தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம்: ஓ.பி.எஸ் – இ.பி.எஸ் கும்பலே இதற்குக் காரணம்

/files/detail1.png

தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம்: ஓ.பி.எஸ் – இ.பி.எஸ் கும்பலே இதற்குக் காரணம்

  • 0
  • 0

 

மொத்த நீர் ஆதாரங்களையும் தெரிந்தே திட்டமிட்டு அழித்து நாசமாக்கி நம்மைத் தண்ணீர் பஞ்சத்தில் தள்ளியது கடந்த 8 ஆண்டுகளாக பொதுப்பணித்துறை அமைச்சர்களாக இருந்த ஓபிஎஸ் – இபிஎஸ் குற்றக்கும்பல்தான் என்று மக்கள் அதிகாரம் அமைப்பு தெரிவித்திருக்கிறது.

இதுகுறித்து மக்கள் அதிகாரம் சார்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், ”பல் துலக்கும் போது, குளிக்கும் போது, துவைக்கும் போது, கக்கூசு போகும் போது தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துவது எப்படி என்று மக்களுக்கு ஆலோசனை சொல்லும் பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள், அமைச்சர்கள்தான் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டதற்கு முதல் காரணம். மழைநீரைப் பஞ்சுப் பொதி போலத் தேக்கி வைக்கும் ஆற்று மணலை சூறையாடியது. நீர் வழித்தடங்கள், நீர்நிலைகள், சதுப்புநிலங்களை முறையாகப் பராமரித்துப் பாதுகாப்பதற்குப் பதில் மண்ணைப் போட்டு மூடி ரியல் எஸ்டேட்டிற்கு பிளாட் போட்டு விற்றது என மொத்த நீர் ஆதாரங்களையும் தெரிந்தே திட்டமிட்டு அழித்து நாசமாக்கி நம்மைத் தண்ணீர் பஞ்சத்தில் தள்ளியது. கடந்த 8 ஆண்டுகளாக பொதுப்பணித்துறை அமைச்சர்களாக இருந்த ஓபிஎஸ் – இபிஎஸ் குற்றக்கும்பல்தான்.

நம்மை அச்சுறுத்தும் தண்ணீர் பஞ்சம் இயற்கையானதல்ல, திட்டமிட்டே அரசால் உருவாக்கப்பட்டது. கடல்போல காட்சியளிக்கும் சிட்லப்பாக்கம் ஏரியைத் தூர்வாரி பராமரிக்காமல் கழிவுநீர் குட்டையாக மாறிப் போனதற்குப் பொறுப்பேற்க வேண்டிய பொதுப்பணித்துறை, இன்று மக்கள் முன் வந்து சுத்தம் செய்வதைத் தடுப்பதற்கும், சொந்தம் கொண்டாடுவதற்கும் என்ன யோக்கியதை இருக்கிறது?

நீர்நிலைகளைப் பராமரித்துப் பாதுகாக்க வேண்டிய பொதுப்பணித்துறை நீர்நிலைகள் அனைத்தையும் அழித்தது. பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை, ரியல் எஸ்டேட் மாஃபியாக்கள் என்ற முக்கூட்டு கும்பல் சேர்ந்து நமது நீர் ஆதாரங்களையெல்லாம் ரியல் எஸ்டேட்டாக மாற்றியது. இந்தக் கிரிமினல் குற்றக்கும்பலை எந்தச் சட்டமும் தண்டிக்கப்போவதில்லை.

ஏழை மக்கள் ஒரு குடம் தண்ணீருக்காக இரவு பகல் என நடுத்தெருவில் காத்துக்கிடக்கிறார்கள். ஆனால், நட்சத்திர விடுதிகளுக்கும், பொழுதுபோக்கு பூங்காக்களுக்கும், கோல்ப் விளையாட்டு மைதானங்களுக்கும் தடையின்றி தண்ணீர் பாய்கிறது. மக்களுக்குத் தண்ணீர் சிக்கனம் பற்றி உபதேசிக்கும் அதிகாரிகள், அமைச்சர்களின் வீட்டில் 24 மணிநேரமும் மெட்ரோ வாட்டர் ஆறாய் ஓடுகிறது. கனமழை பெருவெள்ளம் என்றாலும் சரி, கோடை வெப்பம் - தண்ணீர் பஞ்சம் என்றாலும் சரி பாதிக்கப்படுவதும், வாழ்விழப்பதும் பெரும்பான்மை மக்கள்தான்.

பொதுப்பணித்துறை என்ன நோக்கத்திற்காக உருவாக்கப்பட்டதோ அதைச் செய்யாமல் அதற்கு நேர் எதிராகச் செயல்படுகின்றது. அரசுக் கட்டமைப்பு மக்களை ஆளும் தகுதியை இழந்து நெருக்கடியில் சிக்கித் தோற்றுப்போய்விட்டதற்கு இது ஒரு உதாரணம். எனவே, மக்கள் பிரச்னை எதையும் இந்த அரசு கட்டமைப்பு தீர்க்காது. இவர்களிடமே போய் தண்ணீர்ப் பிரச்னையை தீர்த்து வையுங்கள் என்று கேட்க முடியுமா? நட்சத்திர விடுதிகளுக்கும் மைதானங்களுக்கும் அமைச்சர்கள் - அதிகாரிகளின் வீடுகளுக்குச் செல்லும் தண்ணீர் லாரிகளை மறிக்காமல் நமக்கு எப்படி தண்ணீர் கிடைக்கும்?

குளம், குட்டை, ஏரி என அழிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான நீர்நிலைகளை மீட்டெடுத்துத் தூர்வாரி பராமரித்து மழைநீரைத் தேக்குவதன் மூலம் மட்டுமே தண்ணீர் பிரச்னையை நிரந்தரமாகத் தீர்க்க முடியும். அதற்கு நீர்நிலைகளின் மீதான அதிகாரம் மக்களுக்கு வேண்டும். மக்கள் அதிகாரத்தை நிலைநாட்டுவோம். தண்ணீர்ப் பிரச்னையை நிரந்தமாகத் தீர்ப்போம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 
 

Leave Comments

Comments (0)