சனாதன கல்விக் கொள்கையை முறியடிக்க உறுதியேற்போம்- தோழர் திருமாவளவன்

/files/detail1.png

சனாதன கல்விக் கொள்கையை முறியடிக்க உறுதியேற்போம்- தோழர் திருமாவளவன்

  • 0
  • 0

 

மோடி அரசின் சனாதன கல்விக்கொள்கையான தேசிய கல்விக்கொள்கையை முறியடிக்க ஆசிரியர் தினமான இன்று அனைத்துத் தரப்பு சனநாயக சக்திகளும் ஒருங்கிணைந்து செயல்பட உறுதியேற்போம் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தோழர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று (செப்டம்பர் 05) வெளியிட்டுள்ள அறிக்கையில், "மேனாள் குடியரசுத்தலைவர் டாக்டர் இராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்தநாளைக் கொண்டாடும் வகையில் நாடுமுழுவதும் கடைப்பிடிக்கப்படுவதே ஆசிரியர் தினமாகும். ஆசிரியராகப் பணியாற்றிய டாக்டர் இராதாகிருஷ்ணன் அவர்கள் குடியரசுத் தலைவராக உயர்ந்த பெருமைக்குரியவர். அவர், ஆசிரியர்களின் பணி போற்றுதலுக்குரியது என்பதை உணர்த்தும் வகையில்தான் தனது பிறந்தநாளை ஆசிரியர் தினமாகக் கொண்டாட வேண்டுமெனக் கேட்டுக்கொண்டார். அதன்படியே, ஆண்டுதோறும் நாடுமுழுவதும் அவரது பிறந்தநாள் ஆசிரியரைப் போற்றும் நாளாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

ஆசிரியர்களே அடுத்த தலைமுறையையும், வருங்கால தேசத்தையும் வடிவமைக்கும் ஆற்றல் வாய்ந்த சிற்பிகளாக விளங்குகின்றனர். எனவே, ஆசிரியப் பெருமக்களை வெறுமென அரசு ஊழியர்களாக மட்டுமே மதிப்பிட இயலாது. மாணவச் சமூகத்தை ஒரு மகத்தான ஆற்றலாக மாற்றும் மாபெரும் வித்தகர்களே ஆசிரியர்கள். எனவே, பள்ளி ஆசிரியர்கள், பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் உள்ளிட்ட அனைவரும் வணக்கத்துக்குரிய பெருமக்களாவர். இத்தகைய பெருமைக்குரிய ஆசிரியர்கள் யாவருக்கும் விடுதலைச்சிறுத்தைகளின் சார்பில் எமது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறோம். 

அத்துடன், இந்த நன்னாளில் இந்திய அரசின் தேசிய கல்விக் கொள்கை என்னும் சனாதனக் கல்விக் கொள்கையை நாம் தெளிவுறப் புரிந்துகொள்ள வேண்டும். இது எளிய மக்களுக்கு எதிரானது. மாநில அரசுகளுக்கு எதிரானது. மீண்டும் குலத்தொழில் கல்வியைத் திணிக்கும் சூது நிறைந்தது. ஆகவே, இந்த சனாதனக் கல்விக் கொள்கையைப் பற்றிய புரிதல்களையும் விழிப்புணர்வையும் உருவாக்க வேண்டிய பொறுப்பு , சனநாயகத்தின் மீது நம்பிக்கையுள்ள ஒவ்வொருக்கும் உள்ளது. குறிப்பாக, இதில் ஆசிரியப் பெருமக்களுக்கும் தவிர்க்க இயலாத கடமை உள்ளது. சனநாயக பூர்வமான கல்விக் கொள்கைக்குத் தார்மீகமான நல்லாதரவை வழங்க வேண்டிய பொறுப்பு ஆசிரியர்களுக்கும் உண்டு என விடுதலைச்சிறுத்தைகள் கட்சி சுட்டிக்காட்ட விரும்புகிறது.

இந்நிலையில், மோடி அரசின் சனாதன கல்விக்கொள்கையான தேசிய கல்விக்கொள்கையை முறியடிக்க ஆசிரியர் தினமான இன்று அனைத்துத் தரப்பு சனநாயக சக்திகளும் ஒருங்கிணைந்து செயல்பட உறுதியேற்போம். எதிர்கால இந்தியாவைச் சனநாயக இந்தியாவாகக் கட்டமைக்கும் உயரிய பெருமைக்குரியவர்களான ஆசிரியப் பெருமக்கள் யாவருக்கும் எமது மனமார்ந்த வாழ்த்துகள்" என்று தெரிவித்துள்ளார்.

Leave Comments

Comments (0)