சுர்ஜித் மரணித்து விட்டான் ஆனால் அவன் நமக்குள் ஏற்படுத்திய தாக்கம் மரணிக்க நாம் விடக் கூடாது

/files/detail1.png

சுர்ஜித் மரணித்து விட்டான் ஆனால் அவன் நமக்குள் ஏற்படுத்திய தாக்கம் மரணிக்க நாம் விடக் கூடாது

  • 0
  • 0

 

82 மணி நேர மீட்புப் பணிக்கு பிறகும் ஆழ்துளைக் கிணற்றில் சிக்கிக்கொண்ட 2 வயது சுர்ஜித்தை உயிருடன் மீட்க முடியவில்லை என்று பொதுவுடைமை இயக்கத் தோழர்கள் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அந்த அறிக்கையில்,”கடந்த சில நாட்களாக லட்சக்கணக்கான மக்களின் எண்ணங்கள் சிறுவன் சுர்ஜித் எப்படியாவது காப்பாற்றப்பட வேண்டும் என்பதுதான். சிறுவன் சுர்ஜித்தின் மரணத்திற்கு இன்று தமிழகம் முழுவதும் கண்ணீர் வடிக்கும் தாய்மார்களும் தந்தையர்களும் கனத்த இதயத்துடன், அச்சிறுவனை மீட்கக் கையாலாகாத இந்த அரசியல் அமைப்பை நொந்துகொண்டு விரக்தியுடனும் ஏமாற்றத்துடனும் எப்போதும் போலக் கடந்து விட்டுப் போகக்கூடாது.

இந்த இழப்பு நமக்கு ஏற்படுத்தியுள்ள ஆழமான உணர்வுகள் செயலாக நம்மிடம் இருந்து வெளிவர வேண்டும். இங்குள்ள அரசியல் அமைப்பை மாற்றாமல் நமக்கு விடிவு காலம் இல்லை என்பதை நாம் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். ஆகவே ஒரு சமூக மாற்றத்திற்காகச் செயல்பட நம்மை நாம் தயார்ப் படுத்திக்கொள்ள வேண்டும்.

இனியும் இப்படிப்பட்ட பல இழப்புகளை அரசின் அலட்சியப் போக்குகளின் விளைவாக நாம் எதிர் கொள்ளக் கூடும். இதற்கான அடிப்படைக் காரணம் ஆட்சியாளர்களும் அரசு அதிகாரமும் சாதாரண மக்களுக்காக இல்லை என்பதுதான். வறுமையும் நோய்களும் விபத்துகளும் இழப்புகளும் இங்கே எளிய மக்களின் தலைவிதியாகத்தான் உள்ளது.

ஊடகங்கள் நமக்குக் காட்டாத சுர்ஜித்துகள் பலர். நாடெங்கும் பட்டினிக்கும், காய்ச்சலுக்கும், சாதிய ஒடுக்குமுறைக்கும், மத வெறிக்கும், அரசு அடக்குமுறைக்கும், அரசின் அலட்சியப் போக்கிற்கும் நாம் பல்லாயிரக் கணக்கானவர்களை இழந்துள்ளோம். இவை நம்மிடத்தில் இருந்து மறைக்கப்பட்டிருக்கலாம் அல்லது ஊடகங்களில் எங்காவது ஒரு சில பெட்டிச் செய்திகளாக வந்து போகலாம்.
ஒருவேளை அவை அனைத்தும் நமது ஊடகங்கள் நம் முன்னே கொண்டு வந்து இருந்தால் நமது விழிப்புணர்வில் மாற்றம் ஏற்பட்டு இருக்குமோ என்னவோ.

நண்பர்களே, இனியும் நாம் கண்ணை மூடி எல்லாவற்றையும் கடந்து போய்விட முடியாது. சிறுவன் சுர்ஜித்தின் இறப்பிற்கு ஏதோ ஒரு வகையில் நாம் அனைவருமே பொறுப்புதான். இன்று நம்மை ஆளும் ஆட்சியாளர்களுக்கும் அரசியல் அமைப்புக்கும் நாமும் காரணமாக இருந்துள்ளோம். இதை மாற்றுவதற்கான பொறுப்பை நாம் ஏற்க வேண்டும். நாம் அனைவரும் விழிப்புணர்வுடன் அரசியல் தளங்களில் செயல்படுவதன் மூலமாகத்தான் இந்த அரசியல் அமைப்பில் நாம் மாற்றத்தை ஏற்படுத்த முடியும்.

நாள் முழுக்க உழைத்து நாம் உருவாக்கும் வளங்கள் ஏன் நமக்கு வந்து சேராமல் இருக்கு? யாருக்காக இந்த அமைப்பு இயங்குகிறது? எப்படி நமக்கான சமூக அமைப்பை ஏற்படுத்துவது? இதற்கு நாம் செய்ய வேண்டியது என்ன? சிந்தியுங்கள் . . . சிறுவன் சுர்ஜித் மரணித்து விட்டான். ஆனால் அவன் நமக்குள் ஏற்படுத்திய தாக்கம் மரணிக்க நாம் விடக் கூடாது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave Comments

Comments (0)