தலித் பெண்ணை திருமணம் செய்த கனகராஜியை அண்ணனே ஆணவக் கொலை- கள ஆய்வு அறிக்கை

/files/detail1.png

தலித் பெண்ணை திருமணம் செய்த கனகராஜியை அண்ணனே ஆணவக் கொலை- கள ஆய்வு அறிக்கை

  • 0
  • 0

 

கோயம்புத்தூர் மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் மீண்டும் ஒரு ஆணவபடுகொலை என்ற செய்தி 25.06.2019ம் தேதி வெளியானதை தொடர்ந்து 26.06.2019ம் தேதி தினசரி நாளிதழ்களில் வேறு சமூகப்பெண்ணை காதலித்த, தம்பியைக் கொலை செய்த அண்ணன் சரண் என வெளியான செய்திகளை எமது சசி மனித உரிமைக்கான செயல்பாட்டு மையம் உண்மையறியும் பொருட்டு சம்பவ இடத்திற்கு நேரில் வந்து பாதிக்கப்பட்ட மக்கள், சம்பவ சாட்சிகள் மற்றும் சேகரிக்கப்பட்ட ஆவணங்களிலிருந்து தயாரிக்கப்பட்ட உண்மை தகவல் ஆய்வு அறிக்கை.

சம்பவ சுருக்கம்:

கோயம்புத்தூர் மாவட்டம், மேட்டுப்பாளையம், வெள்ளிப்பாளையம் துப்புரவுப் பணியாளர்களுக்கான குடியிருப்பு ஏ பிளாக்கில், பட்டியல் சாதியான இந்து அருந்ததியர் அமுதா என்பவர் தர்ஷினிபிரியா, வர்ஷினிபிரியா என்ற இரு மகளோடும், நவீன்குமார் என்ற மகனோடும் வசித்து வந்தார். அமுதாவின் முதல் கணவர் மூர்த்தியிடம் இருந்து கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பே நீதிமன்றம் மூலம் விவாகரத்து பெற்றிருந்தார்.

மூன்று பிள்ளைகளை அமுதாவும் அமுதாவின் தாயார் ரங்கம்மாளும் துப்புரவு பணிகளைச் செய்து அதன் வருவாயில்தான் ஜீவனம் செய்து வந்தனர். அமுதா பெண் பிள்ளைகள் இருவரையும் பொருளாதார வசதி இல்லாததால் 9ம் வகுப்பிற்கு மேல் படிக்க வைக்க இயலவில்லை. அமுதா தினசரி தனியார் துப்புரவு பணிக்குச் சென்று பிற்பகலில்தான் வீட்டிற்கு வருவார். இந்நிலையில் அமுதாவின் மூத்த மகள் தர்ஷினிபிரியாவிற்கு கடந்த பிப்ரவரி மாதம் திருமணம் செய்து வைத்தார். இளைய மகளையும் மகனையும் தன்னோடு வைத்து இருந்தார்.

அதே பகுதியில் குடியிருந்த வந்த பட்டியல் சாதி அல்லாத வளையர் சாதியான கருப்பசாமி பூவாத்தாள் என்பவர்களின் இரண்டாவது மகன் கனகராஜ் என்பவன் அமுதா வீட்டில் இல்லாத வாய்பினை பயன்படுத்தி அவரது மகள் வர்ஷினிபிரியாவை காதலித்து தன்வயப்படுத்தி இருக்கிறான். தொடர்ந்து வர்ஷினிபிரியாவை கடந்த 2018ம் ஆண்டு நவம்பர் மாதம் தீபாவளி தினத்தில் சட்ட விரோதமாகக் கடத்தி சென்று இருக்கிறான். பதறிப்போன அமுதா சம்பவ எல்லைக்குட்பட்ட மேட்டுப்பாளையம் காவல்துறையில் புகார் செய்து வர்ஷினிபிரியாவை கண்டறிந்து மீட்டுள்ளனர்.

மேட்டுப்பாளையம் காவல்துறையினர் கருப்பசாமி மகன் கனகராஜ் மீது எவ்விதமான புகார் வழக்குப் பதிவு செய்யாமல் விடுவித்து விட்டனர். மேலும் கனகராஜ் பெற்றோர் உட்பட கனகராஜ் உடன் பிறந்த அண்ணன் வினோத் என்பவன் அமுதாவின் வீட்டிற்கு அடிக்கடி வந்து சக்கிலியா தேவடியா உன் மகளை என் மகனோடு கூட்டி விடுகிறியா நீங்க பீயை அள்ளுகிற சாதி எங்களுக்குச் சமமா? இனிமேல் உன் மகள் என் மகனோடு பேசி பழகியது தெரிந்தால் கண்ட இடத்தில் கண்டதுண்டமாக வெட்டி வீசிவிடுவோம் என்று மிரட்டி வந்துள்ளனர்.

பயந்து போன அமுதா தனது இரண்டாவது பெண் பிள்ளையைக் காதல் விஷயத்தினை அறிந்து கண்டித்துள்ளார். மேலும் பாதுகாப்பிற்காகத் தனது கணவர் மூர்த்தியின் தாய் பெட்டதம்மான் ராமன் ஆகிய பாட்டி தாத்தா வீட்டில் பாதுகாப்பு கருதி வைத்து இருந்துள்ளார்.

alt text

இந்நிலையில் வளையர் சாதியான கருப்பசாமி மகன் கனகராஜ் தன் காதலி வர்ஷினிபிரியாவை தேடி அலைந்து தனது பாட்டி வீட்டில்தான் இருக்கிறாள் என்று தெரிந்து கனகராஜ் பாட்டி வீட்டிற்கு நேரில் சென்று அங்கிருந்த வர்ஷினிபிரியாவை என் அண்ணன் என்னை மீறி உன்னை ஒன்றும் செய்ய முடியாது என் பெற்றோர் சம்மதித்து விட்டார்கள்.

நீ என்னோடு வா தைரியமாக என்று சொல்லி வர்ஷினிபிரியாவின் தாய் அமுதாவிற்குத் தெரியாமல் அழைத்துக் கொண்டு தனது அப்பா கனகராஜ்யை பெற்ற பாட்டி வசித்த குடிசை வீட்டில் கொண்டு மறைவாக வைத்து இருக்கிறான். கடந்த 21.06.2019ம் தேதி இரவு சுமார் 11.00மணியளவில் கனகராஜ் அண்ணன் வினோத் தூண்டுதலில் நேரில் அடையாளம் தெரிந்த ஒரு நபர் அமுதாவின் வீட்டிற்கு வந்து நேரில் வந்து ஏன்டி அமுதா, சக்கிலியா தேவடியா உன் மகளை நீ அடக்கி வை. உன் மகளால் வினோத்தும் அவனது தம்பி கனகராஜையும் வெட்டிக்கொண்டு செத்துவிடுவான்கள் போலத் தெரிகிறது. நீ இனிமேல் உன் மகளை வீட்டோட வைக்கலைன்னா வெட்டி வீசிவிடுவோம் என்று மிரட்டி இருக்கிறான்.

அமுதா உடனடியாக மேட்டுப்பாளையம் போலீசாருக்கு புகார் தெரிவித்துள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சம்மந்தப்பட்ட எதிரியிடம் பேசி விட்டு அவனை ஒரு போட்டோ எடுத்துக் கொண்டு சென்று உள்ளனர். மறுநாள் 22.06.2019ம் தேதி சனிக்கிழமை அவனைக் காவல் நிலையத்திற்கு வரவழைத்து விசாரித்த போலீசார் அவனைக் குடிபோதையில் தவறு செய்ததாகவும் மன்னித்து விட்டுவிட்டதாகவும் கூறிவிட்டனர். அவன் மீது எவ்விதமான சட்ட நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.

இந்நிலையில் 25.06.2019ம் தேதி மாலை சுமார் 5.00 மணியளவில் வளையர் சாதியை சார்ந்த ஒரு நபர் அமுதாவிற்கு போன் செய்து கனகராஜ்யை அவன் அண்ணன் வினோத் வெட்டிப்போட்டான் என்று செய்தி சொன்ன போது அமுதா அதை ஏன் என்னிடம் சொல்லுகிறீர்கள் என்று கேட்டுள்ளார்

அப்போதுதான் அந்த நபர் உன் மகளும் வெட்டுப்பட்டு கிடக்கிறாள் என்று தகவல் சொல்லியுள்ளார். அதன் பின்னரே அமுதா தனது உறவினர்கள் நாகமணி, சின்னக்கண்ணன், சின்னராஜ் ஆகியோரோடு சம்பவ இடத்திற்கு சென்று பார்த்துள்ளார். அங்கே தனது மகள் வர்ஷினிபிரியா வெட்டு காயங்களோடு இரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார். அருகில் கனகராஜ்யும் வெட்டு காயங்களோடு கிடந்துள்ளார்.

சின்னக்கண்ணன் வர்ஷினி பிரியாவை பார்த்த போது வர்ஷினிபிரியாவின் உடல் துடித்துள்ளது. உடனே சின்னக்கண்ணன் வர்ஷினிபிரியாவை தூக்கி ஒரு ஆட்டோவில் மேட்டுப்பாளையம் அரசு மருத்தவமனையில் சேர்த்து கூடுதல் சிகிச்சைக்காக கோயம்புத்தூர் அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சைப்பிரிவில் உள்ளார். 
வர்ஷினிபிரியா கனகராஜ் வெட்டுப்பட்டுக் கிடப்பதைப் பார்த்து அறிந்த பின்னரே தனது மகளைப் பாட்டி வீட்டிலிருந்து தனக்குத் தெரியாமல் அழைத்து வந்து கனகராஜ் குடித்தனம் நடத்தி இருக்கிறான் என்பதை அமுதா அறிந்துள்ளார்.

மேலும் கனகராஜ்யையும் அவரது மகள் வர்ஷினிபிரியாவையும் கனகராஜ் உடன்பிறந்த அண்ணன் வினோத், கந்தவேல் மற்றும் அவனது கூட்டாளிகள் கூட்டு சேர்த்து சதித் திட்டம் தீட்டி கனககராஜ்யை கொலை செய்து தனது மகளை வெட்டி போட்டதையும் அறிந்துள்ளார்.

வேண்டுகோள்கள்;

1. மேட்டுப்பாளையம், சிறுமுகைரோடு, வெள்ளிப்பாளையம் சுகாதார பணியாளர் குடியிருப்பில் வசித்து வந்த பட்டியல் சாதியான இந்து அருந்ததியர் சாதி அமுதாவின் 2வது மகள் வர்ஷினிபிரியாவை 25.06.2019ம் தேதி பிற்பகல் சுமார் 5.00 மணிக்குப் பட்டியல் சாதி அல்லாத இந்து வளையர் சாதியான கருப்பசாமி மகன் வினோத், கந்தவேல் உட்பட எதிரிகள் கூட்டாகச் சேர்ந்து வெட்டி கொலை முயற்சி செய்தும் சம்பவ இடத்திலேயே கனகராஜ்யை வெட்டி கொலை செய்த எதிரிகள் அனைவரையும் கைது செய்து சிறைப்படுத்திட வேண்டும்.

2. மேற்படி கனகராஜ் கெளரவ கொலையில் கொடுங்காயாம் ஏற்பட்டு உயிருக்குப் போராடுகிற வர்ஷினிபிரியாவை தனியார் மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதித்த உயர் மருத்துவச் சிகிச்சை அளித்துக் காப்பாற்றிட வேண்டும் என்றும்,

3. பாதிக்கப்பட்ட வர்ஷினிபிரியா குடும்பத்திற்கு அரசு ரூ. 25,00,000 இழப்பீடு வழங்கிட வேண்டும் என்றும்.

4. கனகராஜ் கொலை மற்றும் வர்ஷினிபிரியா மீதான கொலை முயற்சி கொடுமைகளுக்குக் காரணமான, மேலும் அமுதாவின் புகார்களில் உடனடியாக வழக்குகளைப் பதிவு செய்து மேல் நடவடிக்கை மேற்கொள்ளாத மேட்டுப்பாளையம் காவல் நிலையம் போலிசார் மீது இலாகப்பூர்வ விசாரணை மேற்கொண்டு மேல்நடவவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும்.

5. மாநில ஆதி திராவிடர் நல செயலர், ( சர்க்ஹப் ஞச்ச்ண்ஸ்ரீங்ழ்) மற்றும் தேசிய பட்டியல் சாதியினர் ஆணையம், மாவட்ட ஆட்சியர் சம்மந்தப்பட்ட குடும்பத்தினை நேரில் சந்தித்து ஆறுதல் படுத்தி தைரியப்படுத்தி, மேற்படி சம்பவ வழக்கில் குற்றவாளிகள் மீதான குற்ற அறிக்கையைத் துரிதமாகத் தாக்கல் செய்து நீதி விசாரணைக்கு உட்படுத்திட வேண்டும்.

6. கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வர்ஷினிபிரியா குடும்பத்திற்கும் வழக்கின் சாட்சிகளுக்கும் சட்டப்பூர்வமான பாதுகாப்பினை உறதி செய்ய வேண்டும்.

கள ஆய்வுக் குழு:
 “சசி” மனித உரிமைக்கான நிறுவனம், திண்டிவனம். 

Leave Comments

Comments (0)