கேப்பாபிலவில் 700 நாட்களாக தொடரும் போராட்டம்

/files/detail1.png

கேப்பாபிலவில் 700 நாட்களாக தொடரும் போராட்டம்

  • 0
  • 0

 

கடந்த  2017 மார்ச் முதலாம் திகதி முதல்   இலங்கை அரச படைகளின் முகாம்களுக்கு முன்பாக நிலமீட்பு போராட்டம் ஒன்று அதன் உரிமையாளர்களினால் ஆரம்பிக்கப்பட்டது. அந்த போராட்டத்திற்கான தீர்வு முழுமையாக கிடைக்காதவிடத்து இன்று 700 நாட்களைக்கடந்தும் போராட்டம்  தொடர்கின்றது.

இந்த போராட்டத்தின் எழுச்சியையடுத்து  கடந்த டிசம்பர் 2017 இல் அரச படைகள் கேப்பாபிலவில் சில நிலங்களை  விடுவித்தனர்.  எனினும் தங்கள் நிலங்கள் முழுவதையும் விடுவிக்ககோரும் அவர்களது போராட்டம் தற்போதும் தொடர்ந்துகொண்டிருக்கின்றது.

2009ம் ஆண்டு இலங்கையில் நடந்த தமிழ்மக்களுக்கு எதிரான இறுதிப்போரின் பின், மக்களை இலங்கை அரசு பயங்கரவாத சட்டத்தின் கீழ் முள் வேலி முகாம்களில் அடைத்து வைத்திருந்தது. இந்த காலப்பகுதியில்  மக்களுக்குச்சொந்தமான நிலங்களை படைத்தரப்பு கைப்பற்றி  அதனுள் நிலைகொண்டுள்ளது.

போர் முடிவுற்று ஆறுமாத காலத்திற்கு பின் மக்கள் முகாம்களில் இருந்து மீள் குடியேற்றம் செய்யப்படும் போது, அவர்களின் நிலங்களை படைத்தரப்பு வழங்க மறுத்துவிட்டது. இதன்காரணமாக மக்கள் தமது சொந்த பகுதிகளுக்குச் சென்றபோதும் அவர்களின் நிலங்களுக்குள் செல்ல முடியவில்லை. இதனால் அவர்கள், தமது நிலங்களை அபகரித்து இருந்த  படை முகாம்களுக்கு முன் “எமது நிலம் எமக்கு வேண்டும்“ என்ற முழக்கத்துடன் போராட்டம் ஒன்றை ஆரம்பித்தனர்.

ஆனால் இந்த போராட்டத்திற்கு படைப்புலனாய்வாளர்கள், காவல்துறையினர்   போராட்டத்தைக்கைவிட வேண்டும் என அச்சுறுத்தலை மேற்கொண்டனர். இந்த அச்சுறுத்தல்களுக்கெல்லாம் முகம் கொடுத்து மக்கள் தமது போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

 இந்நிலையில், முல்லைத்தீவு  உதவி அரசாங்க அதிபர் 2019 ஜனவரி 25ஆம் திகதிக்குள்  நிலங்கள் விடுவிக்கப்படும் என உறுதியளித்துள்ளார்.

 

இதன் பின்னர் புதிதாக நியமிக்கப்பட்ட வட மாகாண ஆளுநரின் பணியாளர் ஒருவர் கேப்பாபிலவு மக்களைச் சந்தித்துள்ளார்.  ஜனவரி 20ஆம் திகதி ஆளுநரும் அவர்களைச் சந்தித்துள்ளார். இருவரும் நிலங்களை விடுவிக்கப் படைத்தரப்புக்கு மேலதிக கால அவகாசம் வேண்டும் என கூறியுள்ளனர். எனினும், கடந்த காலங்களில் இதுபோன்ற நேரத்தை வீணடிக்கும் தந்திரோபாயங்களை சந்தித்த அனுபவமுள்ள கேப்பாபிலவு மக்கள், ஜனவரி 25ஆம் திகதியே  தமது சொந்த நிலங்களை விடுவிப்பதற்கான இறுதி நாள், அன்று அனைத்து நிலத்தையும் ஒப்படைக்கவேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

Leave Comments

Comments (0)