அம்பேத்கர் – பெரியார் வாசகர் வட்டத்தில் செயற்பட்டதால் சென்னைப் பல்கலைக்கழக மாணவர் கிருபா மோகனை கல்லூரியைவிட்டு நீக்கம் செய்வதா?

/files/detail1.png

அம்பேத்கர் – பெரியார் வாசகர் வட்டத்தில் செயற்பட்டதால் சென்னைப் பல்கலைக்கழக மாணவர் கிருபா மோகனை கல்லூரியைவிட்டு நீக்கம் செய்வதா?

  • 0
  • 0

அம்பேத்கர் – பெரியார் வாசகர் வட்டத்தில் இயங்கியதால் சென்னை பல்கலைக்கழக மாணவர் கிருபா மோகனை ஆளுநர் மாளிகை தந்த அழுத்தம் காரணமாகக் கல்லூரியிலிருந்து நீக்கம் செய்திருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது. இச்செயல் கருத்துரிமைக்கும், தனிமனிதச் சுதந்திரத்திற்கும் ஊறு விளைவிக்கும் எதேச்சதிகாரப் போக்கு என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ”அம்பேத்கர் – பெரியார் வாசகர் வட்டம் ஒரு தடைசெய்யப்பட்ட ஒரு அமைப்பில்லை. மாணவர்களுக்கு அறிவூட்டி அவர்களை அரசியல்படுத்தி மக்களுக்கானப் பொது வாழ்க்கையில் ஈடுபடத்தூண்டும் ஒரு முற்போக்கு அமைப்பு. இதன்மூலம், சமூக அவலங்களுக்காகக் குரல்கொடுக்கவும், அநீதிக்கெதிராகக் கூக்குரலிடவுமான ஒரு இளந்தலைமுறை தயார் செய்யப்படுகிறது. அத்தகைய அம்பேத்கர் – பெரியார் வாசகர் வட்டத்தைச் சென்னை ஐ.ஐ.டி.யில் நான்காண்டு முன்பு தடைசெய்த அதே ஆளும் வர்க்கம்தான். தற்போது அம்பேத்கர் – பெரியார் வாசகர் வட்டத்தில் இயங்கியதற்காக மாணவர் கிருபா மோகனை கல்லூரியிலிருந்து நீக்கம் செய்திருக்கிறது.

தகுதிச்சான்றிதழ் வழங்காததால் கல்லூரியைவிட்டு நீக்கம் செய்ததாக இதற்குக் கல்லூரி நிர்வாகம் காரணம் கற்பித்தாலும் அது உண்மையான காரணமல்ல. வேறு ஒரு பல்கலைக்கழகத்தில் படித்தவர்களுக்குத்தான் சென்னை பல்கலைக்கழகத்தில் சேருவதற்குத் தகுதிச்சான்றிதழ் தேவை. அதே கல்லூரியில் இதற்கு முன்பு இதழியல் பயின்றிருக்கிற கிருபா மோகனுக்குத் தேவையில்லை. இதனைக் கல்லூரி நிர்வாகமும் ஏற்கனவே அவரிடமே தெளிவுபட எடுத்துக் கூறியிருக்கிறது. தற்போதுவரை தகுதிச்சான்றிதழ் இல்லாமலே மற்ற மாணவர்களைக் கல்லூரிச் சேர்க்கைக்கும் அனுமதித்துக் கொண்டிருக்கிறது. அப்படியிருக்கையில், கிருபா மோகனை மட்டும் அதனைக் காரணம் காட்டி கல்லூரியைவிட்டு நீக்கம் செய்திருப்பது பழிவாங்கும் போக்கோடு மேற்கொள்ளப்பட்ட அப்பட்டமான அதிகார அத்துமீறல்! கொடுங்கோன்மையும், அரசப்பயங்கரவாதமும் சேர்ந்த ஓர் ஆட்சி மத்தியிலும், அவர்களுக்கு அடிமைச்சாசனம் எழுதி கொடுத்துவிட்ட ஓர் ஆட்சி மாநிலத்திலும் இருப்பதால் வந்த விளைவே இதுவெல்லாம். முதல் தலைமுறையாய் கல்வி கற்க வந்திருக்கும் மாணவர் கிருபா மோகனுக்கு இழைக்கப்பட்ட இத்தகைய அநீதிக்கு நீதி கிடைத்திட ஒருமித்துக் குரல்கொடுத்திட வேண்டியது முற்போக்கு மற்றும் சனநாயகச்சக்திகளின் தலையாயக் கடமை என்பதனையுணர்ந்து, மாணவர் கிருபா மோகன் தனது கல்வியினைத் தொடர நாம் தமிழர் கட்சி துணைநிற்கும் என இத்தருணத்தில் உறுதியளிக்கிறேன்.

ஆகவே, தமிழக அரசு இவ்விவகாரத்தில் உடனடியாகத் தலையிட்டு மாணவர் கிருபா மோகனின் நீக்கத்தை ரத்து செய்து கல்வியினைத் தொடர வழிவகை செய்ய வேண்டும் என நாம் தமிழர் கட்சி சார்பாகத் தமிழக அரசை வலியுறுத்துகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

Leave Comments

Comments (0)