நாகை திருவள்ளுவன் உள்ளிட்ட தோழர்கள் மீது பொய்வழக்கு பதிந்த காவல்துறையினரைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

/files/detail1.png

நாகை திருவள்ளுவன் உள்ளிட்ட தோழர்கள் மீது பொய்வழக்கு பதிந்த காவல்துறையினரைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

  • 1
  • 0

மேட்டுப்பாளையத்தில் உயிரிழந்த 17 தலித் மக்களுக்கு நியாயம் கேட்டுப் போராடிய தோழர்களைச் சிறையில் அடைத்த காவல்துறையினரைக் கண்டித்து இன்று (டிசம்பர் 09) மாலை 3 மணிக்குப் பெரியார் உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பாகக் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

மேட்டுப்பாளையம் அருகில் உள்ளது நடூர். இங்கு சக்ரவர்த்தி துகில் மாளிகை என்னும் பெயரில், துணிக்கடை உரிமையாளர் சிவசுப்ரமணியத்திற்கு சொந்தமான வீடு உள்ளது. ஆணவ சாதியைச் சேர்ந்த இவருடைய வீட்டைச் சுற்றி, ஆணவ சாதி மக்களையும் தலித்  (அருந்ததியர்) மக்களையும் இரண்டாகப் பிரிக்கும் வகையில் 20 அடி தீண்டாமை சுவரைக் கட்டியுள்ளார்.

கருங்கல்லால் கட்டப்பட்ட அந்த சுவர் பராமரிப்பின்மை காரணமாகக் கடந்த டிசம்பர் 03ஆம் தேதி பெய்த மழையினால் அதிகாலை 5.30 மணிக்குத் தலித் மக்கள் குடியிருப்பின் மீது இடிந்து விழுந்துள்ளது. இதில் மூன்று வீடுகள் முழுமையாக நசுங்கி அதிலிருந்த பெண்கள் உட்பட 17 பேரும் உடல் சிதைந்து இறந்துள்ளனர். 17 பேரில் இரண்டு பேர் குழந்தைகள்.

தீண்டாமை சுவரால் 17 தலித் மக்களை ஆணவ சாதி வெறி கொலை செய்திருக்கிறது. மேலும்  17 பேரின் கொலைக்கு நீதி கேட்டுப் போராடிய  நாகை திருவள்ளுவன், வெண்மணி, கார்க்கி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட தோழர்கள் மீது காவல்துறையின் வழக்குப்பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர். கடந்த சனிக்கிழமை மாலை 4 மணிக்குக் கைது செய்யப்பட்ட தோழர்கள் விடுவிக்கப்பட்டனர். மேலும் தோழர்களின் முழு முயற்சியால் அந்த முழு தீண்டாமை சுவரும் இடிக்கப்பட்டது.

இந்நிலையில், தீண்டாமை சுவர் இடிந்து விழுந்து 17 பேர் இறந்ததிற்கு நீதி கேட்டுப் போராடிய நாகை திருவள்ளுவன், வெண்மணி, கார்கி உள்ளிட்ட தோழர்கள் மீது தாக்குதல் நடத்தி பொய் வழக்குகள் பதிந்து சிறையிலிட்டதை கண்டித்து, பெரியார் உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பாக இன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில்  மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. 
 

Leave Comments

Comments (0)