ஸ்பெயின் நாட்டில் இலங்கைக்கு எதிராக தீர்மானம்

/files/detail1.png

ஸ்பெயின் நாட்டில் இலங்கைக்கு எதிராக தீர்மானம்

  • 0
  • 0

இலங்கை அரசால் நிகழ்த்தப்பட்ட தமிழின படுகொலை குறித்து சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என்று ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா மாநகர சபைக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா மாநகர சபைக்கூட்டத்தில் இலங்கையில் நடத்த தமிழின அழிப்புக்கு எதிராக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. 

அதில் தமிழ் மக்களுக்கு அடிப்படை உரிமைகளை தருவதற்கு இலங்கை அரசு மறுக்கக்கூடாது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

மேலும் அரசியல் கைதிகள் மற்றும் முன்னாள் போராளிகளை  இலங்கை அரசு தாமதமின்றி விடுதலை செய்யவேண்டும் என்பது உள்ளிட்டவை அத் தீர்மானங்களில் முக்கியமானவையாகும்.  

இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் மனித உரிமை மீறல்களை விசாரிக்க சிறப்பு தூதுவரை ஐ.நா. சபை நியமிக்க வேண்டும் என்றும் பார்சிலோனா மாநகர சபை கேட்டுக்கொண்டுள்ளது. இந்த தீர்மானங்களை ஐக்கிய நாடுகள் சபைக்கு அனுப்புவது என்றும் தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.

கடந்த 2009ம் ஆண்டு நடத்த தமிழின அழிப்பு போரில் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் இலங்கை அரசால் கொல்லப்பட்டனர். போரில் இருந்து தப்பி அரச படைத்தரப்பிடம் சரணடைந்த பெருமளவிலான மக்கள், போராளிகள் கைது செய்யப்பட்டு சித்திரவதைக்கு உள்ளாக்கி படுகொலைசெய்யப்பட்டனர். 

இதுவரையில்  இலங்கையில் 60,000திற்கும் மேலாக தமிழ் மக்கள் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதோடு மக்களின் காணிகளை படையினர் இன்னமும் தமது ஆக்கிரமிப்புக்குள் வைத்துள்ளனர் என்பது சுட்டிக்காட்டத்தக்கது.

மேலும் இலங்கையில் எந்த மாகாணத்திலும் இல்லாத அளவுக்கு வடக்கு கிழக்கு மாகாணங்களில் இலங்கை அரசு தன் படைகளை குவித்து வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. 2009ம் ஆண்டு போர் முடிவுக்கு வந்த பின், மக்கள் இன்றுவரையிலும் தமது உரிமைகளுக்காகவும் தமக்கு நிகழ்த்தப்பட்ட அநீதிகளுக்காகவும் தீர்வு வேண்டி வீதிகளில் போராட்டங்களை தொடர்ந்துகொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில், ஐ.நா மனித உரிமைக் கூட்டத்தொடர் வரும் 25ம் திகதி நடைபெறவுள்ளதையடுத்து இலங்கை அரசு தமிழ் மக்கள் மீது நடத்திய அநீதிகளுக்கு சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா மாநகர சபைக்கூட்டத்தில்  தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

Leave Comments

Comments (0)