அடூர் மற்றும் அறிவுத்துறையினர் மீது தேசத்துரோக வழக்கு- மக்கள் அதிகாரம் கண்டனம்

/files/detail1.png

அடூர் மற்றும் அறிவுத்துறையினர் மீது தேசத்துரோக வழக்கு- மக்கள் அதிகாரம் கண்டனம்

  • 0
  • 0

தனக்கு எதிரான கருத்துக்கள், விமர்சனங்களை மோடி அரசு நீதித்துறையைக் கொண்டே ஒடுக்க முயல்வதன் துலக்கமான உதாரணம்தான் அடூர் கோபால கிருஷ்ணன் மற்றும் அறிவுத்துறையினர் மீது தேசத்துரோக வழக்குப் பதியப்பட்டிருப்பது என்று மக்கள் அதிகாரம் அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநிலப் பொருளாளர் காளியப்பன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தியாவில் சிறுபான்மை இசுலாமியர்கள், தலித்துகள் மீது கும்பல் கொலைகள் அதிகரித்துவருவதைச் சுட்டிக்காட்டி இதனை உடனே தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்திப் புகழ்பெற்ற வரலாற்றாசிரியர்கள் ராமச்சந்திர குஹா, சுமித்சர்க்கார்; அஷிஷ் நந்தி போன்ற அறிவுத்துறையினர், அடூர் கோபாலகிருஷ்னன், மணிரத்தினம், சுபாமுட்கல், ரேவதி, ஷ்யாம்பெனகல் போன்ற திரையுலக பிரபலங்கள், பினாயக் சென் போன்ற புகழ் பெற்ற மருத்துவர்கள் பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தையே குற்றமாக்கி பீகார் மாநில போலீசு வழக்குப் பதிந்துள்ளது. 120 பி,153 பி, 290 , 297 , 504 ஆகிய தண்டனைச் சட்டப்பிரிவுகளின் கீழ் தேசத் துரோகம், பொது அமைதியைக் குலைத்தல், மத உணர்வைப்புண்படுத்தல், பிரதமரை இழிவுபடுத்துதல் என மிகக்கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது.

தேசிய குற்ற ஆவணக்காப்பகம் வெளியிட்டுள்ள ஆதாரங்களைச் சுட்டிக்காட்டியே இந்த வேண்டுகோளை அவர்கள் அனுப்பியுள்ளனர். ஆர் எஸ் எஸ், பாஜகவினர் இத்தகைய கடிதத்தையும் விமர்சனத்தையும் குற்றமாகக்கருதுவது வியப்புக்குரியதல்ல. ஆனால் முசாபர்புர் நீதித்துறை நடுவர் எவ்விதப் பரிசீலனையுமின்றி வழக்குப் பதிய உத்தரவிடுவது மிகவும் ஆபத்தானது. தனக்கு எதிரான கருத்துக்கள், விமர்சனங்களை மோடி அரசு நீதித்துறையைக் கொண்டே ஒடுக்க முயல்வதன் துலக்கமான உதாரணம்தான் இந்த வழக்கு. எந்தவொரு அடிப்படை ஆதாரமுமின்றியும், எந்தவொரு நியாயமான சட்ட பூர்வ செயலையும்கூட குற்றமாக்கித் தண்டிக்க மோடி அரசு தயாராகிவிட்டதையே இந்த நடவடிக்கை காட்டுகிறது. இந்தியாவின் மதிப்பை 49 பேரும் குலைத்துவிட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. ஆனால் உண்மை யாதெனில், சர்வதேச மனித உரிமைகள், இந்திய அரசியல் சட்டம், ஜனநாயக, தார்மீக நெறிகள் அனைத்தையும் நசுக்கி இந்தியாவைத் தலைகுனிய வைப்பது மோடி ஆட்சிதான். காஷ்மீரில் நடக்கும் கொடுமைகளை மோடியின் நண்பன் அமெரிக்காவே கண்டித்திருக்கிறது.

நாட்டின் பொருளாதாரம் சீர்குலைந்து ஆகப்பெரும்பாலான மக்கள் ஓட்டாண்டியாக்கப்பட்டுவரும் நிலையில் மக்கள் போராட்டங்களையும், போராளிகளையும் அச்சுறுத்தவே பிரபலங்கள் மீது வழக்குப் போடுகின்றனர். கடந்த ஆண்டு கைதுசெய்யப்பட்ட இந்தியாவின் தலைசிறந்த அறிஞர்களும் மக்கள் உரிமைப் போராளிகளுமான வரவர ராவ், சுதா பரத்வாஜ் உள்ளிட்ட 10 பேர் எந்த அடிப்படையுமின்றி இன்றுவரை சிறை வைக்கப்பட்டுள்ளனர். அதே நேரத்தில் ஆர் எஸ் எஸ், பாஜக குற்றவாளிகள் விடுவிக்கப்படுகின்றனர். வரும் நாட்கள் மிகவும் ஆபத்தானவையாக மாறிவருகின்றன. எனவே மோடி அரசின் பாசிச ஒடுக்குமுறையை முறியடிப்பதே இன்றைய உடனடித்தேவை. பாசிசம் கோழைத்தனத்தின் வெளிப்பாடு. மக்கள் போராட்டத்தின் முன் தோற்றதுதான் அதன் வரலாறு. எனவே பாசிச ஒடுக்குமுறையை முறியடிக்க அனைவரும் ஒன்றுபடுவோம்” என்று தெரிவித்துள்ளனர். 

Leave Comments

Comments (0)