“ படச்சுருள்” ஒரு முடிவிலா வானம்!

/files/detail1.png

“ படச்சுருள்” ஒரு முடிவிலா வானம்!

  • 0
  • 0

-லட்சுமி நாராயணன்

 


\r\n(படச்சுருளின் இதழ்களை முன்வைத்து)

 

இமைக்க மறந்த விழிகள் :

 

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒருநாள்...அப்போது மாலை மணி 3.30 இருக்கலாம். தியாகராய நகர் பனகல் பூங்கா அருகில் உள்ள ஒரு புத்தகக் கடையில் வியர்வையுடன் நுழைகிறேன். அலுவலக வேலை முடிந்து வந்த நேரம் அது. சிறிய தூக்கக் கலக்கம், கொஞ்சம் தாகமாகவும் இருந்தது. அந்த மாத இலக்கிய இதழ்களை வாங்குவதற்காக வந்திருந்தேன். கடையின் இடதுபுறம் உள்ள ரேக்கில் ”உயிர்மை, உயிர் எழுத்து, கனையாழி, காலச்சுவடு, காக்கைச் சிறகினிலே” போன்ற பலவிதமான இலக்கிய இதழ்கள், மேலும் சிற்றிதழ்கள் சிலவும் இருந்தன. நோட்டம் விட்டுக் கொண்டே வழக்கமாக வாங்கும் இதழ்களை கைகளில் எடுத்துக் கொண்டே வந்தேன். அந்த இதழ்களுக்கு இடையில் மேல்வரிசை மூன்றாவதாக ஒரு புத்தகத்தில் “சிங்கத்தினை யொத்த வெண் பிடரி முடியுடனும், நீண்ட தூய வெண் மீசையுடன், பெரிய கண்ணாடியுடனும், அட்டகாச சிரிப்புடனும் நம் புரட்சிக்காரன் ஜெயகாந்தன் இருப்பதை பார்க்கிறேன்.” அசத்தலான அட்டைப்படம் அது. என் கண்கள் விரிகின்றன. இதழின் பெயரை பார்க்கிறேன் “படச்சுருள்”! மீண்டும் ஒருமுறை படிக்கிறேன் “படச்சுருள்”! மேலும் கீழே “இலக்கியமும், சினிமாவும் சிறப்பிதழ் 2” என்றும் இருந்தது. ஆஹா இந்த இரண்டுமே நமக்கு மிகவும் பிடித்தவையாச்சே, கண்கள் பேரவலாய் அலைபாய்ந்தன. “மலர் – 2, இதழ் -4, ஆகஸ்ட் 2016, விலை ரூபாய் இருபது”, ரொம்ப நாட்களா வருகிறது போல, இவ்வளவு நாட்கள் தெரியவில்லையே நமக்கு? பெரும் ஆர்வத்துடனும், வியப்புடனும் அந்த இதழை கையில் எடுத்தேன்.

 ‘”சார்....என்று பின்புறம் ஒரு குரல் கேட்க.....யாருப்பா? அது என்று திரும்பினால் அந்தக் கடையில் வேலை செய்யும் ஒருவர் கையில் கருவேப்பிலை, கொத்து மல்லி, இஞ்சி எல்லாம் போட்டிருந்த மோர் டம்ளருடன் நின்றிருந்தார். ‘சார்.....இந்தாங்க...மோர் சாப்பிடுங்க என்றார் புன்னகையுடன்’......’ஓ ரொம்ப தேங்க்ஸ்ங்க’ என்று நேராகவும், ‘நீங்கள் வாழ்க’...என்று மனதிற்குள்ளும்  சொல்லிவிட்டு விரைவில் மோரை வயிற்றில் இறக்கினேன். இந்த உலகமே குளிர்ந்தது போல இருந்தது. “படச்சுருளை” புரட்டினேன். ஒரு ஓடு பார்வை ஓட்டினேன். முதல் பக்கத்தில் “ஆசிரியர் அருண். மோ” , இது பரிச்சயமான பெயராச்சே. எங்கோ இந்தப் பெயரை நான் பார்த்திருக்கிறேன். யோசனை மனதில் ஓட.....கண்கள் படச்சுருளில் ஓடிய படியே “ ஷேக்ஸ்பியரின் கிங் லியர், தங்கர்பச்சான் பேட்டி, சினிமாவும், இலக்கியமும், உன்னைப்போல் ஒருவன், யாருக்காகவோ அழுதான், இலக்கியத்தில் இருந்து உருவான குறும்படங்கள் என கட்டுரைத் தலைப்புகளும் , லெனின், அம்ஷன் குமார், தியோடர் பாஸ்கரன், பாஸ்கர் சக்தி” போன்ற பெயர்களும் என்னை ஏதோ செய்தது. விழிகள் இமைக்க மறந்து போயின.

 நான் பள்ளிக் காலத்தில் இருந்து “உயிர்மை” இதழின் வாசகன். முதலில் அதனை கண்டடைந்தது எனது ஊரான “பெரம்பலூர் மாவட்ட மைய நூலகத்தில் தான்”, நிறைய இலக்கிய இதழ்களும், அரிய சிற்றிதழ்களும் அங்கு வந்து குவிந்து கிடக்கும். “சாருநிவேதிதாவின்” சினிமா கட்டுரைக்காகவே ஒவ்வொரு மாதமும் இரண்டு தேதி ஆகிவிட்டால் போதும் நூலகத்திற்கு ஒரே ஓட்டம் தான். மனிதர் திரைப்படங்களை பிரித்தும் மேய்வார், சிலசமயம் ஆழ்ந்து அதனை உச்சம் நோக்கி கொண்டு செல்வார். ஆம் ஞாபகம் வருகிறது,  இவரின் (ஆசிரியர் அருண். மோ) வின் கட்டுரைகளை உயிர்மையில் நாம் வாசித்திருக்கிறோமே, இவர் அவராக இருக்குமோ? “பாலுமகேந்திரா வின் வீடு”, மேலும் பல முக்கியமான உலக சினிமா பற்றிய கட்டுரைகளை, குறும்படங்கள் சார்ந்த கட்டுரைகளையும் வாசித்தது என் நினைவில் நிழலாட, இது அவரின் இதழாகத்தான் இருக்கும். எது எப்படியோ இருக்கட்டும். இந்த இதழை விடக்கூடாது, நிச்சயம் படித்துவிட வேண்டும் என்று நினைத்துக் கொண்டே மற்ற வழக்கமான இதழ்களுடன் “படச்சுருளை” வாங்கிக்கொண்டு அந்தக் கடையில் இருந்து வெளியேறினேன். இப்படித்தான் “படச்சுருள்” என் கைகளுக்கு கடந்த 2016 ஆகஸ்ட் மாதத்தில் முதன் முதலாக வந்து சேர்ந்தது. “படச்சுருள்” தான் என்னை “ப்யூர் சினிமா” புத்தக்கடை நோக்கி இழுத்து வந்தது. அங்கு என்னை வாசலில் “ஜெய் பீம் காம்ரேட்” என்று மிக முக்கியமான ஆவணப்பட இயக்குநர் “ஆனந்த் பட்வர்தன்” தான் வரவேற்றார் என்பது மறக்கமுடியுமா? அங்கு வந்து படச்சுருளின் பழைய இதழ்களை கேட்டபோது ஆர்வமுடன் தேடி எடுத்துத் தந்த அன்பு படிமைத் தோழர்கள் “சந்தோஷ் மற்றும் ரியாஸ்” ம் என் நினைவுக்கு வருகிறார்கள். “படச்சுருள்” தான் எனக்கு “தமிழ் ஸ்டுடியோ வையும், நல்ல சினிமா சார்ந்து, சமூகம் சார்ந்து, சினிமா சார்ந்த ரசனை மாற்றம் மக்களிடம் வர வேண்டி அவர்கள் தொடர்ந்து பேசிவரும் முயற்சிகளையும், பேசுவதோடு  மட்டுமல்லாமல் அதனை நோக்கி களப்பணியாய் செய்து வரும் அரிய செயல்பாடுகளையும் எனக்கு அடையாளம் காட்டியது.

அடக்குமுறை என்பது வாழ்க்கைமுறை அல்ல :

“படச்சுருளின்” ஒவ்வொரு மாத இதழ்களுமே மிகமிக முக்கியமானது. தனித்துவமானது. வெறுமனே சினிமா கட்டுரைகளை மட்டும் கொண்டு வரும் இதழ் என்று நீங்கள் அதனை வரையறுத்துவிட முடியாது. அது ஒரு எல்லைக்குள் நிற்காது. அதற்கு வானமே எல்லை! அது ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட கருவை எடுத்துக்கொண்டு அது சார்ந்து வந்திருக்ககூடிய மிக முக்கியமான திரைப்படங்களை பற்றியும், அதன் படைப்பாளிகளின் நேர்காணல்கள், அந்த திரைப்படம் சார்ந்த தெளிவான சமூகப் பார்வையுடன் அந்த திரைப்படங்களின் உண்மையான நோக்கம் என்ன? அவை மக்களிடம் சரியாகத்தான் போய் சேர்ந்திருக்கிறதா? ஆம் என்றால் எப்படி? இல்லை என்றால் ஏன் அது கவனிக்கப்படாமல் போனது? என்னும் பெரும் விவாதத்தை அதில் வரும் கட்டுரைகள் படிக்கும் வாசகர் மனதில் ஏற்படுத்துகிறது என்பது உண்மை. சினிமா வேறு; அரசியல் வேறு என்பது கிடையாது. சினிமாவில் அரசியல் இருக்கிறது. அரசியலையும், சினிமாவையும் நீங்கள் பிரித்து பார்க்க முடியாது, சாதி, மதம், இனம், மொழி என அனைத்தையும் கடந்து மக்களை ஒன்றாக இனைத்த அதி உன்னத கலையே சினிமா! எனவே சாதியின் பேராலும், மதத்தின் பேராலும் அடக்குமுறைகள் தொடர்ந்து நிகழ ‘அடக்குமுறை என்பது எங்கள் வாழ்க்கைமுறை அல்ல’ என்று ஒரு கூட்டம் தனக்கான அடிப்படை உரிமை வேண்டி சம உரிமை வேண்டி, விடுதலை வேண்டி போராடியதே அது முழுமையான வெற்றியை அடைந்து விட்டதா? இல்லையா? ‘கருப்பில்’ நேற்று வாசித்த கட்டுரை ஒன்று என் மனதை போட்டு உலுக்குகிறது. இந்துத்துவ மோடியின் ஆட்சியில் மலம் அள்ளும் தொழிலாளர்களின் எண்ணிக்கை நான்கு மடங்கு அதிகரித்திருக்கிறது. இது எவ்வளவு பெரிய அவலம்? பல ஆண்டுகளாக நடந்து வந்த அந்த சமவுரிமைக்கான போராட்டத்தில் வெற்றியை வாங்கித் தந்த மனிதர்களை நமது திரைப்படங்கள் சரியான முறையில் தான் பேசியிருக்கிறதா?  பிறகு ஏன் அந்த மனிதர்களின் சிலைகளுக்கு நமது ஊரில்  இரும்புக் கூண்டு? இது மிகப்பெரிய விவாதம்! 

‘மெட்ராஸின்’ சுவரும் – ‘ஜபாயா’ எறிந்த கல்லும்: 

 நமது திரைப்படங்கள் சாதியை, மதங்களை எப்படி கையாண்டிருக்கிறது? அந்த திரைப்படங்கள் மூலம் மக்கள் மத்தியில் விளைந்த மாற்றம் என்ன?  “மெட்ராஸின்” சுவரும், “ஜபாயா” எறிந்த கல்லும் நமக்கு சொல்வது என்ன? ஜாபர் படேலின் “அம்பேத்கர்” திரைப்படம் பரவலான மக்களை அடைந்து அது பேச வேண்டியதை பேசிவிட்டதா? இங்கு சாதி என்கிற கட்டமைப்பை உடைக்காமல் எந்தவிதமான கலையோ, இலக்கியமோ முளைக்காது என்கிறாரே ‘தலித் முரசின்’ ஆசிரியர் புனித பாண்டியன் அது இங்கு சாத்தியமா? சினிமாவில் சாதியை பற்றி பேசலாமா? திராவிட சினிமா தலித் மக்களை எவ்வாறு சித்தரித்தது? முழுமையான தலித் சினிமா இங்கு அதாவது வணிகத்தை மட்டுமே மையமாக கொண்டு செயல்படும் தமிழ் சினிமாவில் சாத்தியமே இல்லை என்று கூறும் இயக்குனர் பா. இரஞ்சித் வைக்கும் கருத்துகள் எதனைக் காட்டுகிறது? தமிழ் சினிமாவில் எம்.ஜி. ஆரின் படங்களில் ஆரம்பித்து பாரதிராஜா படங்கள், சேரனின் பாரதி கண்ணம்மா, சுகாசினியின் இந்திரா, மணிரத்னம் படங்கள், கமல்ஹாசனின் தேவர் மகன், விருமாண்டி போன்ற படங்களில் இருக்கும் அரசியல் குறித்தும், பாலாஜி சக்திவேலின் வழக்கு எண், பா. இரஞ்சித்தின் அட்டக்கத்தி, மெட்ராஸ், விக்ரம் சுகுமாரனின் ‘மதயானைக் கூட்டம்’, கமலக்கண்ணனின் ‘மதுபானக்கடை’ போன்ற படங்களில் பேசியிருக்கும் விஷயங்களை நாம் படச்சுருளின் கட்டுரைகள் வழி நிச்சயம் வாசிக்க வேண்டும்.  இவற்றை நாம் ஆழமாய் விவாதிக்க வேண்டிய தேவை இன்று இருக்கிறது. 

இடப்பங்கீடு உரிமை! பிச்சையல்ல:

அதனைத் தொடர்ந்து உலக அரசியல் சினிமாக்கள், நம்மில் உருவான அரசியல் சினிமாக்கள், தமிழில் வலுவான அரசியல் சினிமாக்கள் உருவாகாமல் போன காரணத்தை முன்வைக்கும் கட்டுரைகள், ரித்விக் கட்டக், மிருளான் சென், கோவிந்த் நிஹ்லானி போன்றவர்களின் வங்காளப் படங்களில் பேசியுள்ள அரசியல், உலக அளவில் கம்யூனிச படங்கள் ஏற்படுத்திய தாக்கம் தமிழில் அறுவடை ஆகாமல் போனது ஏன்? மிக முக்கியமான உலக சினிமாவில் வெளியான கம்யூனிச திரைப்படங்கள் குறித்த கட்டுரைகள் என அற்புதமான சிறப்பிதழ் “கம்யூனிச சிறப்பிதழ்”, அரச பயங்கவாதத்தின் தாக்கத்தில் “நீட்” என்னும் சுருக்கு கயிற்றால் உயிரை விட்ட சகோதரி அனிதாவின் மரணம் படச்சுருளின்  “இடப்பங்கீடு சினிமா சிறப்பிதழில்” அடக்க முடியாத கோபமாய் வெளிப்பட்டு இருக்கிறது. அது “இட ஒதுக்கீடு” என்று பேசவில்லை. எங்களுக்கு சமவுரிமை உண்டு. அகவே இடப்பங்கீடு என்பதே சரி என்கிறது. இடப்பங்கீடு பற்றிய சரியாகவும், தவறாகவும் பேசிய திரைப்படங்கள் பற்றிய கட்டுரைகள்  இதிலிருக்கிறது. இன்று காவிகளின் ஆட்சியில் இந்துத்துவம் என்னும் பெயரில் நடக்கும் அநியாயங்கள் என்னென்ன? மணிரத்தினத்தின் படங்களில் உரைந்திருக்கும் அரசியல் என்ன?  ஆனந்த் பட்வர்தனின் “ராம் கே நாம்” நமக்கு காட்டுவது என்ன? என இந்துத்துவத்தால் பாதிக்கப்பட்ட மற்றும் இந்துத்துவத்துக்கு எதிராக போராடிய திரைப்படங்கள் குறித்த கட்டுரைகளால் நிறைந்திருக்கிறது “இந்துத்துவ எதிர்ப்பு சினிமா சிறப்பிதழ் (மே, 2018)”, இதனை எல்லாம் கருவாக எடுத்துக்கொண்டு ‘படச்சுருள்’ கொண்டு வந்திருக்கும் இதழ்கள் மிகவும் அரிதானவை. புரட்சியின் குரல் இது. “தலித் சினிமா சிறப்பிதழ் (ஆகஸ்ட் 2015), சாதி அடையாள சினிமா – இரு இதழ்கள் (அக்டோபர், நவம்பர் – 2016), அரசியல் சினிமா இரு சிறப்பிதழ்கள் (ஏப்ரல், மே – 2016), கம்யூனிச சினிமா இரு சிறப்பிதழ்கள் (ஜூன், ஜூலை 2017), இடப்பங்கீடு சினிமா சிறப்பிதழ் (அக்டோபர் 2017), இந்துத்துவ எதிர்ப்பு சினிமா சிறப்பிதழ் (மே 2018)” என தீர்க்கமாய் அது நம்மிடம் பேசியிருக்கிறது. 

சிற்றிதழ் வரலாற்றில் புரட்சி :

மேலும் தமிழ் சினிமாவின் நூற்றாண்டை கொண்டாடும் வகையில் “தமிழ் சினிமா நூற்றாண்டு சிறப்பிதழ்கள் (மூன்று புத்தகங்கள் – பிப்ரவரி-ஏப்ரல் 2017) கொண்டு வந்தது. இங்கு சுயாதீன சினிமாக்கள் காலத்தின் கட்டாயம், அவசியம் அவை நிறைய உருவாக வேண்டும், சுயாதீன சினிமா கலைஞர்களுக்கு பெரும் ஆதரவு தேவை, சுயாதீன சினிமாவின் தோற்றம், இன்று இயங்கும் சுயாதீன சினிமாக் கலைஞர்கள் குறித்த கட்டுரைகள் என “சுயாதீன சினிமா சிறப்பிதழ்களாக”, கடந்த டிசம்பர் 2016, ஜனவரி 2017 படச்சுருள் கொண்டு வந்தது. “சினிமா தயாரிப்பு சிறப்பிதழ் (ஜூன் 2016)”, தணிக்கை எனப்படும் திரைப்பட சென்ஸார் குறித்து தனி இதழ் “ திரைப்பட தணிக்கை சிறப்பிதழ் (ஜூலை 2015)” திரைப்பட விழாக்களின் அரசியல் குறித்தும், இன்றைய திரைப்பட விழாக்கள் குறித்தும், திரைப்பட விழாக்கள் சில தனக்கான பாரம்பரியத்தை இழந்து வெறும் திரைப்படங்களை விளம்பர நோக்கில் முன்னிருத்துவதாக இன்று மாறியிருக்கும் அவலம் குறித்தும், அதே சமயத்தில் திரைப்பட விழாக்கள் குறித்த முக்கியத்துவமான கட்டுரைகள் கொண்ட மிக மிக முக்கியமான இதழ் “திரைப்படவிழா அரசியல் சிறப்பிதழ் (டிசம்பர் 2015)”, ஒரு திரைப்படத்தை எடுப்பதை விட அதை பாதுகாப்பது மிக முக்கியமானது. தமிழில் ஆவணப்படுத்துதல் என்பது கெட்டவார்த்தை. அந்த கலாச்சாரம் இங்கு கிடையாது. பல அரிய நூல்கள், திரைப்படங்கள் நமக்கு கிடைக்காமலே போய்விட்டன. அதையும் தாண்டி தனி மனிதர்களாக, திரைப்படங்களை ஆவணப் படுத்தியவர்கள் இங்கு உள்ளனர். திரைப்பட ஆவணப்படுத்துதல் தொடர்பாக “திரைப்பட ஆவணக் காப்பகம் சிறப்பிதழை (செப்டம்பர் 2015)” படச்சுருள் கொண்டு வந்தது. தமிழ் சினிமாவில் பெண்கள் எவ்வாறு தங்களை வெளிப்படுத்திக் கொண்டார்கள் என்பதை சொல்லும் “தமிழ் சினிமாவில் பெண்கள் சிறப்பிதழ் (நவம்பர் 2015)”, திரையரங்குகள் என்றுமே நம் நெஞ்சை விட்டு நீங்காதவை. சிறு வயதிலிருந்தே நம் ஒவ்வொருவரும் திரையரங்கத்துடன் அணுக்கமாகவே இருந்திருப்போம். திரையரங்குகள் குறித்த ஒவ்வொரு மனிதனின் நினைவுகளும், சந்தோஷங்களும் அளவிட முடியாதது. இதனை மையமாக எடுத்துக்கொண்டு படச்சுருள் “மே 2017” ல் “திரையரங்க சிறப்பிதழை” கொண்டு வந்து சாமானிய மனிதர்களின் திரையரங்க அனுபவங்களை அவர்களின் நினைவில் கொண்டுவந்து தூக்கமற்ற இரவுகளை மனதில் விதைத்தது. இலக்கியங்கள் எவ்வாறு திரைவடிவம் எடுக்கின்றன? பரவலாக, பெரும் வரவேற்பை பெற்ற ஒரு சிறுகதையோ, நாவலோ திரைப்படமாக உருவாகும் போது அது எழுத்து மொழியில் இருந்து காட்சி மொழியாய் உருப்பெருகிறது. அவ்வாறு உருவான திரைப்படங்கள் மக்களின் ஆதரவை பெற்றதா? இலக்கியவாதிகள், எழுத்தாளர்கள் திரைப்பட உருவாக்கத்தில் பங்கு பெற்றவை, அவர்கள் இயக்கிய படங்கள் கவனிக்கப் பட்டதா? என விரிவாய் இலக்கியமும், சினிமாவும் என படச்சுருள் விவாதித்த இதழ்கள் தான் “இலக்கியமும், சினிமாவும் சிறப்பிதழ் (ஜூலை, ஆகஸ்ட் 2016)”, சினிமா சார்ந்த படிப்பு, கல்வி மிக முக்கியமானது. வாசிப்பு இல்லாத சமூகத்தினால் யாதொரு பயனும் இல்லை. இலக்கிய வாசிப்பு எந்த அளவிற்கு முக்கியமோ அதே அளவிற்கு “சினிமா சார்ந்த, சினிமா தொழில் நுட்பம் சார்ந்த, சினிமாவின் கூறுகள் சார்ந்த வாசிப்பு மிக அவசியம், அப்படிப்பட்ட அரிய சினிமா சார்ந்த புத்தகங்கள் குறித்தும், சினிமாவில் தொடர்ந்து வாசிப்பை மேற்கொள்ளும் இயக்குநர்கள் நமக்கு பரிந்துரைக்கும் புத்தகங்களையும், அவர்களின் சிறப்பான நேர்காணல்களையும் சேர்த்து படச்சுருள் சிறப்பிதழை கொண்டு வந்தது. அது “சினிமா புத்தகங்கள் சிறப்பிதழ் (செப்டம்பர் 2016)”, நடிப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி  நடிப்புக் கென இரு சிறப்பிதழ்கள் (அகஸ்ட் – செப்டம்பர் 2016), சென்னை பெருவெள்ளம், சுனாமி போன்ற பாதிப்புகள் நம்மை நெருக்கடியில் தள்ளின. அதனை முன்வைத்து “பேரழிவு சினிமா சிறப்பிதழ் (பிப்ரவரி 2016)” வந்தது. குழந்தைகள் சினிமாவின் அவசியம் குறித்து பேசிய “சிறுவர்கள் சினிமா சிறப்பிதழும் (மார்ச் 2016), குறிப்பிடத்தக்கது. இவற்றை எல்லாம் விட படச்சுருளின் ஆகப்பெரிய புரட்சி “LGBTQ மக்களுக்காக இரண்டு சிறப்பிதழ்களை” கொண்டு வந்தது தான். பேசாப் பொருளை பேசத் துணிந்து தீர்க்கமாய் பேசியிருக்கிறது படச்சுருள். கடந்த ஆண்டு தமிழில் வெளியான முக்கியமான கவனிக்கப்பட திரைப்படங்களை “தமிழ் சினிமா 2017 (பிப்ரவரி, ஏப்ரல் 2018)” சிறப்பிதழ்கள் என இரண்டு இதழ்கள் கொண்டு வந்து தமிழ் சினிமா பயணிக்க வேண்டிய பாதையை பற்றி விரிவாய் பேசியது. “எம். ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை” முன்னிட்டு எம்.ஜி.ஆர் க்கு திரைப்படத்திலும், அரசியலிலும் இருந்த பிம்பம் பற்றி விரிவாக “எம்.ஜி.ஆர் நூற்றாண்டு சிறப்பிதழில் (ஜனவரி, 2018), அலசியது. தமிழ் சினிமாவில் எம்.ஜி.ஆர் செய்தது என்ன? தமிழ் சினிமாவிற்கு எம்.ஜி.ஆர் செய்தது அதாவது கலை சார்ந்து செய்தது என்ன? என்ற பெரிய வினாவை நம்முன் வைத்துச் செல்கிறது. 

உனக்கு வானமே எல்லை!

கடந்த பிப்ரவரி 2018 “தமிழ் ஸ்டுடியோ” தனது முன்னெடுப்பாக, தன்னெழுச்சியாக சென்னையில் முதன்முதலாக “சென்னை சுயாதீன திரைப்பட விழாவை” ஆரவரமாய், அட்டகாசமாய் நடத்தியது. அதனை குறித்து ஏதும் பேசாமல் ஊடகங்கள் வாய்மூடி ஊமையாக இருந்தன. அடுத்த மாதமே அதில் கலந்து கொண்ட சினிமா ஆர்வலர்களை வைத்து அனுபவக் கட்டுரைகள் எழுதி ஒரு முழு இதழையே “சென்னை சுயாதீன திரைப்பட விழா (Independent Film Festival of Chennai-IFFC) “ சிறப்பிதழாக கொண்டு வந்து எழுச்சியை படைத்தது படச்சுருள். இந்த மாதம் பாலியல் வன்முறைக்கு எதிராக “பாலியல் வல்லுறவு எதிர்ப்பு சினிமா” சிறப்பிதழ், வரும் ஜூலையில் “அரசபயங்கரவாத எதிர்ப்பு சினிமா சிறப்பிதழ்” என அது பயணிக்கும் பாதை தீவிரமானது. தனித்துவமானது. படச்சுருளின் பணி மகத்தானது. பல பண நெருக்கடிகளுக்கு மத்தியிலும் இருபது ரூபாய்க்கு இப்படி ஒரு இதழை தருவது என்பது பெரிய விஷயம். இன்னும் நான் படச்சுருளின் பழைய  இதழ்களை முழுதும் வாசித்துவிட வில்லை. வாசிக்க வேண்டும். இந்த நான்காம் ஆண்டில் பயணத்தை துவங்கும் “படச்சுருளுக்கு” அன்பும், நன்றியும், வாழ்த்துகளும். படச்சுருளின் ஆசிரியர் அருண்.மோ, இணை ஆசிரியர் தினேஷ், மற்றும் ஆசிரியர் குழுவினர், இதழ் வடிவமைப்பாளர், எங்களுக்காக சிறப்பான கட்டுரைகளை தொடர்ந்து படச்சுருளில் எழுதிவரும் கட்டுரையாளர்கள் அனைவருக்கும் இந்த நாளில் மரியாதை கலந்த நன்றியும், பேரன்பும். படச்சுருளே உனக்கு வானமே எல்லை!

\r\n

Leave Comments

Comments (0)