன் கழிவு  ப்யூரின்களாக மாறும் . இந்த ப்யூரின்கள் தான் மாற்றம் அடைந்து யூரிக் அமிலமாக மாறுகின்றது. இந்த யூரிக் அமிலத்தை வெளியேற்றுவது நமது கிட்னிகளின் வேலை 

ரத்தத்தில் யூரிக் அமிலம் அதிகமாக காரணம் என்ன?

நமது உடலில் உள்ள யூரிக் அமிலத்தில் மூன்றில் ஒரு பங்கு நம் உணவு மூலம் எடுக்கும் புரதச்சத்து உடைக்கப்பட்டு வரும் ப்யூரின்களால் வருகிறது. மீதி இரண்டு பங்கு நமது உடலில் தானாகவே உற்பத்தி செய்யப்படுகிறது. ஆகவே என்ன தான் டயட் வழி நாம் ப்யூரின்களை உண்பதை நிறுத்தினாலும் நமது உடலில் உற்பத்தியாகும் ப்யூரின்களின் கண்ட்ரோல் நம்மிடம் இல்லை 

பிறகு ஏன் இந்த யூரிக் அமிலம் அளவில் கூடுகிறது ?

அதிகப்படியான யூரிக் அமிலத்தை வெளியேற்ற வேண்டிய நமது கிட்னி ஸ்ட்ரைக்செய்வது தான் இங்கு பிரச்சனை.
மேலும் பார்ப்போம் 

யூரிக் அமிலம் அதிகமாக இருப்போருக்கு சிவப்பு மாமிசம் மற்றும் கடல் உணவுகள் சிறிது காலம் தவிர்த்து உண்ண சொல்கிறோம். ஏன்?

இந்த உணவு களில் யூரிக் அமிலத்தை அதிகப்படுத்தும் ப்யூரின்கள் அதிகமாக இருப்பது தான் காரணம். சரி இவற்றை தவிர்த்தால் மட்டும் போதுமா, உடனே யூரிக் அமிலம் குறைந்து விடுமா?

இல்லை . உண்மையில் யூரிக் அமிலம் ஏறுவதற்குரிய குற்றத்தை இந்த மாமிசமும் கடல் உணவும் அனுபவித்தாலும் உண்மையில் குற்றவாளி யார் என்றும் தெரிய வேண்டுமா?

அதிகப்படியான சர்க்கரை தான் இங்கு முக்கிய குற்றவாளி. அதற்கடுத்த குற்றவாளி மாவுச்சத்து.எப்படி?

இந்த ஃபரக்டோஸ் எனும் சர்க்கரையானது நேரே கிட்னியை திகைக்கச் செய்து யூரிக் அமிலத்தை சரி வர வெளியேற்றம் செய்ய விடாமல் செய்து விடுகிறது. நம்மில் பலரும் கடைகளில் சென்று அடிக்கடி பீட்சா பர்கர், கே எப் சி சிக்கன் உண்ணும் போதும் காம்போ ஆஃபராக கூட கொடுக்கப்படும் கோக் மற்றும் பெப்சியையும் உள்ளே ஏற்றுகிறோம். மாமிசம் உண்பதால் ஏறும் யூரிக் அமிலத்தை அதன் பின் நாம் பருகும் கோக் பெப்சி போன்றவற்றில் உள்ள ஃப்ரக்டோஸ் வெளியேற விடாமல் செய்து விடுகிறது. ரத்தத்தில் க்ளூகோஸ் அதிகமாக இருந்தால் இன்சுலின் சுரக்கபடும் அப்போதும் கிட்னி கழிவுகளை வெளியேற்றாது.

ஆக , யூரிக் அமிலத்தை குறைக்க விரும்புவோர் முதலில் தாங்கள் உண்ணும் மாவுச்சத்தை குறைக்க வேண்டும். பிறகு, ஃபரக்டோஸ் உள்ள பழங்கள் மற்றும் குளிர்பானங்கள் , சர்க்கரை போன்றவற்றை தவிர்க்க வேண்டும். ஃப்ரக்டோஸ் போன்றே செயல்பட்டு கிட்னியை மூர்ச்சயாக்கும் ஆல்கஹால் , பீர் போன்றவற்றை நிறுத்தி விட வேண்டும். கடைசியாக சிறிது காலம் , யூரிக் அமிலம் குறையும் வரை மீன் மற்றும் மாமிசத்தை குறைக்க வேண்டும் 

வேறு யாருக்கு யூரிக் அமிலம் கூடும் ?

அதிரடியாக உடல் எடை குறைவோருக்கு யூரிக் அமிலம் ஏறி பிறகு இறங்கும். எடை குறைப்பில் நிதானம் தேவை 

யூரிக் அமிலம் உயர்வால் என்ன பிரச்சனை?

கீழ் வாதம் எனும் கவுட் நோய் பெருவிரலில் யூரிக் அமிலம் சேர்வதால் கடும் வலியை ஏற்படுத்தும்மிக சிலருக்கு கிட்னியில் யூரிக் அமிலம் சேர்ந்து சிறு கற்கள் தோன்றலாம். பலருக்கும் யூரிக் ஆசிட் உயர்வு எந்த பிரச்சினையும் தராமல் சிறிது அதிகமாக இருக்கும் 

இக்கட்டுரை வழி யூரிக் அமிலம் பற்றியும், அது ஏன் உயர்கிறது என்பதைப் பற்றியும், அதன் அளவை குறைக்க என்ன செய்ய வேண்டும் என்று பார்த்தோம். யூரிக் அமிலம் அதிகமாக இருப்பவர்கள் முதலில் குறைக்க வேண்டியது ஃப்ரக்டோஸ் மற்றும் மாவுச்சத்தை என்பதை மனதில் இருத்தினால் போதும்.

முந்தைய தொடரினை படிக்க

Leave Comments

Comments (0)