காஷ்மீர் மாநிலத்தில் பாஜக அரசு நடத்தியுள்ள ஜனநாயக படுகொலை- கே. பாலகிருஷ்ணன்

/files/detail1.png

காஷ்மீர் மாநிலத்தில் பாஜக அரசு நடத்தியுள்ள ஜனநாயக படுகொலை- கே. பாலகிருஷ்ணன்

  • 0
  • 0

 

காஷ்மீர் மாநிலத்தில் பாஜக அரசு நடத்தியுள்ளது ஜனநாயக படுகொலை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
 
இதுகுறித்து இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ”மத்திய பாஜக அரசு இன்று (ஆகஸ்ட் 05) நாடாளுமன்றத்தில் காஷ்மீர் மாநிலத்தை இரண்டாகப் பிரித்து யூனியன் பிரதேசமாக அறிவித்துள்ளதோடு, இம்மாநிலத்திற்குச் சிறப்பு உரிமைகளை வழங்கக்கூடிய அரசியல் சாசனத்தின் 370வது பிரிவையும் ரத்து செய்துள்ளது. இந்த நடவடிக்கை காஷ்மீர் மக்களின் மாநில உரிமையை அபகரிப்பதாகும். இது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானதாகும்.

நாட்டின் விடுதலைக்குப் பிறகு, தனிப்பிரதேசமாக இருந்த காஷ்மீர் மாநிலம் இந்தியாவோடு இணைவது குறித்து இந்தியப் பிரதமர் ஜவஹர்லால் நேரு காஷ்மீர் மக்களின் தலைவர் ஷேக் அப்துல்லா ஆகியோருக்கிடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் காஷ்மீர் மாநிலத்திற்குச் சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியல் சாசனம் 370 உள்ளிட்ட பிரிவுகள் நாடாளுமன்றத்தில் சட்டத்திருத்தமாக நிறைவேற்றப்பட்டு அதனடிப்படையில் காஷ்மீர் மாநிலம் இந்தியாவோடு இணைக்கப்பட்டது. இந்த வரலாற்று உண்மையைப் புறக்கணித்து மத்திய அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கையானது அரசியல் சாசனத்திற்கு விரோதமானது.

alt text

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்திற்கு அரசியல் சாசனப் பிரிவு 370ன் படி வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்வதும், இம்மாநிலத்தை இரண்டாகப் பிரித்து யூனியன் பிரதேசமாக மத்திய அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வருவது அதிகார மமதையில் நடத்தப்பட்ட ஜனநாயகப் படுகொலையாகும். மாநில அரசுகள், மாநில உரிமைகள் மீது பாஜக அரசு நடத்தி வரும் கோரத்தாண்டவத்தின் ஒரு பகுதியே காஷ்மீர் தொடர்பான மத்திய அரசின் நடவடிக்கையாகும்.

மாநில உரிமைகள், கூட்டாட்சி தத்துவம், இந்தியாவின் பன்முகத்தன்மையைப் பாதுகாப்பதில் அக்கறை கொண்ட அனைவரும் மத்திய பாஜக அரசின் இக்கொடூரமான தாக்குதலை எதிர்த்து போராடி முறியடிக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு சார்பில் கேட்டுக் கொள்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

Leave Comments

Comments (0)