மலையக தொழிலாளர்களை ஏமாற்றிய தொழில் சங்கங்கள்

/files/detail1.png

மலையக தொழிலாளர்களை ஏமாற்றிய தொழில் சங்கங்கள்

  • 0
  • 0

 

இலங்கை மலையகத் தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படை கூலித்தொகையை 700 ரூபாயாக அதிகரிக்கும் கூட்டு உடன்படிக்கையில் கையெழுத்திட மூன்று தொழிற்சங்கங்களும் இணக்கியுள்ளன.

முதலாளிமார் சம்மேளனத்துடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின்போது, மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்கள் சார்பாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட தொழிற்சங்கங்கள் இந்த இணக்கத்தை வெளியிட்டுள்ளன.

இந்த பேச்சுவார்த்தையில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் மற்றும் பெருந்தோட்ட தொழிற்சங்க கூட்டமைப்பு ஆகியவற்றை பிரதிநிதித்துவப்படுத்தி, அதன் உறுப்பினர்கள் கலந்துக்கொண்டனர்.

இதுகுறித்து இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான் கருத்து தெரிவிக்கையில், அடிப்படை சம்பளமாக 700 ரூபாவும், விலைக்கான கொடுப்பனவாக 50 ரூபாவும், ஊழியர் சேமலாப நிதி மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதி என்பனவற்றை உள்ளடக்கி 105 ரூபாவையும், நாளாந்த சம்பளமாக வழங்க   இணக்கம் எட்டப்பட்டுள்ளது.

அத்துடன், மேலதிகமாக ஒரு கிலோகிராம் கொளுந்துக்கு 40 ரூபாவை வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஆறுமுகன் தொண்டமான் கூறியுள்ளார்.

இதேபோல் இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஷ் கருத்து வெளியிடுகையில், பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய நிலுவை சம்பளத் தொகையை வழங்குவதற்காக பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சினால் 100மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அத்துடன், எஞ்சிய 50 மில்லியன் ரூபாவை பெருந்தோட்ட நிறுவனங்கள் வழங்க இணக்கம் தெரிவித்துள்ளது. இதற்கமைய, 150 மில்லியன் ரூபாவை, பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நிலுவை சம்பளத் தொகையை வழங்க இணக்கம் எட்டப்பட்டுள்ளதென தெரிவித்துள்ளார்.

மலையகப் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் உள்ளிட்ட அவர்களின் அடிப்படை வசதிகளை தீர்மானிக்கும் வகையில் தொழிற்சங்கங்களுக்கும், முதலாளிமார் சம்மேளனத்திற்கும் இடையில் கையெழுத்திடப்பட்ட கூட்டு உடன்படிக்கை கடந்த வருடம் அக்டோபர் மாதம் 18ம் திகதி காலாவதியாகியது.

இதற்கமைய, புதிய உடன்படிக்கையின் பிரகாரம், பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை ஆயிரம் ரூபாவாக அதிகரிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்த கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி, நாடு முழுவதும் கடந்த நான்கு மாதங்களுக்கு அதிகமாக பல போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

ஆனால் அந்த மக்களின் கோரிக்கை முழுமையான நிறைவேற்றப்படாமை அவர்களுக்கு ஏமாற்றத்தையே அளித்துள்ளது.

இந்நிலையில், தொழிற்சங்கங்கள் தமது நிலைப்பாட்டை மாற்றியமைக்க வேண்டும் என சிவில் அமைப்புக்கள் வலியுறுத்தியுள்ளது. 700  ரூபா சம்பள அதிகரிப்பை பெருந்தோட்டத் தொழிலாளர்கள் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்பதால், மக்கள் தொழிலாளர் சங்கம் இதற்கு எதிராகக் கண்டனம் வெளியிட்டுள்ளது.

அதில், இந்த கபடத்தனமான முன்மொழிவுகளுக்கு இசைந்து தொழிலாளர்களை ஏமாற்றலாம் என நினைத்து, தொழிற்சங்கங்கள் கைச்சாத்திடுவது பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு மீண்டும் ஒருமுறை பாரிய வரலாற்று துரோகத்தை இழைப்பதாக அமையும் என   தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆகவே, கூட்டு ஒப்பந்தத்தில் தொழிற்சங்கங்கள் கையெழுத்திடக்கூடாது எனவும் மக்கள் தொழிலாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

 

Leave Comments

Comments (0)