எங்கள் வீட்டில் கழிப்பறை இல்லை அதனால்தான் குழந்தைகள் அங்கு சென்றார்கள் - கொல்லப்பட்ட தலித் குழந்தையின் அப்பா

/files/detail1.png

எங்கள் வீட்டில் கழிப்பறை இல்லை அதனால்தான் குழந்தைகள் அங்கு சென்றார்கள் - கொல்லப்பட்ட தலித் குழந்தையின் அப்பா

  • 0
  • 0

-வித்யா 

மத்தியப் பிரதேச மாநிலம், ஷிவ்புரி மாவட்டத்திலுள்ள பாவ்கேதி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் 12 வயதுடைய ரோஷனி பால்மிகியும், 10 வயதுடைய அவினாஷ் பால்மிகியும். தலித் சமூகத்தைச் சேர்ந்த இவர்கள், கடந்த புதன் கிழமை மாலை 6.30 மணிக்குப் பஞ்சாயத்து அலுவலகத்தின் அருகே உள்ள பொதுவெளியில் மலம் கழித்திருக்கின்றனர். இதைப் பார்த்த யாதவர்  சாதியைச் சேர்ந்த ஹக்கீம் யாதவ் மற்றும் அவரது சகோதரர் ராமேஸ்வர் யாதவ் ஆகிய இருவரும் அந்த குழந்தைகள் மீது கடுமையான தாக்குதல்களை நடத்தியிருக்கின்றனர். இதில்  குழந்தைகள்  பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.   

குழந்தைகளைக் கொலை செய்துவிட்டுத் தப்பியோடிய ஹக்கீம் யாதவ் மற்றும் அவரது சகோதரர் ராமேஸ்வர் யாதவ் இருவர் மீதும் எஸ். சி/ எஸ்.டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர்.

”தலித் சமூகத்தைச் சேர்ந்த நாங்கள் இங்குச் சாதிய வாதிகளால் ஒடுக்குமுறைக்கு ஆளாகிவருகிறோம். இந்த ஊரில் அனைவரது வீடுகளிலும் கழிப்பறை வசதி இருக்கும் நிலையில், தலித் சமூகத்தைச் சேர்ந்த எங்களின் வீடுகளில் மட்டும் கழிப்பறை இல்லை. கழிப்பறை கட்ட ஊராட்சி சார்பில் அனுமதி கிடைத்த போதிலும், தற்போது என் குழந்தைகளைக் கொலை செய்திருக்கும் குற்றவாளிகளில் ஒருவர் ஊராட்சி மன்ற தலைவராக இருந்ததால் அந்த வாய்ப்பும் மறுக்கப்பட்டது. கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர், குழந்தைகளைக் கொலை செய்த ஆணவ சாதியினர், அவர்கள் கொடுக்கும் குறைந்த பணத்தை வாங்கிக்கொண்டு அவர்களுக்கு நான் தொழிலாளியாக வேலை செய்யவேண்டும் என்று விரும்பினர். ஆனால் அதற்கு நான் மறுப்பு தெரிவித்தேன். அப்போது என்னைச் சாதிப் பெயரைக் குறிப்பிட்டு கொலை செய்வதாக மிரட்டல் விடுத்தனர்” என்று உயிரிழந்த குழந்தைகளின் தந்தை மனோஜ் பால்மிகி தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மூத்த பத்திரிகையாளர் அ. குமரேசனைத் தொடர்பு கொண்டேன். அவர், “மத்தியப் பிரதேச மாநிலத்தில் ஒரு பொதுவெளியில் மலம் கழித்தார்கள் என இரண்டு தலித் குழந்தைகள் அடித்துக்கொல்லப்பட்டார்கள் என்ற செய்தி, கடந்த நாட்களிலும் இது போன்ற செய்திகள் வந்தபோதெல்லாம் நடந்தது போலவே இம்முறையும் மனதைக் குத்துகிறது. மலத்தை விடவும் அருவருப்பான சமூக வெளியில் அல்லவா வாழ்கிறோம் என்ற உறுத்தல் குடைகிறது. இது அந்த மாநிலம் மட்டும் சம்பந்தப்பட்ட பிரச்னை அல்ல என்ற எதார்த்தம் மௌனத்தில் உறைய வைக்கிறது.

ஒரு பொது இடத்தில் மலம் கழிப்பது பொதுவாக அருவருப்பானதுதான். போதுமான கழிப்பறை வசதிகள் ஏற்படுத்தப்படாத சமூதாயத்தில் இந்த அருவருப்பு உணர்வே கூட அருவருக்கத்தக்கதுதான். நகரத் தெருக்களிலும் சாலைகளிலும் மின் கடத்திக் கோபுரங்களும் தொலைபேசி இணைப்புப் பெட்டிகளும் இருக்கிற இடங்கள், வீடுகள் இல்லாத நீண்ட வளாகச் சுவர் ஓரங்கள், குப்பைத்தொட்டி இடுக்குகள் சிறுநீர் கழிப்பதற்கும் மலம் வெளியேற்றுவதற்குமான இடங்களாக மூக்கைத் துளைத்துக்கொண்டிருப்பது, வீட்டை அடைவதற்குள் கட்டுப்படுத்த முடியாதவர்களுடைய இயலாமையின் விளைவு.
 
இங்கு மலசலம் கழிப்போர் மீது அபராதம் விதிக்கப்படும்:

இந்தப் பொது இடங்களை பயன்படுத்துகிறவர்களில் ஆகப்பெரும்பாலோர் ஆண்கள்தான். அப்படிச் சிறுநீர் கழிக்கிறபோது தெருவில் வலப்புறமிருந்தோ இடப்புறமிருந்தோ ஓரிரு பெண்கள் வந்துவிட்டால் இந்த ஆண்கள் படுகிற மனச் சங்கடம் அவர்களைக் கூனிக்குறுக வைப்பது. அந்தப் பெண்களைப் பார்க்காதது போல முகத்தைத் திருப்பிக்கொள்வார்கள் பாவம். அந்தப் பெண்களும் தங்கள் நடையை விரைவுபடுத்தி அந்த இடத்தைக் கடப்பார்கள்.
 
பெண்களின் நிலையோ இன்னும் மோசம். வீடோ, வேலை செய்யும் இடமோ வருகிறவரையில் கட்டுப்படுத்தியே ஆக வேண்டும். இதனால் அவர்களுக்கு ஏற்படுகிற உடல் சார்ந்த சிக்கல்களை ஆணின் சிரமத்தோடு ஒப்பிடவே முடியாது. சில இடங்களில் “இங்கு மலசலம் கழிப்போர் மீது அபராதம் விதிக்கப்படும்” என்றோ, “நாய்களுக்கு மட்டுமே இங்குச் சிறுநீர் கழிக்க அனுமதி” என்றோ அறிவிப்புகள் வைக்கப்பட்டிருக்கும். தப்பித் தவறி ஆங்காங்கே இருக்கக்கூடிய பொதுக்கழிப்பறைகள் பொதுமக்கள் தயக்கமின்றி பயன்படுத்தக்கூடியவையாக இருக்கின்றனவா என்பது முக்கியமான கேள்வி.

alt text
 
அப்படியே சில பொதுக்கழிப்பறைகள் ஓரளவுக்காவது நல்லமுறையில் கட்டப்பட்டு தண்ணீர் வசதி உட்பட இருப்பதாக வைத்துக்கொள்வோம் அவற்றை எடுத்து நடத்துவது யார்? காண்டிராக்ட் எடுப்பது வேறு சாதிக்காரர்கள், கழுவிவிடுவது மட்டும் அதற்கென்றே விதிக்கப்பட்ட சாதிக்காரர்கள் என்பதுதானே நிலைமை? இதில் நாடு முழுவதும் ஒரே விதி செயல்பட்டுவருவது தற்செயலானதா? தனியார் துப்புரவு நிறுவனங்களில் தொழிலாளிகளின் சமூகப் பின்னணி என்ற கேள்விக்கு இது வரை எந்த நிர்வாகமும் ஏன் திட்டவட்டமான பதில் தருவதில்லை? உள்ளாட்சிகள் முதல் ரயில்வே உள்ளிட்ட பெரும் துறைகள் வரையில், துப்புரவுப் பணிகளில் – குறிப்பாகக் கழிப்பறைகளிலும் சாலையோர சாக்கடைக் குழிகளிலும் மலமகற்றும் வேலை யார் தலையில் கட்டப்படுகிறது?

அசுத்தம் செய்ததற்காகத்தான் அந்தக் குழந்தைகள் அடித்துக் கொல்லப்பட்டார்களா? 

இப்படியான அழுகிப்போன சமூகநிலையோடு தொடர்புள்ளதுதான், மத்தியப் பிரதேசத்தில் அந்த இரண்டு தலித் குழந்தைகள் அடித்துக்கொல்லப்பட்ட கொடுமை. அந்த மாநிலத்தின் ஷிவ்புரி மாவட்டம் பாவ்கேதி கிராமத்தில் இந்த இரட்டைக் கொலைகள் நடத்தப்பட்டிருக்கின்றன. ஊராட்சி அலுவலகம் அருகில் ஒரு பெண்ணும் ஆணுமாக 12 வயது ரோஷ்ணி, 10 வயது அவினாஷ் என்ற இரு குழந்தைகளும் தங்களது உடல்களின் இயற்கை அழுத்தத்திலிருந்து விடுபட முயன்றிருக்கிறார்கள். தங்களின் உடல்களின் இயற்கையான இயக்கமே முடிந்துபோகும் என்று அவர்கள் அப்போது நினைத்துக்கூடப் பார்த்திருக்க மாட்டார்கள். மலம் வந்தால் கழிப்பது அடித்துத் துன்புறுத்துகிற அளவுக்குக் குற்றச் செயலா என்பது கூட அவர்களுக்குப் புரிந்திருக்காது.

வேறு சாதிகளைச் சேர்ந்த குழந்தைகள் இயற்கை அழுத்தத்தைத் தணிக்கும் அவசரத்தில் இவ்வாறு செய்திருந்தால் கண்டுகொள்ளாமல் விடப்பட்டிருப்பார்கள் அல்லது “இனிமே இப்படிச் செய்யாதீங்க, சரியா” என்று அறிவுரை கூறி அனுப்பப்பட்டிருப்பார்கள்.

ரோஷ்ணியையும் அவினாஷையும் சாகிற அளவுக்கு அடித்த ஹக்கிம் யாதவ், ரமேஷ்வர் யாதவ் என்ற, தங்களைத் தாங்களே உயர்சாதி என்று சொல்லிக்கொள்கிற பிரிவைச் சேர்ந்த இரு இளைஞர்கள், அந்தக் குழந்தைகளையும், அவர்களை அடித்ததையும் செல்போனில் படமாக எடுத்துள்ளனர். அவர்களைக் கையால் அடிக்கவில்லை (தீட்டாகிவிடுமே), மாறாக உருட்டுக்கட்டைகளால் தாக்கியுள்ளனர். அடித்ததன் நோக்கம் கொல்வது என்றால், படமெடுத்ததன் நோக்கம் மற்றவர்களுக்கு அனுப்பி அவர்களையும் அந்தச் சாதிக்கடமையில் பங்கேற்க அழைப்பதுதான். இறைச்சிக்காக மாடுகளைக் கடத்துகிறார்கள் என்பது முதல், குழந்தைகளைக் கடத்துவதற்காக வந்திருக்கிறார்கள் என்பது வரையில் வதந்திகளைப் பரப்பி, கும்பல்களைத் திரட்டி ஆளைக் கொல்லும் கலாச்சாரத்திற்கு இப்படியான செல்போன் படங்களைப் பரப்புகிற உத்திதானே கடைப்பிடிக்கப்படுகிறது?

alt text

 உ.பி. மாநிலத்தில் இரண்டு தலித் சிறுமிகள் ஒரு “மேல்” சாதிக் கும்பலால் பாலியல் வேட்டைக்கு உட்படுத்தப்பட்டது போன்ற செய்திகள் பரவலாக வந்துள்ளன. பல கொடுமைகள் செய்தி வெளிச்சத்துக்கே வராமல் மறைக்கப்பட்டிருக்கின்றன. தமிழகத்திலேயே கூட, வன்கொடுமையால் பிணமாக்கப்பட்ட தலித் சிறுமிகள் பற்றி ஊடகங்கள் கண்டுகொள்ளவில்லை என்ற விமர்சனம், நிர்பயா விவகாரத்தின்போது வரவில்லையா? அதேவேளையில் கொலையும் அடி உதையும் மட்டுமே சாதிய வன்மம் அல்ல. பள்ளிகளில் கழிப்பறையைச் சுத்தம் செய்யும் வேலை தலித் மாணவர்களுக்குக் கட்டாயப்படுத்தப்பட்டது போன்ற செய்திகள் அவ்வப்போது வருகின்றனவே, அந்தச் செய்திகளை எந்தப் பட்டியலில் சேர்ப்பது?

சாதியம் வலிமையானது, எளிதில் மாற்றத்தை அனுமதிக்காதது:

ஒருபக்கம், கொலை போன்ற வன்முறைகளைச் செயல்படுத்திய பிறகு, “இந்தக் கீழ்ச்சாதிப் பயல்களுடைய திமிருக்குத் தகுந்த பாடம் கற்பிக்கப்பட்டிருக்கிறது. இனிமேலாவது அவனுக முன்போல அடங்கி ஒடுங்கி இருப்பார்கள்,” என்று பேசுகிறவர்களும் இருக்கிறார்கள். இன்னொரு பக்கம் இதை எதிர்த்துக் கண்டனம் முழங்குகிறவர்களும் இருக்கிறார்கள். தற்போது கொலை செய்த இரண்டுபேரும் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். அந்த மாநிலத்தில் பாஜக ஆட்சி அகற்றப்பட்டு காங்கிரஸ் ஆட்சி நடப்பதால் கைது நடவடிக்கை துரிதமாக நடந்திருக்கிறது என ஊகிக்கலாம். இல்லையேல் அந்த இருவரும் சாதிப்பெருமைக் காவலர்களாகக் கொண்டாடப்பட்டிருப்பார்கள், அதற்குத் தலைவர்கள் வந்திருந்து சிறப்பித்திருப்பார்கள். ஆயினும் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட மாநிலத்தில் பெரும்பகுதி மக்களின் மனசாட்சி மாற்றம் ஏற்படவில்லை என்பதும் தெளிவாகிறது. சாதியம் அவ்வளவு வலிமையானது, எளிதில் மாற்றத்தை அனுமதிக்காதது.

alt text

அந்த இரு இளைஞர்களில் ஒருவனான ஹக்கிம் மனநிலை சரியில்லாதவன் என்று கூறி அவனைக் காப்பாற்றுகிற முயற்சி நடந்திருக்கிறது. காவல்துறை அதை மறுத்துவிட்டது. அவனைக் காப்பாற்ற நடந்த முயற்சியின் பின்னால் இருப்பதும் சாதிப்பற்றுதான் என்று விளக்க வேண்டியதில்லை.

தலித்துகளின் சுயமரியாதைக்காக ஜோதிபா புலே:

சாதியத்தின் தோற்றுவாய், அதை அப்படியே வைத்திருக்கும் அகமண முறை பற்றிய அம்பேத்கர் ஆய்வு, மேலிருந்து தன்னை ஒருவன் மிதிக்கிறான் என்ற ஆவேசத்தை விட, தன் காலில் மிதிபட ஒருவன் இருக்கிறான் என்ற திருப்தியில் அடங்கும் சராசரி மனம் என்று தொடர்ச்சியாக எடுத்துரைக்கப்பட்டு வந்துள்ளது. சாதிப்பாகுபாட்டை எப்படி பார்ப்பனியம் வெற்றிகரமாகச் செயல்படுத்தி வந்திருக்கிறது என்பதைப் பெரியார் எடுத்துக்காட்டியிருக்கிறார். தலித்துகளின் சுயமரியாதைக்காக ஜோதிபா புலே, அவர்களின் கல்விக்காக சாவித்திரிபாய் புலே, அவர்களின் எழுச்சிக்காக அயோத்திதாசர், அவர்களின் ஒற்றுமைக்காக இரட்டைமலை சீனிவாசன், அவர்களின் சட்ட உரிமைக்காக இமானுவேல் சேகரன் என்று வரலாறு நெடுகப் போராட்ட வடுக்கள் இருக்கின்றன. பள்ளிப் பாடங்களில் “தீண்டாமை ஒரு பாவம்” என்று எழுதப்பட்டாயிற்று.

ஆனாலும் இந்தியச் சமூதாயம் ஏன் அந்தப் பாடத்தைக் கற்கவில்லை? அவ்வளவு முரட்டுத்தோல் போர்த்தியதாக இருக்கிறது சாதியம். வரலாற்றைத் திரும்பிப் பார்த்தால், தமிழகத்தில் ஒரு காலகட்டத்தில் பார்ப்பனிய ஆதிக்கத்திற்கு எதிராக ஒரு அரசியல் அணித்திரட்சி நடைபெற்றது. பார்ப்பனர் அல்லாதோர் ஒருங்கிணைக்கப்பட்ட அந்த அணித்திரட்சி திராவிட இயக்கமாகப் பரிணமித்தது. அதனால் சமூகநீதி, பெண்ணுரிமை உள்ளிட்ட சில ஆக்கப்பூர்வமான மாற்றங்கள் நிகழ்ந்தன. அண்மைக் காலத்திலோ வேறொரு அரசியல் அணித்திரட்சி செய்யப்பட்டு வருகிறது. அது தலித்திய எழுச்சிக்கு எதிரான, தலித் அல்லாதோரை ஒருங்கிணைக்கிற முயற்சி. இக்காட்சியை வட மாநிலங்களிலும் காணலாம் என்பதற்கான அடையாளங்கள்தான் கோரேகாவுன் வன்முறை உள்ளிட்ட பல வெறித்தனமான தாக்குதல்கள்.

ஏனிந்த வெறித்தனம்?:
 
ஏனிந்த வெறித்தனம்? ஒரே ஒரு எளிய காரணம்தான். ஒரு காலகட்டம் வரையில் முதுகு குனிந்து கைகட்டி வாய்பொத்தி ஒதுங்கிநடந்த மக்கள் இன்று முதுகு நிமிர்ந்துவிட்டார்கள். கட்டிய கைகளை விரித்ததோடு உயர்த்தவும் தொடங்கிட்டார்கள். வாய் திறந்து தங்களது இடம் பற்றி மட்டுமல்லாமல் அதிகாரம் பற்றியே கூட முழக்கமிட ஆரம்பித்துவிட்டார்கள்.

alt text

இதைச் சகித்துக்கொள்ள முடியாத ஆதிக்க சாதி வன்மம்தான் ரோஷ்ணிகளையும் அவினாஷ்களையும் பலி கேட்டுக்கொண்டே இருக்கிறது. ஆம், சாதி வேலி தாண்டுகிற காதலர்களைப் பலியிடுவது மட்டுமல்ல, இப்படிப் பிஞ்சுகளைக் கருகவைப்பதும் சாதி ஆணவம்தான். இது மனிதநேயத்திற்கு எதிரானது என்ற பொதுவான சிந்தனையை ஏற்படுத்துவதோடு, தீண்டாமை ஒரு குற்றம் என்ற உணர்வை விதைப்பதோடு, சொந்த சாதிப் பெருமை ஒரு அவமானகரமான இழிவு என்ற குற்றவுணர்ச்சியையும் சமூக வெளியில் வலுவாக ஊன்றியாக வேண்டும். அதை நோக்கி முன்னேறுவதில் அரசியல், சமூக, பண்பாட்டு இயக்கங்கள் எந்த அளவுக்கு நேர்மையாகவும் உறுதியாகவும் இருக்கப்போகின்றன? “ என்று தெரிவித்தார்.

சமூக செயற்பாட்டாளர் எவிடன்ஸ் கதிர், ”தலித் குழந்தைகளை அடித்து கொலை செய்த குற்றவாளிகள் யாதவர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். ‘எங்கள் வீட்டில் கழிப்பறை இல்லை அதனால்தான் குழந்தைகள் வெளியில் சென்று மலம் கழிக்கவேண்டிய சூழல் இருக்கிறது’ என்று உயிரிழந்த குழந்தைகளின் தந்தை கூறுகிறார். ’குழந்தைகளைக் கொலை செய்த ஆணவ சாதியினர் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள்’ என்று விசாரணை செய்யும் காவல்துறை அதிகாரி சொல்கிறார். இது எவ்வளவு பெரிய அபத்தமான விசயம்.

இதேபோல் பொது வெளியில் மலம் கழிப்பதற்காகச் செல்லும்போது பல தலித் சிறுமிகள், பெண்கள் துன்புறுத்தலுக்கு உள்ளாவதும், பாலியல் வன்கொடுமைக்கு ஆளாவதும் நிறைய நடந்துகொண்டிருக்கிறது. இதுபோன்ற கொடுமைகள் தமிழகத்திலும் நடந்திருக்கிறது.

உத்தரப்பிரதேசத்தில் சில ஆண்டுகளுக்கு முன்பு பொதுவெளியில் மலம் கழிக்கச் சென்றபோது பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டு, தூக்கில் தொங்கவிட்ட சம்பவமும் நடந்திருக்கிறது.

alt text

இந்தியாவில் கிட்டத்தட்ட 74 சதவிகித வீடுகளில் கழிப்பறை இல்லை என்று ஒரு கணக்கெடுப்பு சொல்லப்படுகிறது. அதிலும் கிராமப்புறங்கள் என்று பார்க்கும்போது 85 சதவிகித வீடுகளில் கழிப்பறை வசதி இல்லை என்று அந்தக் கணக்கெடுப்பு சொல்கிறது. இதுதான் இன்றைய நிலை. ஆனால் இந்தியா மிக பெரிய அளவில் வளர்ந்திருக்கிறது என்று தோற்றம் கொடுக்கிறோம். பொது இடத்தில் மலம் கழித்ததற்காகக் குழந்தைகளை அடித்து கொலை செய்கிறார்கள் என்றால் இது நாடா என்ன? இதில் எவ்வளவு பெரிய சாதி வன்மம் இருந்திருக்கும். இந்த சம்பவத்திற்கு இந்தியர்கள் அனைவரும் தலை குனியவேண்டும், அவமானப்படவேண்டும்.

இந்தியா சாதிய நாடு, சாதிய வன்மம் பிடித்த நாடு என்று உலக நாடுகளுக்கு அறிவிக்கவேண்டும். இந்தியாவிற்குச் செல்லும் பெண்கள் கவனமாகச் செல்லவேண்டும், அங்கு பாலியல் துன்புறுத்தல்கள் அதிகம் நடைபெறுகிறது என்று வெளிநாட்டவர்கள் சொல்கிறார்கள். இந்த நிலையில்தான் நம் நாடு இருந்துவருகிறது. தலித் வன்கொடுமை வழக்குகளில் போதிய அளவிற்குத் தண்டனையும் கிடைப்பதில்லை. இந்த சம்பவத்தில், விசாரணை முடிவதற்குள் குற்றவாளிகளுக்கு ஆதரவாகப் பேசுகிறார்கள் காவல்துறை அதிகாரிகள். அவர்களை இடமாற்றம் செய்யவேண்டும். மத்தியப்பிரதேச மாநிலத்தைத் தலித்துகளுக்குப் பாதுகாப்பில்லாத மாநிலமாக அறிவிக்கவேண்டும்” என்று தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில் தெரிவித்தார்

தலித் மக்களுக்கு எதிரான வன்கொடுமைகள் தொடந்ர்து நடந்துகொண்டேதான் இருக்கின்றன. தமிழகத்தில் கூட இதுபோன்ற சம்பவங்கள் நடந்திருக்கின்றன.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம், தருமபுரி மாவட்டம், அரூர் அருகே உள்ள சிட்லிங் மலைக்கிராமத்தைச் சேர்ந்த சௌமியா(17) என்ற பெண் மலம் கழிப்பதற்காகச் சென்றபோது, மாதவிடாய் காலத்திலிருந்த அவரை அதே கிராமத்தைச் சேர்ந்த இருவர் பாலியல் வன்கொடுமை செய்தனர். செளமியாவை மீட்ட உறவினர்கள் அவரை மருத்துவமனையில் சேர்த்தபோது சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்த சம்பவமும் இங்கு நடந்திருக்கிறது.

alt text

தலித் குழந்தைகள் கொல்லப்பட்ட சம்பவத்தை இரண்டு வழிகளில் அணுகக் கூடிய தேவை இருக்கிறதாக நினைகிறேன். ஒன்று கழிப்பறை வசதி இல்லாதது. மற்றொன்று ஆணவ சாதியினரின் ஆதிக்க மனநிலையால் இரு உயிர்கள் பறிபோகியிருப்பது. புதிய இந்தியா, டிஜிட்டல் இந்தியா, தூய்மை இந்தியா எனப் பல பெயர்களில் இந்தியாவைத் தூக்கிப் பிடித்தாலும் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்களை மட்டும் இந்த இந்தியா விளக்கி வைத்திருக்கிறதா? அவர்களின் வீடுகளில் மட்டும் கழிவறை இல்லாமல் போனது ஏன்? தனது வீட்டில் கழிவறை இல்லாத ஒருவர் மலக்குழியில் இறங்கி அடைப்பைச் சரிசெய்யும் பணியில் ஈடுபடுத்தப்படுவதும், அதனால் அவர் கொல்லப்படுவதும் ஏன்? தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் நகரங்கள், கிராமங்கள் உள்பட வீடுகள் தோறும் கழிவறைகள்  கட்டி தரப்பட்டது என்ற திட்டம் தலித் மக்களுக்கு மட்டும் கிடையாதா?  என்கிற கேள்வி தொக்கி நிற்கின்றன.
 

Leave Comments

Comments (0)