சமூக நீதிக்குச் சவக்குழி - ரவிக்குமார் 

/files/detail1.png

சமூக நீதிக்குச் சவக்குழி - ரவிக்குமார் 

  • 0
  • 0

 

குறைவாக ஊதியம் வழங்கி பணத்தை மிச்சப்படுத்தலாம் என்று சொல்லப்பட்டாலும் இதன் உண்மையான நோக்கம் உயர்சாதியினர் தவிர வேறு எவரும் அந்தப் பதவிகளுக்கு வந்துவிடக் கூடாது என்பதுதான் என்று ரவிக்குமார் எம்.பி தெரிவித்துள்ளார்.

”சமூக நீதியைக் குழிதோண்டிப் புதைப்பது என்பதில் மோடி அரசு முனைப்பாக இருக்கிறது. கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலையில்லாத் திண்டாட்டம் தலைவிரித்து ஆடுகிற நேரத்தில் ஓய்வுபெற்ற அதிகாரிகளை மீண்டும் பணியமர்த்தம் செய்வது என்று மோடி அரசு முடிவு செய்திருக்கிறது. குறைவாக ஊதியம் வழங்கி பணத்தை மிச்சப்படுத்தலாம் என்று சொல்லப்பட்டாலும் இதன் உண்மையான நோக்கம் உயர்சாதியினர் தவிர வேறு எவரும் அந்தப் பதவிகளுக்கு வந்துவிடக் கூடாது என்பதுதான். 

முதற்கட்டமாக இப்பொழுது எர்த் சயன்ஸஸ் அமைச்சகத்தில் அதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. அங்கு செக்‌ஷன் ஆபிஸர்கள் மற்றும் அசிஸ்டெண்ட் செக்‌ஷன் ஆபீஸர்கள் பதவியிலிருந்து ஓய்வு பெற்றவர்கள்/ ஓய்வு பெற இருப்பவர்கள் பெயர்களைக் கொண்ட ஒரு பட்டியலைத் தயாரிப்பது என முடிவு செய்யப்பட்டு அதற்கான சுற்றறிக்கை அனுப்பப்பட்டு இருக்கிறது. 

அதில் பணி ஓய்வுக்குப் பிறகு முழு நேரமாக வேலை செய்ய விரும்புபவர்கள் தமது பெயரைக் கொடுத்துச் சேர்ந்து கொள்ளலாம். அவர்களுக்கு அந்தத் துறையில் அதே பணியிடங்களில் முழுநேர வேலை வாய்ப்பு அளிக்கப்படும். செக்‌ஷன் ஆபிஸர்கள் மற்றும் அசிஸ்டெண்ட் செக்‌ஷன் ஆபீஸர்கள் பதவிகளில் அப்படி மீண்டும் நியமிக்கப்படுபவர்களுக்கு முறையே மாதம் 35 ஆயிரம் ரூபாயும், 30 ஆயிரம் ரூபாயும் கன்சல்டன்சி ஃபீஸாக வழங்கப்படும். 

இதற்கான சுற்றறிக்கை கடந்த 30ஆம் தேதி வெளியிடப்பட்டுள்ளது . இத்தகைய பதவிகளில் உயர்சாதியினரே பெரும்பாலும் இருக்கிறார்கள் அவர்கள் ஓய்வு பெற்றால்தான் இட ஒதுக்கீட்டைப் பயன்படுத்தி வேலை வாய்ப்பைப்பெற்ற சமூகத்தினர்- எஸ்சி /எஸ்டி / ஓபிசி பிரிவினர் 
அந்தப்பணிகளுக்கு வர முடியும். 

இப்போதுதான் அந்த வாய்ப்பு அந்தப் பிரிவினருக்குக் கிடைத்திருக்கிறது. ஆனால் அவர்களுக்கு அந்த வாய்ப்பை வழங்காமல் மீண்டும் உயர் வகுப்பினரையே அந்தப் பதவிகளில் அமர்த்த வேண்டும் என்ற நோக்கோடு இந்த முயற்சி செய்யப்படுகிறதோ என்ற ஐயம் நமக்கு எழுகிறது. ஏனெனில் அந்த அமைச்சகத்தில் பதவி உயர்வில் இட ஒதுக்கீடு அளிக்கக்கூடாது என வழக்குத் தொடுக்கப்பட்டு (PS Sastry vs M/O Earth Science on 28 March, 2018) அதில் கடந்த ஆண்டுதான் தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. 

தகுதி வாய்ந்த இளைஞர்கள் வேலை கிடைக்காதா? என ஏங்கித் தவித்துக் கொண்டிருக்கிற நேரத்தில் ஓய்வு பெற்றவர்களை மீண்டும் பணியமர்த்தம் செய்யும் மோடி அரசின் இந்த முயற்சியை அனைவரும் எதிர்க்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
 

Leave Comments

Comments (0)