வரும் 4ம் திகதி தமிழர்களுக்கு கரிநாள்- யாழ்.பல்கலை மாணவர்கள்

/files/detail1.png

வரும் 4ம் திகதி தமிழர்களுக்கு கரிநாள்- யாழ்.பல்கலை மாணவர்கள்

  • 0
  • 0

 

இலங்கையின் சுதந்திர தினத்தை கரிநாளாக கடைப்பிடிக்குமாறு யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் அறைகூவல்.

இலங்கையின் சுதந்திர தினம் பெப்ரவரி 4ம் திகதி இலங்கை மக்களால் கொண்டாடப்பட இருக்கும் நிலையில், ஈழத்தில் தமிழ் மக்கள் இலங்கை அரசினால் பல்வேறுபட்ட பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

குறிப்பாக அரசியல் கைதிகள் விடுதலை, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் நிலை, தமிழ் மக்களின் பூர்வீக பிரதேசங்கள் தொடர்ந்தும் சிங்கள மயமாக்கப்படுதல், படையினரின் ஆக்கிரமிப்பு, புனர்வாழ்வு அழிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட முன்னாள் போராளிகளின் கைதுகள் போன்ற பல்வேறு பிரச்சினைகளுக்கு இதுவரை எவ்வித தீர்வும் கிடைக்கவில்லை. இந் நிலையில் தமிழ் மக்கள் தொடர்ந்தும் அடிமை வாழ்வையே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

இவ்வாறான நிலையில் இலங்கையின் சுதந்திர தினத்தினை கரி நாளாக கடைப்பிடிக்கும் படியும்   அதே நாளில் நிலமீட்புப் போராட்டத்தில் ஈடுபடும் கேப்பாப்பிலவு மக்களினால் மேற்கொள்ளப்படும் சத்தியாக்கிரக போராட்டத்திலும் தமிழ் மக்கள் அனைவரையும் கலந்துகொண்டு போராட்டத்திற்கு பலம் சேர்க்குமாறும் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள்  கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில், யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் இந்தப்போராட்டத்திற்கு தமது கட்சியும் ஆதரவு வழங்கும் என்று தமிழ் மக்கள் கூட்டணி அறிவித்துள்ளது. 

தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில்,  இலங்கையின் சுதந்திர தினத்தைக் கரிநாளாகப் பிரகடனப்படுத்தி யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் எதிர்வரும் 4 ம் திகதி நடத்தவிருக்கும் போராட்டங்களுக்கு தமிழ் மக்கள் கூட்டணி தனது ஆதரவை வழங்கும். எனக்கூறப்பட்டுள்ளது.

கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக நடைபெற்ற யுத்தத்தில் சர்வதேச சட்டங்கள் மீறப்பட்டு தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட இன அழிப்பு மற்றும் போர்க்குற்ற செயற்பாடுகளுக்கு இன்னமும் நீதி கிடைக்கவில்லை. காணாமல் ஆக்கப்பட்ட மக்களின் உறவினர்கள் வீதிகளில் தொடர்ந்தும் இரவு பகலாகத் தீர்வு எதுவும் இன்றி போராடி வருகின்றார்கள். 

சட்டமுறைமைகளுக்கு மாறான பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறைவாசம் அனுபவிக்கும் தமிழ் அரசியல் கைதிகள் இன்னமும் விடுதலை செய்யப்படவில்லை. யுத்தம் முடிந்து பத்து வருடங்கள் ஆகியும் தடைச் சட்டம் இன்னமும் கைவாங்கப்படவில்லை. 

பலவந்தமாக தமது காணிகள் பறிக்கப்பட்ட நிலையில் இராணுவ முகாம்களுக்கு முன்பாக நின்று பாதிக்கப்பட்ட எம் மக்கள் தொடர்ந்து இரவு பகலாகப் போராடிவருகின்றார்கள். 

இந்த நிலையில் யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் சுதந்திர தினம் என்று பிரகடனப்படுத்தப்பட்ட தினத்தை தமிழ் மக்களின் குரலை சர்வதேசத்திடம் ஓங்கி ஒலிக்கச் செய்து நீதி கேட்கும் வகையில் தமிழர் தாயகத்தில் போராட்டங்களை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளமை பொருத்தமானது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


 

Leave Comments

Comments (0)