ஒன்றரை லட்சம் தமிழர் கொல்லப்பட்டதன் உச்ச நாட்கள் மே 17, 18,19- மே 17 இயக்கம் 

/files/detail1.png

ஒன்றரை லட்சம் தமிழர் கொல்லப்பட்டதன் உச்ச நாட்கள் மே 17, 18,19- மே 17 இயக்கம் 

  • 0
  • 0

 

தமிழீழ விடுதலையை மீட்காவிட்டால், தமிழ்நாட்டிலும் இனப்படுகொலை நடக்கும். தமிழ்நாடு எழட்டும் என்று மே 17 இயக்கம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில், "ஒன்றரை லட்சம் தமிழர் கொல்லப்பட்டதன் உச்ச நாட்கள் மே 17, 18,19. ஒரு இனத்தின் விடுதலைக் கனவு நம் கண்ணுக்கு முன்னாலேயே புதைக்கப்பட்டது. தமிழகத்தின் அரசியல் தோல்வியின் குறியீடு மே17. அரசியல் தோல்வியினை குறியீடாகச் சுமந்துதான் மே பதினேழுஇயக்கம் உருவாக்கப்பட்டது.

2009ஆம் ஆண்டின் இந்த நாட்கள் மிகவும் கொடூரமானவை. உணவின்றி, தண்ணீர் இன்றி, கை இழந்தும், கால் இழந்தும் பங்கருக்குள் பதுங்கிக் கிடந்தவர்கள், பங்கருக்குள் வெளியே செல்ல முயற்சித்து ஷெல் குண்டுகள் அடித்து இறந்தவர்கள், இறந்தவர்களைப் புதைக்கக் கூட வழியில்லாமல் தெருக்களிலியே அப்படியே விட்டுவிட்டு நகர்ந்து சென்ற மக்கள், பெரும் ஓசையுடன் நுழையும் பிரம்மாண்ட ராணுவ டாங்கிகள் மண்ணில் வீரமரணம் அடைந்து கிடந்த மாவீரர்களை அடையாளம் தெரியாமல் மண்ணோடு மண்ணாக ஏற்றிப் புதைத்து விட்டுச் சென்ற அவலம், பாலுக்காக கதறி அழுத குழந்தைகள், No fire Zone களில் ஒரு குவளை கஞ்சிக்காக நீண்ட வரிசையில் காத்துக் கிடந்த தமிழ்க்குழந்தைகள், காயம்பட்டவர்களை ஏற்றி அனுப்பக் கப்பல் வருமா என்று காத்துக் கிடந்தே இறந்து போன மக்கள்,ஒரு குவளை அரிசிக்காகத் தேடி ஓடிய போது முதுகுக்கு பின்புறமாக வானத்திலிருந்து விழுந்த குண்டுகள், மருத்துவமனைகளாக மாற்றப்பட்ட மர நிழல்கள்,ரத்தத்தினை ஏற்றுவதற்குரிய உபகரணங்கள் இல்லாததால் பிளாஸ்டிக் கவர்களில் வைத்து ஏற்றப்பட்ட ரத்தம், தந்தை எங்கே போயிருப்பார் தாய் எங்கே போயிருப்பார், தங்கை எங்கே இருப்பார் எனத் தேடித் திரிந்த இளவல்கள், No Fire Zone களுக்குள் பறந்து வந்து விழும் குண்டுகளிலிருந்து தப்பிக்க அடுத்த Zoneஐ தேடி ஓடும் மக்கள்,காயம்பட்டு இறந்தவர்கள், மருத்துவமனைகளில் மருந்தின்றி இறந்தவர்கள், கொத்துக் கொத்தாய் குண்டுகள் பாய்ந்து இறந்தவர்கள், இவை அனைத்திற்கும் மத்தியில் நடந்தவை அனைத்தையும் புகைப்படங்கள் எடுத்து ஆவணப்படுத்திக் கொண்டிருந்த ஆவணக் குழு, இனவெறியர்களின் கையில் சிக்கினால் சித்ரவதைக்குள்ளாகப்பட்டுக் கொல்லப்படுவோம் எனத் தெரிந்தும் மக்களைக் காப்பதற்காக, வெள்ளைக் கொடியுடன் சரணடையச் சென்ற நடேசன், புலித்தேவன் போன்ற அரசியல்துறை போராளிகள்,வெள்ளைக் கொடியுடன் சரணடையச் சென்றாலும் கோரிக்கையினை கைவிடவில்லை, ஆயுதங்களை மவுனிக்கிறோம் என்று அறிவித்த அரசியல் திறம், நிர்வாணமாக்கப்பட்டு பின்னால் கைகள் கட்டப்பட்டு இழுத்துச் சென்று முதுகுக்குப் பின்னாலே சுடப்பட்டு வீழ்த்தப்படும் போதும் தன் உயிருக்காக எதிரியிடம் கெஞ்சாத வீரம்.

மே 17 என்ற நாளின் அடையாளங்கள் இவை. 7 கோடிக்கும் அதிகமான தமிழர் தமிழ்நாட்டிலிருந்தும் வாய் மூடிப் போயிருந்த தருணம், தமிழினத் தலைவர் என்று சொல்லியவர் ஈழ இனப்படுகொலையின் படங்களையே அச்சிடக் கூடாது என அச்சகங்களுக்கு ஆணையிட்டது ஒரு புறம், ரகசியமாக அச்சிட்டு துண்டறிக்கை விநியோகித்தவர்களை விரட்டி விரட்டி கைது செய்தது ஒரு புறம், போரில் என்ன நடக்கிறது, எதிர்க்க வேண்டியது யாரை என எதுவும் அறியாமல் “இலங்கை அரசே, போரை நிறுத்து” எனப் போராடிக் கொண்டிருந்த மக்கள் ஒரு புறம், IPL ல் சென்னை சூப்பர் கிங்ஸ் அடிக்கும் சிக்கர்களுக்கு விசிலடித்துக் கொண்டிருந்த இன்னொரு பகுதி இளைஞர்கள் ஒரு புறம், தேர்தல் முடிவுகள் வெளியாகி காங்கிரஸ் கட்சி மீண்டும் பதவியேற்று அமைச்சர் பதவிக்காகப் பேரம் பேசிக் கொண்டிருந்த முத்தமிழ் அறிஞரின் திமுக ஒரு புறம், சென்னையின் மயிலாப்பூரில் அமர்ந்து கொண்டு இனப்படுகொலையின் படங்களைப் பார்த்து தீவிரவாதிகள் ஒழிந்துவிட்டாகள் என ரசித்துக் கொண்டிருந்த கும்பல் ஒரு புறம் என அத்தனையும் நிகழ்ந்து கொண்டிருந்த நாள் மே 17.

நாம் நினைத்திருந்தால் இந்த போரை நிறுத்தியிருக்கலாம். தமிழ்நாட்டின் மக்கள் தொகை பிரான்சின் மக்கள் தொகையை விட இரண்டு மடங்கு பெரியது. இங்கிலாந்தின் மக்கள் தொகையை விட பெரியது. நாம் வீதியில் இறங்கியிருந்தால் போரின் முடிவை தலைகீழாக மாற்றியிருக்கலாம்.

நாம் அரசியல் இன்றி நின்றோம். தேர்தலை மட்டுமே அரசியலாகப் பார்த்தோம். அந்த அரசியல் தோல்வியில் இருந்துதான் மே பதினேழு இயக்கம் உருவாக்கப்பட்டது. தமிழீழத்தின் விடுதலையை யார் கைவிட்டாலும், நாங்கள் ஒருபோதும் கைவிடப் போவதில்லை. அதுவே எங்களின் பிரதானம். மே பதினேழு இயக்கத்தின் கடைசி தோழன் இருக்கும்வரை தமிழீழ விடுதலையை உரத்து முழங்குவான்.

இந்த இனப்படுகொலை கொடுத்த வலியினை நாம் மறக்கப்போவதில்லை. அதன் பின் செயல்பட்ட இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து, சீனா போன்ற நாடுகளின் துரோகத்தையும் மறக்கப்போவதில்லை. தமிழீழ விடுதலையை மீட்காவிட்டால், தமிழ்நாட்டிலும் இனப்படுகொலை நடக்கும். தமிழ்நாடு எழட்டும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
 

Leave Comments

Comments (0)