மதநல்லிணக்கத்தையும், மதச்சார்பின்மையையும் பாதுகாப்போம்-  கே. பாலகிருஷ்ணன்

/files/detail1.png

மதநல்லிணக்கத்தையும், மதச்சார்பின்மையையும் பாதுகாப்போம்-  கே. பாலகிருஷ்ணன்

  • 0
  • 0

மத நல்லிணக்கத்தையும், மதச்சார்பின்மையையும் பாதுகாப்பதே நம்முன் உள்ள முக்கியமான கடமை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று (நவம்பர் 09) வெளியிட்டுள்ள அறிக்கையில், ”நீண்ட பல ஆண்டுகளாக நீடித்து வந்த அயோத்தியா பிரச்னையில் உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பை வழங்கியிருக்கிறது. பிரச்னைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை, ஒரு அறக்கட்டளை மூலம் கோயில் கட்டுவதற்காக இந்துக்களுக்கு அளித்திட வேண்டுமென அந்த தீர்ப்பு கூறுகிறது. மேலும், மசூதி கட்டுவதற்காக வக்பு வாரியத்திற்கு 5 ஏக்கர் நிலம் அரசு ஒதுக்கீடு செய்ய வேண்டுமென்றும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

பல ஆண்டு காலமாக இப்பிரச்னையை மையமாக வைத்து உருவாக்கிய வன்முறைகள், கலவரங்களால் துயரமிக்க பல உயிர்ச் சேதங்களை நாடு சந்தித்திருக்கிறது.

அயோத்தியா பிரச்னைக்கு சமரசப் பேச்சுவார்த்தை மூலம் தீர்வினை எட்ட முடியவில்லையென்றால், நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் தீர்வு காண வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்திருக்கிறது. இப்போது உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு பிரச்னைக்கு ஒரு தீர்வினைக் கொடுத்திருந்தாலும், அதன் மீது பல கேள்விகளும் எழுகின்றன.

1992ஆம் ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்பட்டதைச் சட்ட விரோதச் செயல் என நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது. அத்துடன் இந்த நடவடிக்கை மதச்சார்பின்மை மீதான தாக்குதல் என்றும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது. மசூதியை இடித்தவர்கள் மீது தொடுக்கப்பட்ட வழக்கினை விரைந்து நடத்தி குற்றம் இழைத்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.

மத வழிபாட்டுத்தலங்கள் பாதுகாப்பு சட்டத்தின் (1991) தேவையை உச்சநீதிமன்றம் வலியுறுத்தியிருக்கிறது. அந்த சட்டம் உறுதியாக அமலாக்கப்பட வேண்டும் என இந்த நேரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது. எந்த ஒரு மத வழிபாட்டுத்தலம் மீதும் புதிய சர்ச்சையைக் கிளப்புவதற்கு அனுமதித்தல் கூடாது.

மத நல்லிணக்கத்தையும், மதச்சார்பின்மையையும் பாதுகாப்பதே நம்முன் உள்ள முக்கியமான கடமை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு அனைத்து பகுதி மக்களையும் வேண்டிக் கேட்டுக்கொள்கிறது”என்று தெரிவித்துள்ளார்.

Leave Comments

Comments (0)