மேட்டுப்பாளையம் ஆணவக் கொலை- கள ஆய்வறிக்கை

/files/detail1.png

மேட்டுப்பாளையம் ஆணவக் கொலை- கள ஆய்வறிக்கை

  • 1
  • 0

 

தூத்துக்குடி மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் சாதி மறுப்பு திருமணம் செய்துகொண்டதற்காக இணையர் ஆணவக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக சமூக செயற்பாட்டாளர் எவிடன்ஸ் கதிர் கள ஆய்வு மேற்கொண்டு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், "அரசு கட்டிக் கொடுத்த தொகுப்பு வீடு. சுமார் 15 அடி நீளமும், 10 அடி அகலமும் கொண்டது. ஒரே அறை. மின்விசிறி கூட கிடையாது. இப்போது தான் கல்யாணம் ஆச்சு. சின்னஞ்சிறுசுகள் தனியாக உறங்க வேண்டும் என்பதற்காக என் உறவினர் வீடுகளில் படுத்து உறங்குவேன். விடிந்ததும் வீட்டிற்கு வருவேன். அன்றும் அப்படித்தான் வந்தேன். வாசப்படியில் கழுத்து வெட்டப்பட்டு ரத்தம் உறைந்து போய் என் மகனும் என் மருமகளும் பிணமாகக் கிடந்தார்கள். அய்யோ மகளே என்று பதறிப்போய் என் மருமகளை என் மடியில் தூக்கி வைத்து கதறினேன். என் கூட சேர்ந்து எங்க சேரி சனங்களும் அழுதனர் என்ற முத்துமாரி கலங்கிய கண்களுடன் தலைகுனிந்து கொண்டார்.

சோலைராஜாவிற்கு வயது 23. விளாத்திகுளம் குளத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர். கல்லூரணி உப்பளத்தில் வேலை பார்த்து வந்தார் சோலைராஜா. அப்போது பல்லாகுளம் கிராமத்தைச் சேர்ந்த பேச்சியம்மாள் என்கிற ஜோதி என்கிற பெண்ணும் வேலை பார்த்து வந்தார். நாளடைவில் சோலைராஜாவும் பேச்சியம்மாளும் நண்பர்களாகி பிறகு காதலிக்க தொடங்கினர். இந்த காதல் விவகாரம் அரசல் புரசலாக பேச்சியம்மாள் குடும்பத்தினருக்கு தெரிய வர பேச்சியம்மாளை கடுமையாக அடித்து சித்திரவதை செய்திருக்கின்றனர். அவருக்கு மாப்பிள்ளையும் பார்த்திருக்கின்றனர். 

வாழ்ந்தால் சோலைராஜாவோடுதான் வாழ்வேன் என்று முடிவெடுத்த பேச்சியம்மாள் கடந்த ஏப்ரல் 2019 மாதத்தில் வீட்டைவிட்டு வெளியேறி இருக்கிறார். என்ன செய்வது என்றே தெரியாத சோலைராஜா, பேச்சியம்மாளை அழைத்துக் கொண்டு தங்களது உறவினர்கள் வீடுகளில் தங்கியிருக்கிறார்.

சில நாட்கள் கடந்து பேச்சியம்மாளின் தந்தை அழகர், பல்லாகுளம் கிராமத்தைச் சேர்ந்த சாதி நாட்டாமை மற்றும் 15 பேர் கொண்ட கும்பல் குளத்தூருக்கு வந்துள்ளனர். சோலைராஜாவின் தாயார் முத்துமாரியிடம், நாங்கள் என்ன சாதி? நீங்கள் என்ன சாதி? எப்படி உங்க மகன், எங்க பெண்ணை இழுத்துக் கொண்டு போகலாம் என்று கேட்க, ஐயா உங்க மகள் தான் எங்கள் பையனை தேடி வந்திருக்கிறாள். உங்களுக்கு மனசு கஷ்டமாக இருந்தால் என் பையனை சமாதானப்படுத்தி உங்கள் பெண்ணை உங்களோடு அனுப்பி வைத்து விடுகிறோம். கொஞ்சம் அவகாசம் கொடுங்கள் என்று கெஞ்சி கேட்டிருக்கிறார் முத்துமாரி. ஆனால் பேச்சியம்மாள், அதெல்லாம் முடியாது நான் சோலைராஜாவுடன் தான் வாழ்வேன் என்று உறுதியுடன் இருந்திருக்கிறார்.

சில நாட்கள் கடந்து விடியற்காலை 6.00 மணியளவில் பேச்சியம்மாளின் தந்தை அழகர், சோலைராஜா வீட்டிற்கு வந்திருக்கிறார். அங்கிருந்த முத்துமாரியிடம், என் பெண்ணை எப்படியாவது சமாதானப்படுத்தி என்னிடம் அனுப்பி வைத்துவிடு. இல்லையென்றால் உன் மகனை கொன்றுவிடுவேன் என்று கோபத்துடன் கத்தியிருக்கிறார்.

சோலைராஜா, பேச்சியம்மாளை தேடிய அழகர் ஆட்கள் சோலைராஜாவின் உறவினர்களை எல்லாம் மிரட்ட தொடங்கியிருக்கின்றனர். ஒரு கட்டத்தில் சோலைராஜா பொறுப்பானவர் என்றும் அன்பானவர் என்றும் எந்த கெட்ட பழக்கமும் இல்லாதவர் என்றும் அறிந்த அழகர், விசாரித்த வரையில் பையன் நல்லவனாகத் தெரிகிறான். இரண்டு குடும்பமும் கலந்து பேசி திருமணம் செய்து வைத்துவிடலாம் என்று கூறியிருக்கிறார். அடுத்த சில கணங்களில் அதெல்லாம் முடியாது, உங்க சாதி என்ன? எங்க சாதி என்ன? மரியாதையாக பெண்ணை ஒப்படையுங்கள் என்று மிரட்டலாகவும் ஆபாசமாகவும் பேசியிருக்கிறார்.

சோலைராஜாவின் நெருங்கிய உறவினர்கள் ஒரு கட்டத்தில் அழகர் திருமணம் செய்து வைக்கலாம் என்று உடன்பட்டிருந்தார். ஆனால் சில சக்திகள் அவரை தொடர்ந்து சாதி வன்மத்தை ஏற்றி ஏற்றி அவர் மனதை கெடுத்துக் கொண்டிருந்தனர். ஒரு சமயம் கோபமாக பேசுவார், அடுத்த நிமிடம் பாசமாக பேசுவார். அவர் எப்படியாப்பட்டவர் என்று எங்களுக்கு புலப்படாமல் போனது என்று கூறுகின்றனர்.

தேடுதல் படலம் ஒரு பக்கம் இருக்க, பேச்சியம்மாளும் சோலைராஜாவும் 16 ஏப்ரல் 2019 அன்று ஒரு கோவிலில் இருவரும் மாலை மாற்றி திருமணம் செய்துள்ளனர். திருமணத்திற்கு பிறகும் கடும் மிரட்டல் வர பேச்சியம்மாள் தன் கணவர் சோலைராஜாவோடு குளத்தூர் காவல்நிலையம் சென்று தன்னுடைய தந்தை மற்றும் தனது குடும்பத்தினரால் எனக்கும் என் கணவருக்கும் என் கணவரின் குடும்பத்தினருக்கும் ஆபத்து இருக்கிறது. ஆகவே எங்களுக்கு பாதுகாப்பு கொடுங்கள் என்று புகார் கொடுத்துள்ளார். காவல்நிலையத்தில் இருதரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு ஒப்புக்கு அழகரிடம் இனிமேல் தொந்தரவு செய்ய மாட்டேன் என்று எழுதி வாங்கி அனுப்பியுள்ளனர்.

போலீஸ் ஸ்டேசனில் என் மருமகளின் தந்தை அழகர், என் மருமகளை பார்த்து கம்மலை கழட்டிக் கொடு என்று கேட்க, என் மருமகளும் கம்மலை கழட்டி கொடுத்துச்சு. வீட்டிற்கு அழைத்து வரும்போது வெறும் காதோடு வரக்கூடாது என்று சேத்து வைச்சிருந்த பணம் போக கடனை வாங்கி ஒரு பவுனில் கம்மலும் இரண்டு பவுனில் செயினும் போட்டு வீட்டிற்கு அழைத்து வந்தேன். இரண்டு மாதம் எங்கள் வீட்டிலிருந்த என் மருமகள் பேச்சியம்மாள் என்னை அத்தை என்று அழைத்ததில்லை. அம்மா என்று தான் கூப்பிட்டுச்சு.

என் கணவர் திருமணி, என் மகள் பிறந்து ஒரு வருடம் கழித்து கேன்சர் நோயால் இறந்து போய்விட்டார். என் மகன் சோலைராஜா நன்கு படிப்பான். குடும்ப வறுமையினால் என் மகள் படிப்பை விட்டுவிட்டு வேலைக்கு போக முயற்சி செய்தபோது என் மகள் சோலைரதி, அம்மா நான் வேலைக்கு போகிறேன் அண்ணன் படிக்கட்டும். அண்ணன் படித்தால் நம் இருவரையும் காப்பாற்றுவான் என்று கூறி 13 வயதில் என் மகள் வேலைக்கு போக ஆரம்பித்தாள். என் மகன் ஓரளவு நன்கு படித்தான், ஓரளவு சம்பாதிக்கவும் செய்தான். ஆனால் இந்த கேடுகெட்ட சாதி என் மகனையும் என் மருமகளையும் கொன்றுவிட்டு எங்கள் ஒட்டுமொத்த எதிர்காலத்தையே புதைத்துவிட்டது என்று கூறிய முத்துமாரியின் கண்களில் படர்ந்திருந்த கருமை வாழ்வின் சூன்ய கல்லாக நிலைத்திருந்தது.

ஒருமுறை அல்ல, மூன்று முறை பாதுகாப்பு கேட்டு காவல்நிலையங்களில் பேச்சியம்மாள் புகார் கொடுத்திருக்கிறார். புகார் கொடுத்த பேச்சியம்மாளிடம், போலீசார் கண்ட பரதேசி பயலை எல்லாம் கல்யாணம் பண்ணிக்கொண்டு பெத்தவங்களை தவிக்கவிடுவாயா? மரியாதையாக உன் புருசனை விட்டுவிட்டு உன் அப்பா, அம்மாவோடு சென்றுவிடு இல்லையென்றால் நாங்களே பொய் கேஸ் போடுவோம் என்று மிரட்டியிருக்கின்றனர்.

இந்த மிரட்டலுக்கு சோலைராஜா குடும்பத்தினர்கள் பயந்தார்களோ இல்லையோ பேச்சியம்மாள் அரசவே இல்லை. நீங்கள் பாதுகாப்பு கொடுக்கதான் இருக்கிறீர்களே தவிர எங்களை மிரட்டுவதற்கு அல்ல என்று கூற, போலீசார் என்ன செய்வதென்று தெரியாமல் பாதுகாப்பு தருகிறோம் என்று பெயருக்கு கூறிவிட்டு எந்த பாதுகாப்பினையும் கொடுக்கவில்லை.

என் அப்பாவை பற்றி உனக்கு எதுவும் தெரியாது. என் உறவினர்கள் கொலைவெறியுடன் இருப்பவர்கள். அதனால் வெளியில் வேலைக்கு செல்லாதே உள்ளூரிலேயே வேலைக்கு போ என்று சோலைராஜாவிடம் பேச்சியம்மாள் அறிவுறுத்த, சோலைராஜா உள்ளுரிலேயே பெயிண்டர் வேலைக்கு சென்றிருக்கிறார். 

குளத்தூர், பெரியார் நகரில் 10க்கும் மேற்பட்ட சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டவர்கள் மகிழ்ச்சியுடன் வாழ்கின்றனர். நாமும் அப்படியே வாழலாம் என்கிற நம்பிக்கையோடு இருவரும் வாழ்க்கையை தொடங்கியிருக்கின்றனர்.

குளத்தூரில் கக்கன்ஜி என்கிற நகர் இருக்கிறது. அங்கு முழுவதும் பறையர் மக்கள் மட்டுமே உள்ளனர். எல்லா மக்களும் கலந்து இருக்க வேண்டும் என்கிற அடிப்படையில் 20 ஆண்டுகளுக்கு முன்பு சிலர் எடுத்த முன்னெடுப்பின் விளைவாக பெரியார் நகர் உருவாக்கப்பட்டது. இங்கு பறையர், பள்ளர், நாடார் என்று அனைத்து சாதி மக்களும் உள்ளனர்.

இந்த இடத்திற்கு வேறு ஏதேதோ பெயரை எல்லாம் வைக்க பலரும் முயற்சி செய்தனர். ஆனால் நாங்கள் தான் இந்த இடத்திற்கு பெரியார் நகர் என்று பெயர் வைத்தோம். எங்கள் சமூகத்தில் சிலர் அம்பேத்கர் நகர் என்று பெயர் வைக்கலாம் என்று அப்போது முடிவெடுத்த போது, கக்கன்ஜி நகர் என்று இருக்கிறது, பெரியார் சாதி ஒழிப்பிற்காக போராடினார். ஆகவே பெரியார் நகர் என்றே வைப்போம் என்று முடிவெடுத்துதான் இந்த பெயரினை வைத்தோம். பெரியார் நகரிலேயே ஆணவக் கொலை நடந்திருக்கிறது. என்ன சொல்ல என்று ஒருவர் ஆதங்கப்பட்டார்.

கடந்த 03 ஜுலை 2019 அன்று இரவு சோலைராஜாவும் பேச்சியம்மாளும் மகிழ்ச்சியுடன் சிரித்து பேசிக் கொண்டிருந்திருக்கின்றனர். முத்துமாரியும் சோலைராஜாவும் பேச்சியம்மாளும் இரவு உணவு சாப்பிட்டிருக்கின்றனர். இறுதியாக பேச்சியம்மாளிடம் முத்துமாரி பத்திரமா உறங்குங்க நான் சந்திரகனி வீட்டில் உறங்கப்போகிறேன் என்று கூறிவிட்டு போக, எங்களோடு இருங்கம்மா என்று பேச்சியம்மாள் கூற, நீங்க சின்னஞ்சிறுசுக வாரேன்மா என்று கூறிவிட்டு போயிருக்கிறார்.

மறுநாள் பிணமாக சோலைராஜாவும் பேச்சியம்மாளும் கிடக்க அவர்களது இரண்டுமாத சிசுவும் வயிற்றில் சாதியால் கொல்லப்பட்டுக் கிடந்தது" என்று பதிவிட்டிருந்தார்.

Leave Comments

Comments (0)