உயர்சாதியினருக்கு மட்டும் சட்ட விரோதமாக பம்பர் பரிசா?- கி.வீரமணி

/files/detail1.png

உயர்சாதியினருக்கு மட்டும் சட்ட விரோதமாக பம்பர் பரிசா?- கி.வீரமணி

  • 0
  • 0

 

தமிழ்நாட்டு மக்களின் வரிப் பணத்தில் மாநில அரசின் நிதியில் நடத்தப்படும் மருத்துவக் கல்லூரி இடங்களை எடுத்துச் சென்று, அந்த மாநிலத்தின் பெரும் எண்ணிக்கை வாசிகளான பிற்படுத்தப்பட்டோருக்குப் பட்டை நாமம் சாத்துவதா? என்று திராவிட கழகத் தலைவர் கி.வீரமணி கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”மாநிலங்களிலிருந்து மத்திய தொகுப்புக்கு எடுத்துச் செல்லப்படும் மருத்துவக் கல்விக்கான இடங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு மட்டும் இட ஒதுக்கீடு கிடையாதாம். நாடாளுமன்றத்தில் உள்ள பிற்படுத்தப்பட்ட உறுப்பினர்களே, என்ன செய்து கொண்டு இருக்கிறீர்கள்? இரத்தம் கொதிக்கவில்லையா?

நாடு முழுவதும் உள்ள சுமார் 30,774 மருத்துவ பட்ட மேற்படிப்பிற்கான இடங்களுக்கு அகில இந்திய நீட் பீஜி தேர்வு ஜனவரி மாதம் நடத்திட மத்திய அரசால் திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான குறிப்பாணையை நவம்பர் ஒன்றாம் தேதி மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

பிற்படுத்தப்பட்டோருக்கு மட்டும் இட ஒதுக்கீடு கிடையாதாம்!

அதில் மொத்தமுள்ள 30,774 இடங்களில் 50 சதவிகிதம் அதாவது 15,387 இடங்களுக்கு மத்திய அரசே கவுன்சிலிங் மூலம் இடத்தை நிரப்பும். இந்த 15,387 இடங்களில் இப்போதுள்ள இட ஒதுக்கீடு முறையில் 50 சதவிகிதம் (7,693 இடங்கள்) பொதுப்பிரிவிலும், 22.5 சதவிகிதம் (3,462 இடங்கள்) ஒடுக்கப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கும், 27 சதவிகிதம் (4,155 இடங்கள்) இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும் வழங்கப்படவேண்டும். ஆனால், மத்திய அரசோ அதில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு மத்திய அரசால் நிர்வகிக்கப்படும் கல்லூரிகளில் மட்டுமே வழங்கப்படும் என்றும், மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள கல்லூரிகளிலிருந்து பெறப்படும் இடங்களில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு வழங்கத் தேவை இல்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்மூலம் கடந்த சில ஆண்டுகளாக மிகவும் சொற்பமான 300 இடங்களில் மட்டுமே இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினர் அனுமதிக்கப்படுகின்றனர். இந்த நிலை வரும் கல்வியாண்டிலும் தொடர்வதால் சுமார் 3,800 இடங்கள் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்குக் கிடைக்காமல் போகும்.

உயர்சாதி ஏழைகளுக்கு மட்டும் ‘பம்பர்' பரிசா?

ஆனால், இதே ஆணையில் 10 சதவிகிதம் உயர்சாதியில் ஏழையினருக்கு (EWS) மொத்தமுள்ள 15,387 இடங்களிலும்  இடம் கொடுக்கவேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால், உயர் சாதியினருக்குத் தனியாக மேலும் பொதுப்பிரிவில் உள்ள 7,693 இடங்கள் போக, 1,538 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஆனால், 27 சதவிகிதம் உள்ள இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு மறுக்கப்பட்டுள்ளதால், வெறும்  300 இடங்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் இழப்பு 3,800 இடங்கள். இது மிகப்பெரிய சமூக அநீதியாகும் - கொடுமையிலும் கொடுமையாகும்.

தமிழ்நாட்டு மக்களின் வரிப் பணத்தில் மாநில அரசின் நிதியில் நடத்தப்படும் மருத்துவக் கல்லூரி இடங்களை எடுத்துச் சென்று, அந்த மாநிலத்தின் பெரும் எண்ணிக்கை வாசிகளான பிற்படுத்தப்பட்டோருக்கு பட்டை நாமம் சாத்துவதா? மாநில அரசு என்ன செய்துகொண்டுள்ளது? பா.ஜ.க.வுக்கு பஜனை பாடவே நேரம் போதவில்லையா? கண்டிக்கத் தக்கது.

உயர்சாதியினருக்கு மட்டும் சட்ட விரோதமாக பம்பர் பரிசா?

இவ்வளவுக்கும் மக்கள் தொகையில் மிகவும் அதிகமானவர்கள் பிற்படுத்தப்பட்டோரே! (மண்டல் குழு அறிக்கைப்படி 52 விழுக்காடு) ஜனநாயகப்படி பெரும் பான்மையான மக்களுக்குரிய உரிமை வழங்கப்படுவதற்கு மாறாக மறுக்கப்படும் கொடூரம்!

தமிழ்நாட்டுக்குப் பேரிழப்பு!

தமிழகத்தில்தான் இந்தியாவிலேயே அதிக அரசு மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. மேலும் சுமார் 1,758 மருத்துவப்பட்ட மேற்படிப்பிற்கான இடங்கள் இங்கே, அதிலும் இந்தியாவிலேயே முன்னணி மாநிலமாக உள்ளது. இருந்த போதிலும், இந்த 1,758 இடங்களில் 50 சதவிகிதம் அதாவது 879 இடங்களை மத்திய அரசிடம் கொடுத்து விடுகிறோம். இந்த 879 இடங்களில் தமிழகத்தில் நடைமுறையில் உள்ள 50 சதவிகிதம் பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டை அமல்படுத்த முடியாததால் (இடங்கள் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் சென்றுவிடுகிறது). சுமார் 450 மருத்துவ பட்ட மேற்படிப்பிற்கான இடங்களை ஆண்டுதோறும் தமிழகத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோரும், மிகவும் பிற்படுத்தப்பட்டோரும் மருத்துவ இடங்களை இழக்கிறார்கள்.

உயர்சாதியில் ஏழைகள்மீது கரிசனம் பாரீர்!

அதேநேரத்தில், சட்ட விரோதமான - உச்சநீதிமன்றத்தாலேயே நிராகரிக்கப்பட்ட பொருளாதார அளவுகோலை உயர்சாதியில் ஏழை என்பவர்கள்மேல் செலுத்தி (10 விழுக்காடு) இடங்களை அள்ளிக் கொட்டுகிறார்கள்.

வங்கித் தேர்வில் நடந்தது என்ன?

எடுத்துக்காட்டாகக் கடந்த ஜூன் மாதம் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கியில் கிளார்க் பணிகளுக்காக நடத்தப்பட்ட தேர்வில் எப்படி மதிப்பெண் (கட்-ஆஃப் மார்க்) மதிப்பீடு செய்யப் பட்டுள்ளது?

பொதுப் பிரிவினருக்கு 61.25%

இதர பிற்படுத்தப்பட்டோருக்கும், தாழ்த்தப்பட்டோருக்கும் 61.25 %

மலைவாழ் மக்களுக்கு 53.95% நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஆனால், பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர்சாதியினருக்கான கட் ஆஃப் மார்க் என்ன தெரியுமா? 25.5%

நியாயப்படி கல்விக் கூடங்களில் 25.5% மதிப்பெண் பெற்றால் தேர்ச்சி கிடையாது. ஆனால்,  பி.ஜே.பி. என்னும் மனுதர்ம ஆட்சியிலே 61.25% மதிப்பெண் பெற்றால்தான் ஒடுக்கப்பட்டோருக்கு, இதர பிற்படுத்தப்பட்டோருக்குத்  தேர்ச்சி. ஆனால், உயர்சாதியினருக்கோ கட் ஆஃப் மார்க் வெறும் 25.5 சதவிகிதம்.

மனுநீதி ஒரு குலத்துக்கொரு நீதி என்பது இதுதானே!

பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட உறுப்பினர்கள் என்ன செய்யவேண்டும்?

இரத்தம் கொதிக்கவில்லையா? நாடாளுமன்றத்தில் இருக்கக்கூடிய ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்?

மக்களவை தி.மு.க. குழுத் தலைவர் மானமிகு டி.ஆர்.பாலு அவர்கள் இது குறித்து நேற்று குரல் எழுப்பியுள்ளது பாராட்டத்தக்கது. நாடாளுமன்றத்தில் உள்ள ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட உறுப்பினர்களை ஒருங்கிணைத்து இந்த மனுதர்ம சமூக அநீதிக்கு முடிவு கட்ட வேண்டும். இதைத் தி.மு.க. உறுப்பினர்களும் முன்னெடுக்கவேண்டும் என்பது நமது கனிவான வேண்டுகோள்!

ஜனநாயகம் என்பது பெரும்பான்மை மக்களுக்கானது. ஆனால், மனுநீதி பி.ஜே.பி. ஆட்சியிலோ குறைந்த எண்ணிக்கையில் உள்ள பார்ப்பனர்களுக்குத்தான் எல்லாமும் என்ற நிலை உறுதிப் படுத்தப்பட்டுள்ளது. இனி நாம் என்ன செய்யவேண்டும்? குட்டக் குட்ட குனிந்து கொண்டு இருக்கப் போகிறோமா?

உரிமை மறுக்கப்பட்ட மக்கள் எரி மலையாகக் கிளர்ந்து எழுவது எந்நாள்? தந்தை பெரியார் பிறந்த மண்தான் குரல் கொடுக்கவேண்டும் - கொடுப்போம் - நிமிர்ந்திடுவீர், எழுந்திடுவீர்” என்று தெரிவித்துள்ளார்.
 

Leave Comments

Comments (0)