இறந்த பிறகாவது ஒடுக்கப்பட்ட சமூகத்தினர் பிரச்னையின்றி எரியூட்டப்பட வேண்டாமா?- கி.வீரமணி

/files/detail1.png

இறந்த பிறகாவது ஒடுக்கப்பட்ட சமூகத்தினர் பிரச்னையின்றி எரியூட்டப்பட வேண்டாமா?- கி.வீரமணி

  • 0
  • 0

 

இறந்த பிறகாவது ஒடுக்கப்பட்ட சமூகத்தினர் கண்ணியமாக, பிரச்னையின்றி எரியூட்டப்பட வேண்டாமா? என்று திராவிட கழகத்தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கி.வீரமணி இன்று (ஆகஸ்ட் 22) வெளியிட்ட அறிக்கையில், "வேலூர் மாவட்டம், வாணியம்பாடி அருகில் உள்ள நாராயண குப்பம் என்ற ஊரில் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவரான குப்பன் என்பவர் சாலை விபத்தில் மரணமடைந்தார்.

அவரது சடலத்தை அவர்கள் ஊருக்கு அருகில் உள்ள சுடுகாட்டில் எரியூட்ட எடுத்துச் செல்ல முடியாதபடி, அச்சுடுகாட்டுக்கு ஒதுக்கப்பட்ட பாதையையும் மற்றவர்கள் ஆக்கிரமித்து, சடலங்களைச் சுமந்து சென்று எரியூட்ட வழி இல்லாமல் செய்ததால், தொட்டில் ஒன்று கட்டி 20 அடி உயரமுள்ள கட்டப்பட்ட பாலத்திலிருந்து அச்சடலத்தைத் தொட்டிலிலிருந்து இறக்கி, பிறகு ஈமச் சடங்குகள் செய்தார்கள். இது சில மாதங்களாகவே தொடருகின்றது என்பது வேதனைக்கும், வெட்கத்திற்கும் உரியச் செய்தியாகும்.

பெரியாரின் திராவிட மண்ணிலா?

இந்த 21ஆம் நூற்றாண்டில், அதுவும் தமிழ்நாட்டில், பெரியாரின் திராவிட மண்ணிலா இப்படிப்பட்ட அநாகரிக ஆக்கிரமிப்புகள். வாழும்போதுதான் கொடுமை என்றால், இறந்த பிறகாவது ஒடுக்கப்பட்ட சமூகத்தினர் கண்ணியமாக, பிரச்னையின்றி எரியூட்டப்பட வேண்டாமா?

வேலூர் மாவட்ட நிர்வாகம் இதனை உடனடியாக சரி செய்தாக வேண்டும். வேலூர் மாவட்ட ஆட்சியர் இதன் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து, சுடுகாட்டுப் பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றிட உறுதி கூறியுள்ளது ஆறுதலானதும், மிகவும் வரவேற்கத்தக்கதும் ஆகும்.

வேலூர் மாவட்டக் கழகப் பொறுப்பாளர்கள், வேலூர் மாவட்ட ஆட்சியரை நேரில் சென்று சந்தித்து, விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்த வேண்டும். இதுபோல் சுடுகாட்டுக் கொடுமைகளை எதிர்த்து மனிதநேய போராட்டம், அறப்போரில் ஈடுபடக் கழகம் தயங்காது. தலைமை அனுமதி பெற்று ஈடுபடவேண்டும். இது மிகமிக முக்கியம் அவசரம்" கி. வீரமணி குறிப்பிட்டுள்ளார்.

Leave Comments

Comments (0)