கொழுப்பெனும் நண்பன் 15

/files/detail1.png

கொழுப்பெனும் நண்பன் 15

  • 8
  • 0

-அ.ப.ஃபரூக் அப்துல்லா


கல்லீரலில் கொழுப்பு படியுமா? கல்லீரலே கொழுப்பை செரிமானம் செய்ய படைக்கப்பட்ட உறுப்பு என்பது தெரியும்.. பிறகு எப்படி அந்த கல்லீரலுக்குள்ளேயே கொழுப்பு படிந்து விடுகிறது.
இப்போதெல்லாம் ஆண் பெண் இருபாலர் வித்தியாசம் இன்றி 
அல்ட்ரா சவுண்ட் எனும் வயிற்றுப் பகுதி ஸ்கேன்  பரிசோதனை செய்தால் பொதுவாக கல்லீரலில் 
"ஃபேட்டி லிவர்" என்ற வாசகம் ரிசல்டில் இருப்பது கண்டிருக்கலாம். 

சில இடங்களில் ஃபேட்டி லிவர் - கிரேடு ஒன் (fatty liver - grade one) என்று ரிசல்ட் வரும். 
இது எதனால் வருகிறது??
இதன் தொடர்ச்சி தான் என்ன?? 
கொழுப்பைக் கண்டால் காத தூரம் ஓடுகிற ஒரு கும்பலில் நீங்களும் ஒருவரா??
தினமும் மூன்று வேளையும் நேரம் தவறாமல் அரிசி/கோதுமை போன்ற தானியங்களை உட்கொள்பவரா??
உங்களுக்கு இந்த கட்டுரை பயன்தரலாம் 

கல்லீரலின் நோய்கள் பற்றி அறிந்து கொள்ள முதலில் நாம் 
அந்த உறுப்பைப் பற்றி தெரிந்திருக்க வேண்டும் அல்லவா??
கல்லீரல் நமது வயிற்றுப்பகுதியின் வலது புறத்தில் உதரவிதானத்திற்கு கீழ் இருக்கும் ஒரு உறுப்பு.
சுமார் 1.5 கிலோ எடை இருக்கக் கூடிய இந்த உறுப்பானது நமது குடும்பத்தின் தாய்க்கு ஒப்பானது. 

குடும்பத்தில் எப்படி தாய் . தனது வீட்டில் உள்ள அனைத்து வேலைகளையும் இழுத்துப்போட்டுக் கொண்டு செய்வாளோ அதைப்போல நமது கல்லீரலும் பல பணிகளை தனது தினசரி அலுவலாக கொண்டுள்ளது.

அனுதினமும்  சுமார் 500க்கும் மேற்பட்ட உயிர் வேதியியல் வினைகளை கல்லீரல் மேற்கொள்கிறது.

நாம் உட்கொள்ளும் சத்துகளில் முக்கியமானவையான 
மாவுச்சத்து, புரதம் மற்றும் கொழுப்பு இவை மூன்றையும் உடலை கிரகிக்க வைக்க கல்லீரல் முக்கியமானது. 

உடலுக்குத் தேவையான கொலஸ்ட்ராலை உற்பத்தி செய்வதாகட்டும், 
ஒரு இடத்தில் சுரக்கப்படும் ஹார்மோன்களை மற்றொரு இடத்திற்கு எடுத்துச் செல்லும் லைபோ புரோட்டீன்களை உற்பத்தி செய்வதாகட்டும், 
பல முக்கியமான ஹார்மோன்கள் உருவாக காரணமாக இருப்பதாகட்டும், 
இரத்தத்தை உரைய வைக்கும் ரத்த உரையவைப்பான்களை(clotting factors) உற்பத்தி செய்வதாகட்டும்
கல்லீரலுக்கு நிகர் கல்லீரல் தான். 

ஏன்.. நாம் கருப்பைக்குள் இருக்கும் போது நமது சிவப்பு ரத்த அணுக்களை உற்பத்தி செய்யும் வேலையை (fetal erythropoiesis) செய்வது கல்லீரல் தான். 

நாம் உண்ணும் மாவுச்சத்தை க்ளைகோஜெனாக(glycogenesis)  மாற்றி தன்னிடம் ஸ்டோர் செய்து வைக்கும். ஏதேனும் எமெர்ஜென்சியில் நமக்கு சர்க்கரை குறைந்தால் அந்த க்ளைகோஜன் பயன்படும். 

மேலும் , க்ளூகோஸ் தேவைப்பட்டால் அந்த க்ளைகோஜனை உடைத்து நமக்கு க்ளூகோசாக தரும். இதை க்ளைகோஜெனோலைசிஸ் (glycogen-o-lysis) என்கிறோம். 

அந்த க்ளைகோஜன் ஸ்டாக், தீர்ந்தது விட்டால், நமது கல்லீரலால் மேலும் க்ளூகோசை மாவுச்சத்தின்றியே உருவாக்க முடியும்.
அதற்கு "க்ளூகோ-நியோ-ஜெனசிஸ்" (gluco-neo-genesis") என்ற பணியை செய்கிறது.

இதன் மூலம், அமினோ அமிலங்கள், க்ளிசரால் , லேக்டேட்டைக் கொண்டு நமது கல்லீரல் க்ளூகோசை சமைத்து விடும் ஆற்றல் கொண்டது. 

நாம் உண்ணும் உணவில் இருக்கும் புரதச்சத்தைக்கொண்டு அமினோ அமிலங்களாக அதை மாற்றி பல வேதியியல் மாற்றங்களை உருவாக்குகிறது.

நமது உணவில் அதிகம் மாவுச்சத்து இருந்தால், அதனால் கிடைக்கும் க்ளூகோசை கொழுப்பாக மாற்றி சேமித்து வைக்கிறது(lipogenesis) . 

நமது உணவில் கொழுப்பு கிடைக்கிறதோ இல்லையோ, தினமும் 2000 மில்லி கிராம் கொலஸ்ட்ராலை உற்பத்தி செய்கிறது. இந்த கொலஸ்ட்ரால் பல முக்கிய வினைகளுக்கு தேவை.
ஆண் ஹார்மோனான டெஸ்டோஸ்டெரோன் மற்றும் பெண் ஹார்மோனான ஈஸ்ட்ரோஜன், கர்ப்பம் நிலைக்க வைக்க தேவைப்படும் ப்ரோஜெஸ்ட்ரான் போன்ற ஹார்மோன்கள் உருவாக கொலஸ்ட்ரால் தேவை . 

இது எல்லாம் போக கல்லீரல், பித்த நீரை (bile juice) சுரக்கிறது . இந்த பித்த நீர் கல்லையும் செரிக்கும் ஆற்றல் கொண்டது. பித்த நீரைக் கொண்டு நாம் உண்ணும் கொழுப்பு நிறைந்த உணவுகளை செரிமானம் செய்கிறது. 

பித்தநீரை பித்தக்குழாய் (bile duct) வழியாக ஜீரண மண்டலத்துக்குள் சுரக்கிறது . 
பித்த நீரை ஸ்டோர் செய்து வைக்கத்தான் தனியாக "பித்த பை" எனும் ஸ்டோர் ரூமை தன்னகத்தே வைத்துள்ளது. அதைப்பற்றி கடந்த வாரம் பார்த்தோம்.

தினமும் குறைந்தபட்சம் 30 கிராம் கொழுப்பு சேர்த்த உணவுகளை நீங்கள் எடுக்க வேண்டும். அப்போது தான் பித்த நீரோட்டம் சரியாக இருக்கும். 

நீங்கள்கொழுப்பின் அளவை மிகவும் குறைத்தால், பித்த நீர் பித்த பையிலேயே தேங்கி, கற்களாக (cholelithiasis /gall bladder calculus / gall bladder stone) மாறலாம் என்றும் பார்த்தோம்.

இந்த வாரம் ஃபேட்டி லிவர் எனும் கல்லீரலில் கொழுப்பு படியும் தன்மையை அலசி ஆராய்வோம்.

கல்லீரலில் அதிகமான கொழுப்பு தேங்குவதால் ஏற்படும் நிலை தான் இந்த "கல்லீரலில் கொழுப்பு ஏறிய நிலை" 

எதனால் கல்லீரலில் கொழுப்பு சேர வேண்டும்??
கல்லீரலை சமையல் கூடத்துடன் ஒப்பீடு செய்யுங்கள் 

ஒரு கிலோ மாவு கொடுத்தால் நமது அம்மா அதில் நமக்கு இட்லி சுட்டுத்தருவார்.மீதம் மாவை குளிர் சாதனப்பெட்டியில் வைப்பார். ஒரு கிலோ மாவு மூன்று நாளைக்கு வரும் என்பது அம்மாவுக்கு தெரியும். 

அடுத்த மூன்று நாட்களுக்கு மாவு புதிதாக வாங்க தேவையில்லை. ஏனெனில் ஃபிரிட்ஜில் தான் மாவு இருக்கிறதே..! 

ஆனால் அடுத்தநாள் அப்பா தெரியாமல் ஒரு கிலோ மாவு வாங்கி வந்துவிட்டால் அம்மா என்ன செய்வார்??

இந்த ஒரு கிலோ புது மாவை ஃபிரிட்ஜில் வைப்பார். ஆக அடுத்த ஆறு நாட்களுக்கு மாவு கைவசம் இருக்கும். 

இப்படி தேவைக்கு மீறி மாவு இருந்தும் தினமும் யாரோ ஒருவர் மாவு/ பரோட்டா என வாங்கி வந்துவிட்டால்.. நம் அம்மா என்ன தான் செய்வார் பாவம்..!!

ஃப்ரிட்ஜும் ஒரு அளவுக்கு மேல் இடம் கொள்ளாது. 
ஒரு கட்டத்துக்கு மேல் கிச்சனே அலங்கோலமாகி விடும். 

இந்த சினாரியோவை நமது கல்லீரலுக்கும் சிந்தித்து பாருங்கள்

மாவுச்சத்து ஒரு வரைமுறைக்குள் இருந்தால் உடல் அதை சக்திக்கு உட்கொண்டுவிடும் 

அது வரம்பு மீறி சென்றால் நம் கல்லீரல் அதை கொழுப்பாக மாற்றி தொப்பையில், தொடை, இடுப்பு , மார்பு பகுதிகளில் சேமிக்கும். 

மீண்டும் மீண்டும் அதிக மாவுச்சத்து சாப்பிட்டால் , உண்ட வீட்டையே ரெண்டாக்கிய கதையாய் தன்னை உற்பத்தி செய்த கல்லீரலிலேயே கொழுப்பு படிந்து சேர ஆரம்பித்துவிடும். 

ஆக, ஃபேட்டி லிவருக்கு காரணம் மாவுச்சத்து தான். கொழுப்பு அல்ல.

இந்த கொழுப்பு படியும் நிலையை "ஃபேட்டி லிவர்" என்று குறிப்பிடுவோம்

இதன் படிநிலைகள் (grades ) 
அல்ட்ரா சவுண்ட ஸ்கேன் என்பது நுண் ஒலி அலைகளை பீய்ச்சி அந்த அலைகள் நம் உள்ளுறுப்புகள் மேல் பட்டு பிரதிபலிக்கும் பிம்பத்தைக்கொண்டு உருவாக்கப்படும் வெள்ளை-சாம்பல்(white-grey)  நிற படங்களை வைத்து உருவாக்குவது.

அல்ட்ரா சவுண்ட் ஸ்கேனில், கல்லீரல் தான் நடுநிலை நாயகம். அதாவது கல்லீரலின் பிம்பம் தான் நடுநிலை. 

கல்லீரலை விட குறைவாக ஒலியை பிரதிபலிக்கும் பாகங்கள் hypoechogenic என்று அழைக்கப்படும். இவை கல்லீரலை விட அதிக  பழுப்பு (more greyer than liver) நிறத்தில் இருக்கும்.

கல்லீரலை விட அதிகமாக ஒலியை பிரதிபலிக்கும் பாகங்கள் hyper echogenic என்று அழைக்கப்படும். இவை கல்லீரலை விட குறைந்த பழுப்பு நிறத்தில் (less greyer) இருக்கும். 

ஃபேட்டி லிவர் பிரச்சனையில் கொழுப்பு கல்லீரலில் படிவதால்

இந்த கொழுப்பு படிந்துள்ள இடங்கள், நார்மல் கல்லீரலை விட அதிக ஒலி அலையை பிரதிபலிக்கும். அதனால் அந்த இடங்கள் நார்மல் கல்லீரலை விட பழுப்பாகவோ கருப்பாகவோ இருக்கும். 

இதில் grade I என்பது கல்லீரலில் ஆங்காங்கே கொழுப்பு படிந்து காணப்படுவது. நார்மல் கல்லீரலில் கொழுப்பு படியாது. இது ஆரம்ப நிலை. 
 
Grade II என்பது கல்லீரலில் கொழுப்பு அதிகமாக படிவதால், போர்டல் சிறை சரியாக புலப்படாமல் போகும் (portal vein)  இது அடுத்த கட்டம்  

Grade III என்பது கொழுப்பு அதிகமாக கல்லீரலில் படிவதால் உதரவிதானம் (diaphragm) சரியாக புலப்படாது .இது முற்றிய நிலை

இந்த கல்லீரிலில் படியும் கொழுப்பானது பின்னாளில் கல்லீரலில் பாதிப்பை ஏற்படுத்தி

மது அருந்தாதவர்களுக்கு வரும் கல்லீரல் கொழுப்பு படியும் நோயாக மாறலாம் (NON ALCOHOLIC STEATO HEPATOSIS) இதன் செல்லப் பெயர் NASH 

மேலும் கல்லீரலில் ஒரு அளவுக்கு மேல் கொழுப்பு சேர்ந்தால் , கல்லீரல் விரிந்து விரிந்து ஒரு நிலைக்கு மேல் சுருங்க ஆரம்பித்து விடும். இது கல்லீரல் அழற்சி நோய் (cirrhosis) எனப்படும். இந்த அளவுக்கு முற்றிய நோயை ரிவர்ஸ் செய்வது கடினம். 

இது பின்னாளில் கல்லீரல் புற்றுநோய்(HEPATO CELLULAR CARCINOMA)  அல்லது கல்லீரல் செயலிழப்பு(LIVER FAILURE)  வரை இட்டுச்செல்லும் ஆபத்து இருக்கிறது.

நம்மை பயமுறுத்தும் செய்தி யாதெனில்  மேலை நாடுகளில் இருபது வயதைக்கூட எட்டாத பள்ளி செல்லும் பிள்ளைகளிடம் செய்த ஆய்வுகளில் அவர்களில் பெரும்பாலானோருக்கு ஃபேட்டி லிவர் இருப்பது தெரிய வருகிறது. 

உண்மையில் நம் நாட்டில் மட்டும் என்ன வாழுகிறதாம்? 
நாமும் தற்போது ஃபாஸ்ட் ஃபுட் கலாச்சாரம், சாக்லேட், கேக் என்று ரீபைன்டு கார்போஹைட்ரேட்டுகளை வாங்கி குழந்தைகளுக்கு கொடுக்கிறோம். 
இதன் கேடுகளை அறிந்தால் நாம் அப்படி செய்யமாட்டோம் என்றே நினைக்கிறேன்..

குழந்தைகள் எதை உண்ண வேண்டும் . எதை உண்ணக்கூடாது என்பதில் பெற்றோரின் கவனம் என்றும் இருக்க வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். 

மேலும், க்ரேடு 2 வரை உள்ள ஃபேட்டி லிவரை ஈசியாக ரிவர்ஸ் செய்யலாம்..

எப்படி??

ஃபேட்டி லிவர் எப்படி வந்தது என்பதை அறிந்தோம் அல்லவா..

பிரச்சனை மாவுச்சத்து அடங்கிய குப்பை உணவுகளை அளவின்றி தின்றதால் வந்தது. 

அதை உடனே நிறுத்த வேண்டும். 

குறை மாவு நிறை கொழுப்பு உணவுக்கு மாறுவது உங்களுக்கு நன்மை பயக்கும். 

எப்படி???? 

1. மாவுச்சத்து குறைத்து உண்பதால் மேற்கொண்டு க்ளூகோஸ் கொழுப்பாக மாற்றம் அடைவது நின்று விடும்.

2.இந்த உணவு முறையில் உடல் கொழுப்பை எரிப்பதால், கொஞ்சம் கொஞ்சமாக உள்ளுறுப்புகளில் மண்டிக்கிடக்கும் கொழுப்பும் கரைய ஆரம்பித்து காணாமல் போய் விடும். 

3. நாம் உணவிலேயே தேவையான அளவு கொலஸ்ட்ராலை கொடுத்து விடவதால் கல்லீரல் தினமும் கஷ்டப்பட்டு கொலஸ்ட்ராலை உற்பத்தி செய்ய வேண்டியது இல்லை. இது அதன் பணிச்சுமையை வெகுவாக குறைத்து விரைவில் நலம் பெற உந்து சக்தியாக அமையும். 

முடிவுரை 

உங்களின் உறவினர்களில் யாருக்கேனும் ஃபேட்டி லிவர் இருப்பின் அவருக்கு இந்த டயட்டை பரிந்துரை செய்யுங்கள். 

அவரது கல்லீரலை பிரச்சனை தீவரமாவதற்குள் காக்க ஒரு வாய்ப்பு வழங்குங்கள். 

ஃபேட்டி லிவர் பிரச்சனையை கொலஸ்ட்ரால் மாத்திரைகளாலோ வேறு எந்த குறுக்கு வழியிலோ சரி செய்ய இயலாது. 
எதைத்தின்றதால் அது வந்ததோ
அதை நிறுத்த வேண்டும். மாவுச்சத்து அதிகம் உண்ணும் உணவு முறையில் இருந்து குறை மாவு நிறை கொழுப்பு உணவு முறைக்கு நாம் மாற வேண்டும் என்பதே இந்த கட்டுரையின் நோக்கம்.

 

முந்தய தொடரினை படிக்க

Leave Comments

Comments (0)