கொழுப்பெனும் நண்பன் 3

/files/detail1.png

கொழுப்பெனும் நண்பன் 3

  • 1
  • 0

-அ.ப.ஃபரூக் அப்துல்லா

கை மணிக்கட்டு அளவே உள்ள சதை பிண்டம் நாம் கருவறைக்குள் உருவான ஐந்தாம் வாரத்தில் இருந்து நாம் கடைசி மூச்சு விடும் வரை ஓய்வு இல்லாமல் இயங்கிக்கொண்டே இருக்கிறதென்றால் அது நம் இதயம் தான். இதயம் என்பதை பம்பிங் மோட்டாருடன் ஒப்பிடலாம். எப்படி ஒரு பம்ப் செட் நீரை உறிஞ்சி பல்வேறு இடங்களுக்கும் பம்ப் செய்கிறதோ ? அதைப்போல நம் இதயமும் மோட்டரை போல செயல்பட்டு ரத்தத்தை உடல் முழுவதும் கொண்டு சேர்க்கிறது. உடல் முழுவதும் இருந்து வரும் அசுத்த ரத்தத்தை நுரையீரலுக்கு சலவைக்கு  அனுப்பி தூய்மையான ரத்தத்தை உடல் முழுமைக்கும் அனுப்பி வைக்கிறது. மருத்துவ உலகில் மிகவும் முக்கியத்துவம் தரப்படும் ஒரு உறுப்பு இந்த இதயம் தான்.

காரணம் தற்போது இதய நோயால் அதிகம் பேர் மரணிக்கும் மாநிலங்களில் தமிழ்நாட்டுக்கு தான் முதலிடம்.

இதய நோய் இருப்பவரிடம் கேட்டு பாருங்கள். அவர் கறி மீன் முட்டை திண்பதை அடியோடு நிறுத்திவிட்டேன் என்பார். கொலஸ்ட்ரால் குறைக்க மாத்திரை எடுக்கிறேன் என்பார். ஆனால் அவருக்கே மீண்டும் ஒரு முறை ஹார்ட் அட்டாக் வரும். ஏன்? உண்மையில் இந்த கறி, மீன், முட்டை போன்ற கொழுப்புள்ள உணவுகள் தான் இதய நோயை கொண்டு வருகிறதென்றால் அவற்றை நிறுத்தி கொலஸ்ட்ரால் மாத்திரை போட்டால் இதய நோய் வரக்கூடாதல்லவா? பிறகு ஏன் வர வேண்டும்? இதற்கு காரணம்.. நாம் மூல காரணத்தை விட்டுவிட்டு வேறு எதற்கோ சிகிச்சை அளித்துக்கொண்டு இருப்பது தான். இதயத்தின் ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்படுவதை தான் நாம் ஹார்ட் அட்டாக் என்கிறோம். நாம் உண்ணும் உணவில் உள்ள கொழுப்பு தான் கட்டியாகி ரத்த நாளத்தில் அடைத்து விடுகிறது என்று எண்ணுகிறோம். அது உண்மையல்ல. நமது உண்மையான எதிரி நாம் உண்ணும் உணவில் உள்ள மாவுச்சத்து எனும் கார்போஹைட்ரேட் தான்.

இனிப்பு கலந்த உணவுகள் , எண்ணெயில் பொறித்த உணவுகள், சதா மூன்று வேளையும் மாவுச்சத்து நிறைந்த உணவுகளை உண்ணும் போது நமது ரத்த நாளங்களில் உள்காயங்கள் உருவாகின்றன. இதை "இன்ஃப்லமேசன்" என்கிறோம். இந்த காயங்களை ஆற்றும் அரும்பணியை செய்ய கொலஸ்ட்ரால் அங்கு வருகிறது. கொலஸ்ட்ரால் மருந்திட்டு அந்த உள்காயத்தை ஆற்றுகிறது. இருப்பினும் நாம் தொடர்ந்து நமது உணவு முறையை மாற்றிக்கொள்ளாமல் இருக்கிறோம். மீண்டும் மீண்டும் உள்காயங்கள் தோன்றி அங்கே மருந்திட வரும் கொழுப்பு அதிகமாகி அடைப்பு ஏற்பட்டுவிடுகிறது. நாம் என்ன செய்கிறோம் உண்மையில் வில்லனான மாவுச்சத்தை குறைக்காமல் , கறி , முட்டை உண்பதை நிறுத்தி விட்டு கொழுப்பை குறைக்க மாத்திரை எடுக்கிறோம். இது எவ்வளவு பெரிய அபத்தம். 


\r\nஉங்களுக்கு இதய நோய் வராமல் இருக்க வேண்டுமா .. ?நீங்கள் தினமும் எடுத்து வரும் 400 கிராம் அளவு மாவுச்சத்தின் அளவை 40 கிராமிற்கு குறையுங்கள் . ரீபைண்டு எண்ணெய் உபயோகிப்பை நிறுத்துங்கள். செக்கில் ஆட்டிய தேங்காய் மற்றும் நல்லெண்ணெய்க்கு மாறுங்கள். கறி, மீன், முட்டை மஞ்சள் கருவுடன் திண்பதால் இதய நோய் வருவதில்லை என்பதை உணருங்கள். எண்ணெயில் பொறித்த உணவுகளான வடை , பஜ்ஜி போன்றவற்றை உண்பதை நிறுத்துங்கள். மது, புகை போன்ற தீய பழக்ககங்களுக்கு குட்பை சொல்லுங்கள். பெரிய மருத்துவமனைகளில் உள்ள இதய நோய் அறுவை சிகிச்சை வார்டுகளில் உள்ள நோயாளிகளிடம் சென்று பேட்டி எடுத்தால் நிச்சயம் பத்தில் ஆறு பேர் மது புகை பழக்கம் உடையவராகத்தான் இருப்பார். புகையினால் நுரையீரலுக்கு மட்டும் தான்  பாதிப்பு என்று பலரும் நினைத்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் நுரையீரலை விட அதிக பாதிப்பை சந்திப்பது இதயம் தான் என்பதை உணர வேண்டும். மனநிம்மதியான வாழ்க்கை முறை. தேவையான அளவு தூக்கம். தினமும் ஒரு மணிநேரம் உடல்பயிற்சி.

இதய நோயை தடுக்க இது போன்ற பல வாழ்வியல் மாற்றங்கள் செய்ய வேண்டியுள்ள நிலையில் கொழுப்பின் மீது மட்டும் பழியை போட்டு மற்ற அனைத்தையும் நாம் செய்து கொண்டே இருந்தால் எப்படி இதய நோயை தடுக்க முடியும்? கொழுப்பை வில்லனாக்கியதே உலக உணவு அரசியல் மாஃபியாக்கள் தான். கொழுப்பின் மீது மக்களுக்கு பயத்தை உண்டாக்கி அதன் மூலம் பல்லாயிரம் கோடி மருத்துவ வர்த்தகம் செய்ய இயலும். மேலும் கொழுப்பை கெட்டது என்று கூறினால் உண்மையில் வில்லனான மாவுச்சத்து நிறைந்த உணவுகளான நூடுல்ஸ், பர்கர், கூல் ட்ரிங்க்ஸ் போன்றவற்றின் வியாபாரம் தொய்வின்றி நடக்கும். இந்த உணவுகளை விற்கும் பெரும் பண முதலைகளை பற்றி சொல்லிப்புரியவைக்கத்தேவையில்லை.  


\r\nஉங்களுக்கு இதய நோய் இப்போது இருந்தால் அதற்குரிய மருத்துவத்தை சரியாக எடுக்க வேண்டும். இதய நோய் இதுவரை வராதவர்கள் மேற்சொன்ன விசயங்களை கருத்தில் கொண்டு மாவுச்சத்தை குறைத்து கொழுப்புணவுகளை புறந்தள்ளாமல் உண்ண வேண்டும்.  


\r\nநீரிழிவிற்கும் மருந்தாய் அமையும் கொழுப்பு பற்றி அடுத்த வாரம் காண்போம்

 முந்தய தொடரினை படிக்க : http://karuppu.thamizhstudio.com/news/good-fat-part-2

\r\n

Leave Comments

Comments (0)