எஸ்சி/ எஸ்டி பிரிவினருக்கு எதிராக வன்கொடுமைகள் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றன- திருமாவளவன்

/files/detail1.png

எஸ்சி/ எஸ்டி பிரிவினருக்கு எதிராக வன்கொடுமைகள் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றன- திருமாவளவன்

  • 0
  • 0

வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் பிரிவுகள் கடுமையாக்கப்பட்டிருந்தாலும்கூட அவற்றைச் சரியான முறையில் மாநில அரசுகள் நடைமுறைப்படுத்தாத காரணத்தால் எஸ்சி/ எஸ்டி பிரிவினருக்கு எதிராக வன்கொடுமைகள் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றன என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை நீர்த்துப் போகச் செய்யும்விதமாக உச்சநீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு அளித்த தீர்ப்பு செல்லாது என உச்சநீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள்கொண்ட அமர்வு தீர்ப்பு வழங்கியுள்ளது. இதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வரவேற்கிறோம்.

அண்மையில் மத்திய அரசு இயற்றிய வன்கொடுமைத் தடுப்புத் திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு இனிமேலாவது ஆட்சியாளர்கள் முன்வர வேண்டும் என வலியுறுத்துகிறோம்.

வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தில் முன் ஜாமீன் கிடையாது என்ற பிரிவை நீக்கியும்; கைது செய்வது கட்டாயமில்லை என்று கூறியும் உச்ச நீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு தீர்ப்பு ஒன்றை வழங்கியது. அதனையடுத்து இந்தியா முழுவதும் தலித் அமைப்புகள் தன்னெழுச்சியாகக் கிளர்ந்தெழுந்து போராடின. அதன் விளைவாக மத்திய அரசு அந்தத் தீர்ப்புக்கு எதிராகச் சீராய்வு மனுத் தாக்கல் செய்தது. அதுமட்டுமின்றி பாராளுமன்றத்தில் சட்டத்திருத்தம் ஒன்றையும் கொண்டு வந்து நிறைவேற்றியது. மத்திய அரசு தாக்கல் செய்த சீராய்வு மனு மீது தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம் இதற்கு முன் அளிக்கப்பட்ட தீர்ப்பு சரியானது அல்ல என்று கூறியுள்ளது. இதனால் இந்த சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டால் முன்ஜாமீன் பெற முடியாது என்ற பிரிவு உட்பட அனைத்துப் பிரிவுகளும் முழுமையாக நடைமுறைக்கு வந்துள்ளன.

வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் பிரிவுகள் கடுமையாக்கப்பட்டிருந்தாலும்கூட அவற்றைச் சரியான முறையில் மாநில அரசுகள் நடைமுறைப்படுத்தாத காரணத்தால் எஸ்சி/ எஸ்டி பிரிவினருக்கு எதிராக வன்கொடுமைகள் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றன. உத்தரப்பிரதேச மாநிலத்தில் தலித் ஒருவர் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்ட செய்தி ஊடகங்களில் வெளியாகியுள்ளது. பொது வெளியில் மலம் கழித்தார்கள் என்ற காரணத்துக்காகத் தலித் வகுப்பைச் சேர்ந்த பச்சிளம் குழந்தைகளை அடித்துக் கொலைசெய்த சம்பவம் மத்தியப் பிரதேசத்தில் நடந்தேறியுள்ளது. இப்படி ஒவ்வொரு நாளும் வன்கொடுமைகள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன. இது தொடர்பாகப் புள்ளி விவரங்கள் கொண்ட தேசிய குற்ற ஆவண அறிக்கையைக் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக மத்திய பாஜக அரசு வெளியிடாமல் வைத்துள்ளது. இதனால் ஒவ்வொரு மாநிலத்திலும் இந்த சட்டத்தின்கீழ் எவ்வளவு வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன. அதில் எவ்வளவு பேர் தண்டிக்கப் படுகிறார்கள் என்ற விவரங்கள் மூடி மறைக்கப்பட்டுள்ளன. மத்திய அரசு தேசிய குற்ற ஆவண மைய அறிக்கையை உடனடியாக வெளியிடுவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும். இந்த சட்டத்தின் அடிப்படையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்பட வேண்டும். ஆனால் பெரும்பாலான மாநிலங்களில் சிறப்பு நீதிமன்றங்கள் முழுமையாக அமைக்கப்படவில்லை. எனவே சிறப்பு நீதிமன்றங்களை அமைப்பதற்கு மத்திய அரசு மாநில அரசுகளை வலியுறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
 

Leave Comments

Comments (0)