பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வலுவான சட்டத்தை இயற்ற வேண்டும்- திருமாவளவன்

/files/detail1.png

பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வலுவான சட்டத்தை இயற்ற வேண்டும்- திருமாவளவன்

  • 0
  • 0

 


பாலியல் குற்றங்களைத் தடுக்கும் வகையில், பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில், புதிய வலுவான சட்டமொன்றை இயற்ற வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ”கடலூர் மாவட்டம், நெய்வேலி அருகேயுள்ள குறவன்குப்பம் கிராமத்தைச் சார்ந்த நீலகண்டன் என்பவரின் மகள் கல்லூரி மாணவி இராதிகா என்பவரும் அவருடைய உறவினரும் காதலருமான விக்னேஷ் என்பவரும் 10-06-2019 அன்று குறுகிய இடைவெளியில் அடுத்தடுத்து தூக்குமாட்டித் தற்கொலை செய்துகொண்டனர் என்பது மிகுந்த அதிர்ச்சியை அளிக்கிறது. சமூக வலைத்தளமான முகநூல் பதிவுகளால் நேர்ந்த விபரீதமான விளைவுகள்தாம் இந்தத் துயரமான சாவுகள் என்பது தாளமுடியாத வேதனையாக உள்ளது.

இராதிகாவின் முகநூலில் பதிவிடப்பட்டிருந்த ஆபாசமான பெண் படமொன்றுக்கு இராதிகாவின் ‘முகநூல் நண்பர்கள்’சிலர் அது குறித்துத் தமது கருத்துக்களைப் பின்னூட்டமாகப் பதிவுசெய்துள்ளனர். அவர்களில் அதே ஊரைச்சார்ந்த பிரேம்குமார் என்பவரும் ஒருவர். ‘இப்படியொரு படத்தைப் போடலாமா’என்கிற வகையில் ‘சீ..‘ என ஒரு கருத்தைப் பிரேம்குமார் பதிவிட்டதாகவும் அதனைக் கவனித்த இராதிகாவின் அக்கா உடனே பிரேம்குமாரை ‘ஏன்டா நாயே’என்று ஒரு பதிலுக்குப் பதிவிட்டதாகவும், இதனை இராதிகாவின் காதலரான விக்னேஷுவிடம் ‘இது சரியா’என பிரேம்குமார் கேட்க, அதற்கு அவரும் பிரேம்குமாரைக் கண்டித்து எச்சரித்ததாகவும் தெரியவருகிறது. 
இதனையடுத்து பிரேம்குமாரின் தந்தை பன்னீர்செல்வம், இராதிகாவின் தந்தை நீலகண்டனிடம் போய் நேரில் கேட்க, இருதரப்பினருக்குமிடையில் வாக்குவாதம் நடந்ததாகவும், இதனால் ஆத்திரமடைந்த ராதிகாவின் தந்தை தனது இருமகள்களையும் பிறர் முன்னிலையில் ’முகநூலில் பதிவிடும் பழக்கமெல்லாம் உங்களுக்குத் தேவையா’ என்று கண்டித்ததுடன், இருவரையும் கன்னங்களில் ஓங்கி அறைந்ததாகவும் தெரியவருகிறது.

இதன் பின்னரே, இராதிகா தனது இல்லத்திலேயே தூக்கிட்டுத் தனது உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். இந்த தகவல் கிடைத்ததும் விக்னேஷும் துக்கம் தாளாமல் தூக்குமாட்டித் தற்கொலை செய்து கொண்டுள்ளார். வாழவேண்டிய வயதில் இரு உயிர்கள் திடீரெனப் பலியாகும் ஒரு அவலநிலை, முகநூல் போன்ற சமூகவலைத்தளங்களைப் பயன்படுத்துவதால் நிகழ்ந்திருப்பது பெருந்துயரத்தை அளிக்கிறது.

இந்நிலையில், சமூகவலைத்தளங்களைப் பயன்படுத்துவது தொடர்பாக, குறிப்பாக பாலியல் குற்றங்களைத் தடுக்கும் வகையில், பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில், புதிய வலுவான சட்டமொன்றை இயற்ற வேண்டுமெனவும், ஆபாச வலைத்தளங்களை முற்றாக இந்தியாவில் தடை செய்ய வேண்டுமெனவும் மைய-மாநில அரசுகளுக்கு விடுதலைச்சிறுத்தைகள் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது.

மேலும், இராதிகா மற்றும் விக்னேஷ் ஆகிய இருவரையும் இழந்து வாடுகிற அவர்தம் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம். இதுகுறித்து காவல்துறையினர் நேரிய வழிமுறைகளில் விசாரணை செய்து உரியநடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அத்துடன், உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு உரிய இழப்பீடு மற்றும் அரசு வேலைவாய்ப்பு வழங்க வேண்டுமெனவும் தமிழக அரசை விடுதலைச்சிறுத்தைகள் கட்சி வலியுறுத்துகிறது.

தற்போது பிரேம்குமார், அவரது தந்தை பன்னீர்செல்வம் மற்றும் அவரது உறவினர் வல்லரசு ஆகியோரைத் தற்கொலைக்குத் தூண்டியதாகக் காவல்துறை கைது செய்துள்ளது. அத்துடன், தொடர்ந்து காவல்துறையினர் குற்றப்புலனாய்வை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் காவல்துறையினரின் நடவடிக்கைகளில் விடுதலைச்சிறுத்தைகள் எந்தவகையிலும் தலையிடவில்லை. ஆனாலும், பிரேம்குமார் தலித் சமூகத்தைச் சார்ந்தவர் என்பதாலேயே, இந்த துயரச்சாவுகளுடன் விடுதலைச் சிறுத்தைதகள் கட்சியை வலிந்து இணைத்து, வழக்கம்போல மீண்டும் மீண்டும்
அவதூறு பரப்பும் சதிமுயற்சியில் பாமக ஈடுபட்டுள்ளது.

தனிநபர்களின் தனிப்பட்ட நட்புறவுகளுக்கோ அல்லது தனிப்பட்ட இன்னபிற நடவடிக்கைகளுக்கோ ஒரு இயக்கம் எப்படி பொறுப்பாக முடியும்? திட்டமிட்ட உள்நோக்கத்துடன் விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் மீது வீண் பழிசுமத்துவது எந்தவகையில் ஞாயமாகும்? வேண்டுமென்றே, அடித்தட்டில் கிடந்து உழலும் மக்களிடையே சாதியின் பெயரால் மோதலைத் தூண்டிவிட்டு, சமூகப் பதற்றத்தை உருவாக்குவதும் சட்டம்-ஒழுங்கு சிக்கலை ஏற்படுத்துவதும்தான் பாமகவின் திட்டமிட்ட சதிநோக்கமாக உள்ளது. பாமகவின் இத்தகைய அரசியல் சதிநோக்கையும் சமூகவிரோதப் போக்கையும் விடுதலைச்சிறுத்தைகள் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.

தனிநபர்களின் தனிப்பட்ட பிரச்சினைகளோடு வேண்டுமென்றே விடுதலைச் சிறுத்தைகளைத் தொடர்புப்படுத்தி ஆதாரமற்றவகையில் அபாண்டமாக பழிசுமத்தித் தொடர்ச்சியாக அவதூறு பரப்பிவருவது பாமக நிறுவனர் இராமதாஸ் அவர்களின் வாடிக்கையாக உள்ளது. இது விடுதலைச்சிறுத்தைகளுக்கு எதிராக மட்டுமின்றி, அப்பாவி தலித் மக்களுக்கு எதிராகவும் அனைத்துச் சமூக மக்களிடையே கடும் வெறுப்பை விதைப்பதாக உள்ளது. மேலும், இது தலித்துகளுக்கு எதிரான சாதிவெறியாட்டத்தைத் தூண்டுவதாகவும் உள்ளது. இந்தப் பெருந்தீங்கிலிருந்து சமூகநல்லிணக்கத்தைப் பாதுகாக்கும் வகையில் மருத்துவர் இராமதாஸ் அவர்கள்மீது விரைவில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சி மானநட்ட வழக்கினைத் தொடுக்குமென்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Leave Comments

Comments (0)