நம்பிக்கையும் நட்புறவையும் வளர்க்கும் வித்தியாசமான உலக கோப்பை!

/files/detail1.png

நம்பிக்கையும் நட்புறவையும் வளர்க்கும் வித்தியாசமான உலக கோப்பை!

  • 0
  • 0


வீடில்லாத மற்றும் ஆதரவு இல்லாதவர்களுக்காக உலகளவில் வருடந்தோறும் நடத்தப்படும் உலக்கோப்பை கால்பந்து போட்டி (Homeless World Cup) வருகிற ஜூலை 27-ம் தேதி வேல்ஸ் நாட்டின் தலைநகரான கார்டிஃப் நகரில் நடைபெறவுள்ளது. நம்பிக்கை, பகிர்தல், நட்புறவை வளர்த்தல் மற்றும் ஒழுக்கம் ஆகியவற்றை வீடில்லாத/ஆதர்வில்லாத சிறுவர்களுக்கு கற்றுக்கொடுக்கும் வாய்ப்பாக இந்த விளையாட்டு போட்டி திகழ்கிறது. 

ஏழைகளிடம் தெருவில் விளையாடப்படும் காலபந்து போட்டிகளே பிரபலமாக இருக்கின்றன. பீலே மற்றும் மரோடோனா போன்ற புகழ்பெற்ற வீரர்கள் தங்களின் கால்பந்து திறமையை தெருவில் விளையாடியே வளர்த்துக் கொண்டார்கள். 17-வது ஆண்டாக நடைபெறவிருக்கும் இந்த உலக கோப்பையை Homeless World Cup Foundation என்ற இயக்கம் ஒருங்கிணத்துள்ளது. 

மெல் யங் மற்றும் ஹெரால்ட் சைமீட் ஆகியோரால் 2001-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த இயக்கம், மற்ற நாடுகளில் இதுபோன்று தெருக்களில் கால்பந்தை பிரபலப்படுத்தும் அமைப்புகளோடு கை கோர்த்துள்ளது. இந்தியாவும் இப்போட்டியில் கலந்துகொள்ள உள்ளது. இதன்மூலம் இங்குள்ள ஆதரவில்லாத மற்றும் வசதியில்லாத ஆண்களும் பெண்களும் இப்போட்டியில் விளையாட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

மும்பையிலுள்ள சேரிக்கும் கார்டிஃப் நகரத்திற்கும் வெறும் 22 மீட்டர் தூரம் தான் இருக்கிறது. ஆம், ஜூலை மாதம் நடக்கவுள்ள உலக்கோப்பையில் விளையாட இந்தியா சார்பில் 16 வீரர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்வில் 80-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர். இந்த 80 பேரும், கடந்த மாதம் மும்பையில் நடைபெற்ற தேசிய அளவிலான போட்டி மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்த 80 பேரிலிருந்து எட்டு ஆண்களும் 8 பெண்களும் உலக கோப்பைக்காக தேர்வு செய்யப்பட உள்ளனர்.

2003 ஆண்டிலிருந்து நடைபெற்று வரும் இந்த உலக கோப்பையில், 2006-லிருந்து பங்கேற்று வருகிறது இந்தியா. இதற்கு நாக்பூரைச் சேர்ந்த Slum Soccer என்ற அரசு சாரா அமைப்பிற்கு தான் நன்றி கூற வேண்டும். இந்த வகையான கால்பந்து போட்டிக்கு, நான்கு வீர்ர்களை கொண்ட ஒவ்வொரு அணியும் மற்ற அணியோடு 14 நிமிடங்கள் விளையாட வேண்டும். இரு பாதியாக பிரிக்கப்பட்டுள்ள இந்த ஆட்டத்தில், ஒவ்வொரு பாதி ஆட்டமும் ஏழு நிமிடங்கள் நடைபெறும். போட்டி நடைபெறும் மைதானம் வெறும் 22மீ நீளமும் 16மீ அகலமும் மட்டுமே கொண்டது. 

Slum Soccer அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரி அபிஜித் பார்ஸ் கூறுகையில், “இத்தனை வருடங்களில் ஒரே ஒரு முறை மட்டுமே உலக கோப்பையில் கலந்து கொள்ளாமல் இருந்துள்ளோம். அந்தளவிற்கு எங்கள் வீரர்களுக்கு நாங்கள் பயிற்சி அளிக்கிறோம். இந்த இயக்கத்தின் நிறுவனர்களில் ஒருவரான மெல் யங் எங்களை அழைத்ததின் பேரிலேயே நாங்கள் முதலில் வீடில்லாதோருக்கான உலக கோப்பையில் கலந்து கொண்டோம். எங்களிடம் இருக்கும் பெரும்பாலான வீரர்கள் மகராஷ்டிரா, டெல்லி, ஹர்யானா, ஆந்திரா மற்றும் சட்டிஸ்கர் மாநிலங்களைச் சேர்ந்தவர்களே. ஆனால், தற்போது கேரள மாநிலமும் இதில் ஆர்வம் காட்ட தொடங்கியிருப்பது எங்களுக்கு மகிழச்சி அளிக்கிறது” என்றார்.

இப்போதுள்ள 80 பேரில் ஆறு வீரர்கள் கேரளாவைச் சேர்ந்தவர்கள். இவர்கள் அனைவரும் கொச்சியில் உள்ள கடற்கரை கிராமமான செல்லனம் ஊரைச் சேர்ந்தவர்கள். “முன்பெல்லாம், எப்படியாவது படித்து பட்டதாரி ஆகி வேலைக்குச் செல்ல வேண்டும் என கற்பனை செய்வேன். ஆனால் இப்போது கால்பந்தையே என் தொழிலாக ஏற்க முடிவு செய்துள்ளேன். கால்பந்து விளையாடுவதால் உனக்கு நல்ல எதிர்காலம் கிடைக்காது என கூறிய அனைவரிடமும் அது தவறு என நிரூபிக்க ஆவலாக உள்ளேன்” என்கிறார் கேரள வீரர்களில் ஒருவரான ஜெஃபின் ஜோசப். 

சரி, இந்த உலக்கோப்பையை எந்த அணி அதிகமுறை வென்றுள்ளார்கள் என உங்களுக்கு தெரியுமா? ஆம், நீங்கள் நினைத்தது சரிதான். இந்த வகையான கால்பந்திலும் பிரேசில் அணியே ஜாம்பவானாக திகழ்கிறது. மொத்தம் மூன்று முறை கோப்பையை வென்றுள்ளது பிரேசில். இந்த முறை இந்த கோப்பையை இந்தியா வெல்லுமா? பொறுத்திருந்து பார்ப்போம். 

தமிழில்: V. கோபி 

நன்றி: www.thehindu.com

Leave Comments

Comments (0)