கலகக்காரனின் குரலும், வண்டிச் சக்கரங்களில் சுழலும் சினிமாவும்

/files/detail1.png

கலகக்காரனின் குரலும், வண்டிச் சக்கரங்களில் சுழலும் சினிமாவும்

  • 0
  • 0

-லெட்சுமி நாராயணன். பி

“சினிமா” திரையங்கில் மட்டுமே பிறப்பதில்லை. அங்கு பிறக்கவும் இல்லை.


\r\nசினிமா இன்று ஒரு இடம், நாளை ஒரு இடம் என ஒவ்வொரு இடமாக நீண்டு பயணித்து தனக்கான மக்களை அது சென்று சேர்கிறது. எதுவரைக்கும் என்றால், உன்னதமான அந்த திரைப்படங்களை மக்கள் ஆர்வத்துடன் தேடி தொடர்ந்து பயணித்து, அதனை கண்டடைந்து அதில் அவர்கள் ஆழ்ந்து போகும் வரை.

alt text
\r\nகேரளாவில் சினிமாக்களின் அறிமுகம் என்பது மக்களுக்கு பயணத்தின் மூலமாகவே சாத்தியமாயிற்று. அதன் பெயர் தான் “பயாஸ் கோப்”. சினிமா என்பது அதன் ஆரம்பக் காலங்களில் ஒரு இயக்கமாக, அது ஒரு முன்னெடுப்பாகவே இருந்தது. ஆனால் அதன்பிறகு திரையரங்குகள் என்கிற கட்டமைப்புக்குள் அது மாட்டிக் கொண்டது. வணிகச் சுழல் அதனை சூழ்ந்தது. அதன் கட்டமைப்பை சார்ந்தே கட்டாயமாக இயங்க வேண்டிய சூழல் சினிமாவுக்கு ஏற்பட்டுப் போகிறது. ஒரு திரைப்படத்தின் தயாரிப்பு என்பது கூட திரையரங்கம் என்ற கட்டமைப்பை ஒட்டியே இயங்கும் சூழல் எற்படுகிறது. இன்றும் அந்த அவல நிலை தொடர்கிறது.

alt text

அதே சமயத்தில் இங்கு சுயாதீன திரைப்படங்கள் எப்போதுமே வெளியீட்டிலும், திரையரங்குகள் கிடைப்பதிலும் பிரச்சனைகளை சந்தித்தே வருகின்றன. சுயாதீன திரைப்படங்கள் உருவாக்கத்தில் பெரும் இடர்பாடுகள் இருந்தாலும் அதனை தாண்டி கலையின் கலங்கரை விளக்காய் அவை வருகின்றன. ஆனால்  சிறந்த திரைப்படங்களாக இருந்த போதிலும் அதற்கான திரையரங்குகள் இன்று கிடைப்பதில்லை. எனவே சுயாதீன சினிமாக்கள் திரையரங்குகள் என்கிற இந்த வணிக கார்ப்பரேட் கட்டமைப்பை தவிர்த்து மாற்றுவெளியை தேட வேண்டிய அவசியம் உண்டாகிறது. இல்லையென்றால் அதற்கான திரையரங்குகளை கண்டுபிடிக்க வேண்டியதாகிறது. இதற்கான விதை 1986 ஆம் ஆண்டு கேரளாவில் “ஜான் ஆபிரகாம்” என்கிற கலகக்காரனால் தூவப்பட்டது. வீதிவீதியாக சென்று வீடு வீடாகச் சென்று தனது படத்தினை, மக்களுக்காக உருவாக்கப்படும் படத்தினை அந்த மக்களின் பணமே, அவர்களே தயாரிக்கட்டுமே என்று பணம் பெற்று உருவாக்கிய அவரது திரைப்படம் தான் “அம்ம அறியான்”, திரைப்படத்தினை உருவாக்கியது மட்டுமல்ல அந்த திரைப்படத்தினை திரையரங்குகளில் வெளியிடாமல், மக்கள் ஒன்று கூடும் ஒவ்வொரு இடங்களிலும் மேளம் கொட்டி, பாடல்கள் பாடி, சிறு நாடகங்கள் நடத்தி தன் திரைப்படம் குறித்து அறிவிப்பு செய்து அந்த தெருமுனைகளிலே திரையிட்டு பெரும் விவாதத்தை, ஒரு இயக்கத்தை, மாற்றுவெளியை கட்டமைத்தான் அந்த கலகக்காரன். அதுதான் “பயாஸ் கோப்” சினிமா. அதுதான் கேரளாவில் இந்த  சுயாதீன இயக்கத்தின் ஆரம்பமும் கூட.
\r\nஇன்று கிராமங்களில், ஏன் நகரங்களிலும் கூட எளிய மக்கள் சினிமாவை பார்க்கும் திரையரங்குகள் இல்லை.

alt text

குறைந்த மக்கள் வருகை மேலும் பலவிதமான நெருக்கடிகளால், காரணங்களால் அவை மூடப்பட்டு விட்டன. இன்று திரையரங்குகளை தனது ராட்சத கைப்பிடிக்குள் வைத்திருக்கும் கார்ப்பரேட் எஜமானர்கள் எளிய மக்களுக்கு திரையரங்குகளை அந்நியமாக்கிவிட்டனர். கார்ப்பரேட்டுகளின் கைக்கூலிகளான அரசாங்கம் அத்தனையும் பார்த்தும், பார்க்காமல் போகும். நீ படம் பார்க்க போனால் உன் அடியில் இருக்கும் கோவணத்தை கூட உருவிவிட்டு ஓட விடும் ஆட்கள் அவர்கள். இன்று நகரமயமாக்கப்பட்ட திரையரங்க கலாச்சாரமும், மக்களை எந்த நேரமும் எப்பவுமே பரபரப்பான செய்திகளை வெளியிட்டு, அதனை அதே பரபரப்புடன் மறக்கடித்து, மழுங்கடிக்க செய்யும் தொலைக்காட்சி சேனல்களும் தான் திரைப்படத்தினை தீர்மானிக்கும் காரணிகளாக ஆகிவிட்டன. எனவே சுயாதீன சினிமாக்கள் இதனை தாண்டி வர வேண்டிய தேவை ஏற்படுகிறது. தனது திரைப்படத்திற்கான மக்களை அது தேடி அடைய வேண்டிய நிலை உருவாகிறது. மேலும் இந்த வணிக திரையரங்க கட்டமைப்பை உடைத்து தகர்க்க வேண்டியதும் அவசியமாகிறது. எனவே மீண்டும் அந்த “கலகக்காரன்” ஆரம்பித்து வைத்த இயக்கத்தை, கலாச்சாரத்தை, முன்னெடுப்பை தொடங்க வேண்டும். ஆம் அந்த வரலாறு மீண்டும் தனது பயணத்தை தொடங்கி அது தன் மக்களை நோக்கி புறப்பட்டு விட்டது. ‘டுர்...டுர்...டுர்...டுர்ரா...” ‘வண்டிச் சக்கரங்களில் சுழலும் சினிமா’ நம் மக்களை புத்துணர்வு கொள்ள வைக்கப் போகிறது. உத்வேகத்தை தந்து புதிய புரட்சியை அது ஆரம்பித்து வைக்கப் போகிறது. புதிய விடியல் ஒளிரத் துவங்கி விட்டது. இப்படித்தான் 2015ல் துவங்கியது “சினிமா வண்டி (சினிமா கேப்)” தனது பயணத்தினை. இந்தமுறை அந்த  கலகக்காரன் யார் தெரியுமா? அந்த வண்டிக்காரன்,  மலையாள சுயாதீன திரைப்பட இயக்குனர் “சணல் குமார் சசிதரன்”. இப்படித்தான் “சினிமா வண்டி” குறித்த ஒரு அறிவிப்பு அவரின் திரைப்பட சங்கமான “காழ்ச்சா” பக்கத்தில் ஒரு நாள் வெளியானது. 


\r\n“காழ்ச்சா சலசித்திர வெதி அல்லது காழ்ச்சா” என்பது திருவனந்தபுரத்தை சேர்ந்த ஒரு திரைப்பட சங்கம். “காழ்ச்சா” என்ற மலையாள வார்த்தையின் பொருள் “நல்ல சினிமா (Good Cinema)”.  இதனை துவக்கியவர் “சணல் குமார் சசிதரன்” , இது திரைப்படத்தின் மீது காதலும், ஆர்வமும் கொண்ட நபர்களால், சினிமா ஆர்வலர்களால் ஆனது. தொடரந்து நல்ல சினிமா திரையிடல்கள், திரைப்படம் குறித்த முறையான கல்வி, விவாதம், மக்களிடையே சினிமா சார்ந்த ரசனை மாற்றத்தினை ஏற்படுத்துதல், சுயாதீன திரைப்படங்களுக்கென “காழ்ச்சா சுயாதீன திரைப்பட விழா” என்பதையும் தாண்டி “காழ்ச்சா” , மக்களிடம் நேரடியாகச் சென்று பணம் திரட்டி, மக்கள் பணத்தில் சினிமா என்னும் “மக்கள் பங்கெடுப்பு முதலீடு (Crowd Funding)”  முறையை கட்டமைத்தது. இப்படித்தான் சணலின் குறும்படங்களான “அதிசய லோகம், பரோல், ப்ராக்” முதலியவை சுயாதீனமாக உருவாகின. அதன் வரவேற்பினை தொடர்ந்து தனது முழு நீளப்படமான “ஓராள் பொக்கத்தினை”  அதே முறையில் “Crowd Funding” , மக்கள் சினிமா என்ற வழியில் இயக்கி தயாரித்தார் சணல் குமார்.  இதற்காக “பக்கெட் பிரிவு (Bucket Pirivu)” என்ற ஏற்பாட்டினை அவர் செய்தார். அதாவது பிளாஸ்டிக் பக்கெட்டுகளில் மக்களிடம் நேராக சென்று, தங்களது திரைப்படம் குறித்து பேசி, அவர்கள் தரும் பணம் சிறு தொகையாக இருந்தாலும் கூட அதனை அதில் பெற்றுக் கொண்டனர். இது குறித்து சணல் பேசும் போது, “ எங்களது நோக்கம் வித்தியாசமான முறையில் சினிமாவை தயாரிப்பது மட்டுமல்ல, அதனை வெளியிடும் முறையிலும் வித்தியாசத்தை ஏற்படுத்த வேண்டும். நாங்கள் மக்களுக்காக திரைப்படம் எடுக்கிறோம்.

alt text

எனவே அவர்களிடம் இருந்தே பணம் பெறுகிறோம். சயாதீன சினிமா தயாரிப்புக்கான சிறந்த முதலீடாக இந்த முறையை நான் பார்க்கிறேன். இது மாற்றுவழி என்பதை விட இந்தமுறை முன்பிருந்த முறைதான் என்கிறார் சணல். இப்படித்தான் “ஓராள் பொக்கத்தின்” மொத்த தயாரிப்பு செலவான 25 லட்சத்தில், 19 லட்சம் மக்கள் மூலமாகவே வந்து சேர்ந்தது என்கிறார். எங்களை யாரென்றே தெரியாத, எங்களுக்கும் தெரியாத அந்த மக்கள்தான் எந்த ஒரு எதிர்பார்ப்பும் இன்றி தங்களது சிறிய முதலீடுகளை எங்களிடம் தந்தனர். அவர்கள் எங்களை நம்பினர். எங்களை மட்டுமல்ல நல்ல சினிமா வரவேண்டும் என்றும் அவர்கள் நம்பினர் என்கிறார். சுயாதீன திரைப்படத்திற்கான ஆர்வலர்களை நிறைய பார்க்க முடிந்தது என்கிறார். இந்த படத்தில் நடித்த, பங்குபெற்ற எந்த டெக்னீசியன்களும் பணம் பெற்றுக் கொள்ளாமல் தங்களது பங்களிப்பை தந்தனர் என்கிறார்.” “ஓராள் பொக்கம்” திரைப்படம் மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது மட்டுமல்லாமல் கேரள அரசு விருது, கேரள சர்வதேச திரைப்பட விழாவில் சிறப்பு விருதுகளை வென்றது.

alt text
\r\nஇந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் முன்னரே ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இத்திரைப்படத்தினை பார்த்திருந்தனர். எவ்வாறு எனில், “சினிமா வண்டி (கேப்)” மூலமாக அது சாத்தியமானது. இதன் முதல் பயணத்தை மலையாள சினிமாவின் முது பெரும் இயக்குனர் “அடூர் கோபாலகிருஷ்ணன்”, திருவனந்தபுரத்தில் உள்ள ‘சுவாதி திருநள் காலேஜ் ஆப் மியூசிக், தைகாடு”ல் பச்சைக் கொடியசைத்து துவக்கி வைத்தார். “சினிமா வண்டி” என்பது அதிநவீன வசதிகளுடன் பெரிய திரையுடன் கூடிய வாகனம், இதன் மூலம் பல ஊர்களில், ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஏழு நாட்கள் வீதம் மூன்று முதல் ஐந்து மாதங்கள் இயக்குனர் சணலுடன் அவரது குழுவினர் பயணம் செய்து, அந்தந்த ஊர்களிலுள்ள இலக்கிய வட்ட நண்பர்கள், சினிமா அமைப்புகள், சினிமா சங்கங்கள், விளையாட்டு சங்கங்கள், பொது அமைப்புகள், கிராம மக்கள், கிராம அமைப்புகள் உதவியுடன் திரையிடல்களை நடத்தினர். கல்லூரிகள்,பல்கலைக்கழக வளாகங்கள், பள்ளிகள், விளையாட்டு மைதானங்கள், நூலகங்கள் போன்றவற்றிலும் சிறு பெரு குழுக்களை திரட்டி “சினிமா வண்டியின்” மூலம் படத்தினை திரையிட்டனர்.

தெரு முனைகள், மக்கள் கூடும் பேருந்து நிலையங்கள் போன்ற இடங்களில் திரைப்படம் குறித்த அறிவிப்புகளை நடந்து சென்று நோட்டீஸ்கள் தந்து, மேளம் கொட்டி, பாடல்கள் பாடி, சிறு நாடகங்கள் மூலம் விழிப்புணர்வு தந்து திரையிடல்கள் குறித்து அறிவிப்பு செய்து திரையிட்டனர் படக்குழுவினர். அது மட்டுமல்லாமல் உங்களது பகுதியில் 50 நபர்கள், 100 நபர்கள் படத்தினை பார்க்க தயாராக இருந்தால் அங்குள்ள ஒரு திரையரங்கில் கூட திரையிடலை நடத்தினர். முழுதும் இலவசம் அல்ல.

alt text

மக்களிடம் இருந்து பணம் பெற்றுக் கொள்ளப்படும். அதன் மூலம் தான் தொடர்ந்து செயல்பட முடியும். இதன் மூலம் திரையரங்குகளை தாண்டி பொது வெளியில், நம் தெருமுனையில் படம் பார்க்கும் எளிய முறை சாத்தியமானது. எளிய மக்களுக்கான மக்கள் சினிமா சாத்தியமானது. சுயாதீன திரைப்படங்களுக்கு அற்புதமான வெளியீட்டு வெளி இதனால் கிடைத்தது. மக்களை நேரடியாக சந்திப்பதின் மூலமாக அவர்களின் கருத்துகளை நேரடியாக பெற்றுக் கொள்ள முடிகிறது. நிறைய சுயாதீன திரைப்படங்களுக்கு திரையரங்குகள் கிடைப்பதில்லை. கிடைக்க விடுவதில்லை. இந்த அற்புதமான முயற்சியின் மூலம் பட்டி தொட்டியெங்கும் நம் திரைப்படம் திரையிடப்படும் என்கின்றனர் “சினிமா வண்டி” குழுவினர். இந்த பயணம் ஒரு அற்புதமான, நெகிழ்வான தருணம் என்றும் கூறுகின்றனர். இப்படி தனது “ஓராள் பொக்கத்தினை” 110 இடங்களில் திரையிட்டார் சணல் குமார் சசிதரன். இதன் மூலம் கிடைத்த அனுபவங்கள் அலாதியானது என்றும் கூறுகிறார். சுயாதீன திரைப்படங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க இது நல்ல வழி என்றும் கூறுகிறார்.

“ஓராள் பொக்கத்தினை”தொடர்ந்து, இயக்குனர் ‘டான் பலத்தாரா’ வின் “சவம்”, ‘சானவாஸ் நனரிபுலா’ வின் “கேர்ரி”, ஜுஜு ஆண்டனியின் “எல்லி எல்லி லாமா சபாச்தானி? (எம் ஆண்டவரே ஏன் எம்மைக் கைவிட்டீர்?)”, வினீத் சீனிவாசனின் “ஒரு சினிமாக்காரன்” மீண்டும் சணலின் க்ளாஸிக் திரைப்படமான “ஒழிவுதிவெசெத்தேகெளி” போன்றவை “சினிமா வண்டி” மூலம் திரையிடப்பட்டு மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றன. இப்போது சணல் குமார் சசிதரனின் மூன்றாவது திரைப்படமான “செக்ஸி துர்கா”, “சினிமா வண்டியில்”தனது பயணத்தினை கடந்த மார்ச் 24 ஆம் தேதியிலிருந்து தொடங்கியிருக்கிறாள். 

 

சணல் குமார் சசிதரனின் “செக்ஸி துர்கா (எஸ். துர்கா)” சர்வதேச அளவில் பெரும் பாராட்டையும், கவனத்தையும், சர்வதேச விருதுகளையும் வென்ற திரைப்படம், ஆனால் இங்கு அதன் தலைப்பிற்காகவே இந்துத்துவ கூட்டத்தாலும், இந்திய திரைப்படத் தணிக்கை வாரியத்தாலும் (சென்சார் போர்டு), ஆளும் காவி அரசாலும் பெரிதும் அலைக்கழிக்கப்பட்டு, இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் (IFFI – Goa) இதற்காகவே திட்டமிட்டு வெளியேற்றப்பட்டு பல இன்னல்களை சந்தித்தது. பெரும் போராட்டத்திற்கு பிறகுதான் சணல் இத்திரைப்படத்தை கடந்த மார்ச் 23ல் வெளியிட்டார். வெளியிடுதலுக்கான முன்னெடுப்பாக தனது “சினிமா வண்டியை” பயன்படுத்தினார். படத்தை கேரளா முழுதும் நிறைய திரையரங்குகளில் வெளியிட சணல் விரும்பி, பல விநியோகஸ்தர்களை அனுகியுள்ளார். எவரும் படத்தை வாங்க வரவில்லை. இத்தனைக்கும் முறைப்படி சென்சார் சான்றிதழ் பெற்று, திரைப்பட விழாக்களில்லாம் திரையிடப்பட்ட படம் இது. படத்திற்கு அச்சுறுத்தல் உள்ளது என்றும், திரையிட்டால் வீண் பிரச்சனைகள் வரும் என்று எவரும் படத்தை வாங்க முன் வரவில்லை. 


\r\nசணல் குமார் சசிதரன் தனது பெரும் முயற்சியால் கேரளா முழுதும் 40  திரையரங்குகளில் படத்தினை சுயாதீனமாக வெளியிட்டார். அதோடு மட்டுமல்லாமல் படம் திரையிடப்படும் ஊரில் தனது சினிமா வண்டியின் மூலம் சென்று, வீதிவீதியாக, பேருந்து நிலையங்கள், மக்கள் கூடும் இடங்களில் ‘செக்ஸி துர்கா’ திரைப்பட போஸ்டரை கையில் வைத்துக் கொண்டு, அவரும், அவரது குழுவினரும் மேளம் அடித்துக்கொண்டு, திரையிடல் நோட்டீஸ்களை கையில் நேரில் கொடுத்து படம் பற்றிய விவரங்களை அவர்களிடம் சொல்லி அழைத்தார் சணல்.

பட போஸ்டர்களை அவரது படக் குழுவினரே ஊர் முழுதும் ஒட்டினர். சினிமா வண்டி ‘காசர் கோடு, பந்தளம், பத்தனம் திட்டா, திருவனந்தபுரம், கல்பேட்டா, கொச்சி” போன்ற பல இடங்களை சுற்றியது(கிறது). இம்முறையும் அடூர் கோபாலகிருஷ்ணனே பயணத்தை துவக்கி வைத்தார். உடன் எஸ்.எப் தாமஸ், சாஜின் பாபு போன்றோர் கலந்து கொண்டனர். பல இடங்களில் அங்குள்ள சினிமா சார்ந்த அமைப்புகள் மூலமும் ‘எஸ் துர்கா’ திரையிடப்பட்டு வருகிறது. திரையிடுவதற்கு முன்பு அந்த ஊரின் அமைப்பினரும், சணலும் திரைப்படம் குறித்தும், அது சந்தித்த பிரச்சனைகள் பற்றியும் சிறு அறிமுகம் தருகின்றனர். ஒரு சிறு நாடகத்தை அங்கு நடத்துகிறார்கள். அதன் மூலம் இங்கு நாம் என்ன உடை உடுத்த வேண்டும், என்ன உணவு சாப்பிட வேண்டும்? என்ன நாம் பேச வேண்டும்? நாம் என்ன செய்ய வேண்டும்? எப்படி வாழ வேண்டும்? யாரைக் கேட்டு நடக்க வேண்டும்? என்று நம்மை தொடர்ந்து கட்டுப்படுத்தும், நிர்பந்திக்கும் ஒற்றைமைய ஏதேச்சதிகார அரசாங்கத்தினை சாடுகின்றனர். ஏன் நீ தூக்கத்தில் காணும் கனவுகளுக்கு கூட இங்கு சென்சார் செய்யப்படும் நிலையை நாடகத்தின் மூலம் பகடியாய் விளக்குகின்றனர். 

alt text
\r\nமேலும் சணல், படம் மக்களிடம் சென்று சேர வேண்டும், படம் நல்ல படமா? இல்லையா? என்பதை மக்கள் தீர்மானிக்கட்டும், அவர்களே இங்கு நீதிபதிகள், அரசாங்கம் சென்சார் தந்தவுடன் அதன் வேலை முடிந்து விட வேண்டும், அதை தவிர்த்து படத்தை மக்களை பார்க்க விடாமல் அதற்கும் சென்சார் செய்வது மிகவும் அயோக்கியத்தனமான செயல் என்றும் சொல்கிறார். இந்த ‘சினிமா வண்டி’ யின் மூலம் கேரளா முழுதும் ‘செக்ஸி துர்கா’ வை திரையிடுவதன் மூலம் ஒரு திரையிடல் கலாச்சாரத்தை, சுதந்திரத்தை, சுயாதீன சினிமா தயாரிப்பு மற்றும் விநியோகத்திற்கு மாற்று வழியை கண்டு பிடித்தலும், சினிமா சார்ந்த ரசனை மாற்றத்தின் மூலம் எங்களுக்கான மக்கள் வட்டத்தினை நாங்கள் உருவாக்குவதே தனது நோக்கம் என்கிறார். மற்ற ஊர்களிலும் சினிமா ஆர்வலர்களின் மூலம் திரையிடலை சணல் தொடர்கிறார். கோவையில் திரையிட்டார்கள்.

 

சென்னையில் நல்ல சினிமா சார்ந்த சமூகப் பணிகளை தொடர்ந்து முன்னெடுத்து வரும் சினிமா செயல்பாட்டாளர் “தமிழ் ஸ்டுடியோ – அருண். மோ”, தனது ‘சாமிக்கண்ணு திரைப்பட சங்கத்தின் மூலமாக’ ,பெரும் நெருக்கடிகளை கடந்து, நேரடியாக களப்பணி செய்து, காவிகளின் வெடிகுண்டு மிரட்டலையும் தாண்டி, கடந்த மே 6 ல் அரங்கு நிறைந்த கூட்டத்துடன்  “எஸ் துர்கா’ வை திரையிட்டார். இயக்குனர் சணல் குமார் சசிதரன் நேரில் பங்கு பெற்ற கலந்துரையாடல், சினிமா ரசனை வகுப்பும்  நடந்தது. செக்ஸி துர்கா ‘சினிமா வண்டி’ மூலம் தனது பயணத்தை தொடர்கிறாள். சுயாதீன சினிமாக்களின் பொற்காலம் சாத்தியமாகும் விரைவில். டுர்...டுர்...டுர்...டுர்ரா.....அதோ ‘சினிமா வண்டியின்’ சத்தம் கேட்கிறது......ஆம் கலகக்காரனின் குரல் தான் அது....
\r\n 

\r\n

Leave Comments

Comments (0)