சர்வதேச விசாரணைக்கு விக்னேஸ்வரன் வலியுறுத்தல்

/files/detail1.png

சர்வதேச விசாரணைக்கு விக்னேஸ்வரன் வலியுறுத்தல்

  • 0
  • 0

இலங்கை விவகாரம் தொடர்பில் சுதந்திரமான சர்வதேச விசாரணை ஒன்றை நடத்த வேண்டும் என தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் சி.வி. விக்னேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர்,

மனித உரிமைகள் சபையில் நிறைவேற்றப்பட்ட 34/1 தீர்மானம் எதிர்வரும் மார்ச் மாதத்தில் காலாவதி ஆகின்றது. இந்த 34/1 தீர்மானத்தில் 2015 ஆம் ஆண்டு இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட 30/1 தீர்மானத்தை  நிறைவேற்றும் வாக்குறுதியை இலங்கை அரசாங்கம் வழங்கி இருந்தது.

மனித உரிமைகள் சபையின் கூட்டத்தொடர் மார்ச் மாதம் ஆரம்பமாகும்போது இலங்கை விடயம் முக்கியமாக கவனத்தில் கொள்ளப்படவிருக்கின்றது.

நீதிக்கான எமது போராட்டத்தில் இந்தத் தீர்மானம் முக்கியமானது. இந்த தீர்மானத்தை அரசாங்கம் நிறைவேற்றுவதற்கு தவறியுள்ள நிலையில் அரசாங்கம் மீது சர்வதேச அழுத்தத்தை ஏற்படுத்தும் நடவடிக்கைகளை நாம் மேற்கொள்ளவேண்டும்.

இந்த விடயத்தை ஐ.நா செயலாளர் நாயகத்துக்கு கொண்டுசென்று உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு வலியுறுத்தும் காலம் வந்திருக்கின்றது.

சுதந்திரமான சர்வதேச விசாரணை ஒன்றை நடத்தும் தகுதிவந்த சர்வதேச நீதிமன்ற பொறிமுறை ஒன்றினூடாக நீதி மற்றும் பொறுப்புக்கூறலுக்கான காத்திரமான நடவடிக்கைகளை எடுக்குமாறு தமிழர் தரப்பு ஐ.நா பொதுச்சபையை வலியுறுத்தும் செயற்பாடுகளை முன்னெடுக்கவேண்டும்.

ஐ.நா பொதுச்சபையின் 60/147 தீர்மானத்தின்படி சர்வதேச நாடுகளுக்கு இருக்கின்ற கடப்பாட்டுக்கு அமைவாகவும்  ஐ.நா சாசனத்தின் 7 ஆவது அத்தியாயத்தின் கீழ் உள்ள அதிகாரத்தின் கீழும் செயற்படுமாறு தமிழ் அரசியல் கட்சிகள் ஐ.நா செயலாளர் நாயகத்தை வலியுறுத்தும் தீர்மானம் ஒன்றை கூட்டாக சமர்ப்பிப்பது பொருத்தமானது. இது தொடர்பில் தமிழ் மக்கள் பேரவை ஊடாக நடவடிக்கை எடுக்க இருக்கின்றேன். இது தொடர்பில் கஜேந்திர குமார், சுரேஷ் பிறேமச்சந்திரன், ஐங்கரநேசன் ஆகியோர் மற்றும் அனந்தி சசிதரன் ஆகிய பலரின் கட்சிகளுடன் தொடர்புகொள்ள இருக்கின்றேன்.

எமது போராட்டங்கள் எமது மக்களுக்கு விடிவு காலத்தைத் தந்து, ஒற்றுமையைத் தந்து, உரிய நிவாரணங்களையும் பெற்றுத்தர வேண்டியே இன்று நாம் இணைந்துள்ளோம் என்று கூறினார்

 

Leave Comments

Comments (0)