பொறியியல் பாடத்தில் பகவத் கீதை என்ற பெயரில் வருணாசிரமத் திணிப்பு - மக்கள் அதிகாரம் கண்டனம் 

/files/detail1.png

பொறியியல் பாடத்தில் பகவத் கீதை என்ற பெயரில் வருணாசிரமத் திணிப்பு - மக்கள் அதிகாரம் கண்டனம் 

  • 0
  • 0

மோடி அரசின் மக்கள் விரோத, அறிவியல் விரோத வேதக் கல்வியை பொறியியல் படிப்பில் திணிக்கும் திட்டத்தை உடனே கைவிட வேண்டும் என்று மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநிலப்பொருளாளர் தோழர் காளியப்பன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ”தமிழகத்தின் தனித்த மரபுகள், சிந்தனை முறை, பண்பாடு ஆகியவை பார்ப்பனிய இந்துத்வ சித்தாந்தத்தைப் பரப்ப பெருந்தடையாக இருப்பதை நன்குணர்ந்த ஆர்.எஸ்.எஸ் - பாஜக பாசிசக் கும்பல் தமிழக மக்கள் மீது தொடர் தாக்குதல்களை மேற்கொண்டு வருகிறது. இந்தித்திணிப்பு, சமஸ்கிருதத்திணிப்பு, புதிய கல்விக்கொள்கை என்ற வரிசையில் பொறியியல் கல்வியில் பகவத்கீதை உபநிடதங்கள் போன்ற மிகக்கேடான பாடங்களை நுழைத்துள்ளது.

இளநிலை, முதுநிலை பொறியியல் பயிவோர் அனைவரும் மானுடவியல் பாடங்களையும் கற்கவேண்டும் என்ற போர்வையில் தீண்டாமை உள்ளிட்ட நால்வருணக் கோட்பாட்டையும் பார்ப்பனீய மேலாதிக்கத்தையும் நியாயப்படுத்தும் பகவத் கீதையை மறைமுகமாகக் கட்டாயமாக்கியுள்ளது மோடி அரசு. தொல் அறிவியல் என்ற பெயரில் புராணக் குப்பைகளை பொறியியல் பாடத்தில் சேர்க்க வேண்டும் என்ற திட்டத்தை மனிதவள மேம்பாட்டுத்துறை முன்னரே அறிவித்து இருந்தது. கீதை உபநிடதங்கள் விருப்பப்பாடம்தான் என்று துணைவேந்தர் சூரப்பா அறிவித்து இருந்தாலும் இதற்கு மதிப்பெண் உண்டு என்பதன்மூலம் மறைமுகமாகக் கட்டாயமாக்கியுள்ளது.

பல்வேறு மத நம்பிக்கைகொண்டுள்ள மக்கள் வாழும் நாட்டில் முழுக்க அறிவியலை அடிப்பையாகக் கொண்டுள்ள பொறியியல் கல்வியில் இந்துமதக்கருத்துக்களைத் திணிப்பது அறிவியல் சிந்தனையை முடக்கி , மொத்த மாணவர் சமூகத்தையும் மதவெறி பாசிஸ சிந்தனைகொண்டவர்களாக மாற்றுவதும் அதன் மூலம் கார்பரேட் முதலாளிகளுக்கு மலிவான அடிமைகளை உருவாக்குவதே மோடி அரசின் நோக்கம். மேலும் சிறுபான்மை மக்களை அச்சத்தில் இருத்தி வைத்திருப்பது இன்னொரு நோக்கம்,.

“அறிவே ஆற்றல்” என்ற தலைப்பில்தான் பகவத் கீதை சேர்க்கப்பட்டுள்ளது. அத்துடன் வேதங்களுக்கு விளக்கம் சொல்லும் உபநிடதங்களும் சேர்க்கப்பட்டுள்ளன. இவற்றிலிருந்து எந்த அறிவையும் பெற முடியாது. இந்தியாவின் தலைசிறந்த சிந்தனையாளரும் சமஸ்கிருதத்தில் புலமை பெற்றவருமான டாக்டர் அம்பேத்கர், இந்தியாவின் ஒப்பற்ற பகுத்தறிவாளர் தந்தை பெரியார் ஆகிய இருவராலும் முட்டாள்களின் உளரலென்றும், குடிகாரனின் பிதற்றலென்றும் இகழ்ந்தொதுக்கப்பட்ட குப்பைதான் பகவத் கீதை. உண்மையிலேயே பொறியியல் மாணவர்களுக்கு நல்ல நெறிகளைக் கற்பிக்க வேண்டுமென்றால் அதற்கு திருக்குறளையும் நாலடியார், இன்னாநாற்பது, இனியவை நாற்பது என்றவாறு பதினெண்கீழ்க்கணக்கு நூல்களையல்லவா கற்பிக்க வேண்டும்? தமிழ் அறநெறி நூல்களோடொப்பிடத்தக்க நூல்கள் ஏதேனும் வடமொழியில் உண்டா?

வட இந்தியர்களை மட்டுமின்றி நாட்டின் பல பகுதி மக்களுக்கும் இந்து மதவெறியூட்டி காட்டுமிராண்டிகளாக்கியதைப்போல , தமிழக மக்களையும் மாற்றத்துடிக்கிறது ஆர்.எஸ்.எஸ் பார்ப்பனக்கும்பல். இந்தியா முழுவதையும் தனது நிரந்தர மேலாதிக்கத்தின் கீழ் கொண்டு வர மதவெறியை முக்கிய ஆயுதமாகக்கருதி இத்தகைய படுபிற்போக்குத்தனமான நடவடிக்கையில் இறங்கியிருக்கிறது மோடி அரசு.

ஒரு காலத்தில் மற்றவர்களுக்குக் கல்வியை மறுத்து தனது ஆதிக்கத்தை நிலைநாட்டியவர்கள் இப்போது அது முடியாது என்பதால் மதவெறி, தேசவெறியைத் தூண்டி தனது ஆதிக்கத்தை நிறைவேற்றிக்கொள்ள வெறிகொண்டலைகின்றனர்.

தனது தோலைக்காப்பாற்றிக்கொள்ளவும், தமிழகத்தைக் கொள்ளையிடவும் தமிழக நலன்கள், உரிமைகள் அனைத்தையும் அடகு வைக்கும் எடப்பாடிகும்பல் பார்ப்பன இந்துமத வெறி ஆர்எஸ்எஸ் கும்பலுக்கு அடியாளாகச் செயல்படுகிறது.

இத்தகையதொரு ஆபத்தான சூழலில், கல்வியில் திணிக்கப்படும் இத்தகைய நச்சுத்திட்டத்தை தமிழக மக்கள், கல்வியாளர்கள், குறிப்பாக மாணவர்கள் உறுதியாக நின்று முறியடிக்க வேண்டும்.

மோடி அரசின் மக்கள் விரோத, அறிவியல் விரோத வேதக் கல்வியை பொறியியலில் திணிக்கும் திட்டத்தை மக்கள் அதிகாரம் மிக வன்மையாகக்கண்டிப்பதுடன் உடனே கைவிடும்படி வலியுறுத்துகிறது. தமிழக மக்கள் மீது மிகுந்த வன்மத்துடன் அடுத்தடுத்துத் தாக்குதல் தொடுக்கும் பாஜக திட்டத்தை முறியடிக்க அனைவரும் ஓரணியில் திரள அறைகூவி அழைக்கிறது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

 

Leave Comments

Comments (0)