பொன்பரப்பி தலித் மக்கள் தாக்குதல்கள்: உண்மை அறியும் குழுவின் அறிக்கை

/files/detail1.png

பொன்பரப்பி தலித் மக்கள் தாக்குதல்கள்: உண்மை அறியும் குழுவின் அறிக்கை

  • 3
  • 0

 

பொன்பரப்பி தலித் மக்கள் தாக்குதல்கள் சம்பந்தமாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மனித உரிமை பாதுகாப்புக்குழு பொன்பரப்பி கிராமத்திற்கு நேரில் சென்று கள ஆய்வு மேற்கொண்டர். அந்த அறிக்கையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் இன்று (மே-18) வெளியிட்டார். இந்த அறிக்கை வெளியீட்டின்போது,  மத்தியக்குழு உறுப்பினர் உ. வாசுகி மற்றும் மனித உரிமை பாதுகாப்புக்குழு உறுப்பினர்கள் ஜி. செல்வா, லலிதா, முரளிதரன், எஸ். குமார், எஸ். ராஜேந்திரன் ஆகியோர் உடனிருந்தனர்.

பொன்பரப்பியின் ஊர் அமைப்பு

பொன்பரப்பி அரியலூர் நகரிலிருந்து சுமார் 28 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சிறிய கிராமம். இவ்வூர் அரியலூர் மாவட்டம் செந்துறை வட்டத்திற்கு உட்பட்டுள்ளது. இந்த ஊரில் பெரும்பான்மைச் சமூகமாக இருப்பவர்கள் வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். அதற்கு அடுத்த எண்ணிக்கையில் இருப்பவர்கள் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். அரியலூரில் இருந்து செல்லும்போது செந்துறையைத் தாண்டி ஜெயங்கொண்டம் சாலையில் இருக்கிறது பொன்பரப்பி. அந்த ஊரின் நுழைவாயிலிலேயே வன்னியர் சங்க சின்னமான தீச்சட்டி சுமார் 15 அடி உயரத்திற்கு இருக்கிறது. அந்த ஊரின் பெரும்பான்மை சமூகத்தை நமக்கு விளக்கிவிடும். அந்த ஊரின் கிழக்கு எல்லையில் இடதுபுறமாக முதலியார் சமூக மக்களும், அதற்கு அடுத்தபடியாக தலித் சமூக மக்களும் வாழும் பகுதிகளாக இருக்கிறது. அதற்கு நேர் எதிராகச் சாலையின் இடது புறத்தில் ஊரைத் தாண்டியும் வன்னியச் சமூக மக்களின் குடியிருப்புகளே உள்ளது. இந்த ஊரில் 4000பேர் வரை வன்னியச் சமூக மக்களும், சுமார் 1000பேர் வரையிலான தலித் சமூக மக்களும், 400பேர் வரையிலான முதலியார் சமூக மக்களும் வாழ்கின்றனர். வாக்காளர் எண்ணிக்கையில் பார்த்தால் 2996 பேர் வன்னியச் சமூக மக்களும், 678 பேர் தலித் சமூக மக்களும், 329 பேர் முதலியார் சமூக மக்களும் உள்ளனர்.

தொழிலும் வருமானமும்

இந்தப் பகுதியில் இருக்கும் பெரிய தொழிற்சாலைகள் தனியார் சிமெண்ட் ஆலைகள் மட்டுமே. இந்த ஊர் மக்களின் வருமானத்திற்கான பிரதான வழியாக இருப்பது விவசாயம். விவசாயத்திலும் வானம் பார்த்த பூமியாகவே இருக்கிறது. முந்திரிக் காடு இங்கு இருக்கும் தொழில்களில் முன்னணியில் இருக்கிறது. அந்தத் தொழிலிலும் ஆண்டு முழுவதும் அம்மக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைப்பதில்லை. வன்னிய மக்களில் கணிசமானோர் நிலம் வைத்திருக்கிறார்கள். பெரும்பாலான தலித் சமூக மக்களுக்குச் சொந்தமான விவசாய நிலங்கள் இல்லை..ஒரு சிலர் சிறிய பகுதி நிலங்களையே சொந்தமாக வைத்திருக்கிறார்கள். அது அவர்கள் குடும்பத்திற்கே முழுவதும் உதவக் கூடிய வகையில் இல்லை. ஆகவே தலித் சமூகத்தில் உள்ள ஆண்களில் பெரும்பாலானோர் சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் கூலி வேலை செய்கிறார்கள். பெண்கள் தங்கள் ஊரில் கிடைக்கும் கூலி வேலைகளைச் செய்கிறார்கள். பெரும்பாலும் தலித் சமூக ஆண்கள் மாதத்தில் பாதி நாட்கள் ஊரில் இருப்பதில்லை. சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையிலேயே இருக்கிறார்கள். முதலியார் சமூகம் நெசவாளர் சமூகமாக அந்தப்பகுதியில் இருக்கிறது. ஆனால் இன்றைக்கு நெசவுத்தொழில் நலிந்த பிறகு, நெசவாளர்களாக இருந்த முதலியார் சமூகத்தில் கணிசமானோர் அங்குள்ள சிமெண்ட் ஆலையில் பணியாற்றத் தொடங்கிவிட்டனர்.

பொன்பரப்பியின் அரசியல் சூழல்

பொன்பரப்பி கிராமத்தில் அரசியல் கட்சிகள் என்று பார்த்தால் பாமக வலுவாக உள்ளது. அதே போல் அதிமுகவும் திமுகவும் மற்ற பகுதிகளில் இருப்பதைப்போல் வலுவாக இல்லாவிட்டாலும், பிரதான கட்சிகளாக உள்ளன. தமிழரசன் தலைமையிலான தமிழக பொதுவுடைமை கட்சியின் செயல்பாடுகள் 1960கள் தொடங்கி 90களின் தொடக்கம் வரை இருந்துள்ளது. பாமக வளர்ச்சியில் அவை கரைந்து போயுள்ளன. கடந்த சில ஆண்டுகளாக அங்கு இந்துத்துவ அரசியல் தலை தூக்கியுள்ளது. குறிப்பாக அந்தப்பகுதியில் வன்னியர் சமூக மக்கள் மத்தியிலேயே அது செயல்படுகிறது. முன்பு பாமகவின் செயலாளராக இருந்த அந்த ஊரைச்சேர்ந்த இராஜசேகர் தான், தற்போது இந்துமுன்னணியின் செயலாளர். தலித் மக்கள் பெரும்பான்மையாக விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருக்கிறார்கள். ஆனாலும் அதே தலித் குடியிருப்பிற்குள் அதிமுக, திமுகவைச் சேர்ந்த நிர்வாகிகளும் இருக்கிறார்கள். பாமகவைச் சேர்ந்த நிர்வாகி கூட அந்தப்பகுதியில் இருக்கிறார். ஆனால் விசிகவை சேர்ந்த ஒருவர் கூட வன்னியச் சமூக மக்கள் பக்கம் இல்லை. இடதுசாரிகளை பொறுத்தவரையில் சிபிஐ(எம்) கட்சிக் கிளை ஒன்று நெசவாளர்கள் மத்தியில் இருக்கிறது.

வாக்குச்சாவடிகள் அமைவிடம்

பொன்பரப்பி ஊருக்குள் ஒரே ஒரு கட்டிடத்திற்குள் நான்கு வாக்குச்சாவடிகள் உள்ளன. இந்த நான்கு வாக்குச்சாவடிகளில் மூன்று வாக்குச்சாவடி முழுவதும் வன்னியர் சமூக மக்களுடையாதாகவும், ஒரு வாக்குச்சாவடி தலித் மற்றும் முதலியார் சமூக மக்களுக்கான 1007 வாக்குகள் கொண்ட சாவடியாகவும் உள்ளது. இந்த ஒரு வாக்குச்சாவடிக்கும், தலித் மக்கள் குடியிருப்பிற்கும் ஒரு கிலோ மீட்டர் தொலைவு வரை இருக்கலாம். தலித் மக்கள் வாக்களிக்க வேண்டும் என்றால் அவர்கள் பெரும்பான்மை சமூக மக்கள் வாழும் தெரு வழியாகத்தான் செல்லவேண்டும்.

பொன்பரப்பியில் சாதிய மோதல்கள்

பொன்பரப்பியில் கடந்த காலங்களில் பெரிய சாதிய மோதல்கள் நடந்ததே இல்லை என்று சொல்லலாம். காரணம் மொத்த மக்கள் தொகையில் தலித்மக்கள் மிகச்சிறுபான்மையினர். அதனால் அவர்கள் எதிர்த்துத் தாக்கக்கூடிய வலுவற்றவர்களாக இருப்பதால், இங்கு மோதல் நடக்க வாய்ப்பே இருந்ததில்லை. இதற்கு முன்பாக 1984ல் ஒரு சிறு தாக்குதல் இவர்கள் பகுதிக்குள் நடந்திருந்ததாக அந்தக்காலனியில் இருந்த சில வயது முதிர்ந்தோர் சொன்னார்கள். அதுகுறித்த முழுவிவரம் இல்லை. அதே போல் தலித்குடியிருப்பில் உள்ளவர்களுக்கும், வன்னியச்சமூக மக்களுக்கும் இடையில் காதல் திருமணங்கள், சாதி மறுப்புத் திருமணங்கள் ஏதும் நடந்ததாக எந்தப்பதிவும் இல்லை. வன்னியர் சமூக மக்கள் வாழும் பகுதிகளில் மூன்று தலித்பெண்கள் திருமணம் செய்து வாழ்வதாகவும், அவர்களும் வெளியூரிலிருந்து வந்தவர்கள் என்றும் சொல்லப்படுகிறது.

அதே நேரத்தில் பொருளாதார நெருக்கடி கடுமையாகியுள்ள இந்தக்காலத்தில் எல்லா சமூகத்தைச் சேர்ந்த மக்களும் பாதிக்கப்படுகிறார்கள். கூடுதலாகத் தலித் மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். விவசாயம் சார் பொருளாதாரத்தில் ஏற்பட்டிற்கும் நெருக்கடியின் விளைவாக வேலைவாய்ப்புகள் நெருக்கடிக்கு உள்ளாகிவிட்டன. தலித்மக்கள் விவசாய நிலத்தில் பணியாற்றும் வாய்ப்பு அரிதாகிவிடுகிறது. அதன் விளைவாகத் தலித்துகள் சென்னை நோக்கி கூலி வேலைக்காகச் செல்கிறார்கள். இது கடந்த 15 ஆண்டுகளில் நிகழ்ந்த மாற்றமாகும். இதன் மூலம் தலித்மக்கள் வாழ்வில் சில பொருளாதார மேம்பாடுகள் ஏற்பட்டுள்ளன. தலித்குடியிருப்பில் பெரும்பாலும் கூரைவீடுகளே இல்லாத சூழல் உருவாகி, ஓட்டுவீடுகளாக மாறியிருக்கின்றன. பொறியியல் பட்டம் வரையிலான கல்வி மேம்பாட்டையும் எட்டியுள்ளார்கள். தலித்மக்கள் மத்தியில் உருவாகியிருக்கும் இந்த மாற்றமும், முன்னேற்றமும், பெரும்பான்மை சமூக இளைஞர்கள் மத்தியில் நேர்மறையாக இல்லாமல், எதிர்மறையாக, மிகவும் வன்மமாக உருவாக்கப்பட்டிருக்கிறது. தங்களிடம் அண்டிப் பிழைத்தவர்கள் இன்று பொருளியல் மேம்பாட்டோடு வளர்வதைச் சாதி ஆதிக்க சக்திகள் விரும்பாததே காரணம். இதற்கு பாமக பிரதான பாத்திரத்தை வகித்தாலும், மேலோங்கும் கூட்டுச்சமூக ஆதிக்க மனோநிலை அதை இன்னும் கூர்மைப் படுத்துகிறது. அதை பாமக, இந்துமுன்னணி போன்ற அமைப்புகள் அந்தப்பகுதியில் அறுவடை செய்கின்றன.

கடந்த கால தேர்தல்களில் பொன்பரப்பி

தொகுதி மறுசீரமைப்பிற்கு முன்புவரை பெரம்பலூர் நாடாளுமன்றத்தொகுதியிலிருந்த பொன்பரப்பி, தொகுதி மறுசீரமைப்பிற்குப்பின் சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதிக்குள் வந்தது. சட்டமன்றத்தை பொறுத்தவரையில் குன்னம் சட்டமன்றத்திற்கு உட்பட்டே செயல்பட்டு வந்துள்ளது. கடந்த காலத்தேர்தல்களில் காங்கிரஸ், அதன் பின் திமுக என்று இருந்த பொன்பரப்பியில் 1998க்கு பிறகு பாமகவின் செல்வாக்கு வளர்ந்துள்ளது. இதற்கிடையில் திமுகவும், அதிமுகவும் தங்கள் செல்வாக்கை அதிகரிக்க பெரும் முயற்சிகளைச் செய்துள்ளனர். கடந்த தேர்தலில் அதிமுக வசம் பொன்பரப்பி சென்றது.

இந்தத்தேர்தலில் பொன்பரப்பி

இந்த மக்களவைத் தேர்தலை பொருத்தவரையில், பொன்பரப்பி சிதம்பரம் தொகுதிக்கு உட்பட்டிருந்தது. சிதம்பரம் தொகுதியில் திமுக அணியின் வேட்பாளர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள். அவரின் சொந்த ஊர் அங்கனூர். அதிமுக அணியின் சார்பாக அரியலூர் ஒன்றிய அதிமுக முன்னாள் செயலாளர் சந்திரசேகரன் போட்டியிடுகிறார். இவரின் சொந்த ஊர் பொய்யாத நல்லூர். அதோடு அரியலூரில் இவர் உணவகம், லாட்ஜ் உள்ளிட்ட தொழில்களை நடத்திவருகிறார். அதோடு பொன்பரப்பி மக்களுக்கு மிக நெருக்கமான சென்னை கோயம்பேடு சந்தையில் நான்கு கடைகள் வரை சொந்தமாக நடத்துகிறார். திருமாவளவன் கடந்த காலத்தில் 2009ல் சிதம்பரம் தொகுதியிலிருந்து நாடாளுமன்றத்திற்குத் தேர்வாகியுள்ளார். இவர்களோடு அமமுக, மய்யம், நாம் தமிழர், பகுஜன்சமாஜ் ஆகிய கட்சிகளும் களத்தில் இருக்கின்றன. பொன்பரப்பியை பொறுத்தவரையில் நேரடிப்போட்டி திருமாவளவன் அவர்களுக்கும், சந்திரசேகரன் அவர்களுக்குமாகவே இருந்துள்ளது.

தாக்குதலும் அதற்கு முன்னும் பின்னும்

நாடாளுமன்றத்தேர்தலில் அதிமுகவின் சார்பாக நிறுத்தப்பட்டிருக்கும் சந்திரசேகரன் அதிமுகவின் சட்டமன்ற கொறடாவான தாமரை இராஜேந்திரனால் நிறுத்தப்பட்டிருக்கும் நபர். இவருக்குச் சீட்டு வாங்கிக்கொடுத்துள்ள கொறடா இராஜேந்திரன், இம்முறை அவரை வெற்றிபெற வைப்பதன் மூலமே கட்சிக்குள் இருக்கும் உட்பூசலுக்கிடையில், தனது செல்வாக்கைத் தக்கவைத்துக்கொள்ள முடியும் என்ற நிர்ப்பந்தத்தில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. சிதம்பரம் தொகுதியில் வெற்றி பெற வாய்ப்புள்ள அனைத்து வழிகளையும் கையாள தயார்நிலையிலிருந்திருக்கிறது அதிமுக.

பாமகவை பொறுத்தவரையில் இப்பகுதியை தங்கள் வசம் தக்க வைத்துக்கொள்ள, சகல வேலைகளையும் செய்யத் தயார் நிலையிலிருந்துள்ளது. அதற்கு ஏற்றாற் போல், தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டம் ஒன்றில், ”வாக்குச்சாவடிகளைக் கைப்பற்றுவது” பற்றி நேரடியாகவே பாமகவின் அன்புமணி ராமதாஸ் அவர்கள் பேசியதைக் கூறலாம்.

இந்துமுன்னணி அமைப்பு ரீதியில் செயல்பாடுகளைத் தீவிரப்படுத்தியுள்ளது, அரியலூர் நந்தினி பாலியல் படுகொலை வழக்கில் உண்மையான குற்றவாளி என்று அந்தப்பகுதி மக்கள் சொல்லும் இராஜசேகர் தான் அந்தப்பகுதியின் இந்துமுன்னணியின் தற்போதைய பொறுப்பாளர். அந்த வழக்கில் கைதுசெய்யப்பட்டுள்ள மணிகண்டன், இராஜ சேகருக்காக தண்டனைபெற அவர்கள் அமைப்பால் பலிகொடுக்கப்பட்டவர் என்றும் சொல்கிறார்கள். அரியலூர் நந்தினி வழக்கில் விசிக, சிபிஐ(எம், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஆகிய அமைப்புகள் தான் முன்னின்று அந்தப்போராட்டத்தை நடத்தின. அந்த இயக்கங்களுக்குப் பிறகு, அந்தப்பகுதி சங்பரிவார அமைப்புகள், திருமாவளவன் மீது கடும் கோபத்தில் இருந்திருக்கின்றன.

அரியலூர், ஜெயங்கொண்டம், குன்னம் ஆகிய மூன்று சட்டமன்றத்தொகுதிகளில் பெரும்பாலான கிராமங்களில் சாதி இந்துக்கள் வசிக்கும் பகுதிகளில் விசிகவினர் தனியாகச் சென்று வாக்குக்கேட்பதே இயலாத காரியமாக இருந்திருக்கிறது. திமுகவின் துணையோடே சில இடங்களுக்கு திருமாவளவன் உட்பட எல்லோரும் செல்லும் சூழல் இருந்திருக்கிறது. இதே போன்ற சூழல் தான் பொன்பரப்பியிலும்.

இதற்கு இடையில் கடந்த காலங்களைப்போல் இல்லாமல், தலித் பகுதி மக்கள் இம்முறை தங்கள் பகுதியில் உள்ள 678 வாக்குகளையும் ஒன்றுவிடாமல் முழுமையாகச் செலுத்திட வேண்டும் என்று ஏற்பாடுகள் செய்திருந்தார்கள். அதற்காகச் சென்னை கோயம்பேட்டில் பணியாற்றும் அந்தப்பகுதியைச் சேர்ந்த எல்லோருமே, தங்கள் ஊருக்கு வாக்குப்பதிவு நேரம் முடிவதற்குள்ளாக வந்துவிடவேண்டும், என்பது உட்பட அனைத்து ஏற்பாடுகளையும் இம்முறை அம்மக்கள் செய்திருந்தார்கள்.

நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவிற்கு முதல் நாள், பொன்பரப்பி திமுகவைச் சேர்ந்த பி.ஆர்.பாண்டியன் (வன்னியர்) தலித் மக்கள் குடியிருப்பிற்கு வந்திருக்கிறார். அங்குள்ள தலித் மக்களைப் பார்த்து, ”வாக்குப்பதிவன்று மதியம் 12.00 மணிக்குள்ளாக உங்கள் எல்லோர் வாக்குகளையும் செலுத்திவிடுங்கள். அதற்குமேல் என்னால் பாதுகாப்பு கொடுப்பது கடினம்” என்று எச்சரிக்கையோடு சொல்லிச்சென்றுள்ளார். பொன்பரப்பி ஊருக்குள், மதியத்திற்கு மேல் பாமக வழக்கம் போல் வாக்குச்சாவடி கைப்பற்றுவது தொடர்பாக உரையாடல் நடந்திருந்ததன் வெளிப்பாடாகவே இவரது எச்சரிக்கை அமைந்தது எனக் கருத வேண்டியுள்ளது.

வாக்குப்பதிவன்று காலை முதலே தலித்மக்கள் தங்களுடைய வாக்குகளை விறுவிறுப்பாகச் செலுத்தி வந்திருக்கிறார்கள். மதியம் 12.00 மணியளவிலேயே 678 வாக்குகளில் 400 வாக்குகளைத் தாண்டி பதிவாகிவிட்டன. சென்னையிலிருந்து வந்துகொண்டிருந்த தங்கள் பகுதியைச் சேர்ந்த வாக்காளர்களுக்காகக் காத்துக்கொண்டிருந்திருக்கிறார்கள்.

பிரச்சனை எங்கிருந்து தொடங்கியது?

தலித்மக்கள் குடியிருப்பின் நுழைவாயிலில், அதன் கிழிக்குப்பக்கத்தில் பெட்டிக்கடை ஒன்று இருக்கிறது. அந்தப்பகுதியில் உள்ள கடை உள்ள இடம் மட்டும் வன்னியர் சமூகத்திற்குச் சொந்தமானது. அந்தப்பெட்டிக்கடையில் டாஸ்மாக் மதுபானங்கள் கள்ளச்சந்தையில் விற்கப்பட்டுள்ளது. தேர்தல் நாளான அன்று கூட அந்தக்கடையில் டாஸ்மாக் மதுபானம் எந்தத்தடையும் இல்லாமல் கிடைத்துள்ளது. அங்குக் காவலிலிருந்த காவல்துறையும், தேர்தல் ஆணையமும் இதை கண்டும் காணாமல் இருந்திருக்கிறன. வன்னியச் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மதுவை வாங்குவதற்கு ஊரிலிருந்து தலித்மக்கள் குடியிருப்பின் அருகில் உள்ள அந்தப் பெட்டிக்கடைக்கு அன்று காலைமுதலே வந்து சென்றிருக்கிறார்கள். மதியத்திற்குமேல் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருந்த சிலர், அந்தக்கடை வாசலில் தங்கள் வன்மமான உரையாடலைத் தொடங்கியிருக்கிறார்கள்.

ஒருகட்டத்தில் அந்த உரையாடல் அங்கிருந்த தலித்மக்களை எரிச்சலூட்டவே, அவர்கள் தங்கள் தரப்பு நியாயத்தைக் கேட்டிருக்கிறார்கள். இதுதான் வாய்ப்பு என்று அங்கிருந்த பாமக, இந்தமுன்னணியைச் சேர்ந்த வன்முறையாளர்கள், தலித்மக்கள் குடியிருப்பிற்கு வெளியே இருந்த விசிகவின் கொடிக்கம்பத்தை உடைத்து கீழே சாய்த்திருக்கிறார்கள். விசிகவின் சின்னமான பானையைப் போட்டு அங்கேயே உடைத்திருக்கிறார்கள். ஒரு கட்டத்தில் தலித்மக்களில் சிலர், அந்தப்பெட்டிக்கடைக்குச் சென்று அங்கு பணியாற்றும் மாற்றுத்திறனாளி ஒருவரிடம், “உன் கடையால் தான் இங்குப் பிரச்சனை. கடையை மூடு” என்று வாதிட்டிருக்கிறார்கள். அதைப் பயன்படுத்திக்கொண்டு “உங்களுக்கு அவ்வளவு திமிராடா” என்று தலித் குடியிருப்பிற்கு உள்ளே சென்று தாக்கியதுடன், அவர்கள் குடியிருப்பிற்கு நேரெதிராக இருந்த வன்னியர் குடியிருப்பிலிருந்தும் 200க்கும் அதிகமானோரை அழைத்துக்கொண்டு, தலித் குடியிருப்பிற்குள் நுழைந்து தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள். தாக்கச்சென்றவர்களில் 18வயதிற்குக் குறைவான சிறுவர்களும் இருந்திருக்கிறார்கள். இந்த வன்முறைக்கும்பலை இந்தமுன்னணியைச் சேர்ந்த இராஜசேகரே பின்னால் இருந்து இயக்கியிருப்பதாக இப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

திட்டமிட்ட வன்முறை

தாக்குதல் நடத்த வந்தவர்கள் முறையாகத் தயார்செய்யப்பட்ட ஆயுதங்களுடன் வந்திருக்கிறார்கள். முனையில் ஆணி அடிக்கப்பட்ட மூங்கில் கம்புகள், அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்கள், பெட்ரோல் கேன்கள், என்று தொழில்முறையில் ஆயுதங்களுடன் வந்திருக்கிறார்கள். இவ்வளவு ஆயுதங்களும் கலவரம் செய்வதை முன்னமே திட்டமிட்டால் தான் தயார் நிலையில் வைத்திருக்க முடியும். தர்மபுரியில் நடைபெற்ற மூன்று கிராமங்கள் அழித்தொழிப்பில், இந்தப்பகுதியில் தயாரான தொழில்முறை வன்முறையாளர்கள் கலந்துகொண்டிருந்தார்கள் என்று முன்னாள் பாமகவைச் சேர்ந்த ஒருவர் நம்மிடம் பகிர்ந்து கொண்டார். அவர்கள் இந்தத்தாக்குதல் குழுவில் இருந்தார்களா என்பதை நம்மால் உறுதிசெய்ய முடியவில்லை.

தலித் குடியிருப்பிலிருந்த அதிமுகவைச் சேர்ந்தவர்கள் வீட்டையும், பாமகவைச் சேர்ந்த நிர்வாகி ஒருவரையும் கடுமையாகக் கட்சி வித்தியாசம் பார்க்காமல் வன்முறையாளர்கள் தாக்கியிருக்கிறார்கள். தாக்குதல் நடந்த அன்று, ஒரு மூதாட்டி கைகூப்பி வணங்கியது போல் இருந்த புகைப்படம் உள்ள தாக்குதலுக்கு உள்ளான வீடு, அதிமுகவைச் சேர்ந்தவரின் வீடு. அந்த வீட்டு வாசலில் ஜெயலலிதா, எம்.ஜி.ஆர். படங்கள் மாட்டியிருக்கின்றன. ஆகவே இந்தத்தாக்குதல் கட்சி என்கிற அடிப்படையில் வெறும் அரசியல் தாக்குதலாக மட்டும் நடைபெறவில்லை. தமிழகத்தில் கடந்த காலங்களில் தலித் மக்கள் மீதான வன்முறைகளில் அவர்களின் பொருளாதார வளங்களைக் குறிவைப்பது என்ற போக்கு பொதுவான ஒன்றாகும். தலித்மக்களின் சொத்துக்களை அழித்தொழிக்கிற வன்மமும் இத்தாக்குதலில் பிரதானமாக வெளிப்பட்டுள்ளது. அவர்களது வாகனங்கள், வீடுகள், பொருட்கள், அவர்கள் தண்ணீர் பிடிக்கும் பொதுக்குழாயை உடைப்பது என்றே முழுவதும் பொருட்களின் அழித்தொழிப்பாகவே இருந்திருக்கிறது. வழியில் மறித்தவர்களை மட்டும் கடுமையாக உடல்ரீதியில் தாக்கியிருக்கிறார்கள். அதோடு தாக்குதல் நடத்திக்கொண்டிருந்தவர்கள் ”இந்த ஊரையே கொளுத்திடுவோம்” என்று பல முறை சொல்லியுள்ளார்கள். இந்த திட்டமிட்ட வன்முறை காரணமாக ஒட்டுமொத்த பொன்பரப்பி தலித் மக்களால் வாக்களிக்க முடியவில்லை. இந்த வாக்குரிமை பறிப்பு அரசியல் சட்டத்திற்கு விரோதமானதாகும்.

இந்த தாக்குதலில் 63 வீடுகள் சேதாரமாக்கப்பட்டன. 13 இருசக்கர வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. ஒரு வாகனம் கொளுத்தப்பட்டுள்ளது. தாக்குதலில் 13 பேர் கடும் காயத்திற்கு உள்ளாக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ரவி என்பவர் கொடூரமாகத் தாக்கப்பட்டு தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஒரு பெண் உட்பட 12 பேர் ஜெயங்கொண்டம் மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டனர்.

தலித் மக்கள் என்ன செய்தார்கள்

தாக்குதல் நடந்துகொண்டிருக்கும் போதே தலித் சமூகத்தைச் சேர்ந்த கோபப்படும் இளைஞர்களை ”பிரச்சனை வளர்ந்துவிடுமோ” என்ற அச்சத்தில், அவர்களை வீடுகளுக்குள் பூட்டிவைக்கும் ஏற்பாட்டை மக்கள் செய்திருக்கிறார்கள். தாக்குதல் நடந்து முடிந்த பிறகு தலித் குடியிருப்பின் மையத்தில் ஒரே ஒரு வன்னிய இளைஞர் மட்டும் பெட்ரோல் கேனுடன் வழிதெரியாமல் மாட்டிக்கொண்டிருக்கிறான். அவனைப் பிடித்து அங்கிருந்த சிலர் மரத்தில் கட்டிவைத்திருக்கிறார்கள். தலித் குடியிருப்பில் உள்ள பெரியவர்கள் வந்து, “இது வீண் வம்பைக் கொண்டுவந்து சேர்க்கும்” என்று அந்த வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த இளைஞனை விடுவித்திருக்கிறார்கள். தலித்மக்கள் இந்தத்தாக்குதல் தொடர்வதை விரும்பவில்லை என்பதையே இந்த சம்பவம் காட்டுகிறது.

காவலர்கள் என்ன செய்தார்கள்

இவ்வளவு கொடூரத்தாக்குதல்கள் நடந்துகொண்டிருக்கும் போது, தாக்குதல்கள் முடியும் வரை காவல்துறை அந்த இடத்திற்கு வரவே இல்லை. மற்ற நேரங்களிலாவது செந்துறையிலிருந்து காவலர்கள் வரவேண்டிய தேவை இருப்பதால் காலதாமதம் இயல்பானது. ஆனால் இம்முறை வாக்குப்பதிவு நடந்துகொண்டிருக்கும் சாவடியிலிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது தாக்குதல் நடைபெறும் இடம். அங்கே துணைஇராணுவப்படையினர் இருக்கிறார்கள். காவலர்கள் இருக்கிறார்கள். ஆனால் எல்லோரும் உரியநேர ்தில் வந்து சேரவில்லை. இத்தாமதம் இயல்பானதல்ல. காவல்துறையின் சாதிய பாரபட்சத்தின் அப்பட்டமான வெளிப்பாடு என்றே உண்மை அறியும் குழு கருதுகிறது.

பாமகவினரின் குற்றச்சாட்டு

வாக்குச்சாவடிக்கு 100மீட்டர் இடைவெளிக்குள்ளாக விசிகவின் பானை சின்னத்தை வைத்துக்கொண்டு, வாக்களிக்க வரும் பொதுமக்களுக்கு தலித்மக்கள் மோர் வினியோகம் செய்தனர் என்று குற்றம் சாட்டுகிறார்கள்.

அங்கு பெட்டிக்கடையில் பணியாற்றிய மாற்றுத்திறனாளி இளைஞரை வாக்களிக்கவிடாமல் தலித்மக்கள் தடுத்தனர். அவரை தாக்கியுள்ளனர் என்று பாமக, இந்தமுன்னணியைச் சேர்ந்தவர்கள் சாலை மறியலிலும் ஈடுபட்டுள்ளனர்.

தலித் குடியிருப்பில் செய்தி சேகரிக்க வந்த செய்தியாளர்களில் நியூஸ் 18 செய்தியாளர் மஞ்சள் சட்டையுடன் வந்திருக்கிறார். ஆகவே அவரும் வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர் என்று நினைத்து தலித்மக்கள் தாக்கியுள்ளனர்.

தலித்மக்கள் வன்னியர் சமூகத்தில் உள்ள வாக்குச்சாவடிக்குச் சென்றுவருவதே கடினமாக இருக்கும் சூழலில், வாக்குச்சாவடிக்கு அருகில் மோர் வினியோகம் செய்வதற்கு வாய்ப்பே இல்லை. அதோடு தலித்மக்கள் குடியிருப்பிற்கும், வாக்குச்சாவடிக்கும் ஒருகிலோமீட்டர் வரை தொலைவு இருக்கிறது. ஆகவே அவர்கள் 100 மீட்டர் இடைவெளியில் மோர் வினியோகம் செய்ய வாய்ப்பே இல்லை.

பெட்டிக்கடையில் பணியாற்றியவருக்கு அந்த ஊரில் வாக்கே இல்லை. அவர்தான் அங்குக் கள்ளச்சந்தையில் மதுபாட்டில்களை விற்றவர். அவர் மீது எந்த நடவடிக்கையும் தேர்தல் ஆணையமோ, காவல்துறையோ இதுவரை எடுக்கவில்லை.

தலித் குடியிருப்பில் செய்தி சேகரிக்க வந்த நீயூஸ் 18 தொலைக்காட்சியின் செய்தியாளர் கலைச்செல்வன் வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர் இல்லை. அவர் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பது அந்த ஊரில் உள்ள எல்லா மக்களுக்குமே தெரிந்திருக்கிறது. அவரும் அருகில் உள்ள ஊரிலேயே வசிக்கிறார். அவர் ஏற்கனவே சில செய்திகளை தலித்மக்களுக்கு எதிராகத் திரித்து வெளியிட்டிருந்தார் என்று தலித்மக்கள் அவர் மீது குற்றம் சாட்டுகிறார்கள்.

சமூக உளவியலின் தாக்கம்

ஒட்டுமொத்த பொன்பரப்பி கிராமமும் இதற்கு நேரடியாகத் துணைபோனது என்று சொல்லமுடியாது. ஆனால் மௌனமாக இந்தக்கலவரத்தைத் தடுக்காமல் வேடிக்கை பார்ப்பதன் மூலம் மறைமுகமாக இதை ஆதரிக்கும் பெரும்பான்மை சமூக உளவியல் சிக்கலில் அம்மக்கள் இருக்கிறார்கள் என்பதே உண்மை. அதிமுகவைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் சிலரும், ஊர் பெரியவர்கள் சிலரும் இந்தத்தாக்குதல் நடந்த பிறகு, தாக்குதலில் ஈடுபட்டோரை அழைத்துக் கண்டித்திருக்கிறார்கள். ஆனால் தாக்குதல் நடைபெற்ற இடத்திற்கு ஊர்பெரியவர்கள் யாரும் நேரில் சென்று சமாதானமோ, ஆறுதலோ சொல்லவேயில்லை.

இது ஒரு பக்கம் இருக்க, திமுகவைச் சேர்ந்த பி.ஆர்.பாண்டியன் தலித்மக்களுக்கு ஆதரவாகப் பானை சின்னத்தில் வாக்கு சேகரித்திருக்கிறார். அவரை ஊரில் உள்ள அவர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் நேரடியாகவே தகாத வார்த்தைகளில் திட்டியிருக்கிறார்கள். வன்மத்தோடு கண்டித்திருக்கிறார்கள். ஊரில் உள்ள பெரியவர்களும் அவருக்கு ஆதரவாகச் செல்லாததோடு, அவருக்கு எதிரான தாக்குதலில் மௌனம் காத்திருக்கிறார்கள். இது கடந்த காலத்தைவிட மோசமாகச் சாதியம் மூர்க்கமாக வளர்ந்துள்ள போக்கையே காட்டுகிறது.

தொடரும் அபாயம்

இந்தத்தாக்குதல்கள் இந்தத்தேர்தலோடு முடிவதாகத் தெரியவில்லை. காரணம் பாமக சாதிய ஒருங்கிணைவின் மூலமாகவே கட்சியை வளர்க்க நினைக்கிறது. அதோடு பாமகவை சேர்ந்தவர்களே தற்போது இந்தமுன்னணியிலும் முக்கிய பொறுப்புகளில் இருக்கிறார்கள். அவர்களும் வன்முறை அரசியல் மூலமாகவே தாங்கள் வளரமுடியும் என்ற சித்தாந்தத்தில் நம்பிக்கை கொண்டிருக்கிறார்கள்.

இந்தத்தாக்குதலுக்குப்பிறகு தலித்மக்கள் குடியிருப்பிலிருந்து ஊருக்குள் புகுந்து பிரதான சாலைக்கு வரும்போது அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்படுவது அதிகரித்திருக்கிறது. ரேஷன், காய்கறி, ஏடிஎம் உள்ளிட்ட எல்லா சேவைகளும் தலித்மக்களுக்கு கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இது தலித்மக்கள் மத்தியில் ஒடுக்கப்படுதல், தனிமைப்படுத்தப்படுதல் என்கிற உளவியல் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளதோடு மறுபக்கம் சாதிய மேலாதிக்க உணர்வை வலுப்படுத்துவதாகவும் இருக்கிறது.

இதற்கிடையில் 2016 முதல் பொன்பரப்பி பஞ்சாயத்து, உள்ளாட்சித்தேர்தல் விதிகளில் சுழற்சிமுறையில் தனித்தொகுதியாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்தத்தொகுதியை தனித்தொகுதியாக அறிவிக்கப்பட்ட ஆணையைத் திரும்பப்பெறக்கோரி சிலர் அரசை அணுகிக்கொண்டிருக்கிறார்கள். அப்படி அறிவிக்கப்பட்டால் தலித் பகுதியிலிருந்து தான் ஒருவரை ஊராட்சி மன்றத்தலைவராக தேர்ந்தெடுக்கவேண்டிய கட்டாயம் இருப்பதால், இந்த வன்மத்தை மேலும் அதிகரிக்க வாய்ப்புகள் இருக்கிறது. தொடர் வன்முறையின் மூலம் அரசை அடிபணியவைத்து மீண்டும் பொதுத்தொகுதி ஆக்குவதற்கான ஏற்பாடுகள் நோக்கியும் இது நகரக்கூடும்.

பொன்பரப்பியின் உடனடித்தேவைகள்

1.பொன்பரப்பி வாக்குச் சாவடியில் மறுவாக்குப்பதிவு நடத்திட வேண்டும். தேர்தல் ஆணையம் அக்கோரிக்கையை நிராகரித்து விட்டது ஜனநாயகத்திற்கு விரோதமானதாகும். தேர்தல் ஆணையம் தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

2. தலித் குடியிருப்புப் பகுதியில் உள்ள மக்கள் தங்கள் வங்கி இருப்பில் உள்ள பணத்தை எடுக்க ஏடிஎம் மையத்திற்குச் செல்லவேண்டும் என்றால் கூட வன்னியர் சமூக மக்கள் உள்ள கடைத்தெருவிற்கே செல்ல வேண்டியுள்ளது. இந்தச் சூழலில் பணம் எடுக்கக் கூட அந்த மக்கள் வெளியே வருவதில்லை. உடனடித் தேவையாக அந்தப் பகுதிக்குள் நடமாடும் ஏடிஎம் இயந்திரத்தை மாவட்ட நிர்வாகம் வாரத்திற்கு மூன்று முறையேனும் அனுப்பி வைக்க பொதுத்துறை வங்கிகளை வலியுறுத்த வேண்டும்.

3. பொன்பரப்பி சம்பவம் நடந்த மறுநாள் பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியாகின. தலித் குடியிருப்புப் பகுதியில் ஐந்து மாணவர்கள் இந்த ஆண்டு பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வை எழுதி இருந்தனர். தேர்வு முடிவு வெளியான உடன் வன்னியர் பகுதி மக்கள் உள்ள தெருவில் இருக்கும் தங்கள் பள்ளிக்கு அந்த மாணவர்கள் மாற்றுச்சான்றிதழ் வாங்கச் சென்றுள்ளனர். சென்ற மாணவர்களையும் அவர்கள் பெற்றோர்களையும் அந்தப்பகுதியில் உள்ளச் சிலர் அச்சுறுத்தும் சூழல் அங்கு உருவாகியிருக்கிறது. கடைசி நேரத்தில் காவல்துறை சென்று அந்த மாணவர்களை மீட்டு வந்துள்ளது. ஆகவே மாவட்ட நிர்வாகம் இதுபோன்று அந்தப்பகுதிகளுக்குள் செல்லமுடியாத மாணவர்களுக்கான உரியப் பாதுகாப்பையும், அவர்களுக்குத் தேவையான கல்வி உதவிகளையும் அரசு வழங்கிட வேண்டும்.

4. தலித் குடியிருப்பில் உள்ள மாணவர்கள் மேற்படிப்புகளுக்குச் செல்வதே அபூர்வம். இந்தச் சூழலில் பன்னிரண்டாம் வகுப்பை 5 மாணவர்களும், பத்தாம் வகுப்பை 8 மாணவர்களும் தேர்வுபெற்றிருக்கிறார்கள். அந்த மாணவர்கள் மேற்படிப்பு படிக்க வேண்டும் என்றால் அந்த ஊரை விட்டு வெளியே உள்ள கல்லூரிகளையே அணுக வேண்டிய தேவை உள்ளது. தற்போதுள்ள சூழலில் அப்படி உடனடியாக ஊரை விட்டு அவர்கள் சென்று வரக்கூடிய இயல்பான சூழல் இல்லை. ஆகவே அரசு நிர்வாகம் அந்த மாணவர்களுக்கான மேற்படிப்பிற்கு என்னென்ன உதவிகளைச் செய்ய முடியுமோ அதை நேரில் சென்று அவர்களின் விருப்பத்தைக் கேட்டு உதவிட வேண்டும்.

5. தங்கள் உணவுத் தேவைக்காகத் தலித் பகுதி மக்கள் மளிகை சாமான்கள் காய்கறிகள் வாங்குவதற்கு வன்னியர் சமூக மக்கள் இருக்கும் கடைத் தெருவிற்கு வர வேண்டியுள்ளது. இப்போதுள்ள சூழலில் அந்த மக்கள் அந்தக் கடைத் தெருவிற்கு வரவே அச்சப்படுகிறார்கள். அவர்கள் அச்சத்தைப் போக்கும் விதமாகத் தலித் பகுதியில் வாரச்சந்தை ஏற்பாட்டை அரசு செய்து கொடுக்க வேண்டும்.

6. தலித் பகுதியைச் சேர்ந்த பெரும்பாலான ஆண்கள் சென்னை கோயம்பேட்டில் கூலித் தொழில் செய்கிறவர்கள். அந்தப் பகுதிப் பெண்களைப் பொறுத்தவரையில் பங்குனி, சித்திரை, வைகாசி மாதங்களில் முந்திரிக் கொட்டை பொறுக்குவதற்கு வன்னியர் சமூக மக்களின் நிலங்களுக்கே செல்வார்கள். தற்போதுள்ள சூழலில் அந்தப் பெண்கள் வன்னியர் சமூக மக்களின் நிலங்களில் பணியாற்ற முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இந்தச் சூழலில் அந்த கிராமத்துப் பெண்களுக்கு 100 நாள் வேலைத்திட்டத்தில் ஏதாவது பணிகளை உடனடியாக மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்து தரவேண்டும். நூறுநாள் வேலையில் ஓரளவு இரு சமூக பெண்களும், ஆண்களும் ஒன்றிணைந்து பணியாற்றும் வாய்ப்புகளும் உள்ளது. இதன் மூலம் சமூக ஒருங்கிணைவை மேம்படுத்த முடியும்.

7. பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடும், காணொளி ஆதாரத்தின் அடிப்படையில் வன்முறையில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்து, எஸ்.சி. / எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவும் உறுதி செய்யப்பட வேண்டும். காவல்துறை எதிர்வழக்குகளைப் பதிவு செய்வதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களை அச்சுறுத்துவது கைவிடப்பட வேண்டும்.

 

Leave Comments

Comments (0)