கொழுப்பெனும் நண்பன் 14

/files/detail1.png

கொழுப்பெனும் நண்பன் 14

  • 1
  • 0

-அ.ப.ஃபரூக் அப்துல்லா

இந்த பகுதியில் நாம் காணப்போவது கொழுப்புக்கும் கல்லீரலுக்கும் இருக்கும் நேரடி தொடர்பு பற்றி.  

நாம் உண்ணும் உணவில் உள்ள கொழுப்பை செரிமானம் செய்ய நமக்கு கொடுக்கப்பட்ட மிக முக்கிய  உறுப்பு - கல்லீரல். கல்லீரலில் இருந்து தான் பித்த நீர் எனும் Bile juice சுரக்கப்படுகிறது. இந்த பித்த நீரின் வேலை நமது உணவில் உள்ள கொழுப்பை செரிமானம் செய்வது.  

கல்லீரல் என்பது பித்த நீர் உருவாக்கும் தொழிற்சாலை   என்றால் நமது பித்தப்பை தான் அதை சேமித்து வைக்கும் கிடங்கு.  

கல்லீரலில் இருந்து உற்பத்தியாகும் பித்த நீரானது ஹெபாடிக் டக்ட் எனும் குழாய் வழியாக வந்து பித்தப்பையில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் .

நாம் எப்போதெல்லாம் கொழுப்பு நிரம்பிய உணவுகளை உண்கிறோமோ .. அப்பொழுதெல்லாம் பித்தப்பை நமது குடலுக்குள் "பித்த நீரை"(bile juice) அனுப்பும்.

ஆக, இதிலிருந்து தெரியும் உண்மை என்ன??

பித்த நீர் சரியாக ஓடி குடலை அடைய வேண்டுமெனில் நமது உணவில் கொழுப்பு இருந்தாக வேண்டும்.
குறைந்தபட்சம் 30 கிராம் கொழுப்பாவது இருந்தால் தான் , பித்த நீர் ஓட்டம் சீராக இருக்கும்.  30 கிராம் அளவு கொழுப்புக்கும்  குறைவாக கொழுப்பை தினமும் எடுப்பவர்களுக்கு, பித்த நீரோட்டம் தேக்க நிலையை அடையும். 
பித்தப்பையிலேயே அந்த நீர் அதிக நேரம்  தேங்கி இருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். பித்த நீரானது 97 சதவிகிதம் தண்ணீர் மீதம் கொஞ்சம் பித்த உப்புகள், கொலஸ்ட்ரால் இவற்றால் ஆனது. 

கொழுப்பு அதிக அளவு உண்ணாத ஒருவருக்கு, 

பித்த பையில் பித்த நீர் தேங்கி கட்டியாக மாற்றம் செய்யப் படுகிறது. ஆகவே, ஒருவர் தொடர்ந்து கொழுப்பு உணவுகளை புறக்கணிப்பாராயின், 
அவரது பித்த பையில்  கற்கள் (gall bladder stones) உருவாகும் சாத்தியம் அதிகமாகிறது. 

இன்று கொழுப்பு கிட்டத்தட்ட கெட்டவார்த்தையாக ஆக்கப்பட்டு விட்டதால்,  
நாம் அனைவரும் அதிகமாக மாவுச்சத்துக்கு பழக்கப்பட்டு விட்டோம்.  மாவுச்சத்து அதிகம் உண்பதால், பித்த நீர் வெளிவரும் வாய்ப்பு கிட்டத்தட்ட குறைந்து விடுகிறது.
எனவே நிறை மாவு குறை கொழுப்பு(high carb low fat diet)  உணவில் இருப்போருக்கு பித்த பை கற்கள் தோன்ற வாய்ப்பு அதிகம். 

நமது நாட்டு மக்களுக்கு அதிகமாக வரும் ( 90 சதவிகிதம் ) பித்தபை கற்கள் கொலஸ்ட்ரால் கற்களே என்று கண்டறியப்பட்டுள்ளது. முட்டையில் கூட மஞ்சள் கருவை உண்ண மாட்டேன் என்று பயப்படும் சூழலில் இது போன்ற நோய்கள் அதிகம் வரத்தான் செய்யும். 

பித்த பை கற்களை எப்படி கண்டுபிடிப்பது??

பித்த பையில் கல் இருப்பின் வயிற்றின் மேல் பகுதியில் குத்தும் வலி ஏற்படும். இந்த வலியானது முதுகுப்புறத்துக்கு பரவும். கொழுப்பு உணவுகளை அதிகம் எடுக்கும் போது வலி ஏற்படும். சில நேரங்களில் வயிற்றுப்போக்கு

வாந்தி காய்ச்சல் இருக்கலாம். இப்படி அறிகுறிகள் இருந்தால் மருத்துவரை அணுக வேண்டும். அவர் அல்ட்ரா சவுண்ட் (ultra sound abdomen and pelvis)  வயிற்றுப்பகுதியை சோதனை செய்தால் பித்தபை கற்கள் இருப்பது தெரிந்துவிடும். 

கற்கள் முதலில் உருவாகப் போவதை ஸ்லட்ஜ் (sludge) என்று அழைப்போம்

கற்கள் சிறிதாகவோ பெரியதாகவோ இருக்கலாம். 
இப்போது ஒரு கேள்வி வருகிறது..

கொழுப்பு சரியாக எடுத்துக் கொள்ளாததால் தான் இந்த பித்த பை கற்கள்  வருகிறது என்றீர்கள். இப்போது நீங்களே கொழுப்பு எடுத்தால் தான் வலி வரும் என்கிறீர்களே? என்று நீங்கள் கேட்பது புரிகிறது. 

நீங்கள் உணவில் கொழுப்பை எடுக்காததால் பித்த பை கற்கள் தோன்றி விட்டன. இப்போது அவை பித்த பைக்குள் இருக்கின்றன. திடீரென்று நீங்கள் பேலியோ உணவு முறைக்கு எந்த முன்னறிவுப்பும் இன்றி , எந்த பரிசோதனையும் செய்யாமல் மாறுகிறீர்கள் என்று வைத்துக்கொண்டால்.. உங்கள் பித்தபை இப்போது கொழுப்பை செரிமானம் செய்ய அதிகம் வேலை செய்யும். நன்றாக சுருங்கி பித்த நீரை வெளியேற்றும். அப்போது உள்ளே அதனுடன் கொண்டுள்ள கற்களையும் சேர்த்து வெளியேற்றும்.   கற்கள் சிறியதாய் இருந்தால் எளிதில் வெளியேறி விடும். பெரிதாக இருந்தால் பித்த பை குழாயையோ, கல்லீரல் குழாயையோ, கணைய குழாயையோ அடைத்துக் கொள்ள வாய்ப்புகள் அதிகம். இதனால் பிரச்சனைகள் ஏற்படலாம். 

பித்த பை கற்கள் குறை மாவு நிறை கொழுப்பு உணவு முறையில் குணமாகுமா?? 

பித்த பை கற்கள் புதிதாக உருவாகாமல்  இந்த உணவு முறை தடுக்கும் (prevention is better than cure ) என்பதை உறுதியாக கூறலாம். 

பித்த பை கற்கள் ஆரம்ப நிலையிலோ (sludge) அல்லது மிக சிறிய கற்களாகவோ இருப்பின் (<3mm) குறை மாவு நிறை கொழுப்பு உணவு முறையில் குணமாகலாம். 
இதை "flushing effect" என்போம். 

கொழுப்பு உணவை அதிகம் எடுத்துக்கொள்வதால் அதுவரை அடைபட்டுக்கிடந்த பித்த நீர் வெளியே வரும்பொழுது அதனுடன் கற்களும் வெளியேறிவிடலாம். 

பித்த பை கற்கள் என்பது, தேவையான மினிமம் கொழுப்பை கூட உண்ணாத ஒருவருக்கு வரும் பிரச்சனை,ஆகவே ஒருவருக்கு ஏற்பட்ட பித்த பை கற்களை சர்ஜரி மூலம் மட்டுமே சரி செய்து கொள்ள வேண்டும். 

ஏற்கனவே பித்த பை கற்கள் உள்ளவர்கள் அந்த பிரச்சனையை அறுவை சிகிச்சை மருத்துவரிடம் காட்டி சரிசெய்து விட்டு இந்த டயட்டுக்கு மாறலாம். 
பித்த பை கற்கள் உண்டாகாமல் தடுக்கும் எளிய முறை 
- குறை மாவு நிறை கொழுப்பு உணவு முறை
என்பதை இதன் மூலம் அறியலாம்
 

Leave Comments

Comments (0)