karuppu - ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்ட பிறகு அதிகரித்திருக்கும் காற்றின் தரம்

ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்ட பிறகு அதிகரித்திருக்கும் காற்றின் தரம்

  • 2
  • 0

தூத்துக்குடியில் செயல்பட்டுவந்த ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு, அவ்வாலையிலிருந்து வெளிவரும் நச்சுப்புகையால் தூத்துக்குடி மாவட்ட மக்கள் புற்றுநோய், தோல் நோய், மலட்டுத் தன்மை போன்ற பல்வேறு நோய்களுக்கு ஆளாக்கப்பட்டு பெரும் இன்னல்களைச் சந்தித்து வந்தனர். இதனால் பல உயிரிழப்புகளும் ஏற்பட்டிருக்கிறது. அதனால் இந்த ஆலையை மூடக்கோரி அப்பகுதி மக்கள் பல நாட்களாகப் போராட்டம் நடத்திவந்த நிலையில், கடந்த ஆண்டு மே 22ஆம் தேதி தூத்துக்குடி மாவட்ட மக்கள் சுமார் 20,000க்கும் மேற்பட்டோர் ஒன்று சேர்ந்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப் பேரணியாகச் சென்றனர். அப்போது பேரணியாகச் சென்ற பொதுமக்கள் மீது காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். வெளிநாட்டு வேதாந்தா நிறுவனத்திற்காகச் சொந்த நாட்டு மக்களையே சிறிதும் இரக்கம் இல்லாமல் துப்பாக்கிச் சூடு நடத்தி படுகொலை செய்தது எடப்பாடி அரசு. இதில் இரண்டு பெண்கள் உட்பட 16 பேர் படுகொலை செய்யப்பட்டனர். 100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்த நிலையில், சிலர் கை, கால்களை இழந்து வாழ்நாள் முடக்கமாகியுள்ளனர். பல்வேறு கட்ட போராட்டங்களுக்குப் பிறகு 2018 ஏப்ரல் மாதம் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது.

ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்ட பிறகு தூத்துக்குடியில் காற்று மாசு குறிப்பிடத்தக்க வகையில் குறைந்திருப்பதாக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் காற்று சோதனை தரவுகள் தெரிவிக்கின்றன. ஸ்டெர்லைட் ஆலை இயங்கிய காலகட்டமான 2017, 2018 ஏப்ரல் வரையிலான காலகட்டங்களில் காற்றின் தரம் 56 சதவிகிதம் ஆரோக்கியமற்று இருந்திருக்கிறது. ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்ட பிறகு அதாவது ஏப்ரல் 2018 தொடங்கி மார்ச் 2019 வரை இந்த அளவு 27 சதவிகிதமாகக் குறைந்திருக்கிறது.

Leave Comments

Comments (0)