தமிழீழத்தினை சிதைத்திடக் களமிறங்கியிருக்கும் இந்துத்துவக் குழுக்கள்- மே 17 இயக்கம்

/files/detail1.png

தமிழீழத்தினை சிதைத்திடக் களமிறங்கியிருக்கும் இந்துத்துவக் குழுக்கள்- மே 17 இயக்கம்

  • 0
  • 0

 

தமிழீழத்தினை சிதைத்திடக் களமிறங்கியிருக்கும் இந்துத்துவக் குழுக்கள். தமிழர்கள் எச்சரிக்கை அடைய வேண்டிய தருணம் இது என்று மே பதினேழு இயக்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து அவ்வியக்கம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "சங்கிலிய மன்னனின் 400வது ஆண்டு விழாவின் வாயிலாக ஈழத் தமிழர்களை மத ரீதியாகப் பிளவுபடுத்தும் சதியில் இந்தியாவைச் சேர்ந்த இந்துத்துவ அமைப்புகள் ஈடுபட்டுள்ளன. போர் முடிந்து விடுதலைப் புலிகள் அமைப்பிற்குப் பின்னரான காலக்கட்டத்தில், ஈழத்தமிழர்களின் ஒற்றுமையைச் சீர்குலைக்க இந்தியாவிலிருந்து விஷ்வ ஹிந்து பரிஷத், சிவசேனா போன்ற அமைப்புகள் ஈழத்தில் களமிறங்க ஆரம்பித்தன.

இந்து மக்கள் கட்சியைச் சேர்ந்த அர்ஜூன் சம்பத் சிவசேனாவின் வழியாக ஈழத்தில் இந்துத்துவ மதவெறிக் கோட்பாடுகளைப் பரப்பும் பணியில் ஈடுபட்டிருக்கிறார். இந்துத்துவ அமைப்புகளைச் சேர்ந்த பலரும், இந்தியத் தூதரக அதிகாரிகளும் இணைந்து இந்த சூழ்ச்சியில் ஈடுபட்டுள்ளனர். தமிழீழ விடுதலைப் போராட்டத்தினூடாக தமிழர்கள் மத்தியில் களைந்தெறியப்பட்ட சாதி, மத வேறுபாடுகளை மீள் உருவாக்கம் செய்யும் பணிகளில் இந்துத்துவ அமைப்புகள் ஈடுபட்டுள்ளன.

70 ஆண்டுகாலமாக நீண்ட நெடிய விடுதலைப் போராட்டத்தினை நடத்திவரும் தேசிய இனமாகிய (Ethnic Nationalities) தமிழர்களை மதச் சிறுபான்மையினர்களாக (Religious Minorities) சுருக்கி அடையாளப்படுத்தும் வேலையினை இந்த கும்பல் செய்து வருகிறது.

தமிழர்கள் ஒரு தேசிய இனமல்ல என்று சொல்வதும், அதன் மூலமாக அங்கு நடைபெற்றது இனப்படுகொலை அல்ல என்று சொல்வதும் அமெரிக்கா-இந்தியா கூட்டணியின் திட்டமாக இருக்கிறது. இதன் காரணமாகத்தான் ஐ.நாவில் நிறைவேற்றப்பட்ட அமெரிக்கத் தீர்மானங்கள் தொடர்ச்சியாகத் தமிழர்களை மதச் சிறுபான்மையினர் என்று குறிப்பிட்டது. அதனை எதிர்த்து உலகத் தமிழர்கள் பலரும் குரல் எழுப்பி வரும் நிலையில், அமெரிக்கா-இந்தியக் கூட்டணியின் இனப்படுகொலையை மறைக்கும் சதி வேலையினைத்தான் அர்ஜூன் சம்பத் போன்றவர்கள் செய்து வருகிறார்கள். தமிழர்களின் இனப்படுகொலைக்கு நீதி பெறுவதினை தடுப்பது இவர்களின் நோக்கமாக இருக்கிறது. இந்துத்துவ கும்பல்கள், அடிப்படையிலேயே தமிழின விரோத சக்திகளாகவே இருக்கின்றன.

தமிழீழ போராளிகள் இருந்தவரை அம்மண்ணில் நிலைபெற முடியாத மதவெறிக் கருத்துக்களை இப்போது இந்தியாவின் துணையுடன் இந்துத்துவ கும்பல்கள் அம்மண்ணில் விதைக்க நினைக்கின்றன. மாலதி படையணியும், சூசை கடற்படையும், இம்ரான் படையணியும் இணைந்து களமாடிய தேசமது. அங்கே தமிழின விரோத இந்துத்துவ கும்பல்களை அனுமதிப்பது சீரழிவையே கொடுக்கும். தமிழீழ விடுதலைக் கோரிக்கையை அழிப்பதே இவர்களின் நோக்கம்.

ஈழத் தமிழர்களே! எச்சரிக்கை கொள்ளுங்கள். தமிழின விரோத இந்துத்துவ மதவெறி கும்பல்களைத் தமிழீழ மண்ணிலிருந்து அப்புறப்படுத்துங்கள்" என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave Comments

Comments (0)