தியாகி இமானுவேல் நினைவு நாளில் சாதியை ஒழிக்கச் சபதமேற்போம்

/files/detail1.png

தியாகி இமானுவேல் நினைவு நாளில் சாதியை ஒழிக்கச் சபதமேற்போம்

  • 1
  • 0

 

பட்டியலிலிருந்து வெளியேறுவது அல்ல தீர்வு. சாதியை ஒழித்துச் சாதி இழிவிலிருந்து வெளியேறுவது தான் தீர்வு என்று தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில பொதுச் செயலாளர் தோழர் சாமுவேல் ராஜ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர், “1950களில் பள்ளர்(எ) தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தின் மீதான தீண்டாமை கொடுமைகளுக்கு எதிரான போராட்டக் களத்தில் களப்பலியானவர் தியாகி இமானுவேல் சேகரன்.

தீண்டாமை ஒழிப்பு மாநாடு இரட்டைக்குவளை ஒழிப்பு மாநாடு வழிபாட்டு உரிமை மறுக்கப்பட்ட கோவில்களில் வழிபாட்டு உரிமைக்கான போராட்டம் ஆகியவற்றை ஒருங்கிணைத்து தலைமை ஏற்று நடத்தியவர் தியாகி இமானுவேல் சேகரன்.

அண்ணல் அம்பேத்கரின் மரணத்தன்று இரங்கல் நிகழ்வு நடத்திய மிக முக்கியமான தலைவர் தியாகி இமானுவேல் சேகரன். இதன் வழியாகச் சாதி ஒழிப்பில் தியாகி இமானுவேல் சேகரன் அவர்களின் புரிதலைப் பங்களிப்பை நாம் உணர்ந்து கொள்ள முடியும்.

சாதி ஒழிப்பிற்காக அருந்ததியர் உள்ளிட்ட சமூக பிரிவினரோடும், அன்றைய தினம் ஒடுக்கப்பட்டிருந்த நாடார் பகுதியினரும் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டவர் தியாகி இமானுவேல் சேகரன் என்பதற்கு அழுத்தமான மறுக்க முடியாத ஆதாரங்கள் இருக்கிறது.

ஆனால் இன்றைக்கு மதவெறி சக்திகள் தேவேந்திரகுல வேளாளர் சமூகத்திற்குள் ஊடுருவி இதர ஒடுக்கப்பட்ட சாதிகளிலிருந்து தேவேந்திர குல வேளாளர் பகுதியினரை மட்டும் தனியாகப் பிரித்தெடுக்க பெரும் சதிவலையை விரிக்கிறார்கள்.

சாதி ஒழிப்பிற்காகப் போராட வேண்டிய மக்கள் மத்தியில் சாதிப் பெருமிதங்களை விதைத்து, இதர சாதிகளிலிருந்து தன்னை உயர்ந்த சாதி என்று காட்டிக் கொள்கிற சாதி நீடித்திருப்பதற்கான பிராமணிய மனநிலையைத் திணிக்கிறது.

சாதி ஒழிய வேண்டும் பிராமணிய மனநிலை ஒழிய வேண்டும் என்பதுதான் இன்றைய தேவை. சாதியை அதன் வெற்று பெருமிதங்களை வேரோடும் வேரடி மண்ணோடும் ஒழிப்போம். பட்டியலிலிருந்து வெளியேறுவது அல்ல தீர்வு. சாதியை ஒழித்துச் சாதி இழிவிலிருந்து வெளியேறுவது தான் தீர்வு. இட ஒதுக்கீடும் அதனால் பெறுகிற உரிமைகளும் சாதி ஒழிப்பிற்கான ஒரு ஆயுதம் என்பதை உணர்வோம். தியாகி இமானுவேல் நினைவு நாளில் சாதியை ஒழிக்கச் சபதமேற்போம்” என்று தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Leave Comments

Comments (0)