படச்சுருள் - பனிக்காற்றில் கரைந்த பிஞ்சின் குரல்

/files/detail1.png

படச்சுருள் - பனிக்காற்றில் கரைந்த பிஞ்சின் குரல்

  • 0
  • 0

- லெட்சுமி நாராயணன்

(படச்சுருள் 'ஜூன் 2018' - "பாலியல் வல்லுறவு எதிர்ப்பு சினிமா" சிறப்பிதழை முன்வைத்து)

நான்காம் ஆண்டில் தனது பயணத்தை துவங்க இருக்கும் எனது ஆசான் மரியாதைக்குரிய "படச்சுருளுக்கு" வணக்கங்களும், அன்பின் வாழ்த்துகளும். படச்சுருள் இம்மாத "பாலியல் வல்லுறவு எதிர்ப்பு சினிமா சிறப்பிதழ்" வாசித்தேன். போன மாதம் (இந்துத்துவ எதிர்ப்பு), இந்த மாதம் (பாலியல் வல்லுறவு எதிர்ப்பு), வரும் மாதம் வரவிருக்கும் இதழ் (அரச பயங்கரவாத எதிர்ப்பு) என, மூன்று படச்சுருளின் இதழ்கள் மிகமிக முக்கியத்துவம் வாய்ந்தவை. காலத்தின் தேவை கருதி படச்சுருள் இவ்வாறு தீர்க்கமாக பேசிவருகிறது. பேசித்தான் ஆக வேண்டும்.

இந்துத்துவா எதிர்ப்பு இதழாக வந்து போன மாதம் இந்துத்துவத்தை நம்மில் திணிக்க முயலும் கூட்டத்தினை எதிர்த்தும், தெளிவான பரந்த, அழகியலில் மறந்து மறைந்து கிடந்த நம் கண்களை கழட்டி விட்டு புதிய பார்வையுடன் இந்துத்துவ எதிர்ப்பு சினிமாக்களை பதிவு செய்திருந்தது. இந்த மாதம் "பாலியல் வல்லுறவு எதிர்ப்பு சினிமா சிறப்பிதழாக" வந்திருக்கிறது. காஷ்மீர் மாநிலம் கதுவாவில் சிறுமி ஆஷிபா கடும் கொடூரர்களால் வல்லுறவு செய்யப்பட்டு மூர்க்கத்தனமாக கொல்லப்படுகிறாள். அதன் தாக்கத்திலே தான் இவ்விதழ் உருவாகியிருக்கிறது. அங்கு மட்டுமில்லை நாடெங்கிலும் நமக்கு தெரியாமலே இது போன்று எத்தனையோ பாலியல் வன்கொடுமைகள் நடக்கிறது. அவை நமக்கு மறைக்கப்படுவதும் நடக்கிறது. சிறுமி ஆஷிபா சம்பவம் நமக்கெல்லாம் எப்போது தெரிந்தது என்பதே இதற்கு அவலமான உதாரணம். குழந்தைகளுக்கு எதிராகவும், பெண்களுக்கு எதிராகவும், மிக முக்கியமாக தலித் பெண்களுக்கு எதிராக தொடரும் இந்த பாலியல் சார்ந்த வன்புணர்வுகளுக்கு காரணங்கள் என்ன? குழந்தைகளுக்கு எதிராக குடும்பத்திற்குள்ளாகவே நெருங்கின நபராலே வல்லுறவு நடப்பதின் காரணங்கள் என்ன? இதன் உளவியல் என்ன? இதை பற்றி நம் திரைப்படங்கள் பேசியிருப்பது என்ன? அவை சரியாகத்தான் பேசியிருக்கிறதா? என அலசுகிறது இந்த இதழ். ஏழு முக்கியமான கட்டுரைகள் வழியே இதை விரிவாக அலசியிருக்கிறது.

யமுனா ராஜேந்திரனின் "அத்தையின் மௌனமும், பாட்டியின் பழிவாங்குதலும்" என்ற கட்டுரை, குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் பாலியல் வன்கொடுமைகள் குறித்து நம்நாட்டில் வெளியான நான்கு முக்கியமான திரைப்படங்கள் பற்றி பேசியிருக்கிறது. அவையாவன, "சைலன்ஸ் (மராத்தி, கஜேந்திர அகிரே, 2017), அஜ்ஜி (ஹிந்தி, தேவசிஸ் முகிஜா, 2017), விடியும் முன் (தமிழ், பாலாஜி கே. குமார், 2014), கஹானி 2 (ஹிந்தி, சுஜாய் கோஷ், 2016) என்ற நான்கு திரைப்படங்களை எடுத்துக்கொண்டு மேலும் அதனை இரண்டாக பகுத்துக் கொண்டு அதாவது குழந்தைகளுக்கு எதிராக குடும்பத்திற்குள் நடக்கும் வல்லுறவை பேசியவை, வெளிநபர்களால் அக்குழந்தைகளுக்கு நடத்தப்படும் கொடூரங்கள் என விரிவாய் அலசியிருக்கிறார். ஒவ்வொரு படத்தின் கதையையும் சுருக்கமாக இக்கட்டுரையில் சொல்லியிருக்கிறார். மேலும் அந்த படங்கள் பேசியிருக்கும் விஷயத்தை நம்மில் ஆழமாய் கடத்துகிறார் யமுனா. 'சைலன்ஸ்' கதை என்னை மிகவும் பாதித்தது என்றாலும், 'அஜ்ஜி' படத்தில் வரும் பாட்டி, தன் பேத்தியை சிதைத்த கொடூரனின் குறிகளை கடும் கோபத்துடன் அறுத்து எறிந்து தன் செல்ல நாய்க்கு போட்டு அது தின்பதை பார்த்து நிம்மதியுடன் வீடு திரும்பிய பிறகு வீட்டின் பரணில் தன் தாய் - தந்தை அணைப்பில் தூங்கும் தன் பேத்தியை பார்த்து விட்டு நிம்மதியுடன் கீழே இறங்கி தையல் மெஷினில் அமர்கிறாள் என முடித்திருக்கிறார். அந்த பாட்டியின் மன ஒலியும், தையல் மெஷினின் புற ஒலியும் உங்கள் காதுகளில் தொடர்ந்து ஒலிப்பதை இக்கட்டுரையை வாசித்தவுடன் நீங்கள் கேட்க முடியும். இந்த படத்தை நிச்சயம் பார்க்க வேண்டும். ஆழமான கட்டுரை. நன்றி சார்.

அடுத்ததாக, சா. திருவாசகம் எழுதியிருக்கிற பூலான் தேவியின் கதையை சொன்ன திரைப்படமான "பண்டிட் குயின்" (சேகர் கபூர், ஹிந்தி, 1994), மற்றும் திருநெல்வேலி கோவில்பட்டியின் ஒடுக்கப்பட்ட சமூக பெண் போராளியான வீரலட்சுமியின் கதையை பேசிய திரைப்படமான "கோவில்பட்டி வீரலட்சுமி" (தமிழ், கோ. ராஜேஷ்வர், 2003) பற்றி அதிர்வாக பேசியிருக்கும் கட்டுரைதான் "ஆண்மை என்பது ஆண்குறி மட்டுமல்ல". கூட்டு பலாத்காரம், தமிழ் சினிமாவில் காட்டப்படும் கற்பழிப்பு காட்சிகள், அந்த திரைப்படங்களில் கிடைக்கும் உடனடித் தீர்வுகள், ஆனால் அதற்கு எதிர்மறையாக இங்கு நடக்கும் வன்புணர்ச்சிகள், அதற்கான தீர்வுகள், நம்மில் நீங்காத வடுவாக புதைந்து போய் கிடக்கும் "கையர்லாஞ்சி தலித் பெண்கள் வல்லுறவு கொடுமைகள், வாச்சாத்தி, அரியலூர் சிறுமி நந்தினி, பொள்ளாச்சி தலித் சிறுமிகள் வல்லுறவு, உத்திர பிரதேசத்தில் கடும் வல்லுறவு செய்யப்பட்டு மரத்தில் தொங்கவிடப்பட்ட தலித் சிறுமிகள் என ஞாபகப் படுத்துகிறார். இதுமட்டுமல்ல போர் மூலம் வெற்றி பெற்றவர்கள் தங்களின் அடக்குமுறையை வெறியை தோற்ற அந்த நாட்டின் பெண்கள் மீது பாலியல் வன்கொடுமைப் போராக நடத்தும் கொடூரங்கள் நடந்து கொண்டு தான் இருக்கிறது. ஈழப் பெண்களுக்கு நேர்ந்த கொடூரங்களும், வீரப்பனை பிடிப்பதற்காக பழங்குடி பெண்களை கொடூரமாக வன்புணர்ச்சி செய்த கர்நாடக மற்றும் தமிழக போலீசாரின் அடக்குமுறைகளும் அந்த மலைக்காட்டில் இன்னும் கேட்டுக் கொண்டு தான் இருக்கிறது. அந்த பெண்களின் இரத்த வாடையின் வீச்சம் அங்கு வீசும் காற்றில் இன்னும் இருக்கிறது. திருவாசகத்தின் கட்டுரை எனக்கு 'பாலமுருகன்' எழுதிய "சோளகர் தொட்டி" நாவலை எனக்கு நியாபகப்படுத்தியது. என்னை தொந்தரவு செய்த கட்டுரை இது. நாவலில் இருமாநில போலீசார்கள் அந்த சோளகப் பழங்குடி பெண்களை இருட்டுக் கொட்டடியில் அடைத்து அவர்களின் பிறப்புறுப்பில் கிளிப்பினை மாட்டி கரண்ட் ஷாக் கொடுத்து வதைக்கும் கொடூரங்கள் நீங்கள் சாகும் வரை உங்கள் நினைவில் இருந்து போய்விடாது. அது வெறும் புனைவல்ல. மறக்கமுடியாத நிஜம் இக்கட்டுரையில் அந்த அப்படிப்பட்ட கொடுமைகளை பார்த்து அனுபவித்து, அதற்கு எதிராக தீர்கக்கமாக போராடிய ஒடுக்கப்பட்ட பெண்களான "சம்பல் பள்ளத்தாக்கின் ராணி பண்டிட் குயின் "பூலான் தேவி", நம் "கோவில்பட்டி வீரலட்சுமியின்" கதையையும் சொல்கிறார் திருவாசகம். மிக முக்கியமான நேர்காணலாய் கோவில்பட்டி வீரலட்சுமியின் இயக்குநர் 'கோ. ராஜேஷ்வர்' திரைப்படம் உருவான விதம் குறித்து பேசியதும் இணைக்கப்பட்டுள்ளது. இந்த இரு வீர பெண்களுமே தலித் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைக்களுக்கு எதிராக, அடக்குமுறைக்கு எதிராக போராடியவர்கள் என தெளிவாக இக்கட்டுரையின் வழி அறியலாம். அவ்வாறு அந்த பெண்களுக்கு எதிராக எழும் அடக்குமுறை ஆண்குறிகளை இக்கட்டுரையில் அறுத்தெறிகிறார் சா. திருவாசகம். ஆண்மை என்பது என்ன? என நம்மிடமே வினவுகிறார். என்னை மிகவும் பாதித்த கட்டுரை இது. மிக்க நன்றிகள்.

கடந்த டிசம்பரில் நடந்த "சென்னை சர்வதேச திரைப்படவிழாவில்" முதல்முறையாக நான் படங்களை பார்த்தேன். அலுவலக வேலைகளுக்கிடையில் அந்த ஒரு வாரத்தில் 24 திரைப்படங்களை பார்த்திருந்தேன். இப்போதும் கூட தூக்கத்தில் எழுப்பி அதில் பிடித்த ஐந்து படங்களை உடனே சொல்லு லெட்சுமி, என யாராவது கேட்டால், அதில் நான் முதலில் சொல்லுவது "மரியத்தின்" கதையை சொன்ன, "ஹெய்தர் பென் ஹேனியா" இயக்கிய துனிஷிய பிரெஞ்சு இணைப்புத் திரைப்படமான "ப்யூட்டி அண்ட் தி டாக்ஸ்" தான் சொல்லுவேன். (மற்றவை 'நோ டேட், நோ சிக்னேட்சர், ஸ்வீட் கண்ட்ரீ, எ மேன் ஆஃப் இண்டகரிட்டி, ப்ளடி மில்க்) அற்புதமான திரைப்படம் இது. தேவியில் தான் மாலையில் இந்த படம் திரையிடப்பட்டது. நல்ல கூட்டம், படம் துனிஷியாவில் நடந்த உண்மைச் சம்பவம். ஒன்பது அத்தியாயங்களாக பிரிக்கப்பட்டு ஒரே இரவில் நடக்கும் கதை இது. சிறுகதை யின் தழுவல். படம் ஆரம்பித்து முதல் அத்தியாயத்தில் சீட் நுனிக்கு வந்த நான் படம் முடியும் வரை சீட்டின் பின்பக்கம் வரவே இல்லை. ஒரு சிறு சத்தம் கூட இல்லாமல் அமைதியாக அனைவரும் இத்திரைப்படத்தினை பார்த்தனர். இதே நிச்சலன மௌனம் இன்னொரு திரைப்படத்திற்கும் இருந்தது. அதை நான் 'கேஸினோவில்' பார்த்தேன். அத்திரைப்படம் "நோ டேட், நோ சிக்னேட்சர் (ஈரானியன் சினிமா)", சரி, நாம் திரும்ப நம் "மரியத்தை" பார்க்க வரலாம், 'மரியம் அல் பெர்ஜானி' ஒரு பல்கலைக்கழக இளம் மாணவி, ஒரு இரவில் தன் ஆண் நண்பனுடன் வெளியே செல்கிறாள், அப்போது துனிஷிய போலீஸாரால் அவள் வன்புணர்ச்சி செய்யப்படுகிறாள், அதற்கு அடுத்து இருளில் மஞ்சள்நிற தெரு விளக்கொளியில் பதைபதைப்புடன் நீலநிற உடையுடன் மிரட்சியுடன் தார்ச்சாலையில் தன் ஆண் நண்பன் பின் தொடர ஓடிவரும் மரியத்தின் கால்கள் துனிஷிய போலீசாரின் அதிகாரத்தை எதிர்த்து தனக்கான நீதி வேண்டி படம் முழுதும் நிற்காமல் ஓடுகிறது. அந்த ஓட்டம் படமாக மாறத் துவங்கிய விதம் எது?, இந்த திரைப்படத்தின் உருவாக்கம், இசை, நடிப்பு, ஒளிப்பதிவு, ஒலிப்பதிவு, கேமரா கோணங்கள், மிக மிக முக்கியமாக படத்தின் எடிட்டிங் எங்கு நிகழ வேண்டும்?, சுவாரசியமான கதையமைப்பு, நீண்ட காட்சி அமைப்புகள், முன் தயாரிப்புகள், 'கேன்ஸ்' சர்வதேச திரைப்படவிழாவில் படம் பெற்ற அங்கீகாரம் போன்றவற்றை பற்றி இப்படத்தினை இயக்கிய "ஹெய்தர் பென் ஹேனியா", 'நோபிலிம்ஸ்கூல்'க்கு (மூலம்: எமிலி - ஆங்கிலம்) தந்த நேர்காணலை அட்டகாசமாக தமிழில் மொழிபெயர்த்து தந்திருக்கிறார் தீஷா. இவ்விதழின் "க்ளாஸிக் கட்டுரை" இதுதான். தாறுமாறு கட்டுரை தீஷா. இது ஏற்கனவே தமிழ் ஸ்டுடியோ வின் "கருப்பில்" வந்திருந்தது. இவ்விதழில் வெளிவந்திருப்பது மிக பொருத்தமானது. அவசியமானதும் கூட"ஒரு அழகியும், சில நாய்களும்" என்கிற அட்டகாசமான கட்டுரை இது. மறுவெளியிடலுக்கு மிக்க நன்றி ஆசிரியரே. வேற லெவல் தீஷா நீங்கள், மரியாதை கலந்த நன்றிகள் தங்களுக்கு.

அடுத்து நாம் நிச்சயம் படிக்க வேண்டியது, தி. குலசேகர் எழுதியிருக்கிற "ஐந்து சினிமா - ஒரே மையம்" என்கிற கட்டுரை. ஐந்து முக்கியமான படங்களை எடுத்துக் கொண்டு அதனை ஒரே மையப்புள்ளியில் இணைக்கிறார் தி. குலசேகர். ஶ்ரீ தேவி நடிப்பில் வெளியான ஹிந்தித் திரைப்படமான "மாம்", "போர்சேக்கென்" என்கிற மராத்திய திரைப்படம், மணிகண்டன் இயக்கிய விதார்த் நடிப்பில் தமிழில் வெளிவந்த "குற்றமே தண்டனை", லீனா இயக்கிய ஹிந்தித் திரைப்படமான "பார்ச்சடு", அடுத்த படமான மாலினி ஜூவரெத்தினம் இயக்கிய "லேடீஸ் அண்ட் ஜென்டில்விமன்" போன்றவைகளை அதன் கருப்பொருளை எடுத்துக்கொண்டு அலசுகிறார். மிக முக்கியமாக "குற்றமே தண்டனை" பற்றியும், "பார்ச்சடு, லேடீஸ் அண்ட் ஜென்டில்விமன்" பற்றியும் அவர் நுணுக்கமாய் எழுதியிருக்கும் விதம் மிகவும் அலாதியானது. இவ்விதழின் நீண்ட கட்டுரை இதுவே. அவசியம் வாசிக்க வேண்டிய கட்டுரை இது. தி.குலசேகரின் கிரிக்கெட்டில் ஒரு ஓவருக்கு ஐந்து பந்துகள் தான். மனிதர் அசால்ட்டாக ஐந்து பந்தையும் சிக்ஸர் அடித்துவிட்டு இன்னும் மட்டையை சுழற்றுகிறார். அடுத்த மாதம் பார்த்துக்கலாம் சார். நன்றி.

அடுத்தததாக, "லென்ஸ்" திரைப்படம் குறித்த அதன் இயக்குனர் "ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணன்" நேர்காணல் கட்டுரை முக்கியமானது. "லென்ஸ்", ஒரு சுயாதீன சினிமாவாக உருவானது எப்படி? சுயாதீன திரைப்பட உருவாக்க நடைமுறை இடர்பாடுகள், சவால்கள், கதை சார்ந்து இது தனிமனித பிரச்சினை பற்றி பேசும்போது அது செல்லும் இலக்கு என்ன? அதன் கதை உருவான விதம், படம் உருவாக்கலில் இருந்த சிக்கல்கள், முதல்படம் இணைய வழி நிகழும் பாலியல் வன்முறை பற்றிய படம், நடிகராக இருந்த ஜெயப்பிரகாஷ் இயக்குநராக மாறிய விதம், நடிகர்கள் கிடைத்த விதம், தொழில்நுட்பக் கலைஞர்கள் படத்திற்குள் வந்த விதம், தன்னை ஒரு இயக்குநராக ஜெயப்பிரகாஷ் உருவாக்கிக் கொண்ட விதம், திரைப்படம் முடிந்த பிறகு ஏற்பட்ட குழப்பங்கள், திரைப்படவிழாக்களுக்கு திரைப்படம் சென்றடைய எடுத்துக்கொண்ட கடுமையான முயற்சிகள், திரைப்பட விழாக்களில் படம் பங்கு பெற்று விருதுகளை அங்கீகாரங்கள் பெற்ற போது ஏற்பட்ட மனநிலை, திரையரங்க வெளியீடு சார்ந்த நகர்தல், மக்களிடம் படம் ஏற்படுத்திய விவாதங்கள் என தனது திரைப்படம் குறித்து மிக தெளிவாக அவர் பகிர்ந்து கொள்கிறார். சதீஷின் வினாக்களும் ஆழமாக இருக்கிறது. நல்ல கட்டுரை இது.

இந்திய திரைப்படத்துறையில் நடிகைகளுக்கு இருக்கும் பாலியல் சார்ந்த தொந்தரவுகளை, கொடுமைகளை தனது கட்டுரையான "இந்திய சினிமாவில் பாலியல் சுரண்டல் ஊரறிந்த ரகசியம்" வழி அப்பட்டமாக தோலுரித்து காட்டுகிறார் வி. கோபி. 'லெஸ்லீ உத்வின்' இயக்கியிருந்த "இந்தியாவின் மகள்" ஏன் இந்தியாவில் தடை செய்யப்பட்டது. அதன் அரசியலையும் வினவுகிறார் வி. கோபி.

"என்னங்கானும் சடையரே!! என்னங்கானும் மடையரே!! இவ்விதழில் சும்மா புகுந்து விளையாடி இருக்காங்க, இந்த மாத படச்சருளை வாங்கி படிக்காட்டி கையில வச்சிருக்கற லட்டு பூந்திக் கரண்டியால நம்ம மண்டைய பிளந்துடுவாங்க. ஊதா கலரு ரிப்பன் கிப்பன், பொம்மீ உனக்கு யாரூ மம்மின்னுலாம் இனி ஏதும் பாடிபூடாதீங்க. சடையனும், மடையனும் நம்மள வச்சு செஞ்சுடுவாங்க. மறக்காம படச்சுருளல படிச்சுடுங்க.

\r\n

Leave Comments

Comments (0)