கையால் மலம் அள்ளும் இழிவுக்கு உடனே முடிவு கட்டுவோம்- இயக்குனர் கரு. பழனியப்பன் 

/files/detail1.png

கையால் மலம் அள்ளும் இழிவுக்கு உடனே முடிவு கட்டுவோம்- இயக்குனர் கரு. பழனியப்பன் 

  • 1
  • 0

துப்புரவு தொழில் செய்யும் தோழர்களே ஒரு நான்கு நாட்களுக்கு யாரும் எந்த வேலையும் செய்யாது பேசாமல் இருங்கள், அரசாங்கம் தானாக உங்களிடம் பேச வரும் என்று இயக்குனர் கரு. பழனியப்பன் தெரிவித்துள்ளார்.

”மனித கழிவை மனிதனே அகற்றும் அவல நிலை இங்கு இல்லை என்று அரசு சொல்கிறது. அரசு சொன்னால் நம்பவேண்டியது நமது கடமை. அதனால் அதை நம்பிக்கொண்டிருக்கிறோம். உலகத்தின் மிக நீளமான கழிப்பறை என்பது இந்திய ரயில்வே. இந்த இந்தியன் ரயில்வேவில் பலரும் பயணம் செய்கிறார்கள். அந்த பலரும் கழிவறையைப் பயன்படுத்துகிறார்கள். அந்த நீளமான கழிவறையை மனிதர்கள்தான் சுத்தம் செய்கிறார்கள். இதை வழக்காகத் தொடுத்த ஒப்புக்கொண்ட நீதிபதிகள், வழக்கறிஞர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அதிகாரிகள் எனப் பலரும் இதைப் பார்த்துக்கொண்டே ரயில் நிலையத்தை விட்டு வெளியில் செல்கிறார்கள். அப்போது இந்த அவலநிலை நடந்துகொண்டிருக்கிறது என்று அனைவருக்கும் தெரிகிறது. ஆனால் பராமுகமாக எல்லோரும் சென்றுகொண்டிருக்கின்றனர். அதற்குக் காரணம் அந்த வேலையை நாம் செய்யவில்லை என்பதுதான். 

ஒரு கும்பை வண்டி நம்மைக் கடந்து சென்றால் அந்த வண்டியில் குப்பையைக் கொட்டுபவர்தான் மூக்கை பொத்திக்கொள்வார். குப்பையை அள்ளுகிறவர் மூக்கை பொத்திக்கொண்டதாக வரலாறே இல்லை. மனித கழிவை மனிதனே அகற்றுவதைத் தடை செய்யும் சட்டம் தொடர்பாக இதுவரை ஒரு வழக்கு கூட விசாரணைக்கு வரவில்லை என்றால் யார் யாரை ஏமாற்றுகிறார்கள். 

உங்களில் யார் சமீபத்தில் பொது கழிவறைக்குள் சென்றீர்கள் என்று யோசித்துப் பாருங்கள். அந்த கழிவறைக்குள் சென்றுவிட்டு வெளியில் வருவதற்குள் மோடி சொல்லிக்கொடுக்காமலே எல்லா யோகாசனமும் பழகித்தான் வருவீர்கள். உள்ளே சென்றுவிட்டு வெளியில் வருகிற ஒரு நிமிடத்தில் இவ்வளவு பாடுபடுகிறீர்கள் என்றால், அதைத் தினசரி சுத்தம் செய்பவர் என்ன பாடு படுவார். உங்களுக்கு இவர்களின் பிரச்னை புரியவேண்டும் என்றால் அந்த வேலையை நீங்கள் செய்யவேண்டாம், அந்த சுழலிலிருந்தாலே போதும். துப்புரவுத் தொழிலாளி போராட்டம் செய்து வேலைக்கு வராமல் இருந்தால் நம்மால் அமைதியாக இருக்கவே முடியாது. அதனால் துப்புரவு தொழில் செய்யும் தோழர்களே ஒரு நான்கு நாட்களுக்கு யாரும் எந்த வேலையும் செய்யாதீர்கள். பேசாமல் இருங்கள் அரசாங்கம் தானாக உங்களிடம் பேச வரும்” என்று கூறியுள்ளார்.

Leave Comments

Comments (0)