கொழுப்பெனும் நண்பன் 12: நாம் உடல் பருமனை குறைக்கும் வழிகளை அறியும் முன் .. நாம் ஏன் குண்டானோம்? என்ற கேள்விக்கு பதில்.

/files/detail1.png

கொழுப்பெனும் நண்பன் 12: நாம் உடல் பருமனை குறைக்கும் வழிகளை அறியும் முன் .. நாம் ஏன் குண்டானோம்? என்ற கேள்விக்கு பதில்.

  • 1
  • 0

-அ.ப.ஃபரூக் அப்துல்லா

பள்ளி கல்லூரி நாட்களில் கட்டுடல்  காளையராய் இருந்த பல ஆண்கள் தங்களின் முப்பதுகளில் தொப்பை தள்ளி திரிவது ஏன்? 

கல்லூரி நாட்களில் மெல்லிடை அரசிகளாய் வலம் வந்த மங்கைகள் இரண்டு குழந்தைகள் பெற்றவுடன் குண்டாவது ஏன்? 
அதற்கான விடையை தெரிந்துகொள்வோம் வாருங்கள். 
பள்ளி மற்றும் கல்லூரி காலங்களில் நமது உடலின் எரிபொருள் உட்கொள்ளும் திறன் மிக அதிகமாக இருக்கும். இதை Basal metabolic Rate என்போம். 
நாம் இளமைக்காலங்களில் மிகவும் சுறுசுறுப்பாக இருப்பதால் நாம் உண்ணும் உணவு எவ்வளவு அதிகமாக இருந்தாலும் சரி அதை நம் உடல் மிக எளிதாக எரித்து விடும். ஆகவே பெரிதாக நமது உடலில் கொழுப்பாக சேமிக்காது. ஆனால் அதுவே இளமையிலேயே சுறுசுறுப்பு இல்லாமல் அதிக மாவுச்சத்து உணவு உட்கொண்டால் குழந்தைப்பருவத்திலேயே உடல் பருமன் தோன்றும். இப்போது பெரும்பாலும் குழந்தை பருவத்திலேயே உடல் பருமன் வந்துவிடுவதற்கு காரணம் இது தான். வயதாக வயதாக அதே உணவு ஆனால் உடல் உழைப்பு குறைந்து கொண்டே போவதால் இந்த பேசல் மெட்டபாலிக் ரேட் குறைந்து விடுகிறது . ஆகவே நமது உடல் மிக குறைவான கலோரிகளை கொண்டே இயங்கும் நிலையில் இருக்கும். ஆனாலும் நாம் அளவுக்கு அதிகமாக சாப்பிட்டுக்கொண்டே இருப்போம். இதனால் நாம் உண்ணும் மாவுப்பொருள் அனைத்தும் கொழுப்பாக மாற்றப்பட்டு சிறுகச் சிறுகச் சேமிக்கப்படுகிறது. இதைத்தான் உடல் பருமன் என்கிறோம். யாரும் ஒரே இரவில் குண்டாகவும் முடியாது.. ஒரே இரவில் ஒல்லியாகவும் முடியாது . 
குண்டாகுதல் என்பது வருடக்கணக்கில் நடக்கும் ஒரு செயல். இதை ஆரம்பத்திலேயே கண்டறிவது நான் சென்ற பகுதியில் குறிப்பிட்ட பல நோய்கள் நமக்கு வராமல் தடுக்கும்.

உடல் பருமனை சரி செய்யும் முன் நமக்கு ஏன் உடல் பருமன் வந்ததென்று  முதலில் அறிய வேண்டும். தினசரி மூன்று வேளைகளும் மாவுச்சத்து நிறைந்த உணவுகளான இட்லி தோசை சோறு போன்றவற்றை உண்ணும் ஒருவருக்கு  இரத்தத்தில் இன்சுலின் அளவு எப்பொழுதும் அதிகமாகவே இருக்கும்.  அவர் எப்பொழுதெல்லாம்  இந்த உணவுகளை சாப்பிடுகிறாரொ அப்பொழுதெல்லாம் அவரது புதிதாக இன்சுலினை உற்பத்தி செய்துக்கொண்டே இருக்கும். இன்சுலின் வளர்ச்சிக்கான ஹார்மோன். ஆகவே இரத்தத்தில் இன்சுலின் இருக்கும்பொழுது நமது  உடல் மாவுச்சத்தை கொழுப்பாக 
மாற்றி சேமிக்கும்.

இவ்வாறு இரத்தத்தில் கட்டுக்கு அடங்காத இன்சுலின் இருப்பின், சுரக்கப்பட்ட இன்சுலின் சரியாக வேலை செய்ய இயலாது. இதற்கு இன்சுலின் ரெசிஸ்டெண்ஸ் என்று பெயர். இந்நிலையில் நம் உடல் சேமித்து வைத்திருக்கும் கொழுப்பு கரையாது மாறாக கொழுப்பு சேர்ந்துக்கொண்டே இருக்கும். இதுவே நாம் குண்டாவதற்கு முதல் காரணம். இரண்டாவது காரணமாக இருப்பது இரண்டு ஹார்மோன்கள் . ஒன்று
க்ரெலின் மற்றொன்று லெப்டின்.

ஒரு உணவு உண்ட நான்கு மணி நேரத்திற்கு பிறகு காலி ஆகின்றது. காலியான வயிற்றிலிருந்து மூளைக்கு பசி உணர்வை தூண்டக்கூடிய சமிக்ஙைகளை அனுப்பும். மூளையின் பசி உணர்வு மண்டலத்தின் தூண்டுதலால் க்ரெலின் ஹார்மோன் சுரக்கும். இதன் விளைவாக பசி எடுக்கிறது.நாம் உணவு உண்கிறோம். வயிறு நிறைகிறது. வயிறு நிறைந்தவுடன் மூளையின் பசி உணர்வு மண்டலத்தில் திருப்தி உண்டாகிறது. இதன் விளைவாக லெப்டின் எனும் ஹார்மோன் சுரக்கிறது. லெப்டின் திருப்திக்கான ஹார்மோன். அது சுரந்தவுடன் உணவு உண்ட திருப்தி ஏற்படுகிறது  அதனால் உணவு உண்பதை நிறுத்துகிறோம். இன்சுலின் ரெசிஸ்டெண்ஸ் இருக்கும் சூழ்நிலையில் லெப்டின் சரியாக வேலை செய்ய இயலாது இதை லெப்டின் ரெசிஸ்டெண்ஸ் என்கிறோம். இதன் விளைவாக அடிக்கடி பசி உணர்வு எற்பட்டு அடிக்கடி சாப்பிட்டுக் கொண்டே இருக்கும் நிலை உண்டாகிறது. இதுவே உடல் பருமன் வருவதற்கு இரண்டாவது காரணம்.

மூன்றாவது காரணம் சரியான உடல் உழைப்பு இல்லாமை. எந்த வேலையும் செய்யாமல் நன்றாக உணவு மட்டும் உண்டு கொண்டிருப்பது கட்டாயம் உடல் பருமனுக்கு காரணமாகும். ஆகவே உங்களின் உடல் எடை ஏறுவதற்கான காரணங்களை தெளிவாக உணர்ந்து விட்டீர்கள். அடுத்த பகுதியில் உடல் பருமன் குறைப்புக்கான உணவு முறையை விரிவாகப் பார்ப்போம்.

Leave Comments

Comments (0)