சாதி ஆணவப் படுகொலைக்கு எதிரான தனிச் சட்டம் இயற்றாதது ஏன்? 

/files/detail1.png

சாதி ஆணவப் படுகொலைக்கு எதிரான தனிச் சட்டம் இயற்றாதது ஏன்? 

  • 0
  • 0

 

கோவை மேட்டுப்பாளையத்தில் சாதி ஆணவப் படுகொலை. தமிழக அரசே, சாதி ஆணவப் படுகொலைக்கு எதிரான தனிச் சட்டம் இயற்றாதது ஏன்? என்று மே பதினேழு இயக்கம் கேள்வி எழுப்பியுள்ளது.

இதுகுறித்து அவ்வியக்கம் சார்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், ”கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த வர்சினிப் பிரியாவும், இடை நிலை உயர் சாதியைச் சேர்ந்த கனகராஜ் என்பவரும் ஒரு வருடமாகக் காதலித்து வந்திருக்கிறார்கள். வர்சினி பிரியாவின் தாய் துப்புரவுப் பணியாளராக பணிபுரிந்து வருகிறார். பெண் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவராக இருப்பதால், கனகராஜின் அண்ணன் வினோத் இவர்களின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்.

இந்நிலையில் நேற்று 25-6-2019 மாலை மேட்டுப்பாளையம் சிறுமுகை சாலை பகுதியில் வர்சினிப் பிரியாவும், கனகராஜூம் பேசிக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த கனகராஜின் அண்ணன் வினோத் மற்றும் இன்னொரு நபரும் அரிவாளால் இருவரையும் சராமாரியாக வெட்டியிருக்கிறார்கள்.

இதில் கனகராஜ் உயிரிழந்து விட்டார். வர்சினிப் பிரியா தலையில் பலமான வெட்டுக் காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

எத்தனை முன்னேற்றம் இந்த சமூகத்தில் ஏற்பட்டாலும், இந்த சாதி என்ற இழிவு மட்டும் வளர்ந்து கொண்டே இருக்கிறது. உயர் சாதிப் பெருமை என்பது ஒரு நாகரீக சமூகத்தின் அவமானம். சக மனிதனைச் சமமாக மதிக்கத் தெரியாத சாதி வெறி கும்பல், ஐந்தறிவு மிருகங்களாகவே கருதப்பட வேண்டும். சாதி வெறி கொண்டவர்கள் சமூகத்தின் இழிவாகக் கருதப்பட வேண்டும். சாதி ஆணவப் படுகொலைகள் தொடர்ச்சியாக நடந்து கொண்டே இருக்கின்றன. குறிப்பாகக் கொங்கு மண்டலத்தில் அதிக அளவில் சாதிய ஆணவக் கொலைகள் நடைபெறுகின்றன.

ஆனால் தமிழக அரசோ, சாதி ஆணவப் படுகொலைகள் குறித்து வாய் திறக்காமல் கள்ள மவுனம் காத்து வருகிறது. சாதி ஆணவப்படுகொலைகளை தடுத்திடத் தனிச்சட்டம் இயற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கையினை தொடர்ச்சியாகப் புறக்கணித்து வருகிறது. தமிழக அரசின் இந்த அலட்சியப் போக்கு, சாதி ஆணவப் படுகொலைகளை ஊக்குவிக்கிறதோ என எண்ணவே தோன்றுகிறது.

இந்த ஆணவப் படுகொலையில் ஈடுபட்டவர்களைக் கடுமையான தண்டனைக்கு உள்ளாக்கக் கோரி கோவை மாவட்டத்தில் பல்வேறு இயக்கங்கள் ஒன்றிணைந்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். இதில் மே பதினேழு இயக்கத் தோழர்களும் பங்கு கொண்டனர்.
இந்த ஆணவப் படுகொலையைச் செய்த வினோத் மற்றும் இதில் தொடர்புடைய அனைவரும் கைது செய்யப்பட்டு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும். இந்த மனித மிருகங்கள் சமூகப் புறக்கணிப்புக்கு உள்ளாக்கப்பட வேண்டும். சாதி ஆணவப் படுகொலைகளுக்கு எதிரான தனிச்சட்டத்தினை தமிழக அரசு உடனே இயற்ற வேண்டும்.

சாதி ஆணவக் கொலைகளைத் தடுத்திட ஜனநாயக அமைப்புகள் அனைத்தும் கைகோர்த்து நின்றிட வேண்டும்”என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave Comments

Comments (0)