அண்ணல் அம்பேத்கரின் சிலை உடைக்கப்பட்டதற்கு மே பதினேழு இயக்கம் கண்டனம்

/files/detail1.png

அண்ணல் அம்பேத்கரின் சிலை உடைக்கப்பட்டதற்கு மே பதினேழு இயக்கம் கண்டனம்

  • 0
  • 0

 

ஒடுக்கப்பட்டோரின் விடிவெள்ளியாய் திகழும் அண்ணலின் சிலையை அப்பகுதியிலிருந்து அகற்ற வேண்டும் என்பதே அப்பகுதியிலுள்ள ஆதிக்க சாதியினரின் நோக்கமாக இருந்துள்ளது என்று மே 17 இயக்கம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அவ்வியக்கத் தோழர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் கடந்த ஞாயிறு அன்று, புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கரின் சிலை, சில சாதி வெறியர்களால் முழுவதுமாக உடைக்கப்பட்டுக் கொண்டாடப்பட்டது கடும் கண்டனத்திற்குரியது. அப்பகுதியில் உள்ள ஒரு பட்டியலின சமூகத்திற்கும், ஆதிக்க சாதியினருக்கு ஒரு மாதத்திற்கு மேலாக மோதல் நிலவி வந்த நிலையில், பட்டியலின சமூகத்தை அவமானப்படுத்தும் நோக்கத்தில் ஆதிக்கச் சாதியைச் சேர்ந்தவர்கள் சட்ட மாமேதை அம்பேத்கரின் சிலையைச் சேதப்படுத்தியது உள்நோக்கம் கொண்டது.

ஒடுக்கப்பட்டோரின் விடிவெள்ளியாய் திகழும் அண்ணலின் சிலையை அப்பகுதியிலிருந்து அகற்ற வேண்டும் என்பதே அப்பகுதியிலுள்ள ஆதிக்க சாதியினரின் நோக்கமாக இருந்துள்ளது. அதன்பொருட்டே, சில பிரச்னைகள் உருவாக்கப்பட்டுச் சிலை தகர்க்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த சம்பவம் காவல்நிலையம் அருகிலேயே நடைபெற்றுள்ளது என்பது அதிர்ச்சியளிக்கிறது. நாகை மாவட்டத்தில் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராகச் சிறு துண்டறிக்கை அளித்தால் கூட படையோடு வந்து கைது செய்யும் காவல்துறை, காவல் நிலையம் அருகிலேயே பட்டப்பகலில் நடைபெற்ற இந்த சாதிவெறி சம்பவத்தைத் தடுக்காமல் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தது என்பது கண்டிக்கத்தக்கது.

உடைக்கப்பட்ட சிலைக்குப் பதிலாக விரைந்து செயல்பட்டு வெண்கலச் சிலையை நிறுவியதில் காட்டிய வேகத்தை, தமிழக அரசு குற்றவாளிகளைக் கைது செய்யக் காட்டவில்லை என்பது வருந்தத்தக்கது. சிலை உடைப்பைப் படம் பிடித்த பல காணொளிகளும், அப்பகுதி கண்காணிப்பு கேமரா காணொளிகளும் இருக்கும் நிலையில், குற்றவாளிகளைக் கைது செய்வதில் தாமதிப்பது, குற்றவாளிகளைத் தப்பவிடுவதற்கு ஒப்பாகும்.

குற்றவாளிகளையும், அவர்கள் பின்னணியிலிருந்து இயக்குபவர்களையும் உடனடியாக கண்டறிந்து, சாதி வன்கொடுமை தடுப்புச்சட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும் என மே பதினேழு இயக்கம் வலியுறுத்துகிறது. மேலும், சாதிய வன்கொடுமை சட்டம் வலுப்படுத்தப்பட வேண்டும் என்ற அவசியத்தையும் இச்சம்பவம் நமக்கு உணர்த்துகிறது.

சாதி மத வெறியாட்டத்தின் மூலம் சனாதன நெறிகளைச் சமூகநீதி காக்கும் தமிழக மண்ணில் புகுத்த நினைக்கும் இந்துத்துவ சக்திகளின் நேரநிரலின் ஒரு பகுதியாகவே இச்சம்பவத்தைப் பார்க்க வேண்டியுள்ளது. அதனை முறியடிக்கும் விதமாக அண்ணல் அம்பேத்கர் மற்றும் தந்தைப் பெரியாரின் சாதிக்கு எதிரான கருத்துக்களைத் தமிழக மக்களிடையே பரப்ப முற்படுவோம்” என்று தெரிவித்துள்ளனர்.

Leave Comments

Comments (0)