சாதி ஆணவ வெறியை வேரறுக்க அசோக் குருதியின் மீது சபதமேற்போம்

/files/detail1.png

சாதி ஆணவ வெறியை வேரறுக்க அசோக் குருதியின் மீது சபதமேற்போம்

  • 0
  • 0

 

நெல்லை மண்ணில் சாதி வெறியர்களால் தோழர் அசோக் வெட்டிச்சாய்க்கப்பட்டார். இளம் வயதிலேயே இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்திலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிலும் தன்னை இணைத்துக் கொண்டு மக்கள் பணியாற்றியவர் தோழர் அசோக். ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்து அனைத்துப் பகுதி சமூக மக்களின் அடிப்படைத் தேவைகளுக்காக போராடியவர். பாதிக்கப்பட்ட மக்கள் யாராயினும் அவருக்கு சேவை செய்ய ஓடோடிச் சென்று பணியாற்றியவர். குடிநீர், சாலை வசதி, குடும்ப அட்டை, மருத்துவ வசதிகள் போன்ற அடிப்படை வசதிகளை மக்களுக்கு பெற்றுத் தருவதற்கு களம் பல கண்ட இளைஞர்.

இரத்த தான முகாம் துவக்கி உயிர்களைக் காக்கும் பணியை மேற்கொண்டவர். கிளைச் செயலாளராக பணியைத் துவங்கி, வாலிபர் இயக்கத்தின் மாவட்டப் பொருளாளராக உயர்ந்தவர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நெல்லை வட்டக்குழு உறுப்பினராகவும் பணியாற்றி வந்தார். 26 வயது இளைஞரானாலும் அனைவரோடும் அரவணைப்போடு பழகியவர். எப்போதும் இன்முகத்தோடு மக்கள் பணியை தொடர்ந்தவர். மக்கள் பணியில் இவர் ஆற்றிய சேவையின் விளைவாக அனைத்து சமூக மக்களிடத்திலும் நன்மதிப்பை பெற்றிருந்தார். இயக்கத் தோழர்களோடு இன்முகத்தோடு பழகியவர். யாருடைய பிரச்னையையும் சொந்த பிரச்னையாக கருதி அக்கறையோடு செயல்பட்டவர். எதிர்காலத்தில் மக்கள் தலைவராக உயர்வதற்கான அரிய பண்புகளை ஒருங்கே கொண்டிருந்தவர் தோழர் அசோக். கரையிருப்பு எனும் கிராமத்தில் பிறந்த அசோக், மாவட்ட அளவில் தலைவராக பரிணமித்ததை சாதி வெறியர்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்த ஒரு இளைஞன் இப்படி ஒரு பெரும் இயக்கத்தின் சங்கத்தில் தலைவராக உயர்ந்து பணியாற்றுவது சாதி வெறியர்களின் கண்களை உறுத்தியது போலும். அதன் உச்சக்கட்டமே சாதி வெறி பிடித்த சமூக விரோதிகள் தோழர் அசோக்கை தீர்த்துக்கட்டியுள்ளனர்.

சாதி ஆணவ வெறியே அடிப்படைக் காரணம்

கடந்த ஏப்ரல் 27 அன்று மாலை அசோக் தனது தாயாரை இருசக்கர வாகனத்தில் ஏற்றிக் கொண்டு கரையிருப்பு கிராமத்தின் பொதுப்பாதையில் வந்துள்ளார். அவரது தாயார் கையில் வைத்திருந்த புல்லுக்கட்டு, வழியில் நின்ற சாதிவெறியர்கள் மீது உரசி விட்டதாகக் கூறி அசோக்கையும், அவரது தாயாரையும் தாக்கியுள்ளார்கள். இது குறித்து அசோக் அளித்த புகாரின் பேரில் சாதி வெறியர்கள் சிலர் மீது தச்சநல்லூர் காவல்துறையினர் வன்கொடுமை தடுப்புப் பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். இதனால் ஆத்திரமடைந்த சாதி வெறியர்கள் அசோக் உள்ளிட்டு 7 பேர் மீது பொய் புகார் கொடுத்தனர். அதையும் காவல்துறை ஏற்றுக் கொண்டு வழக்கு பதிவு செய்துள்ளது. அசோக் உள்ளிட்ட மற்றவர்கள் முன்ஜாமீன் பெற்று காவல்நிலையத்தில் தினமும் கையெழுத்திட்டு வந்தனர். 

மேற்கண்ட ஒரு சம்பவத்தைத் தவிர வேறு முரண்பாடுகள் ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை. இந்தப் பின்னணியில் தான் 12.06.2019 அன்று இரவு 10 மணிக்கு, தான் வேலை செய்யும் டயர் கம்பெனிக்கு இரவு ஷிப்ட் வேலைக்குச் செல்வதற்கு பேருந்துக்காக காத்திருந்த இடத்தில் தோழர் அசோக்கை சாதி வெறியர்கள் கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்துள்ளார்கள். சாதி ஆதிக்க வெறி என்பதே இந்த படுகொலைக்கு அடிப்படைக் காரணமாகும். ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்தவர் தங்கள் மீது புகார் கொடுப்பதா?, தலித் சமூகத்தில் பிறந்த அசோக் மாவட்ட அளவில் தலைவராக உயர்வதா? என்ற சாதி ஆணவ வெறியே இப்படுகொலைக்கு அடிப்படையாக உள்ளது.

ஊரெல்லாம் உறங்குகிற நேரம் பார்த்து, ஆள்நடமாட்டம் இல்லாத பகுதியில் தோழர் அசோக்கை தாக்கி கொலை செய்துள்ளனர். அசோக்கினுடைய தலையையும், முகத்தையும் சிதைத்துள்ளனர். அசோக் படுகொலைச் செய்தி கேட்டு நள்ளிரவிலும் ஊரே அதிர்ந்து போனது. மக்கள் திரண்டு சாலை மறியல் போராட்டத்தில் இரவு முதலே ஈடுபட்டனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத் தோழர்கள் பெருமளவில் திரண்டு போராட்டங்களில் ஈடுபட்டனர். நெல்லை - மதுரை நெடுஞ்சாலையில் நள்ளிரவு முதல் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

கொலையே தொழிலாக...

கரையிருப்பு கிராமத்தில் பல சமூக மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். இக்கிராமத்தைச் சேர்ந்த ஒரு குடும்பத்தைச் சார்ந்தவர்கள் மட்டும் தொடர்ந்து சமூக விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். கடந்த 15 ஆண்டுகளில் இக்குடும்பத்தைச் சார்ந்தவர்களால் 8 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பொதுமக்கள் விபரம் தெரிவிக்கின்றனர். கொல்லப்பட்டவர்களில் ஒருவரைத் தவிர மீதியுள்ள அனைவரும் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சார்ந்தவர்களாவார்கள். இத்தனை கொலைகளுக்கும் காரணமான கொலையாளிகளுக்கு தண்டனை ஏதும் வழங்கப்பட்டதாக தெரியவில்லை. சாட்சிகளை மிரட்டி கலைப்பது, வழக்குகளை இழுத்தடிப்பது, அதன் மூலம் தப்பித்துக் கொள்வது இவர்களுக்கு கைவந்த கலையாக உள்ளது. கொலை நடந்த சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மாவட்டச் செயலாளர் கே.ஜி.பாஸ்கரன், சிஐடியு மாநில துணைப் பொதுச் செயலாளர் ஆர்.கருமலையான், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில பொதுச்செயலாளர் கே.சாமுவேல்ராஜ், மாநிலத் துணைத் தலைவர் வழக்கறிஞர் ஆர்.கிருஷ்ணன், மாநில செயலாளர் மு.கந்தசாமி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநிலத் தலைவர் என்.ரெஜீஸ் குமார், செயலாளர் எஸ். பாலா, மாவட்டத் தலைவர் மேனகா, செயலாளர் பி.உச்சி மாகாளி, இந்திய மாணவர் சங்க மாவட்ட தலைவர் சத்யா, செயலாளர் தினேஷ் உள்ளிட்டோர் தலையீடு செய்தோம். எங்களோடு, பகுஜன் சமாஜ் கட்சி மாவட்டத் தலைவர் தெய்வேந்திரன், வீரன் சுந்தரலிங்கம் பேரவை ஒருங்கிணைப்பாளர் மாரியப்பன் பாண்டியன், திராவிடர் தமிழர் கட்சி பொதுச் செயலாளர் கதிரவன், தமிழர் விடுதலைக் களம் தலைவர் ராஜ்குமார், தமிழர் உரிமை மீட்புக் களம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் லெனின், வி.சி.க நிர்வாகிகள் மற்றும் கரையிருப்பு, ஆர்.எஸ்.ஏ நகர் பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் சாலை மறியலில் கலந்துகொண்டனர். மாநிலத்தின் பல பகுதிகளில் இப்படுகொலையைக் கண்டித்து தன்னெழுச்சியாக கண்டன இயக்கங்கள், ஆர்ப்பாட்டங்கள், மறியல்கள் நடைபெற்றன.

எழுத்துப் பூர்வமான உறுதிமொழி

அசோக் படுகொலைக்கு நீதி கிடைக்கும் வரை கலைவது இல்லை என்கிற உறுதியோடு அனைவரும் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டோம். சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தலைவர்களோடு திருநெல்வேலி காவல்துறை ஆணையர் மற்றும் கோட்டாட்சியர், உயர் அதிகாரிகள் இரண்டு மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

கொலைக் குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய வேண்டும்;

* அசோக் குடும்பத்திற்கு ரூ. 50 லட்சம் இழப்பீடு வழங்க மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

* அசோக் கொலை வழக்கில் 60 நாட்களுக்குள் குற்றப்பத்திரிக்கை (எஸ்.சி./எஸ்.டி. வன்கொடுமைத் தடுப்புச் சட்டம்) தாக்கல் செய்வதோடு, இக்கொலை வழக்கை விரைந்து நடத்தி நீதி வழங்க மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

* அசோக் குடும்பத்தில் ஒருவருக்கு 3 மாதங்களுக்குள் (எஸ்.சி./எஸ்.டி. வன்கொடுமைத் தடுப்புச் சட்டப்படி) அரசு வேலை வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

* கரையிருப்பு பகுதியை வன்கொடுமைப் பாதிப்பு பகுதியாக (அட்ராசிட்டி புரோன்) ஏரியாவாக அறிவிக்க வேண்டும்.

* கரையிருப்பு பகுதியில் வன்கொடுமை குற்றச்செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதோடு, இந்நபர்களை கிராமத்திலிருந்து வெளியேற்ற வேண்டும்.

* ஆர்.எஸ்.ஏ. நகர் - சிவக்குமார் ஸ்பின்னிங் மில் வரை சாலை அமைக்க வேண்டும்.

* சிதம்பரநகர் விலக்கில் அரசு புறம்போக்கில் உள்ள ஆக்கிரமிப்பு பெட்டிக் கடையை உடன் அகற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை ஏற்றுக் கொண்டு, அதிகாரிகள் எழுத்துப்பூர்வமான உறுதிமொழி அளித்த பின்னர் போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.

* அன்று நள்ளிரவு மருத்துவமனைக்குச் சென்று பிணவறையில் வைக்கப்பட்டிருந்த அசோக்கின் உடலைப் பார்த்த போது அதிர்ந்து போனோம். முகமும், தலையும் அடையாளம் தெரியாமல் சிதைக்கப்பட்டிருந்தது. அந்தளவுக்கு சாதி வெறிபிடித்த ஓநாய் கூட்டம் அசோக்கை குதறியிருந்தது.

தொடர்கதையாகும் படுகொலைகள்

திருநெல்வேலி மாவட்டத்திலும், தமிழகத்திலும் ஒடுக்கப்பட்ட மக்கள் மீதான தாக்குதல்கள், படுகொலைகள் தொடர்கதையாகி வருகின்றன. அரசாங்க ஆவணங்களின் படி 2016ம் ஆண்டு மட்டும் 115 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர். 162 பேர் தாக்கப்பட்டு கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக ஆவணங்கள் தெரிவிக்கின்றன. 2017 மற்றும் 2018ம் ஆண்டிற்கான விபரங்களை அரசு இன்னும் வெளியிடவில்லை. இதுபோன்று தலித் மக்கள் மீது தொடுக்கப்பட்ட தாக்குதல்கள், பாலியல் வன்முறை சம்பவங்கள் அதிகரித்துள்ளன.

தேங்கிக் கிடக்கும் வன்கொடுமை வழக்குகள்

திருநெல்வேலி மாவட்டத்தில் மட்டும் 463 வன்கொடுமை வழக்குகள் முறையாக விசாரிக்கப்படாமல் தேங்கிக் கிடப்பதாக விபரங்கள் தெரிவிக்கின்றன. இதேபோல் தமிழகம் முழுவதும் தலித் மக்கள் மீதான தாக்குதல் குறித்த வழக்குகள் பல கட்டங்களில் கிடப்பில் போடப்பட்டுள்ளன. தலித் மக்கள் மீதான வழக்குகளில் வழங்கப்படும் தண்டனைகள் 15 சதவிகிதம் கூட இல்லை என்பது அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. ஏற்கனவே அனைத்து மாவட்டங்களிலும் வன்கொடுமை தொடர்பான வழக்குகளை விசாரிப்பதற்கு தனி நீதிமன்றங்கள் அமைக்க வேண்டுமென்ற உயர்நீதிமன்றத் தீர்ப்பும் பெரும்பகுதி அமலாக்கப்படவில்லை. தொடர்கதையாகி வரும் தலித் மக்கள் மீதான தாக்குதல்கள், படுகொலைகள், தீண்டாமைக் கொடுமைகள் ஆகியவற்றைத் தடுக்கும் வகையில் அரசும், காவல்துறையும் அக்கறையோடு செயல்படுவதில்லை. மேலும் காவல்துறையினர் உள்ளிட்ட சமூகத்தில் நிலவும் ‘மேல்சாதி’ ஆணவக் கண்ணோட்டமும் இவற்றுக்கு காரணமாக அமைந்துள்ளன. அரசியல் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகள் அனைவருக்கும் பொருந்துவதாகும். இவ்வுரிமைகளை தலித் மக்களிடமிருந்து தட்டிப்பறிப்பது, அவர்களை அவமானப்படுத்துவது, இழிவுப்படுத்துவது, தாக்குவது போன்ற சாதிய ஆணவக்கண்ணோட்டம் அரசியல் சட்டத்திற்கு விரோதமானது மட்டுமல்ல, கொடூரமான சமூக விரோத செயலும் ஆகும். சமூகத்தில் நிலவும் இத்தகைய சாதி ஆணவக்கண்ணோட்டத்தை முறியடிக்காமல், தலித் மக்களின் சமூக விடுதலை சாத்தியமாகாது.

சாதிவெறி சக்திகளை தனிமைப்படுத்துவோம்

தமிழ்நாட்டில் கிராமப்புற, நகர்ப்புறங்களில் உள்ள பெரும்பகுதி உழைப்பாளர்களாக இருப்பவர்கள் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களே. பொருளாதார ரீதியில் பின்தங்கி அன்றாட வாழ்வுக்கே அவதியுறும் நிலையிலேயே இவர்களது வாழ்நிலை அமைந்துள்ளது. இம்மக்களை சாதி அடிப்படையில் பிரித்து, சாதிய தாக்குதலை உருவாக்கி இம்மக்களிடையே பகை உணர்வை உசுப்பி விடும் செயலை சாதி ஆணவ வெறி சக்திகள் மேற்கொள்கின்றன. இச்சாதி ஆணவ வெறி, அசோக் போன்ற சமூக அக்கறையுள்ள இளைஞரின் உயிரை பறித்துள்ளது. தோழர் அசோக்கை பறிகொடுத்து தவிக்கும் அவரது தாய் ஆவுடையம்மாள், தந்தை முருகன் மற்றும் சகோதரர்கள் ஆகியோருக்கு ஏற்பட்ட இழப்பு ஈடு செய்ய முடியாதது. சமூகத்தில் நிலவும் சாதி ஆணவ வெறியை முறியடிக்கவும், சாதி கொடுமைகளிலிருந்து ஒடுக்கப்பட்ட மக்கள் விடுதலை பெற்றிடவும், சாதி அடிப்படையில் பிரிந்து கிடக்கும் உழைப்பாளி மக்களின் ஒற்றுமையை உருவாக்கவும், அர்ப்பணிப்பு உணர்வோடு களம் காணுவதே தோழர் அசோக்கிற்கு செலுத்தும் உண்மையான அஞ்சலியாகும்.

சமூகத்தில் நிலவும் சாதி ஆணவ வெறியை முறியடிக்கவும், சாதி கொடுமைகளிலிருந்து ஒடுக்கப்பட்ட மக்கள் விடுதலை பெற்றிடவும், சாதி அடிப்படையில் பிரிந்து கிடக்கும் உழைப்பாளி மக்களின் ஒற்றுமையை உருவாக்கவும், அர்ப்பணிப்பு உணர்வோடு களம் காண்போம்.

Leave Comments

Comments (0)