கொரோனா மரணங்களும் கையாலாகாத அரசுகளும் !
April 18, 2021 - selvamani T
April 20, 2021,7:14:06 PM
இந்துக்களாக இருக்கின்ற ஈழத்தமிழர்களைக் குடியுரிமை கொடுத்து இந்த நாட்டில் தங்க வைக்க இந்த அரசு முயலாதது ஏன்? அவர்கள் தமிழர்கள் என்பதாலா? தமிழர்களும் இசுலாமியர்களும் புறக்கணிக்கக்கூடியவர்களா? என்று நாடாளுமன்றத்தில் திருமாவளவன் கேள்வி எழுப்பினார்.
குடியுரிமை சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றத்திற்கு எதிராக மக்களவை உறுப்பினர் திருமாவளவன் நாடாளுமன்றத்தில் பேசும்போது,
" சிறுபான்மைச் சமூகத்தினரைப் பாதுகாப்பதில்தான் பெரும்பான்மைச் சமூகத்தினரின் பெருந்தன்மை அடங்கியிருக்கிறது, சனநாயகம் இருக்கிறது என்று புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள் கூறியிருக்கிறார். பெரும்பான்மை என்கிற பெயரில் விருப்பம் போல் ஆடுவது, சிறுபான்மையினரின் உரிமைகளுக்கு எதிராக இருப்பது சனநாயகத்திற்குப் புறம்பானது மட்டும் அல்ல இது ஒரு பாசிச போக்காகும்.
நம்முடைய தேசம் பாசிசத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது என்பதற்குச் சான்றாக இந்த சட்டத் திருத்த மசோதா விளங்குகிறது. குறிப்பிட்ட ஒரு சமூகத்தை மட்டும் விளக்கி வைத்து அவர்களுக்கு இங்கே இடமில்லை எனக் கூறுவது வெளிப்படையான பாசிசத்தின் உச்சமாக விளங்குகிறது.
அடைக்கலம் தேடி வந்தவர்களை அரவணைப்பதுதான் மனித நாகரீகத்தின் உச்சமாகும், மனித நேயமாகும். ஒரு மனிதன் வீடு இல்லாமல் வாழலாம். ஆனால், நாடு இல்லாமல் வாழலாமா என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும். அப்படி நாடற்றவர்களாக நம்முடைய தேசத்தைத் தேடி அடைக்கலமாக்க வந்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்குக் குடியுரிமை வழங்குவதுதான் ஆளுவோருக்குரிய நாகரீகமாக இருக்க முடியும்.
ஆனால், நம்முடைய அரசு வெளிப்படையாகக் குறிப்பிட்ட ஒரு சமூகத்தை, இசுலாமியச் சமூகத்தை ஒதுக்கி வைப்பது விலக்கி வைப்பது அநாகரீகமான போக்கு என்பதை நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
நாட்டுப் பிரிவினையால் பாதிக்கப்பட்டவர்கள், அண்டை நாட்டைச் சேர்ந்தவர்கள், அரச மதமாக அறிவித்துக் கொண்டவர்கள் என்று தன்னுடைய உரையில் நம்முடைய மாண்புமிகு அமைச்சர் அவர்கள் குறிப்பிட்டு பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் பங்களாதேஷ் ஆகிய மூன்று நாடுகளிலிருந்து வந்தவர்களை மட்டும் இங்கு இசுலாமியர்களைத் தவிர மற்றவர்களை இங்கே குடிமக்களாக அங்கீகரிப்போம் எனக் கூறியிருக்கிறார். ஆனால் இந்த மூன்று வரையறைக்குமே இது உடன்படவில்லை.
அண்டை நாடுகள் என்று வரும்போது அண்டை நாடுகளாக உள்ள இலங்கை இதில் எடுத்துக்கொள்ளப்படவில்லை, மியான்மர் இதில் உள்ளடக்கமாக இல்லை, நேப்பாள் இதில் இல்லை. அண்டை நாடுகள் என்று வரும்போது அது ஏன் தவிர்க்கப்பட்டது என்கிற விளக்கம் இதில் இல்லை.
State religion என்று வரும்போது அண்டை நாடான இலங்கையில் கூட State religion அறிவிக்கப்பட்டுள்ளது. மியான்மரிலும் state religion அறிவிக்கப்பட்டுள்ளது. அப்படிப்பட்ட அந்த வரையறையும் இதற்கு உடன்படவில்லை. எனவே, தன்னுடைய கருத்திற்கே முரண்பாடான நிலைப்பாட்டை இந்த அரசு எடுத்துள்ளது.
ஒன்றை இங்கே நான் பதிவு செய்ய விரும்புகிறேன். அதாவது, இலங்கைத் தமிழர்கள் ஈழத்தமிழர்கள் ஏறத்தாழ ஒரு லட்சம் பேர் இந்தியாவில் இருக்கின்றார்கள். முகாம்களில் 70 ஆயிரம் பேர், வெளியில் 30 ஆயிரம் பேர். இவர்கள் அத்தனை பேரும் இசுலாமியர்கள் இல்லை. உங்கள் மொழியில் சொல்லப்போனால் இவர்கள் இந்துக்கள் தான். ஆக இந்துக்களாக இருக்கின்ற ஈழத்தமிழர்களைக் குடியுரிமை கொடுத்து இந்த நாட்டில் தங்க வைக்க இந்த அரசு முயலாதது ஏன்? அவர்கள் தமிழர்கள் என்பதாலா? தமிழர்களும் இசுலாமியர்களும் புறக்கணிக்கக்கூடியவர்களா என்கிற கேள்வியை எழுப்புகிறேன்" என்று பேசினார்.
காப்புரிமை © 2020 தமிழ் ஸ்டுடியோ. All Right Reserved.
Leave Comments