மாணவர் கிருபாமோகன் உடனடியாக மீண்டும் சேர்க்கப்பட வேண்டும் - மே பதினேழு இயக்கம்

/files/detail1.png

மாணவர் கிருபாமோகன் உடனடியாக மீண்டும் சேர்க்கப்பட வேண்டும் - மே பதினேழு இயக்கம்

  • 0
  • 0

 

சென்னைப் பல்கலைக்கழகத்தில் அம்பேத்கர்-பெரியார் வாசகர் வட்டம் நடத்திய மாணவர் கிருபாமோகனை ஆளுநர் தலையிட்டு நீக்குவதா? இங்கு என்ன சர்வாதிகாரமா நடக்கிறது? என்று மே 17 இயக்கத் தோழர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இதுகுறித்து இன்று (செப்டம்பர் 06) வெளியிடப்பட்ட அறிக்கையில், ”சென்னைப் பல்கலைக்கழக தத்துவவியல் துறையில் MA (BHUDDHISM) முதலாம் ஆண்டு பயின்று வரும் மாணவர் கிருபாமோகன். அவரின் அட்மிஷனை ஆளுநரின் தலையீட்டினால் ரத்து செய்திருக்கிறது சென்னைப் பல்கலைக்கழகம். கிருபாமோகன் ஏற்கனவே சென்னைப் பல்கலைக்கழகத்தில் இளங்கலை இதழியல் படித்தவர். அப்போது பல்கலைக்கழகத்தில் அம்பேத்கர்-பெரியார் வாசகர் வட்டத்தை நடத்தி வந்திருக்கிறார். ஜூலை 31ம் தேதி பல்கலைக்கழகத்தில் முதுகலைப் படிப்பில் சேர்ந்தார்.

இந்நிலையில் படிப்பில் சேர்ந்து ஒரு மாதம் கழிந்த நிலையில் அவரை அழைத்துப் பேசிய பேராசிரியர்கள், ஆளுநர் மாளிகையிலிருந்து தொடர்ச்சியாக அழுத்தம் வருவதாகவும், அதனால் அவரது சேர்க்கையை ரத்து செய்ய உள்ளதாகவும் தெரிவித்திருக்கிறார்கள். மாணவர் கிருபாமோகனின் கல்விச் சான்றிதழிலோ, கல்வி சார்ந்த நடவடிக்கைகளிலோ எந்த பிரச்னையும் இல்லாத நிலையில் அவரை ஆளுநரின் அழுத்தத்தின் அடிப்படையில் வேறொரு சொற்ப காரணத்தைச் சொல்லி நீக்கியிருக்கிறது சென்னைப் பல்கலைக்கழகம். ஜனநாயகவாதிகள் அனைவரும் தன் கல்வி உரிமைக்குத் துணை நிற்க வேண்டும் என்று கிருபாமோகன் கேட்டுள்ளார்.

அம்பேத்கர்-பெரியார் வாசகர் வட்டம் நடத்தும் மாணவர்களை நீக்கச் சொல்லும் அதிகாரத்தை ஆளுநருக்கு யார் அளித்தது? கல்லூரியில் படிக்கும் மாணவர்களை நீக்கச் சொல்வதுதான் ஆளுநரின் வேலையா? தகுதிச் சான்றிதழ் இல்லை என்ற போலியான காரணத்தைக் கூறி மாணவர் கிருபாமோகனை நீக்கிய சென்னைப் பல்கலைக்கழகத்தின் நடவடிக்கையை மே பதினேழு இயக்கம் வன்மையாகக் கண்டிக்கிறது.

அம்பேத்கரும், பெரியாரும் என்ன பயங்கரவாதிகளா? அவர்கள் மக்களுக்காக உழைத்த தலைவர்கள். அவர்கள் பெயரில் படிப்பு வட்டம் நடத்துவதைத் தடுக்க தமிழக அரசுக்கோ, வேறு யாருக்குமோ அதிகாரம் கிடையாது.

மாணவர் கிருபா மோகன் உடனடியாக மீண்டும் சேர்க்கப்பட வேண்டும். அனைத்து ஜனநாயக சக்திகளும் அவருக்குத் துணை நிற்க வேண்டும் என்று மே பதினேழு இயக்கம் கேட்டுக் கொள்கிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave Comments

Comments (0)