காவல்துறையினரின் அதிகார எல்லை மீறல் நிறுத்தப்பட வேண்டும்-  மே பதினேழு இயக்கம்

/files/detail1.png

காவல்துறையினரின் அதிகார எல்லை மீறல் நிறுத்தப்பட வேண்டும்-  மே பதினேழு இயக்கம்

  • 1
  • 0

 

காஞ்சிபுரத்தில் காவல்துறையினரின் கெடுபிடியால் ஷேர் ஆட்டோ ஓட்டுநர் குமார் தீக்குளித்திருக்கிறார். காவல்துறையின் அதிகார எல்லை கேள்விக்குள்ளாக்கப்பட வேண்டும் என்று மே பதினேழு இயக்கம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "சமீப காலங்களில் டேக்சி ஓட்டுநர்கள், ஆட்டோ ஓட்டுநர்களிடம் காவல்துறையினர் மோசமான முறையில் நடந்து கொள்வதும், அதனால் ஓட்டுநர்கள் தற்கொலைக்குத் தள்ளப்படுவதும் அதிகரித்து வருகிறது. காவல்துறையினருக்கு வழங்கப்பட்டுள்ள அளவு கடந்த அதிகாரமும், தண்டனையிலிருந்து தப்பித்துக் கொள்வதற்கான பாதுகாப்புமே அவர்களை அதிகார துஷ்பிரயோகத்தை நோக்கி தள்ளுகிறது.

காஞ்சிபுரத்தில் தற்போது அத்தி வரதர் திருவிழா என்பது நடைபெற்று வருகிறது. 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை மிகச் சாதாரணமாக ஆரவாரமில்லாமல் நடைபெற்று வந்த இத்திருவிழா தற்போது ஊடகங்களால் ஊதிப் பெரிதுபடுத்தப்பட்டு, மிகப் பெரிய விழாவாகக் காண்பிக்கப்படுகிறது. இத்திருவிழா குறித்துப் பிரமிப்பை ஏற்படுத்த பல்வேறு புனைவான பொய்க் கதைகள் தொடர்ச்சியாக ஊடகங்களில் பரப்பப்படுகின்றன. இதன் காரணமாகத் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் மக்கள் அங்குச் சென்று வருகிறார்கள்.

48 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவில் ஷேர் ஆட்டோக்களை காஞ்சிபுரம் நகருக்குள் காவல்துறையினர் அனுமதிக்க மறுத்து வருகிறார்கள். பல்வேறு கடன்களுக்கு மத்தியிலும், வாடகைக்கும் ஆட்டோ ஓட்டி வரும் ஷேர் ஆட்டோ ஓட்டுநர்கள் இதனால் பல்வேறு இன்னல்களுக்கு உள்ளாகியுள்ளனர். தங்கள் மொத்த வருமானத்தையும் இழந்து நிற்கிறார்கள். கிட்டத்தட்ட இரண்டு மாத காலம் இந்நிலை தொடர்ந்தால் அவர்களுடைய பொருளாதார சிக்கல் மிகவும் அதிகரிக்கும்.

கோவிலுக்கு வருபவர்களை ஏற்றிச் செல்வதற்காகச் சென்ற ஷேர் ஆட்டோ ஓட்டுநர் குமாரை காவல்துறையினர் தடுத்திருக்கிறார்கள். குமார் நகருக்குள் வந்து செல்வதற்கான உரிய அனுமதி பெற்ற பாஸ் வைத்திருந்தும் அவரை காவல்துறையினர் தடுத்திருக்கிறார்கள். தொடர்ச்சியாக காவல்துறையினர் ஆட்டோவை உள்ளே அனுமதிக்க மறுத்ததால் வாக்குவாதத்தில் ஈடுபட்ட ஷேர் ஆட்டோ ஓட்டுநர் குமார், ஒரு கட்டத்தில் தன் உடலில் தீ வைத்து இறந்திருக்கிறார். அவரை தடுக்க முயலாமல் காவல்துறையினர் வேடிக்கை பார்த்திருக்கிறார்கள்.

இதே போன்று ஆந்திராவிலிருந்து கோயிலுக்கு வந்த இளைஞர் ஒருவர் தன்னுடைய மொபைல் ஃபோனில் செல்ஃபி எடுத்தபோது, அர்ச்சகர்களின் உத்தரவின் பேரால் ஒரு பெண் காவல் துறை அதிகாரி அந்த இளைஞரைத் தாக்கியதில் அவர் உயிரிழந்திருக்கிறார்.

மக்களின் பாதுகாப்பிற்கு என்று சொல்லப்படக் கூடிய காவல்துறையினரைச் சேர்ந்தவர்கள் எப்படி இது போன்று மனிதத் தன்மையில்லாமல் நடந்து கொள்ள முடியும்? ஓட்டுநர் தொழிலாளர்களுக்குத் தமிழக அரசு முறையான பணிப் பாதுகாப்பினை வழங்க வேண்டும். அவர்களைக் கண்ணிய குறைவாக நடத்துகிற காவல்துறை அதிகாரிகள் மீது முறையான நடவடிக்கை எடுக்கப்பட்டு, காவல்துறையினரின் அதிகார எல்லை மீறல் நிறுத்தப்பட வேண்டும்.

கடவுளின் பெயராலும், திருவிழாக்களின் பெயராலும் கொலைகளைச் செய்வதற்கா இந்த புதிய கோயில் விழாக்கள் விளம்பரங்களால் வளர்க்கப்படுகின்றன. எந்த விழாவாக இருந்தாலும், அவற்றில் உள்ளூர் தொழிலாளர்களுக்கும், உள்ளூர் வணிகர்களுக்குமான உரிமைகள் மதிக்கப்பட வேண்டும். காவல்துறையினரின் அதிகார எல்லை மீறல்களைத் தடுக்க தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave Comments

Comments (0)