பௌர்ணமி இரவும், எலுமிச்சை மரமும்

/files/detail1.png

பௌர்ணமி இரவும், எலுமிச்சை மரமும்

  • 0
  • 0

-லெட்சுமி நாராயணன் பி       

‘தமிழ் ஸ்டுடியோ’ வின் மிக முக்கியமான முன்னெடுப்புகளில் "பௌர்ணமி இரவு திரையிடலும்" ஒன்று. சினிமா சார்ந்த ரசனை மாற்றத்தை கொண்டு வர வேண்டும் என்பதும், அதனை தொடர்ச்சியாக செய்ய வேண்டும் என்பதே அதன் பிரதான நோக்கம். ‘தமிழ் ஸ்டுடியோ’ நிறைய நல்ல சினிமா சார்ந்து, சமூகம் சார்ந்து பல திரையிடல்களை நடத்துகிறது. வாராவாரம் முதல் ஞாயிறுகளில் தனது திரைப்பட சங்கமான “சாமிக்கண்ணு திரைப்பட சங்கத்தின்” மூலம் திரைப்படங்களை திரையிட்டு, கலை சார்ந்த ஆளுமையுடன் சினிமா ரசனை வகுப்பு எடுக்கிறது. இதுதவிர ‘ப்யூர் சினிமா’ திரையிடல் அரங்கில் மாத முதல் சனிக்கிழமைகளில் “குறும்பட வட்டத்தின்”, மூலமாக நல்ல குறும்படங்களையும், அதன் இயக்குநர்களையும் அறிமுகம் செய்கிறது. இதில் ஆவணப்படங்கள் திரையிடலும் உண்டு. ஆக இங்கு “பௌர்ணமி இரவு திரையிடல்”, இவற்றில் இருந்து எதில் வேறுபடுகிறது? அதன் தனித்துவம் என்ன கேள்வி எழலாம்? “பௌர்ணமி இரவு திரையிடல்” கிட்டத்தட்ட தீவிர சினிமா ரசனை வகுப்பு போன்றது. இங்கு ஆசானும் நீங்களே, கற்றுக்கொள்ளும் மாணவனும் நீங்களே. திரையிடலில் நம்முடன் கலந்துகொள்ளும் நம் நண்பர்களே நமது ஆசிரியர்கள், நம் மாணவர்கள். திரையிடல் முடிந்த பிறகு, முடிந்தது சரி பையை எடுத்துக்கொண்டு கடகட வென்று வீட்டை பார்த்து கிளம்புவோம் என்று இல்லாமல், அந்த திரைப்படம் குறித்த கலந்துரையாடலில் நாம், படம் பார்த்த அனைவரும் நிச்சயம் பேச, விவாதிக்க வேண்டும். படத்தை பார்த்திருக்கிறோம், உங்கள் மனதில் எழுவதை நீங்கள் வெளிப்படையாக பகிரலாம். அதை திரைப்பட ரசனை குறித்த செறிவான விவாதமாய், ரசனைப் பரிமாற்றமாய், பன்முக புரிதலாய், கருத்துப் பரிமாற்றமாய் அதை செறிவாய் மாற்றிக் கொள்ள நமக்கு கிடைத்திருக்கிற பெரிய வெளி அது. நம் தயக்கத்தை போக்கும் வெளி. அது அந்த  திரைப்படத்தின் கதை, திரைமொழி, திரைக்கதை, இயக்கம், ஒளிப்பதிவு, உள்ளடக்கம், அதன் இசை, அது பேசியிருக்கும் நுட்பமான விஷயம், அழகியல் சார்ந்து, கலை சார்ந்து, அதன் அரசியல் சார்ந்து, நடிப்பு சார்ந்து, படத்தொகுப்பு சார்ந்து, காட்சிகள் சார்ந்து, படம் எடுக்கப்பட்டிருக்கும் இடங்கள் சார்ந்து, மேலும் அந்தத் திரைப்படம் இப்போதைய சூழலுக்கு எவ்வாறு ஒத்துப் போகின்றது? ஏன் அந்தத் திரைப்படம் கலையாக மாறியது? அதன் இயக்குநர் சார்ந்து, அவரின் சுதந்திரம் சார்ந்து, அது எடுக்கப்பட்ட சூழல் சார்ந்து என தீவிர சினிமா உரையாடலாய், பன்முக அடுக்குகளாய் நாம் நமக்கு தெரிவதை நம் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம். அவர்களும் பகிர்வதால் நாம் நிறைய தெரிந்து கொள்ள முடிகிறது. ஒரு விசாலப்பார்வை உங்களுக்கு தட்டுப்படும். முதல்முறை ஒரு படத்தை பார்க்கும் போதே அனைத்தும் நமக்கு தெரிவதில்லை. மீண்டும் மீண்டும் பார்த்தால் அதன் கலையின் தரிசனத்தை நீங்கள் உணரலாம். 

alt text

"பௌர்ணமி இரவில்" திரையிடப்படும் படங்கள் மிக கவனமாக தேர்வு செய்யப்படுகிறது. ஆக "பௌர்ணமி இரவு" நமக்கு ஒரு பயிற்சியை, கல்வியை, தொடர்ச்சியை, இயக்கத்தை ஆரம்பித்து வைக்கிறது. உரையாட, கற்றுக்கொள்ள ஒரு மாற்று வழியை நமக்கு ஏற்படுத்தி தருகிறது என்பேன். ஒரு திரைப்படத்தை நீங்கள் தனியாக பார்ப்பதற்கும், குழுவாய் பார்ப்பதற்கும் பெரும் வித்தியாசம் இருக்கிறது. விவாதங்கள், பேச்சுகள் என அந்த இரவு முழுவதும் நீளூம் போது அதன் நினைவுகள் உங்கள் மனதைவிட்டு அவ்வளவு சீக்கிரம் போய்விடாது. மாதாமாதம் பௌர்ணமி அன்று குளிர் இரவில், மொட்டை மாடியில், ஒரு உலகத் திரைப்படம் திரையிடப்படுகிறது. முன்பே தமிழ் ஸ்டுடியோ அதன் ஆரம்பக் காலங்களில் தொடர்ச்சியாக இதனை நடத்தியிருந்தாலும் சிறிது இடைவெளிக்கு பிறகு கடந்த மார்ச் முதல் இந்த நிகழ்வை மீண்டும் துவங்கியது. அப்போது தான் எனக்கும் இதில் பங்குகொள்ள வாய்ப்பு கிடைத்தது. வடபழனியில் உள்ள 'தமிழ் ஸ்டுடியோ' வின் "ப்யூர் சினிமா" புத்தகக் கடையின் மாடியில் பௌர்ணமி அன்று இரவில் சரியாக 8.30 மணியளவில் படம் திரையிடப்படும். நிகழ்விற்கு முப்பது நண்பர்கள் மட்டுமே அனுமதி. படிமைத்  தோழர்களும் (தமிழ் ஸ்டுடியோவில் சினிமா பயிலும் தீவிர கருஞ்சட்டைப் படையினர்) சேர்த்து. அனுமதி இலவசம், தொலைபேசியில் பதிவு செய்து கொள்ள வேண்டும். முப்பது நபர்கள் மட்டுமே அனுமதி என்பதால் முதலில் வருபவர்களுக்கே முன்னுரிமை. திரையிடல் முடிந்ததும் வீட்டிற்கும் செல்லலாம். தூரமென்றால் “ப்யூர் சினிமா” புத்தகக் கடையில் தூங்கி விட்டு விடிந்து செல்லலாம். அனுமதி உண்டு. பௌர்ணமி இரவுக்கு வரும் நண்பர்கள் இரவு உணவு சாப்பிடாமல் வர வேண்டும் என்பது நிபந்தனை. இன்னொரு நிபந்தனையும் உண்டு. இந்தத் திரையிடலில் கலந்து கொள்பவர்கள் தொடர்ச்சியாக வர வேண்டும் என்பதுதான் அது. படம் ஓடும் போதும் தூங்கக் கூடாது. இரவு உணவை ‘தமிழ் ஸ்டுடியோ’ நமக்கு தரும். இரவு முழுதும் நாம் படம் பார்த்து விவாதிக்க, கலந்துரையாட ஏதுவாய், வயிற்றை தொந்தரவு செய்யாத, சரிவிகித உணவு கொஞ்சமாய் வழங்கப்படும். அனைத்து காய்கறிகளும் கலந்த சாம்பார் சாதம் கூடவே ஒரு முட்டை, சத்துமாவு உருண்டை, வரகு அரசி கஞ்சி சாதம், துவையல் என மாதாமாதம் அது வித்தியாசமாக இருக்கும். ஒரு பெரிய பாத்திரத்தில் கலந்துகொண்டு நம்மை வரிசையாக உட்கார சொல்லி நம் கைகளில் உருண்டையாய் உருட்டித் தருவார்கள் படிமைத் தோழர்கள். சிலசமயம் தொன்னைகளில் தருவார்கள். இது உங்களுக்கு பல அழகிய மறக்கவியலா உங்கள் வீட்டு நினைவுகளை மனதில் வர வைக்கும். சாப்பிட்ட பிறகு, பழைய பிளக்ஸ் போர்டை பாயாக தரையில் விரித்து குழுவாய் திரை நோக்கி அமர்ந்து கொள்வோம். படிமைத் தோழர்கள் திரையிடலுக்கான பணிகளை முடித்து, திரையிடலை துவக்குவார்கள்.

alt text

பொதுவாக இரவு மிகவும் பாந்தமானது, அது அழகானது, அமைதியானது, மிக முக்கியமாக அது கலைக்கானது, ரசனைக்கானது. ஆம் தோழர்களே, ஒரு சின்ன ப்ளாஸ்பேக், “என் சிறுவயதில் நாங்கள் இருந்த கிராமத்தில் மாரியம்மன் கோவில் அருகே ஒரு பெரிய திடல் இருக்கும். மாரியாயி கோவில், அய்யனார் சாமி கோவில், கம்பத்தடி பெருமாள் கோவில் என அருகருகே மூன்றும் சேர்ந்திருக்கும், தேரடிக்கு அருகில் ஊருக்கு நடுவே அந்தத் திடல் அமைந்திருந்தது. திடலின் ஒரு மூலையில் பஞ்சாயத்து போர்டு வைத்திருந்த தொலைக்காட்சி பெட்டி இருக்கும். அங்கு திருவிழா மற்றும் பண்டிகை விடுமுறை நாட்களில், ஞாயிறு இரவுகளில் பெரிய திரை கட்டி திரைப்படங்கள் திரையிடுவார்கள். உலக சினிமாக்கள் இல்லை. நல்ல தமிழ் சினிமாக்களை தேர்வு செய்து திரையிடுவார்கள். விடியவிடிய மக்கள் எந்தவித பாகுபாடும், வயது வித்தியாசமல் இல்லாமல், தரையில் அமர்ந்து அப்படி சந்தோஷமாய் படம் பார்ப்பார்கள். என் அப்பா சிறுவயதில் தன் அண்ணன், நண்பர்களுடன் அங்கு நிறைய நாடகங்கள், கூத்து, திரைப்படங்கள் விடியவிடிய பார்த்திருப்பதாக சொல்லுவார். அதனை முறையாக, தொடர்ச்சியாக செய்வதற்கு ஒரு குழு இருந்ததாகவும், மழை நாட்களில் கூட படம் ஓடிக்கொண்டிருக்கும் போது மழை வந்துவிட்டால் தேரடியிலும், மூன்று கோவில் வாசல்களிலும் மழைவிடும் வரை உட்கார்ந்து கிடந்து பிறகு படத்தை பார்த்து விட்டுத்தான் ஜனங்கள் போவார்கள் என்று சொல்லுவார். அப்படி ஒரு ஆத்மார்த்தமான ஈடுபாடு இருந்தது. ஒரு மூலையில் படம் பார்க்க வந்தவர்களின் சைக்கிள்கள் கிடக்கும். படம் முடிந்ததும் ஜனங்கள் கதை பேசிக்கொண்டு அவங்க அவங்க தெருக்களில் கூட்டமாய் நடந்து போவார்கள் என்றும் சொல்லுவார். எனக்கு கேட்கக் கேட்க அவ்வளவு ஆசையாய் இருக்கும். ஆனால் என் சிறுவயதில் என் அப்பா என்னை அங்கு படம் பார்க்க விட்டதேயில்லை. அப்போது நாங்கள் ஊரை விட்டு சுமார் ஒன்னரை கிலோ மீட்டர் தள்ளி இருந்தோம். நாங்கள் நடத்தி வந்த சிறிய உணவகமும், வீடும் தேசிய நெடுஞ்சாலை அருகில் இருந்தது. படம் முடிந்து என்னை கூட்டிவர ஆள் இல்லாததால் அவர் என்னை கடைசிவரை அனுமதிக்கவே இல்லை.

alt text

வேலை காரணமாய் அப்பாவும் குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு அந்த இரவு திரையிடலுக்கு செல்வதை நிறுத்தியிருந்தார். சில நாட்களில் மாலையில் என் அம்மா என்னையும், என் தங்கையும் அழைத்துக் கொண்டு ஊரின் கடைசியில் இருக்கிற அம்மன் கோவிலுக்கு கூட்டிப் போவாள். நாங்கள் திரும்பி வரும்போது அந்தத் திடலை தாண்டும் போதெல்லாம் என் மனம் ஆசையாய், ஏக்கமாய் கடந்து போகும். அப்போது பஞ்சாயத்து போர்டு டிவியில் ஏதாவது ஓடிக்கொண்டிருக்கும். மக்கள் குழுவாய் பார்த்துக்கொண்டு இருப்பார்கள். அந்த இரவுத் திரையிடல் என் மனதில் பெரிய ஏக்கமாகவே படிந்து போனது. அந்த ஏக்கம் இந்த பௌர்ணமி இரவு திரையிடலில் நீங்கியதாய் நான் உணர்ந்தேன். இதுபோன்ற அனுபவங்கள் நிறைய தோழர்களுக்கும் இருக்கும். எனவே இரவு என்பது கலைக்கானது, ரசனைக்கானது என்பது உண்மை தானே தோழர்களே!”

பௌர்ணமி முழு நிலவு வானத்தில் இருக்க, குளிர்ந்த காற்று நம்மை தழுவிக் கொள்ள, இருளில் ஒளிரும் கண்கள், நம்மை போல சினிமா ரசனை கொண்ட நண்பர்கள் சூழ, இடையில் வானில் பறக்கும் விமானத்தின் ஒலி, ஒளியுடன் நம்மை கடக்க, நம் பின்னே ஓடும் மெட்ரோ ரயிலின் சத்தம் சாரலாய் காதில் விழ, நீங்கள் தரையில் அமர்ந்து கொண்டு படம் பார்க்கும் விதமே அலாதியானது. முதல் திரையிடலாய் மார்ச்சில் (2018) ஈரானிய சினிமா மகத்தான இயக்குநரான "அப்பாஸ் கியரதோஸ்டமி" இயக்கிய "வேர் ஈஸ் மை பிரண்ட்ஸ் (1987)" திரையிட்டார்கள். குழந்தைகளின் அப்பாவித்தமான மனநிலையை அற்புதமாய் வெளிப்படுத்திய ஒப்பற்ற காவியம் அது. வீட்டுப்பாடம் செய்யாமல், நோட்டை தனது மாமா வீட்டில் வைத்து விட்டதால் அதனை பேப்பரில் செய்து ஆசிரியரால் கண்டிக்கப் படுகிறான் அந்தச் சிறுவன். வருத்தத்துடன் வீட்டுக்கு வரும் அவன் தவறுதலாக தன் நோட்டை போலவே இருக்கும் தன் நண்பனின் நோட்டையும் எடுத்துவந்து விடுகிறான். தான் இன்று திட்டு வாங்கியதை போல தனது நணபன் நாளை ஆசிரியரிடம் திட்டு வாங்கிவிடக் கூடாது என்று அவனது நோட்டை அவனிடம் தர பக்கத்து ஊரில் இருக்கும் அவனது வீட்டை நோக்கி ஓடுகிறான். தேடியலைகிறான். இதற்கிடையில் அந்த ஊரின் மக்கள், பெரியவர்களின் உலகம், மனப்பாங்கு, அந்த இரண்டு ஊரின் நிலவரங்களை தன் காமிராக் கண்களால் அற்புதமாய் படம் பிடிக்கிறார் அப்பாஸ். “உங்கள் காமிராவை நான்கு சுவற்றுக்குள் சுழற்றாமல், மக்களின் இடையே, அவர்களின் வாழ்க்கையின் இடையே சுழல விடுங்கள். அற்புதமான தருணங்களை உங்கள் காமிரா அதுவே படம் பிடித்துக் கொள்ளும்”, என்று சொன்ன கலைஞன் அவன். குழந்தைகளின் மட்டற்ற, மாசற்ற உலகில் தன் கேமராவை சுழற்ற அது “வேர் இஸ் மை ப்ரண்ட்ஸ் ஹோம்?” என்னும் காவியமானது. அந்தச் சிறுவனால் இரவு முழுதும் தேடி அலைந்து கண்டுபிடிக்க முடியாமல், ஏமாற்றமாய் வீடு திரும்புகிறான். அடுத்த நாள் வகுப்பறையில் ஆசிரியர் நோட்டுகளை திருத்தி கொண்டிருக்கையில் வேகமாக நுழைகிறான். தனது நண்பனிடம் உன் நோட்டை பார்த்துவிட்டாரா என வினவ? அவன் இல்லையென்று சொல்ல, நோட்டை எடுத்து தருகிறான். அதில் வீட்டுப்பாடம் எழுதப் பட்டிருக்கிறது. நண்பனின் நோட் அது. ஆனால் ஆசிரியர் நண்பனை விடுத்து இவன் நோட்டை வாங்கிப் பார்த்து விட்டு அழகாய் எழுதப்பட்டிருந்தை பார்த்து “குட் பாய்” என பாராட்ட, அந்த பக்கத்தில் ஒரு ஓரமாய் அழகிய மஞ்சள் பூ. அந்தப் பூ தான் குழந்தைகள், இதுதான் அவர்களின் உலகம். படம் சிறிய படம் தான். ஆனால் அட்டகாசமான திரைப்படம். படம் முடிந்ததும் நாங்கள் படம் குறித்து விரிவாக கலந்துரையாடினோம்.

alt text

இரண்டாம் திரையிடலாய் ஏப்ரல் (2018) மாதத்தில் மற்றொரு அற்புதத் திரைப்படத்தை திரையிட்டார்கள். அது “லீ ஜியாங் ஹியாங்” என்னும் தென்கொரியத் திரைப்படமான “தி வே ஹோம் -2002”. கால சூழ்நிலையின் காரணமாய் தனியே கிராமத்தில் இருக்கும் வயதான காது கேட்காத, வாய் பேச முடியாத, கூன் விழுந்த பாட்டி, தன் தாய் தந்தையுடன் நகரத்தில் வசிக்கும், நகரச் சூழலுக்கு மட்டும் ஒத்துப்போகிற ஒரு சிறுவன். பள்ளி கோடை விடுமுறை வருகிறது. தன் தாய் அவனை பாட்டி ஊருக்கு அழைத்துச் செல்கிறாள். அவனது அந்த ஊரும், பாட்டியும் சுத்தமாக பிடிக்கவில்லை. ஆனால் அவனது அம்மா விடுமுறை முடியும்வரை அவனை அங்கே விட முடிவு செய்து, அவனுக்காக பெட்டியில் அடைத்த உணவுகள், குளிர்பானங்கள், சாக்லேட்கள் என தந்துவிட்டு திரும்பி விடுகிறாள். பிறகு அவனுக்கு பாட்டியை பிடிக்காமல் கிண்டல் செய்கிறான். வீட்டில் கழிவறை இல்லை. வீடியோ கேம் விளையாடிக் கொண்டே கிடக்கிறான். பேட்டரி தீர்ந்துபோய் விடுகிறது. பேட்டரி கேட்டு பாட்டியை திட்டுகிறான். வீட்டில் எந்த பொழுதுபோக்கும் அவனுக்கு இல்லை என்கிறான். அவன் வைத்திருந்த உணவுகள் தீர்ந்து போக, பாட்டியிடன் வறுத்த சிக்கன் கேட்க, அவள் நெடுதூரம் நடந்து வாங்கி வந்து வேகவைத்து தர, அது பிடிக்காமல் அழுகிறான். பிறகு இரவில் சாப்பிடுகிறான். பாட்டிக்கு உடல்நிலை சரியில்லாத போது பார்த்துக் கொள்கிறான். பாட்டியின் மீது கொஞ்சம் கொஞ்சமாய் பாசம் துளிர்ப்பதை அற்புதமான காட்சி படுத்தியிருப்பார் இயக்குநர். பேரனுக்காக மிட்டாய் வாங்கும் காட்சி, அவனுக்காக பணம் வேண்டி அவள் நெடுதூரம் நடந்தே வரும் காட்சி, பேட்டரிக்கான பணத்தை வீடியோ கேமில் வைத்து தரும் காட்சி, தன் பாட்டிக்காக ஊசியில் நூலை வெறுப்பாக கோர்த்து தரும் சிறுவன் பிறகு அவன் ஊருக்கு கிளம்புகையில் நிறைய நூலை ஊசியில் பாட்டிக்காக கோர்த்து வைக்கும் அற்புத காட்சி, தோழனை ஏமாற்றி கீழே விழ வைக்கும் அவன், தான் ஒருநாள் கீழே விழும் போது தன் நண்பனிடம் மன்னிப்பு கேட்கும் காட்சி, பாட்டியின் துணிகளை தன் துணிகளுடன் சேர்த்து போடும் காட்சி, இறுதியில் பாட்டிக்காக ‘ஐ யாம் சிக்’, ‘ஐ மிஸ் யூ’ என தனக்கு அனுப்ப சொல்லி தந்துவிட்டு, பஸ்ஸில் ஏறி பின்புறக் கண்ணாடி வழியாக தன் நெஞ்சில் கைவைத்து பாட்டி தன்னிடம் மன்னிப்பு கேட்டதை நினைத்து அழுது கொண்டே அவன் அதேபோல மன்னிப்பு கேட்கும் காட்சி என உங்களை புரட்டிப்போடும் அழகிய காவியமே “தி வே ஹோம்’. உணர்வுகளின் உச்சம் “தி வே ஹோம்”. பாட்டிக்கும், பேரனுக்கும் இருக்கும் பாசத்தினை வெளிப்படுத்திய உன்னதக் காவியம் இது. உலகெங்கும் உள்ள பாட்டிகளுக்காக இப்படம் அர்பணிக்கப்பட்டது.

கடந்த மே மாதத்தில் மூன்றாவது திரையிடலாக, நடக்கும் அரசியல் சூழல் சார்ந்து, தூத்துக்குடி ஸ்டெர்லைட் என்னும் அரச பயங்கரவாதத்தை பேசும் விதமாகவும், பசுமைவழிச்சாலை என்ற பெயரில் விவசாய நிலங்கள் பறிக்கும் ஆட்சியாளர்களின் அடக்குமுறையை எதிர்க்கும் விதமாகவும் ஒரு படத்தினை தேர்வு செய்து திரையிட்டார்கள். இஸ்ரேல் பாலஸ்தீனம் சார்ந்த நில பிரச்சனையில் தான் ஆசையாக வளர்த்த எலுமிச்சை மரங்கள் இருக்கும் நிலத்தினை அபரிக்க முயலும் அரசினை எதிர்த்து போராடிய சல்மாவின் கதையைச் சொன்ன “லெமன் ட்ரீ” திரைப்படம் தான் அது. “ஏரன் ரிக்லிஸ்” இயக்கத்தில் கடந்த 2008ல் வெளியானது. இந்தப் படம் குறித்த விவாதத்தில் ‘தமிழ் ஸ்டுடியோ தோழர் அருண் மோ’, இத்திரைப்படம் நிறையமுறை இங்கு திரையிடப்பட்டு இருக்கிறது என்றும், படத்தின் அரசியல், உள்ளடக்கம், அழகியல் சார்ந்தும் பேசினார். மேலும் சில நண்பர்கள் நன்கு உரையாடினர். தற்போது நாட்டில் நடக்கும் சூழல் குறித்தும் பரவலான விவாதம் நடந்தது. படத்தின் உள்ளடக்கம் குறித்து நன்கு உரையாடிய ‘தோழர் தமிழரசன்’, ஜுலை மாத “படச்சுருள் – அரச பயங்கரவாத எதிர்ப்பு சினிமா சிறப்பிதழில்” அதன் உள்ளடக்கம் சார்ந்து ஒரு நுணுக்கமான கட்டுரையை “லெமன் ட்ரீ” என்னும் தலைப்பில் விரிவாய் அட்டகாசமாய் எழுதியிருக்கிறார். அதை வாசியுங்கள். படத்தினையும் பாருங்கள். அது மட்டுமல்ல இன்னும் பல முக்கியமான கட்டுரைகளுடன் படச்சுருள் வந்திருக்கிறது. இருபதே ரூபாய் தான். நீங்கள் ஒரு வடை, தேநீர் சாப்பிடும் பணத்தை விட குறைவு தான். நிச்சயமாக வாசியுங்கள். அடுத்த பௌர்ணமி இரவு திரையிடலுக்காக நான் காத்திருக்கிறேன். நீங்களும் காத்திருங்கள், அவசியம் வந்து விடுங்கள், பேசித் தீர்ப்போம் தோழர்களே! அன்பின் தமிழ் ஸ்டுடியோ உனக்கு என் பேரன்பின் நன்றிகள்.

 

Leave Comments

Comments (0)