தென்னக ரயில்வேயில் இந்தி திணிப்பு- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

/files/detail1.png

தென்னக ரயில்வேயில் இந்தி திணிப்பு- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

  • 0
  • 0

 

தமிழகத்தில் உள்ள ரயில்வே உள்ளிட்ட மத்திய அரசு நிறுவனங்களில் இந்தி மொழியைத் திணிப்பதைக் கைவிட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து அவ்வியக்கத்தின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கையில், ”தமிழ்நாட்டிலுள்ள ரயில்நிலையங்களில் பணியாற்றும் நிலைய அதிகாரிகள் (ஸ்டேஷன் மாஸ்டர்கள்), பகுதி கட்டுப்பாட்டாளர்கள் (ஸ்டேஷன் கண்ட்ரோலர்) ஆகியோர் கோட்ட கட்டுப்பாட்டு அலுவலகத்துடன் ஆங்கிலம் மற்றும் இந்தியில் தான் தொடர்புகொள்ள வேண்டும், அந்தந்த மாநில மொழியைத் தவிர்க்க வேண்டுமென்று தென்னக ரயில்வே உத்தரவிட்டுள்ளது. இது இந்தி பேசாத மாநிலங்களில் படிப்படியாக இந்தியைத் திணிப்பதற்கான முயற்சி எனவும், தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளை ஒதுக்குவதற்கான நடவடிக்கை எனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சுட்டிக்காட்ட விரும்புவதுடன் இதனை வன்மையாகக் கண்டிக்கிறது.

பல்வேறு தரப்பினரும் இந்த சுற்றறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில், தென்னக ரயில்வே, தகவல் தொடர்புகள் குழப்பமில்லாமல் புரிந்து கொள்ளக் கூடிய வகையில் அமைய வேண்டும் என சுற்றிக்கையை மாற்றியுள்ளது. இது தெளிவாக இல்லை. 
மக்களோடு தொடர்புடைய நிலைய அதிகாரிகள், கட்டுப்பாட்டாளர்கள், டிக்கட் பரிசோதகர், டிக்கட் வழங்குபவர் உள்ளிட்டோர் தமிழ்மொழியில் தொடர்பு கொள்வதே பயனுள்ளதாக இருக்கும். இதற்கு மாறாக இந்தி அல்லது ஆங்கிலத்தில்தான் தொடர்பு கொள்ள வேண்டுமெனக் கட்டாயப்படுத்துவது பொருத்தமானதல்ல; தேவையற்ற குழப்பத்தையும், சர்ச்சையையும் உருவாக்கும் என்பதை சிபிஐ (எம்) சுட்டிக்காட்டுகிறது.

எனவே, ரயில்வே நிர்வாகம் இரண்டாவதாக வெளியிட்ட சுற்றறிக்கையையும் உடனடியாக திரும்பப் பெற வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வற்புறுத்திக் கேட்டுக் கொள்கிறது. 

ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே கலாச்சாரம் என்ற தன்சித்தாந்த நிலையில் நின்று பாஜக அரசு இம்முடிவுகளை மேற்கொள்கிறது. சற்றுமுன்னதாக வரைவுக் கல்விக் கொள்கையில் இந்தியைத் திணிக்க முயற்சித்து பலத்த எதிர்ப்புக்குப் பின்பு பின்வாங்கியது. அடுத்து இந்த நடவடிக்கை வருகிறது. ஒன்றுபட்ட எதிர்ப்பு மட்டுமே மாநிலங்களின் உரிமை, மொழி, கலாச்சாரத்தைப் பாதுகாக்கும் என்று சுட்டிக் காட்டுவதோடு அனைத்து பகுதியினரும் கண்டனக் குரலெழுப்ப வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக் கொள்கிறது.

தமிழகத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்கள், மத்திய பொதுத்துறை நிறுவனங்கள், வங்கிகள், ரயில்வே துறை, தபால் / தொலைப்பேசி உள்ளிட்ட அனைத்து அலுவலகங்களிலும் புதியவர்களை பணியமர்த்தும் போது தமிழ்நாட்டைச் சார்ந்தவர்களுக்கு முன்னுரிமையளிக்கக் கூடிய விதத்தில் விதிகளை மாற்ற வேண்டும். 
ஒருவேளை தவிர்க்க இயலாத சூழலில் சில பதவிகளுக்கு வெளிமாநிலத்தவர்கள் பணியமர்த்தப்பட்டால் அவர்களுக்குத் தமிழ்மொழியைக் குறிப்பிட்ட காலத்திற்குள் கற்றுக் கொடுப்பதற்கு ஏதுவாக விதிகளை உருவாக்க வேண்டும். ஏற்கனவே தென்னக ரயில்வேயில் இந்தி மொழி கற்றுக் கொடுக்கும் ஏற்பாடு உள்ள போது, மாநில மொழியை ஏன் கற்றுக்கொடுக்கக் கூடாது?, அவ்வாறு கற்றுக் கொடுக்க வேண்டுமென்று சிபிஐ (எம்) வலியுறுத்துகிறது.

அரசியல் சாசனத்தின் 8வது அட்டவணையில் உள்ள அனைத்து மொழிகளுக்கும் சம அந்தஸ்து கொடுத்து மத்திய அரசின் ஆட்சி மொழிகளாக மாற்ற வேண்டுமென்ற கோரிக்கை வலுத்து வரும் சூழலில், இத்தகைய இந்தி திணிப்பு நடவடிக்கையை முற்றாகக் கைவிட வேண்டுமென சிபிஐ (எம்) மத்திய அரசையும், ரயில்வே நிர்வாகத்தையும் வலியுறுத்துகிறது” என்று குறிப்பிட்டுள்ளார். 

Leave Comments

Comments (0)