இலங்கையில் சவக்குழியிலிருந்து 21 குழந்தைகளின் எலும்புக்கூடுகள் கண்டெடுப்பு!

/files/detail1.png

இலங்கையில் சவக்குழியிலிருந்து 21 குழந்தைகளின் எலும்புக்கூடுகள் கண்டெடுப்பு!

  • 0
  • 0


இலங்கையின் மன்னார் பகுதியில் உள்ள சவக்குழியிலிருந்து  21 குழந்தைகளின் எலும்புக்கூடுகள் தோண்டி எடுக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த குழந்தைகள் யாவும் சித்ரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்ட தடயங்களும் உள்ளன. 

“இதுவரை இந்த சவக்குழியிலிருந்து 276 எலும்புக்கூடுகள் தோண்டி எடுக்கப்பட்டுள்ளன. இப்போதுள்ள எண்ணிக்கையை வைத்து பார்க்கும் போது, இலங்கையில் கண்டெடுக்கப்பட்ட மிகப்பெரிய கல்லறை பகுதி இதுவாகத் தான் இருக்கக்கூடும். இதுவரையில் 70 சதவிகித பகுதிகளையே அகழ்வாய்வு செய்துள்ளோம். ஆகவே உடல்களின் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கக்கூடும்” என்கிறார் தடயவியல் அகழவாய்வு பேராசிரியர் ராஜ் சோமதேவா.

இறந்தவர்களின் கால்கள் இரும்பு கம்பிகளால் சேர்த்து கட்டப்பட்டிருப்பது புதிய கேள்விகளை எழுப்புகிறது. யார் இவர்கள், யார் இவர்களை கொன்றார்கள்? என்ற எந்த விபரமும் தெரியவில்லை. இறந்தவர்களிடையே குழந்தைகளும் இருப்பதால் மொத்த சமூகமே கொல்லப்பட்டிருக்கலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

கட்டிட தொழிலாளர் ஒருவர் மனித எலும்புகளை இந்த பகுதியில் கண்டுபிடித்ததை தொடர்ந்து, கடந்த மே மாதத்தில் அகழ்வாய்வு பணி ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் இன்றும் ஆரம்ப கட்டத்தில் தான் உள்ளதாக கூறுகிறார் விசாரணை அதிகாரி டாக்டர்,சமிந்தா ராஜபக்சே. மேலும் அவர் கூறுகையில், “இவர்கள் அனைவரும் எப்போது இறந்தார்கள் என எங்களுக்கு இதுவரை தெரியவில்லை. இறந்தவர்கள் அனைவரும் தமிழ் மக்களா அல்லது விடுதலைப் புலிகளா அல்லது சிங்கள ராணுவ வீரர்களா என்பதும் சரியாக தெரியவில்லை”.

எலும்புக்கூடுகளோடு சேர்ந்து மண்பாண்டங்களும், பீங்கான் பாத்திரங்களும், உலோகங்களும், நகைகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஆனால் உடைகள் எதுவும் கிடைக்கவில்லை. இந்த படுகொலைக்கு காரணம் விடுதலைப் புலிகளா அல்லது இலங்கை ராணுவமா என்று இன்னும் சரியாக தெரியாத நிலையில், மனித உரிமை செயற்பாட்டாளர்களும் தொலைந்து போன நபர்களின் குடும்பத்தாரும் நீதி கிடைக்கவேண்டும் என போராடி வருகிறார்கள்.

67 வயதான தமிழ்ப் பெண் நாகம்மா கூறுகையில், “மன்னார் படுகொலையில் என் 16 வயது மகனும் இறந்திருப்பான் என நினைக்கிறேன். தீவிரவாதியாக இருப்பான் என்ற சந்தேகத்தில் 90-களின் ஆரம்ப வருடங்களில் என் மகனை இலங்கை ராணுவம் கைது செய்து இழுத்துச் சென்றது. இப்போது சவக்குழி கண்டுபிடித்துள்ள பகுதியில் தான் என் மகனை அடையாளம் தெரியாத நபர்கள் கடத்திச் சென்றதாக அங்கிருந்தவர்கள் கூறுகின்றனர். எங்காவது உயிர் வாழ்வான் என்ற நம்பிக்கையில், 27 வருடங்களாக அவனுக்காக கத்துக் கொண்டிருக்கிறேன். .ஆனால் இப்போது மற்றவர்களோடு சேர்ந்து அவனும் சவக்குழியில் புதையுண்டிருப்பான் என்றே தோன்றுகிறது” என்கிறார் கண்ணீரோடு.

நாகம்மா மட்டும் இந்த நம்பிக்கையில் இல்லை. தொலைந்து போனவர்களின் குடும்பத்திற்காக நீதிமன்றங்களில் போராடி வரும் சந்தரபிராதாஷம் நிரஞ்சனும் இதில் ஒருவர். தங்களது கனவனோ அல்லது மகனோ இலங்கை ராணுவத்தால் அல்லது மன்னார் பகுதியில் உள்ள அடையாளம் தெரியாத நபரக்ளால் கடத்தப்பட்டிருக்கலாம் என்றும் தற்போது கண்டுபிடிக்கப்படுள்ள சவக்குழியில் இவர்களும் இறந்திருக்கலாம் எனவும் ஒன்பது குடும்பங்கள் சார்பாக நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார் நிரஞ்சன்.
“குடிமக்களை சித்ரவதை செய்வதும் கொலை செய்வதும் கொடூரமான மனித உரிமை குற்றமாகும். இந்த சவக்குழியில் குழந்தைகளும் இருக்கிறார்கள். தொலைந்து போன தமிழர்கள் இது போன்ற பல சவக்குழிகளில் புதைக்கப்பட்டிருக்கக்கூடும் என நாங்கள் நம்புகிறோம்” என்கிறார் நிரஞ்சன். இந்த சவக்குழி உள்ள மன்னார் பகுதி, தமிழர்கள் பெரும்பாண்மையாக வாழும் பகுதியாகும். இங்கு பல சந்தர்ப்பங்களில் போர் நடைபெற்றுள்ளது. அப்போரில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட மக்கள் இறந்து போனதோடு இருபதாயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் தொலைந்து போனார்கள்.

பலர் இறந்து போனதற்கும் தொலைந்து போனதற்கும் இலங்கை ராணுவமும் விடுதலைப் புலிகளுமே காரணம் என மனித உரிமை அமைப்புகள் குற்றம் சுமத்தி வருகின்றன. ஆனால் இலங்கை ராணுவம் எந்தவொரு குடிமகனையும் கொலை செய்யவில்லை என முன்னாள் ஜனதிபதியும் நீண்ட காலமாக நடந்து வந்த போஎரை முடிவுக்கு கொண்டு வந்தவரும் சர்வதேச போர் குற்றங்களுக்காக விசாரிக்கப்பட்டு வருபவருமான மகிந்த ராஜபக்சே கூறுகிறார்.

“இந்த படுகொலைக்கு இலங்கை ராணுவம் எந்த வகையிலும் காரணமில்லை. இதற்கும் எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை” என இலங்கை ராணுவத்தின் செய்தி தொடர்பாளர் சுமித் அட்டப்பட்டு கூறுகிறார்.

விடுதலைப் புலிகளும் பல அட்டூழியங்களை நிகழ்த்தியுள்ளனர். இலங்கை ராணுவ வீரர்களையும், தங்களுக்கு ஆதரவு அளிக்காத தமிழ் மக்களையும், சில சமயங்களில் தங்களது சொந்த கொரில்லா வீரர்களையும் கூட விடுதலைப் புலிகள் கொன்றுள்ளனர். தரைப்படை, கப்பல் படை, வான்படை என முப்படைகளை வைத்திருந்த விடுதலைப்புலிகள், பல சமயங்களில் போரின் போது சாதாரண மக்களை மனித கேடயமாக பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு உள்ளது. 

“இந்த படுகொலைக்கு விடுதலைப் புலிகள் காரணமாக இருப்பதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளது. ஆனால் இந்த அட்டூழியங்களை யார் நிகழ்த்தியிருந்தாலும், அவர்களுக்கு உரிய தண்டனை கிடைக்க வேண்டும். ஏனென்றால் இது சாதாரனமான போர் குற்றம் அல்ல, மனித இனத்திற்கு எதிராக நடைபெற்ற குற்றம்” என்கிறார் தமிழ் இன மனித உரிமை செயற்பாடாளர் பாக்கியசோதி சரவனமுத்து.

தமிழில்: V. கோபி 

நன்றி: www.independent.co.uk


 

Leave Comments

Comments (0)