ஹைட்ரோகார்பன் எடுக்க அனுமதி கிடையாது என்று கொள்கை முடிவெடுக்கவேண்டும்- பூவுலகின் நண்பர்கள்

/files/detail1.png

ஹைட்ரோகார்பன் எடுக்க அனுமதி கிடையாது என்று கொள்கை முடிவெடுக்கவேண்டும்- பூவுலகின் நண்பர்கள்

  • 0
  • 0

தமிழகத்தில் ஹைட்ரோகார்பன் எடுக்க அனுமதி கிடையாது என்று தமிழக முதல்வர் கொள்கை முடிவெடுத்து அறிவிக்க வேண்டும் என்று  பூவுலகின் நண்பர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

”தமிழகம் மற்றும் புதுவையில் ஒரே ஆண்டில் 489 ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்கச் சுற்றுச்சூழல் அனுமதி கோரி எண்ணெய் நிறுவனங்கள் விண்ணப்பம் செய்துள்ளன.

தமிழகம் மற்றும் புதுவையில் 1984ஆம் ஆண்டிலிருந்து ஒ.என்.ஜி.சி. நிறுவனம் இயற்கை எரிவாயு மற்றும் எண்ணெய்க் கிணறுகளை அமைத்து வருகிறது. தமிழ்நாட்டில் மட்டும் 1984ஆம் ஆண்டிலிருந்து இப்போது வரை மொத்தமாக 768 கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன. தற்சமயம் 187 கிணறுகள் செயல்பட்டு வருகின்றன.

மத்திய அரசின் OALPகொள்கையின் அடிப்படையில் 2019ஆம் ஆண்டில் மட்டும் தமிழகம் மற்றும் புதுவையில் மொத்தமாக 489 எண்ணெய்க் கிணறுகள் அமைப்பதற்கான சுற்றுச்சூழல் அனுமதிகோரி ஓ.என்.ஜி.சி மற்றும் வேதாந்தா நிறுவனங்கள் விண்ணப்பித்துள்ளன. வேதாந்தா 274 கிணறுகளுக்கும், ஒ.என்.ஜி.சி. 215 கிணறுகளுக்கும் விண்ணப்பம் செய்துள்ளன.

தமிழகத்தில் பருவமழை தொடர்ச்சியாகப் பொய்த்துவரும் நிலையில் விவசாயிகள் பெரும் வாழ்வாதார சிக்கலில் தவித்து வருகின்றனர். இந்நிலையில் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு மிகப் பெரிய எண்ணிக்கையில் ஹைட்ரோகார்பன் திட்டங்களைக் காவிரி டெல்டா பகுதியில் செயல்படுத்த மத்திய அரசின் உதவியுடன் ஓ.என்.ஜி.சி. உள்ளிட்ட பல நிறுவனங்கள் முயன்று வருவது விவசாயிகள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தின் பிரதான கட்சிகள் அனைத்தும் காவிரி டெல்டா பகுதியைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்பதை தங்களது தேர்தல் வாக்குறுதியாக அளித்துள்ள நிலையில் மத்திய தொடர்ச்சியாகத் தமிழ்நாட்டில் ஹைட்ரோகார்பன் கிணறுகளை அமைப்பதற்கான அனுமதியை எண்ணெய் நிறுவனங்களுக்கு அளித்து வருகிறது.

காவிரி டெல்டா பகுதியில் ஏற்கனவே செயல்படுத்தப்பட்டு வரும் ஹைட்ரோகார்பன் திட்டங்களால் அப்பகுதியில் நில அமைப்பே கடல் மேற்பரப்பு மட்டத்திற்குக் கீழே இறங்கி வருவதாகவும் இதன் காரணமாக நிலப்பகுதியில் கடல் நீர் பல கிலோ மீட்டர் தூரத்திற்கு உட்புகுந்து விட்டதாகவும் பல்வேறு ஆய்வுகள் வெளிவரும் நிலையில் புதிய ஹைட்ரோகார்பன் திட்டங்களை அப்பகுதியில் செயல்படுத்துவது தமிழ்நாட்டின் உணவு பாதுகாப்பையே கேள்விக்குள்ளாக்குவதாக உள்ளது.

புதுச்சேரி மாநில முதல்வர் எண்ணெய் நிறுவனங்கள் எதற்கும் ஹைட்ரோகார்பன் எடுக்கத் தனது மாநிலத்தில் அனுமதி தர முடியாது என்று கூறியதோடு மட்டுமில்லாமல் விவசாயிகளோடு போராட்டத்திலும் கலந்து கொண்டார். ஆனால், தமிழகத்தில் இன்று வரை கொள்கை நிலைப்பாட்டை அரசு எடுக்கவில்லை செய்தியாளர்களிடம் பேசும்போது மட்டும் விவசாயிகள் விரும்பாத திட்டங்களை அரசு செயல்படுத்தாது என்று அமைச்சர்கள் கூறி வருகின்றனர்.

அண்மையில் சட்டப்பேரவையில் அமைச்சர் சிவி.சண்முகம் பேசுகையில் தமிழகத்தில் அனுமதியின்றி ஹைட்ரோகார்பன் எடுத்தால் குற்ற நடவடிக்கைகள் பாயும் என்று எச்சரித்தார். ஆனால், இந்த ஆண்டு மட்டும் மட்டும் 17 கிணறுகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாக ஓ.என்.ஜி.சி. நிறுவனம் தெரிவித்துள்ளது. அப்படியானால் இந்த அனுமதியை யார் வழங்கியது? அனுமதியை வழங்கவில்லையென்றால் எப்போது ஓ.என்.ஜி.சி.மீது குற்ற நடவடிக்கைகள் பாயும் என்பதை அமைச்சர் சி.வி.சண்முகம் விளக்க வேண்டும்.

இப்படி ஒப்புக்குப் பேசுவதை நிறுத்திவிட்டு, ஹைட்ரோகார்பன் எடுப்பதற்காக நிறுவனங்கள் அளித்துள்ள விண்ணப்பங்களைத் தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் நிராகரிக்க வேண்டுமென்றும், உடனடியாக தமிழக முதல்வர் இத்திட்டங்களுக்கெதிரான கொள்கை முடிவை எடுக்க வேண்டும் எனவும் தமிழகத்தின் எதிர்க்கட்சிகளை அரசிடம் இதுகுறித்து வலியுறுத்த வேண்டும் எனவும் பூவுலகின் நண்பர்கள் அமைப்பு கோரிக்கை விடுக்கிறது” என்று இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.

Leave Comments

Comments (0)